சென்னையைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் குர்குரே என்ற நொறுக்குத் தீனியை சாப்பிட்டு ஈனோ குடித்ததால் இறந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பகிரப்பட்டது. அந்தச் செய்தி பொய்யானதா என பலரும் நினைத்த நிலையில் அந்த இளைஞரின் பெயர் கிரிஸ் சியாரோ என்றும் குர்குரே சாப்பிட்டு வயிற்று வலி ஏற்பட்டதால், ஜீரணத்துக்காக ஈனோ குடித்ததால் இறந்ததாகவும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனிகளை தடை செய்ய சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரபல பதிவரான சபீதா இப்ராஹீம் தனது முகநூலில் எழுதிய பதிவு இது:
சோகத்திலும் பெரும் சோகம் புத்திர சோகம்.பெற்றவர்கள் உயிருடன் இருக்க ,மழலையை மரணம் அப்படியே வாறி எடுத்துக் கொள்வதென்பதை எந்த கர்ம ,ஆன்மீக விளக்கங்களாலும் விளக்கிட இயலாது.
இது இப்படித்தான், இதுவும் கடந்து போகும் என்பதெல்லாம் shit .
வெறும் 17 வயது. கண்களில் கனவுகள் மட்டுமே நிரம்பிய பருவம் .இன்னமும் லட்சியம் ,காதல் ,துவேஷம் , பண- புகழ் போதை என இது போன்ற இத்தியாதிகள் தீண்டாத பால் பருவம் .நள்ளிரவில் படித்துக் கொண்டிருந்தவன் “KURKURE “உண்டு விட்டு (i really want to write in bold letters)அஜீரணமாக உணர்ந்ததால் ENO பருகியிருக்கிறான். சிறிது நேரத்தில் ரத்தமாக வாயிலெடுத்து வீட்டிலேயே உயிர் பிரிந்திருக்கிறது .மரணம் தீண்டும் வயதா இது ?
தோழியின் மகனின் வகுப்புத் தோழன் என்பதால் அவளது புலம்பலும் ஆற்றாமையும் நின்றபாடில்லை .10 நாட்களுக்கு முன் தான் வீட்டிற்கு வந்திருந்தானாம். வசீகர தோற்றமுடைய ‘துறு துறு’ சிறுவன். அதிகாலை முதல் நானும் அவளும் இதைக் குறித்து பேசிப் பேசி அந்த மரணமும், மகனை இழந்த தாயின் ஓலமும் அப்படியே அவள் மீதும் என் மீதும் படிந்து, விலக்க இயலாமல் கவிகிறது. அவன் அந்த இரவில் உறங்கியிருக்கக் கூடாதா ? ஏன் விழித்திருந்தான் ?அவன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து தன்னைக் கண்டு அழுபவர்களை பார்த்து சிரிக்கக் கூடாதா என ஏதேதோ எண்ணப் போராட்டம் .
அவனது முகநூல் பக்கம் எளிய சிறுவனின் விளையாட்டுகளால் நிரம்பி உள்ளது .
ஒரே மகனை பிணமாக காணும் தாய் “என் மகனை பாருங்க ,அவன் கண்ணை பாருங்க ,அவன் மீசை -அவன் நடை- அவன் சிரிப்பு அத்தனை அழகா இருக்கும் .நான் அவனை சுற்றி சுற்றி வந்து ரசிப்பேனே .காலையில் மம்மா பால் வேணும்னு யார் இனி என்கிட்டே கேப்பா ?யாரை நான் ஸ்கூலுக்கு அனுப்புவேன் ?என்ன சாப்பாடுன்னு யார் கேப்பா ?MBA முடிச்சுட்டு US கூட்டிட்டு போறேன்னு என்கிட்டே சொன்னானே ….”என்று அவர் அரற்றி புலம்பும் காட்சி கல் மனதையும் கரைக்கச் செய்து விடும் . தனது கணவரிடம் நம்ம பையன் கிட்டயே நாமளும் போய்டலாம் என்று புலம்புபவருக்கு sedation தந்து மயக்கத்தில் ஆழ்த்த ஆலோசிக்கிறார்கள் .எத்தனை வாரம் ,எத்தனை மாதம் மயக்கத்தில் ஆழ்த்த இயலும் ?எந்த மருந்து இந்த ரணத்தை ஆற்றும் ?உலகில் உள்ள அத்தனை விலை மதிபற்றவையையும் அவரது கால்களில் கொட்டினாலும் அவரால் மீள இயலுமா ?மகனையே தன் வாழ்வின் அஸ்திவாரமாக கொண்டவருக்கு இனி எது மீட்சி?
கடவுள் என ஒருவர் இருப்பதாக இத்தனை நாட்களும் நம்பி வந்த அவரும் கூட உலகில் உள்ள அத்தனை வசவு வார்த்தைகளாலும் அந்த so called கடவுளை திட்டித் தீர்க்கிறாராம் .எனக்கும் கூட அந்த கடவுள் எனும் உருவகத்தை காலால் மிதித்து “GO TO HELL “என சொல்லலாம் போல இருக்கிறது.
மழையின் பரபரப்பில் கொஞ்சம் மங்கி விட்ட செய்தி இது..நேற்று வாட்ஸ் அப் பில் ஓரு பள்ளி மாணவன் குர்குரே சாப்பிட்ட பின் இறந்து விட்டதாக முதலில் செய்தி வந்தது. இப்படிப் பட்ட செய்திகளின் உண்மையை அறியக் கொஞ்சம் கூகுள், நேரடி விசாரணை என்று மெனக்கெடுவேன். முதலில் அப்படி எதுவும் செய்தி எங்கும் பதிவாகவில்லை.
விமர்சகர் லதா அருணாச்சலம் எழுதியுள்ள பதிவில் பெற்றோரும் பள்ளிகளும் நொறுக்குத்தீனிகள் குறித்து அவரசமாக பரிசீலிக்க வேண்டும் என்கிறார். அவருடைய பதிவில்…
நல்லவேளையாக இது பொய்யான செய்தி என்று நினைத்திருக்கையில், மீண்டும் ஒரு விளக்கச் செய்தி. அந்தப் பள்ளியில் படிக்கும் வேறொரு மாணவன் எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே இருக்கிறார், அது நம்பத் தகுந்த விவரம் எனவும் குறிப்பிட்டார்கள். பின் மேலும் மேலும் விவரங்கள் வரத் தொடங்கின.. குர்குரே சாப்பிட்டவுடன் வயிற்றில் அஜீரணம் ஏற்பட்டதாகவும், பின் அவர் உணவு செரிக்க ஈனோ சால்ட் சாப்பிட்டதாகத் தெரிகிறது. உடலில், மருத்துவ ரீதியாக இதன் எதிர்வினை என்ன என்பது மருத்துவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும். (அது பற்றிய மிகப் பெரிய மருத்துவ விளக்கம் வாட்ஸ் அப் பிலும் உலவுகிறது. )பின் மிகவும் சிரமமான உடல் நிலையில் அந்த மாணவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டான் என்பதும் , அங்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததும் தெரிந்தது.
இது குர்குரே போன்ற உணவாலா, ஈனோ சால்ட் எடுத்ததால் உண்டான விளைவா என்று இங்குள்ள மருத்துவர்கள் யாரேனும் விளக்கலாம்.
இன்று அந்தச் செய்தி பிரபல செய்தித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பியவுடன் மனதில் இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்றிருந்த கொஞ்சம் நம்பிக்கையும தகர்ந்து மனம் மிக வருத்தப் பட்டது.
ஆனாலும் துரித உணவைப்பற்றிய விழிப்புணர்வைப் பற்றிய எனது பார்வை இது. இன்றைய , மாறும் வாழ்க்கைச் சூழலில் இது போன்ற துரித உணவைகளையே சிறுவர்கள் விரும்பி உண்ணுகிறார்கள் என்பது வருத்தமான செய்திதான். அது போலவே, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கைவைத்தியமாக சில உடனடி நிவாரணி களையும் உட்கொள்கிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இவ்வாறான உணவுகளைக் குழந்தைகள் தவிர்க்க , பெற்றோர் ஏதாவது மாற்று உணவை, பாரம்பரிய உணவை சுவையாகச் செய்து கொடுக்கலாம். நேரம் இல்லாத போது தரமான கடைகளில் இருந்து வாங்கிக் கொடுக்கலாம்.
பள்ளியிலும் இது பற்றிய விழிப்புணர்வை ஏன் மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தக் கூடாது?
அது இயலாத பட்சத்தில் இது போன்ற காற்றடைத்த, செயற்கை நிறமூட்டி, சுவையூட்டி போன்ற வேதிப்பொருள் கலந்த உணவைக் கொண்டு வரக்கூடாது என்று விதிமுறைகளை விதிக்கலாம். சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள் இந்த விஷயத்திலும் அந்த மாதிரி விதி முறைகளைக் கடைப் பிடிக்கலாம்.சில சிறு, பெரு நகரப் பள்ளிகளில் மாணவர்கள் கொண்டுவரும் உணவுக்கு இது போன்ற விதிமுறைகள் உண்டென்று கேள்விப் பட்டது உண்டு.ஆனால் பல பள்ளிகளில் அவர்களது சிற்றுண்டிஉணவகத்திலும், பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளிலும் இது போன்ற நொறுக்குத் தீனிகள் விற்பனைக்கு உண்டு. இன்று எத்தனை விதமான உடற்பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடுகள் என்று நாம் உடலைப் பேணுகிறோம். ஆனால் குழந்தைகளிடம் மட்டும் மனமிரங்கி அவர்கள் விரும்பியதை வாங்கி உண்ண அனுமதிக்கிறோம். இனிமேலாவது கொஞ்சம் சிந்திப்போம்.