கவிஞர் இன்குலாப் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல்:
புகழ் பெற்ற கவிஞர் இன்குலாப் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ் மொழியின் மீதிருந்த தாகத்தின் விளைவாக தன் மாணவர் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அவர் பிற்காலத்தில் பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மார்க்ஸ் முதல் மாசேதுங்” வரை என்ற மொழியாக்க நூலை மார்க்ஸிய- பெரியாரிய அறிஞர் எஸ்.வி ராஜதுரை அவர்களுடன் இணைந்து உருவாக்கிய கவிஞர் இன்குலாப் அவர்கள் சிறுபான்மை சமுதாயத்தில் பிறந்து ஒடுக்கட்டப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.
மனித உரிமை போராளியாகத் திகழ்ந்த கவிஞர் இன்குலாப் அவர்களின் மறைவு உழைக்கும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட இனத்திற்கும், தமிழுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், சக கவிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.