மக்கள் பாவலர் இன்குலாபுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் இரங்கல்

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அஞ்சலி:

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த மக்கள் பாவலர் இன்குலாப் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய இன்குலாப் இளம் வயதிலிருந்தே தமிழுக்காகவும், தமிழருக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். பொதுவாக பேராசிரியர்கள் பட்டதாரிகளை உருவாக்குவார்கள். ஆனால், இன்குலாப் மனிதநேயம் கொண்ட சமூகப் போராளிகளையும், பாவலர்களையும் உருவாக்கினார். தமிழகத்தில் இன்று புகழ்பெற்ற பாவலர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாவலர் இன்குலாபுக்கு நன்றிக் கடன்பட்டிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கியவர்களில் இன்குலாப் முக்கியமானவர்கள். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட வாழ்வுரிமை மாநாடுகளில் பலமுறை பங்கேற்றிருக்கிறார். பா.ம.க.வின் கொள்கைகளை நேசித்தவர்… பாராட்டியவர். தமிழ் ஓசை நாளிதழை முன்னெடுக்கும் முயற்சியை பாராட்டியதுடன் அதன் இரண்டாம் ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஆனால், எந்த தலைவரிடமும் தமக்காகவோ, தமது குடும்பத்தினருக்காகவோ எந்த கோரிக்கையையும் முன்வைத்ததில்லை. தமது வாழ்வின் பெரும்பகுதியை சென்னை இராயப்பேட்டையில் உள்ள புறாக்கூண்டு போன்ற இல்லத்தில் தான் கழித்தார். கடைசி காலத்தில் தான் சென்னையின் புறநகரில் எளிமையான இல்லம் கட்டி குடி புகுந்தார். எளிமையையும், போராட்டக்குணத்தையும் கவச குண்டலங்களாக விரும்பி அணிந்தவர்.

அரசியல் தலைவர்களுடன் நெருங்கி பழகினாலும், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காத மனிதர். ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதை கண்டிக்கும் வகையில் 2006&ஆம் ஆண்டில் தமக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை 2009&ஆம் ஆண்டில் திருப்பி அனுப்பினார்.

‘‘முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி’’ என்ற தலைப்பிலான கவிதையில் ஈழப் பிரச்சினையில் துரோகம் செய்த தலைவர்களை தோலுரித்துக் காட்டியிருப்பார். தமது வாழ்வின் இறுதி நிமிடம் வரை தமிழ்ப் பணிக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவு தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும், தமிழீழ உணர்வு எழுச்சிக்கும், ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராட்டத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் போராளிகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.