கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்

சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

செல்லாமல் போய்விட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு, மக்கள் தினசரி நீண்ட வரிசையில் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் நிற்கின்றனர். வாய் வயிற்றை சுருக்கிக் கொண்டு விட்டனர். இந்த விவகாரங்களில், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு பிரச்சினை மீது பல நாட்கள் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்கள், கிளர்ச்சிகளை நாடு சந்தித்து கொண்டுள்ளது.

கருப்பு பணம் மாற்றுவதில் பாஜக கட்சியினர் முன்னிலை!

புதிய நோட்டுக்கள் வரிசையில் நிற்பவர்களுக்கு ரூ.2000 கூட கிடைக்கவில்லை. நடப்பு கணக்கு வைத்து உள்ளவர்களுக்கு ரூ.10,000 கூட கிடைக்கவில்லை …
ஆனால், கடந்த நவ.27 ல், சேலம் மாநகரில் தற்செயலாக வாகன சோதனையின் போது, பாரதீய ஜனதா கட்சி இளைஞரணி பிரமுகர் JV.அருண் ரூ.20.50 இலட்சம் பணத்துடன், அதிலும் ரூ.18.50 இலட்சம் புதிய ரூ.2000 நோட்டுக்களுடன் சிக்கினார்.
அதிலும் தொடர்ந்த வரிசை எண்களுடன் அவருக்கு மட்டும் இலட்சக்கணக்கான ரூபாய் புதிய பணம் எப்படி கிடைத்தது? வெளியே சொல்ல முடியாத வழி அது!
குசராத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 37 % கமிஷன் வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதாகவும், மோடியின் சகா அமித் சா’விற்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், பிரதமருக்கு திறந்த கடிதம் எழுதினார், யாதீன் ஓசா என்கிற பாரதீய ஜனதா எம்எல்ஏ. இவர் மோடி குசராத் முதல்வராக இருந்த போது அவருக்கு நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். டில்லியில், தபால் நிலையத்தில் ஊழியர்கள் மூலமாக, ரூ.36 இலட்சம் கணக்கில் காட்டப்படாமல் மாற்றப்பட்டது சமீபத்திய தகவல் ஆகும்.

RSS குருமூர்த்தி சொல்கிறார்:

“இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரூ.14 இலட்சம் கோடி 500,1000 ரூபாய் நோட்டுக்களாக உள்ளன. இவற்றில் சுமார் ரூ. 4 இலட்சம் கோடி கருப்பு பணமாக பதுக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடவடிக்கையின் மூலம்…வரவு வைக்கப்படும் ..இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை குறையும்…தொழில் முனவோருக்கு கிடைக்கும் கடன் அதிகரிக்கும் ….மனை வர்த்தகத்திலும், தங்கத்திலும் முடக்கப்படுவது வெகுவாகக் குறையும்..” (சிறப்பு பேட்டி, தி இந்து, பக்.16, நவ.25, 2016)

வேறு சில பொருளாதார வல்லுநர்கள் ரூ.1 இலட்சம் கோடி வரையில் கருப்பு பணம் கரன்சியாக/நோட்டுகளாக இருப்பதாகவும், சொத்துக்களாக ரூ.80 இலட்சம் கோடி கருப்பு பணம் நிலவுவதாகவும் மதிப்பீடு செய்துள்ளனர்.அதாவது ரூ.1 இலட்சம் கோடிக்கு மேல் 4 இலட்சம் கோடி வரையில் வங்கிக்கு பணம் சேர்ந்து விட்டால், கணக்கில் கொண்டு வரப்பட்டு விட்டால் போதும்! மோடியின் ‘சர்ஜிகல் ஆப்பரேசன்’ சக்சஸ் !

தானே முன்வந்து பணத்தை டெபாசிட் செய்தால் 50% வரி, பிடிபட்டால் 85 % வரி என மசோதாவும் முன்வைக்கப் பட்டுள்ளது. இது வரிசையில் நிற்கும் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் வேலையேத் தவிர வேறு ஒன்றுமில்லை.

படு தோல்வியுற்ற திட்டம்!

கருப்பு பணம் மாற்ற 100 வழிமுறைகள் :

நவம்பர் 8 ல் அறிவிப்பு வந்த பிறகு எப்படி எல்லாம் கருப்பு வெள்ளை ஆனது?

1)தங்கம், வைரம் : நவ.8 இரவு 8 மணிக்கு முன்னர், நாடு முழுவதும் பெரியளவில் விற்பனை ஆனது. பல நூறு கோடி மாறி விட்டது.

2)தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில், சில நாட்கள் விற்பனை ஆன ரூ.1000 கோடி ரூபாயில் கணிசமான 100 ரூபாய் நோட்டுக்கள் 500,1000 நோட்டுக்களாக மாற்றப்பட்டு தான் வங்கிகளுக்குச் சென்றது.
அதேபோல கூட்டுறவு வங்கிகளில் இருந்த சுமார் 500 கோடி ரூபாயில் கணிசமான 100 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு விட்டது.
பஸ் போக்குவரத்து வரவுகளில், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அரசுசார் நிறுவனங்களில் ரூ.500 கோடிவரையிலும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

3)” ஒருவர் தனது சேமிப்பு கணக்கில் ரூ.2.50 இலட்சம் வரை போட்டு வைக்கலாம் ” என்ற அரசின் அறிவிப்புக்கு பிறகு பினாமி டெபாசிட்டுகள் பல்கிப் பெருகியது.

வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள், ஊழியர்கள் கணக்கில் பினாமியாக ரூ.5 இலட்சம் வரையில் டெபாசிட் செய்தன. தனியார் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவை, தங்களுடைய ஊழியர்களுக்கு கடன்களை ரொக்கமாகவோ அல்லது அவர்களது வங்கி கணக்கிலோ ரூ.2 இலட்சம் வரை போட்டன.

சில நிறுவனங்கள் போட்டு விட்டு உடனே திரும்பி எடுத்துக் கொண்டன. பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களும் கூட பாக்கி சம்பளம், கடன்கள் எனப் பலவிதமான வழிகளிலும் தங்களுடைய. 500,1000 ரூபாய்களை மாற்றின.

4)வசூலாகாத தியேட்டர்கள் அரங்கு நிறைந்த வசூல் என கணக்கு காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக்கின. (மகாராஷ்டிராவில் சினிமா தியேட்டர்கள் ரூ.500, 1000 வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டது. )

5)ரெயில்வே டிக்கெட்டுகளை எடுத்து கேன்சல் செய்வது, அட்வான்சாக வரிகளை கட்டுவதில் துவங்கி, பினாமி டெபாசிட்டுகள் வரை பல்வேறு வழிமுறைகளை சிலர் பயன்படுத்தினர்.

6)வங்கிகளின் பாரபட்சம்

பல்வேறு வங்கிகள் அவரவர் மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு, 100 ரூபாய் நோட்டுக்கள் exchange ற்கு வந்தவுடன், வரம்பு காட்டாமல் வாரி வாரி வழங்கின.

தனியார் வங்கிகள் புதிய ரூ.2000 நோட்டுக்களையும் வழங்கின. இதன் தொடர்ச்சியாக தான், 1 கோடி ரூபாய் மாற்ற 30 இலட்சம் கமிஷன் என்பது பரவலாகப் பேசப்படுகிறது. அப்பட்டமானத் தோல்வி!

கருப்புபண முதலைகள் எவரும் பிடிபடவில்லை!

புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் ரூ.14 இலட்சம் கோடியில், சுமார். 9 இலட்சம் கோடி வரையில் வங்கிகளுக்கு வந்துவிட்டது. 5 கோடி ரூபாய் வசூலாகி விட்டால் கருப்பு – வெள்ளை ஆகிவிடும்.

பிரதமர் மோடியின் கண்டு பிடிப்பாக புகழப்பட்ட, குறைந்தபட்ச டெபாசிட்டே வேண்டாம் என்று சொல்லி சேர்க்கப்பட்ட ஏழைகளுக்கான ‘ஜன்தன்’ திட்ட சேமிப்பு கணக்கில் மட்டுமே, நவ.8- 25 ந் தேதிவரை 21,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. (இந்த புதிய வங்கி சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 13.7 கோடியாகும்.)

பினாமி இட்டு வைப்புகளை எப்படித் தடுக்க முடியும்?

ரிசர்வ் வங்கி கணக்குப் படி, இந்திய வங்கிகளில் மொத்தமாக 117 கோடி கணக்குகள் உள்ளன. செயல்படாத கணக்குகளை கழித்தாலும் கூட, ஒருவருக்கு பல சேமிப்பு கணக்குகள் என்றாலும் கூட, பாதிக்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்குகளை வைத்துள்ளவர்களாக உள்ளனர். இதில் இலட்சக்கணக்கில் பணத்தை இட்டு வைக்காத சுமார் 3 கோடி கணக்குகளில், ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரையில் முதலீடு செய்தால் முடிந்தது.

RSS குருமூர்த்தி சொல்லும் பணமே வந்துவிடும். மோடியின் கருப்பு பண வேட்டை தோல்வி அடைந்து விடும். இது ஒரு வாய்ப்பு தான்! நிராகரிக்க முடியாது என்ற வகையில் பினாமி டெபாசிட்டுகள் வேகம் பிடித்துள்ளன. ஆனால், கார்ப்பரேட்டுகள் கதை முற்றிலும் வேறு!

கார்ப்பரேட் வங்கி சார்பு ஒட்டுண்ணி நடவடிக்கைகள்!

புதிய நோட்டுக்களை மாற்றும் /Exchange பணியில், நாட்டுடமை யாக்கப்பட்ட வங்கிகளுடன், தனியார் வங்கிகளும், அதிலும் மிகப்பெரிய கார்ப்பரேட் வங்கிகளான ICICI, HDFC போன்றவை ஈடுபடுகின்றன.

“தனியார் வங்கிகளுக்கு மட்டும் ஏன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது ..பிற தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கு ஏன் வழங்கவில்லை …மதுரை State Bank of India விற்கே ICICI மூலமாகவே ரூ.5 கோடி வழங்கப்பட்டது ..ரிசர்வ் பாங்க் கவர்னர் அவர்கள், ICICI,HDFC வங்கிகள் நவ.10 முதல் எவ்வளவு பழைய நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கியது என தேதிவாரியாக தெரிவிக்க வேண்டும் ” என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (பார்க்க: தினமணி நவ.29 )

ஊழலின் ஊற்றுக் கண் இதுதான்!

கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC போன்ற வங்கிகள் தான் உள்ளன. இந்த வங்கிகளுக்குச் செல்லும் புதிய நோட்டுக்கள் யாருக்கு தரப்பட்டது என்பதை நாம் அறியமுடியாது. இந்த வங்கிகளின் கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்தினாலேயே கருப்பு பணம் முதலைகளுக்கு கை மாறியதை அறியமுடியும்.

பண பரிமாற்றத்தில் ரிலையன்ஸ் பிக் பஜார்!

தொலைதூர கிராமங்களில் பணம் வழங்க தபால் அலுவலகங்களும், நாடு முழுவதும் அரசு, தனியார்
வங்கிகள் பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க, வங்கி சேவைக்கு தொடர்பே இல்லாத ரிலையன்ஸ் குழுமத்தின் “பிக் பஜார்” Shopping Maalக்கு புதிய நோட்டுக்கள் வழங்கும் சேவையை பாஜக அரசாங்கம் வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியிலிருந்து எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? மக்களுக்கு எவ்வளவு வழங்கினார்கள் ? மீதி எவ்வளவு?

அதே போல, ஏடிஎம் மெஷின்களில் பணம் வைப்பதற்கு உரிமம் பெற்ற அவுட் சோர்சிங் கம்பெனிகள் எல்லாம் பெற்றுக் கொண்ட பணம் என்ன ஆனது?

மறைமுக திட்டம் – மக்களிடம் உள்ள பணத்தை பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குதல்!
RSS குருமூர்த்தி சொல்வது போல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏரளமான நிதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே அவை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 8 இலட்சம் கோடி ரூபாய்களைத் தராமல் விழுங்கிவிட்டது.

மேற்கொண்டு அவைகளுக்குத் தேவையான புதிய முதலீட்டு கடன்களுக்கு, மக்களிடம் உள்ள சேமிப்புப் பணத்தை கொண்டு போய் சேர்க்கத் தான், செல்லாத பணம் / Demonetisation திட்டம் துல்லியமாக திட்டமிடப்பட்டது.கார்ப்பரேட்டுகள் பலருக்கும் முன்கூட்டியே தெரிந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் இரு மாதத்தில் மட்டும் டெபாசிட் தொகை 6% உயர்ந்துள்ளது. ரிசர்வ் பாங்க் கவர்னர் ஆகியுள்ள உர்ஜித் படேல், முன்னாள் ரிலையன்ஸ் உயர் அதிகாரி ஆவார். முன்கூட்டியே கார்ப்பரேட்டுகளுக்கு செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

எனவே தான், கார்ப்பரேட்டுகள் இந்த நடவடிக்கை மீது கவலைப்படவில்லை. மறைமுக திட்டம் – ஆளுங் கட்சியை பலப்படுத்துவதும், எதிர்கட்சிகளின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதும்

அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது. 2014 கணக்குப்படி பாஜகவின் வருமானம் ரூபாய் 674 கோடி ஆகும். (காங்கிரஸ் ரூ.598 கோடியாகும்). இந்தக் கணக்குகளுக்கு அப்பால் பல ஆயிரம் கோடிகளை சொத்தாக, கருப்பு பணமாக வைத்துள்ளன.

1)செல்லாத பணம் அறிவிப்புக்கு முன்னரே, பல மாநிலத்தில் கருப்பு பணம் பாஜகவால் மாவட்ட, மாநில அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. சொத்துக்கள் வாங்குவதும் ஏராளமாக நடந்திருக்கிறது.

2)நவம்பர் 8 அறிவிப்புக்கு பிறகு, தென் மாநிலங்களில் கட்சி வளர்க்க,சொத்துக்கள் வாங்க புதிய பணமே அனுப்பப் பட்டுள்ளது.JVR அருண் கையில் சிக்கிய தொகை இப்படிபட்டது தான் என தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப் படுகிறது.

3)காங்கிரஸ் முதல் திமுக வரையிலான கட்சிகளின் கருப்பு பணத்தை முடக்குவதில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது.
பாசிஸ்டுகளின் பாதையில்…

ஜெர்மனியிலும், இத்தாலியிலும், ஹிட்லரும், முசோலினியும் தங்கள் அரசியல் போட்டியாளர்களை அடித்து நொறுக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். மோடியின் பாதையும் அதுவே! எனவே தான், நன்கு தெரிந்த கார்ப்பரேட் கருப்பு பண முதலைகளின் சொத்துக்களை, வெளிநாட்டு வங்கி டெபாசிட்டுகளை கைப்பற்றாமல், கரன்சியில் கருப்பு பணம் என்கிறார். மோடியின் தில்லுமுல்லு அரசியல் பொருளாதாரத்திற்கு எதிராக நாடு விழித்து எழ வேண்டும்!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.