மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி:
பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய அப் பாடலை நினைவு கூர்ந்து அஞ்சலி!
“மனுசங்கடா நாங்க மனுசங்கடா ”
“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா !
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா ?
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்?
கிணத்துத் தண்ணியும் சாதி எழவ எழுதிக் காட்டுமா?-
எங்க குழந்தைக்கெல்லாம் உங்க சாதி விவரம் எட்டுமா?
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது…?
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க?
— டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”
CPML( விடுதலை) செயல்பாட்டாளர் சி. மதிவாணன்:
கவிஞர் இன்குலாப் மறைந்தார். செவ்வஞ்சலி.
“உனது மலைகளை, உனது கடல்களை நேசிப்பதொன்றே தேசப்பற்றாகுமா?“
CPML-மக்கள் விடுதலை செயல்பாட்டாளர் அருண்சோரி:
தோழர் இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.
புரட்சியின் மீது தீரா காதல் கொண்டு, சமூக மாற்றத்திற்கு மார்க்சிய-லெலினிய சித்தாந்தமே சரி என்று அதனை தன் வாழ்வியல் கோட்பாடாக ஏற்று, சமூக இழிவுகளின் மீது சாட்டை சொடுக்கி நெருப்பு கவிதைகள் பல தந்த தோழர் இன்குலாப் நம்மை விட்டு பிரிந்தார். தோழர் இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.
சமூக செயல்பாட்டாளர் முத்துகிருஷ்ணன்:
மக்கள் பாவலர் கவிஞர் இன்குலாப் காலமானார், பொதுவுடமை-தலித் அரசியல் மேடைகளில் நள்ளிரவில் கேட்ட ”மனுசங்கடா” காதுகளில் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கிறது…. எம் வழிகாட்டிகளில் ஒருவர் விடைபெறுகிறார்…
எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா:
Red Salute Comrade Inquilab!
சென்று வருக மக்கள் கவியே!
கவிஞர் இன்குலாப்
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்!
ஊடகவியலாளர் செந்தில்குமார்:
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”……….
வீர வணக்கம் தோழர்
ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்:
“நாங்க எரியும் போது
எவன் மசுர புடுங்க போனீங்க-டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”
எழுத்தாளர் பாரதி நாதன்:
அடிமை இருளைக் கிழிக்கப் புறப்பட்டவன் செல்லும் இடமெல்லாம் கிழக்கும் பின் தொடரும் என்று முழங்கிய தோழர் கவிஞர் இன்குலாப் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். போய் வாருங்கள் புரட்சிக் கவியே… உங்கள் எழுத்துக்கள் எம்மை வழி நடத்தும். செவ்வணக்கம்.
மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்:
மாவோ பற்றி கவிஞர்……
‘ எதிரிகளுக்காகப் போராடிச் சாவது
இறகு வீழ்வதுபோன்று இலேசான மரணம்.
மக்களுக்காகப் போராடி மடிவதோ
தை மலையின் தாக்கம் போன்றது’
என்று சொன்னவனும் நீயே.
……………
நிமிரவே தெரியாதவர்
நிலத்தின் அடிமைகள்
என்ற கற்பனை பூமியின் சாய
சேற்றையே நோக்கும் முகத்தை நிமிர்த்தினர்.
அழுக்கு படாத நீண்ட நகங்களுக்கு
உழவர் ரத்தத்தில் சாயம் பூசிய
பண்ணைப் பிரபுக்களின் மார்பிலும் முகத்திலும்
சேற்றுக் கால்களின் அழுத்தமான தடயங்கள்.
” பயங்கரம்
இது
பலாத்காரம்”
ஊளைகளுக்கிடையில்
தெளிவாய் ஒருகுரல்.
” உண்மைதான்
ஒருபுரட்சி.
புரட்சியென்பது மாலைவிருந்தல்ல….”
புரட்சி!
பசப்பத் தெரியாத
உழைக்கும் வர்க்கத்தின்
ரத்தப் பிரகடனம்
இந்த பலாத்காரத்துக்கு
ஆதாரக்குருதி
மனிதாபிமானம்.
கூர்மைப்பட்ட வாட்கள் முன்னால்
மயில்கள் பீலிகள்,
மல்லிகை பூக்களா
தோட்டாக்கள் உடைக்கும்?
கவிஞர் மாலதி மைத்ரி:
தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் ஒரு அவ்வை ஒரு இன்குலாப் போன்ற விலைபோகாத எதிர் குரல்கள் அரிது. அதிகாரத்துக்கு அடிபணியாத கவிக்குரலை தமிழுலகம் இழந்தது. “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என நம் மொழி வாழும்வரை முழங்குவோம் கவியே.செவ்வணக்கம் தோழரே.
சமூக செயல்பாட்டாளர் கி. நடராசன்:
நக்சல்பாரி இயக்கத்தின், தமிழ்தேசியத்தின், ஈழ விடுதலையின் மாபெரும் கலைஞன் இன்குலாப். அவர்களின் விரிந்த சோசலிச பார்வையுடன் அவருடைய நினைவை போற்றுவோம்.. சிறு தீப்பொறி அல்ல .. மானுட விடுதலையின் பெரும் காட்டாறு.
பத்திரிகையாளர் சுகுணா திவாகர்:
’மனுசங்கடா’ என்பதை மனிதர்களுக்கு உணர்த்திய மகத்தான கவிஞர் இன்குலாபுக்கு அஞ்சலிகள்!
திரைப்பட ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி:
தோழர் இன்குலாப் மறைந்துவிட்டதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்திருக்கிறது. புரட்சி உணர்வு மங்காத கவிஞர். அருமையான மனிதர். அவருக்கு என்னுடைய அஞ்சலி.
திரை செயல்பாட்டாளர் மோ. அருண்:
புரட்சியையே புனைபெயராக கொண்ட மக்கள் கவிஞனுக்கு மகத்தான அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
-இன்குலாப்
தொழிலாளர் செயல்பாட்டாளர் ஹூண்டாய் ராஜவேலு:
#மக்கள்_பாவலர்_இன்குலாப்_மறைந்தார்
#செவ்வணக்கம்
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்…
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்…
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்…
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்…
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்…
– மக்கள் பாவலர் இன்குலாப்
எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்:
“ தாஹிரா, என் தாஹிரா, உன் தாளங்களால் என்னை ஈடேற்று..”
“ நொடிகளின் இடைவெளியில் வாழ்வதென்றாலும் விடுதலை மின்னலாய் மின்னுவதன்றி அடிமைச் சாசனத்திற்கு அடிபணியமாட்டோம் “
குழந்தையின் இதயமும் தணலின் மொழியும் கொண்ட உன்னத மனிதனே, உங்களது பிரியம் குழைத்த தமிழை கண்ணீருடன் நினவுகூர்கிறேன்..
எழுத்தாளர் சல்மா:
நிஜமான மக்கள் கவிஞன் மறைந்தான் இன்குலாப் ஜிந்தாபாத்