புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை!

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்களாகிவிட்டன. நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 80%அய் ஒரே நடவடிக்கையில் அரசாங்கம் திரும்பப் பெற்றுவிட்டது. இப்படி திரும்பப் பெற்றது மிகப்பெரிய அளவிலும் உடனடியாகவும் நடந்தபோது, புதிய தாள்களை புகுத்துவது வலி தரும் அளவுக்கு மந்தமாக இருந்தது. மொத்த பணத்தில் 10% மட்டுமே முதல் பத்து நாட்களில் திரும்பப் புகுத்தப்பட்டுள்ளது. அதுவும் 2000 ரூபாய் தாள்களாகவே உள்ளது. இதன் விளைவாக ரொக்கத்துக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது; பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிதைவு ஏற்பட்டுள்ளது; சாமான்ய மக்களுக்கு அளவிட முடியாத அளவுக்கு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது; சுருக்கமாகச் சொன்னால் இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுக்கடங்காத பேரழிவு. இவையனைத்துக்கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பலர் உயிரிழந்துள்ளனர். வரிசைகளில் நிற்கும் மக்கள் உயிரிழக்கிறார்கள்; பணப் பற்றாக்குறையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் போனதால் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

ஊழல் மீதான தீர்மானகரமான தாக்குதல் என்று அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது; கருப்புப் பணத்தின் மீதான துல்லிய தாக்குதல் என்று சொல்கிறது. கருப்புப் பணம் என்று பரவலாக அறியப்படும், கணக்கில் வராத வருமானத்தின், செல்வத்தின் ஒரு சிறு பகுதி மட்டும்தான், தற்காலிகமாக ரொக்கமாக வைக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி பதுக்கி வைக்கப்பட்ட ரொக்கம் எந்த அளவுக்கு உண்மையில் வெளியேற்றப்படும் என்பதும் அனைவருக்கும் தெரிந்தே. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஊழல் பேர்வழிகள் நிச்சயம் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வரிசைகளில் காத்திருக்கவில்லை. மாறாக, நாட்டில் கருப்புப் பொருளாதாரம் புதிய வடிவத்தில் பிழைத்திருப்பதை நாம் பார்க்கிறோம்; சாமான்ய மக்கள் தங்கள் பழைய தாள்களை குறைந்த மதிப்புக்கு மாற்றிக் கொள்ள நேர்ந்துள்ளது; பணக்காரர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தி தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள்; அரசியல் கட்சிகளுக்கு ‘நன்கொடை’ தருகிறார்கள்; கோயில்களும் அறக்கட்டளைகளும் இதற்கு நன்கறியப்பட்ட வழிகளாக இருக்கின்றன; தாங்கள் கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ரொக்கத்தை புதிய 2000 ரூபாய் தாள்களாக மாற்றிக் கொள்கிறார்கள். ஊழல் பேர்வழிகள் தங்களிடம் இருக்கும் ரொக்கப் பணத்தை அழித்துவிடுகிறார்கள் என்று சங் பரிவார்காரர்கள் வதந்திகள் பரப்புகிறார்கள்; ஆனால், நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையை அறிவிக்கும் முன்பு ரொக்கம் பல்வேறு வடிவங்களிலான சொத்துக்களாக மாற்றப்பட்டதும் அனைவரும் அறிந்ததுதான். ராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், அம்பானிகள், அதானிகள், பிற பெரிய வர்த்தக நிறுவனங்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை பற்றி முன்பே தெரியும் என்று சொன்னார். கருப்புப் பணத்தின் மீதான போர் என்ற சொல்லப்படுவதைச் சுற்றியிருந்த ‘ரகசியம்’ இதுதான்.

கள்ளப் பணத்தை ஒழிப்பது என்று சொல்லிக் கொள்வதில் ஒப்பீட்டுரீதியில் கூடுதல் பொருள் உள்ளது. ஆனால் புழக்கத்தில் இருக்கும் கள்ளப்பணத்தின் அளவு என்ன என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியுமா? புழக்கத்தில் இருக்கும் பணத்தில் பாதி பணம் பாகிஸ்தான் உட்செலுத்தியிருக்கும் கள்ளப்பணம் என்று சங் பரிவார் – பாஜக பிரச்சார பொறியமைவு நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறது. ஆனால், தேசிய புலனாய்வு அமைப்புக்காக செயல்படுகிற, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனம், இந்தியாவில் உள்ள மொத்த கள்ளப் பணத்தின் மதிப்பு ரூ.400 கோடி என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக இது இதே அளவில்தான் உள்ளது என்றும் சொல்கிறது. இந்த கள்ளப் பணத்தின் பெரும்பகுதி (எல்லாமும் அல்ல; எத்தனை கள்ள 500 ரூபாய் தாள்கள் உள்ளனவோ, அதே அளவில் கள்ள 100 ரூபாய் தாள்களும் உள்ளன; 100 ரூபாய் தாள்கள் இப்போதும் செல்லும்) இப்போது செல்லாததாகிவிட்டது. பழைய கள்ளப் பணத்தின் இடத்தில் புதிய கள்ளப் பணம் வருவது வெகு சீக்கிரமே நடந்துவிடக் கூடும். புதிய தாள்களில் மேலான பாதுகாப்பு அம்சங்கள் எவையும் இல்லை; இதிலும் கள்ளப் பணம் உருவாகும்; கூடுதலாக இல்லை என்றாலும், எந்த அளவுக்கு இப்போது செல்லாமல் போகிறதோ, அந்த அளவுக்காவது கள்ளப் பணம் வரக் கூடும்.

புதிய தாள்கள் அச்சிட, அவற்றுக்கேற்றவாறு ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைக்க, புதிய தாள்களை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல, இன்ன பிற செலவுகள் என ரூ.15,000 கோடி செலவாகியுள்ளது. புதிய தாள்களை அச்சிடுவது, வழங்குவது ஆகியவற்றுக்கு ஆகும் செலவை, செல்லாமல் போன கள்ளப் பணத்தின் அளவோடு (ரூ.350 கோடி என்று வைத்துக் கொள்வோம்) ஒப்பிட்டால், மொத்த விசயமும் அபத்தத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமேயன்றி வேறல்ல. மூன்றாவது வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. இந்தியா நவீன ரொக்கப் பரிமாற்றமற்ற டிஜிட்டல் பொருளாதாரமாக மாறி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் 18 வயதுக்கும் மேல் ஆனவர்களில் 40%க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கட்டமைப்புக்குள் வரவில்லை. (இது உலகில், வங்கி கட்டமைப்பில் வராதவர்களில் அய்ந்தில் ஒரு பங்கு). நேரடி பணப் பட்டுவாடா நடைமுறைகளால், சமீபத்தில் இந்தியாவில் இந்த எண்ணிக்கையில் சற்று உயர்வு ஏற்பட்டாலும், இந்தியாவின் வங்கிக் கணக்குகளில் 43% இன்னும் செயல்படாதவை. பழைய பண்டமாற்று முறையில் அல்லாமல், டிஜிட்டல் பரிமாற்றத்தின் அடிப்படையில் ‘ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரம்’ என்ற கனவு மெய்ப்பட வேண்டுமானால், முதலில் இந்தியாவின் சாமான்ய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகளை விரிவாக்குவது, மேம்படுத்துவது பற்றி பேச வேண்டும். ரொக்கமற்ற பரிமாற்றம் பற்றி இப்படி எளிதாகப் பேசிவிடுவது, குதிரைக்கு பல மைல்கள் தள்ளி வண்டியை கட்டுவது போன்றது; இது வறிய மக்களை வெளியே நிறுத்தி அவர்களை தண்டிப்பதாகவே அமையும்.

மேல்நோக்கி நகரும் இந்தியாவைப் பொறுத்தவரை, ரொக்கப் பரிமாற்றமற்ற டிஜிட்டல் பரிமாற்றம் என்ற தொழில்நுட்ப யதார்த்தமும் சாத்தியப்பாடும் கவர்ந்திழுக்கிற கருத்தாக இருந்தாலும், ரொக்கப் பரிமாற்றமற்ற ஒரு பொருளாதாரம், பொருளாதார ஊழல் மற்றும் பிற பல்வேறு பொருளாதார குற்றங்கள் நிகழாது என்ற உத்தரவாதத்தை தந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில், ரொக்கத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதாச்சாரம் என்ற பொருளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடப்படும் நிலையில் இல்லை. இந்தியாவில் இந்த விகிதாச்சாரம் 12% என்றால், ஜப்பானில் இது 18%க்கும் கூடுதல்; ஹாங்காங்கில் 14%க்கும் கூடுதல்; அய்ரோப்பிய நாடுகளுடன் (10% ) ஒப்பிடுகையிலும் சீனத்துடன் (9%) ஒப்பிடுகையிலும் இது மிகவும் கூடுதலானதும் அல்ல. இந்த விகிதாச்சாரத்தில் நார்வே, ஸ்வீடன் போலவே இருக்கும் நைஜீரியாதான் (இந்த நாடுகளில் 2%) உலகில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்று. இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை. ஆனால், இந்த விருப்பங்களும் கற்பனைகளும் மிகப்பெரிய விலை கொடுத்துத்தான் கிடைத்துள்ளன; புல்லட் ரயில் கற்பனை, உள்கட்டுமான பராமரிப்பு, வசதிகள், பயணிகள் பாதுகாப்பு என்ற அடிப்படை பிரச்சனையில் இருந்து ரயில்வே துறையை விலக்கி நிறுத்துவதுபோல், ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரம் என்ற கற்பனை நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை என்ற பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

பொருளாதாரத்தை பெருமளவுக்கு சிதைவுறச் செய்து, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஆபத்தையும் உருவாக்கி, நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை ஒரே ஒரு விளைவை உருவாக்கியுள்ளது; நெருக்கடியில் இருக்கும் வங்கி கட்டமைப்புக்குள் பெருமளவு நிதியை உட்செலுத்தியுள்ளது. வாராக் கடன்களின் சுமை (கார்ப்பரேட் இந்தியா செலுத்தாமல் சேர்த்து வைத்துள்ள கடன் நிலுவைகள் இப்போது தள்ளுபடி செய்யப்படுகின்றன) வங்கிகளை அழுத்துவது நன்கறியப்பட்ட விசயம். வங்கிகள் மட்டும்தான் நிம்மதி பெருமூச்சு விடமுடியும். ஆனால், வங்கிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியை குறைப்பது, தற்போதைய கடன் வழங்கும் நடைமுறையையே மறுஉறுதி செய்யுமானால், ஒட்டுமொத்த நடவடிக்கைக்கும் பொருளின்றிப் போகும்; இந்தச் சுமை சாமான்ய மக்கள் மீதும் சுமத்தப்படும்.

நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையின் பொருளாதாரம் சந்தேகத்துக்குரியது; அதனுடன் சேர்ந்து வருகிற அரசியல் இயக்கப்போக்கும் விவாதப்போக்கும் ஏமாற்றுபவை; ஆபத்தானவை. இந்த நடவடிக்கைக்கான திட்டமும் தயாரிப்புகளும் சில காலமாகவே நடந்துகொண்டிருந்ததாக அரசாங்கம் சொல்கிறது. 2016 ஏப்ரலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை பற்றிய வதந்திகள் இருப்பதாகச் சொன்னது. 2016 செப்டம்பர் 4 வரை பதவியில் இருந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த நடவடிக்கைக்கு எதிரானவர் என்றும் சொல்லப்பட்டது. அப்படியானால் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கக் கூடிய இந்த முடிவை எடுத்து அதன் திட்டமிடலையும் தயாரிப்புகளையும் மேற்பார்வையிட்ட நிறுவன பொறியமைவுதான் எது? இந்த நடவடிக்கையையும் அதன் விளைவாக ஏற்பட்ட ரொக்கப் பற்றாக்குறையையும் மிகப்பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி தனது நிறுவனத்தை மூர்க்கத்தனமாக வணிகப்படுத்துகிற, இணையம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிற நிறுவனத்தின் விளம்பரத்தில், ஒரே இரவில், பிரதமரின் படங்கள் எப்படி வெளியாயின?

இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் பேசி வெளியிட்ட பிரதமர் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள மறுக்கிறார். இப்போது இந்த நடவடிக்கை பற்றி மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஒரு செயலியை துவக்கியுள்ளார். (அதிலும் கூட பல கேள்விகளுக்கு எதிர் கருத்து தெரிவிக்க வழியில்லை); இணையதளம் பயன்படுத்துபவர்களின் உற்பத்தி செய்யப்பட்ட ஒப்புதல் பற்றி மட்டுமே அவர் கவனத்தில் கொள்வார் என்பதும், அதை பயன்படுத்த முடியாதவர்கள், எதிர்ப்புக் குரல்கள் அவருக்கு பொருட்டில்லை என்பதும் இதிலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதும் டிஜிட்டல்ரீதியான பிளவை பகட்டாக வெளிப்படுத்தும் இறுமாப்பும் இதற்கு முன் இது போல் தெளிவாக வெளிப்பட்டதில்லை. நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை உருவாக்கியிருக்கிற பேரழிவுமிக்க விளைவுகள் தொடர்பாக நரேந்திர மோடியிடம் இருந்தும், சங் – பாஜக ஆட்சியிடம் இருந்தும் வெளிப்பட்டுள்ள (பாதக விளைவுகளை ஒட்டுமொத்தமாக மறுப்பது, அவை ஒரு பொருட்டல்ல என்று பார்ப்பது, மக்கள் துன்பத்தில் இன்பம் காண்பது, உணர்ச்சிரீதியாக மிரட்டுவது போன்ற) எதிர்வினைகளும் அரசாங்கத்தை மேலும் அம்பலப்படுத்துகின்றன.

மக்கள் சந்திக்கிற துன்பங்கள், சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொள்ளும் மிகவும் அடிப்படையான உரிமை உட்பட, மீறப்பட்ட பல உரிமைகள் அனைத்தும் தற்காலிக அசவுகரியங்கள் என்று மலினப்படுத்தப்படுகின்றன; ஊழல் இல்லாத இந்தியாவுக்கான தியாகம் என்று புகழப்படுகின்றன. இந்த மொத்த நடவடிக்கையும் பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருவதற்கான, பணக்காரர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை என்று அரசாங்கம் துணிந்து சொல்கிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற கோட்பாடு, பெரும்பணக்காரர்கள் கைகளில் அரசியல் அதிகாரம் குவிவதை தடுக்க முடியாததுபோலவே, ரூபாய் நோட்டுக்களை தற்காலிகமாக குறிப்பிட்ட அளவுக்குக் கொடுப்பதும் சமூகத்தில் அதிகரித்து வரும் ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வை சரி செய்துவிடாது என்பதை புரிந்துகொள்வது கடினமானதல்ல.

அய்முகூ அரசாங்கம் 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றபோது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் என்ற உண்மையான பிரச்சனையை மறைக்கிற, வறிய மக்களுக்கு எதிரான, திசைதிருப்பும் நடவடிக்கை என்று பாஜக சொன்னது. சுவாரசியமான விசயம் என்னவென்றால், வெளிநாட்டு பயணத்தின்போது, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் 2.5 லட்சம் டாலர் வரை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்துள்ள மோடி அரசாங்கம், வெளிநாடுகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர் வரை கணக்கில் செலுத்தலாம் என்று தாராளமயமாக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டத்தின் உச்சவரம்பையும் அதிகரித்துள்ளது.

புரட்சிகர கம்யூனிஸ்டுகளும் அனைத்து மக்கள் இயக்கங்களும்
நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையின் பேரழிவுமிக்க பொருளாதாரத்துக்கும் ஜனரஞ்சக அரசியலுக்கும் துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். முறையாக திட்டமிடப்படாத இந்த நடவடிக்கையை, விளைவுகள் பற்றி கவலைப்படாமல் அமல்படுத்தியதற்காக, அதனால் நாட்டின் சாமான்ய மக்களை சூழ்ந்துகொண்ட பேரழிவுமிக்க விளைவுக்காக இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். போதுமான அளவுக்கு புதிய தாள்கள் இல்லாமல் புழக்கத்தில் இருக்கும் தாள்களுக்கு தடை விதிக்க முடியாது. கிராமப்புற பொருளாதாரத்தின் உயிர்நாடியான, இந்திய விவசாய மக்களின் முதல் புகலிடமான கூட்டுறவு வங்கிகள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட ஒவ்வொரு உயிரிழப்புக்கும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கும் பொருளாதார சீர்குலைவுக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அடுத்தடுத்த வறட்சி காலங்களாலும், தொடர்ச்சியான விவசாய நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய சமூகம், விதைப்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; அரசாங்கம் எல்லா விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்து, இடுபொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள், பிற கிராமப்புற தொழிலாளர்கள், சிறுவர்த்தகர்கள், போக்குவரத்து பணிகளில் ஈடுபடுபவர்கள், அமைப்பாக்கப்படாத, முறைசாரா துறை தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் அனைவருக்கும், அவர்கள் வாழ்வாதாரம் பறிபோனதால், போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதாகச் சொல்லித்தான் அரசாங்கம் மக்கள் மீது இந்த பேரழிவு நடவடிக்கையை ஏவியுள்ளது; எனவே, கருப்புப் பணத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்; அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்; அப்படிச் செலுத்தவில்லை என்றால், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் பற்றிய பனாமா பேப்பர்களும், இப்போது வரி ஏய்ப்பு செய்ய அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றிய விவரங்கள் கொண்ட சஹாரா – பிர்லா நாட்குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன; இது தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க, நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். தொழில் – அரசியல் கூட்டு உடைபடாமல் கருப்புப் பணத்தை ஒழிப்பது சாத்தியமில்லை; அரசியல் கட்சிகள் தங்கள் மொத்த நிதி விவரங்களையும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்; கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்; அதீதமான தேர்தல் செலவுகள் தடை செய்யப்பட வேண்டும்.

மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை அதன் எதேச்சதிகார நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி. மொத்த விவகாரத்தையும் அரசாங்கம் அமல்படுத்திய விதம், நாற்பது ஆண்டுகளுக்கு முன், இந்திரா – சஞ்சய் காலத்தின் நெருக்கடி நிலையையே நினைவூட்டுகிறது. பத்திரிகைகள் மீது தடை, கிராமப்புறங்களில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, நகர்ப்புறத்தை அழகுபடுத்துவது என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேற்றப்பட்டது, எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டது, மக்களின் ஜனநாயக உரிமைகளும் அரசியல் சுதந்திரங்களும் நசுக்கப்பட்டது, நாடாளுமன்ற ஜனநாயகம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது, எதிர்க்கட்சி தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டது என நெருக்கடி நிலையின் கட்டுப்பாடுகள் அனைத்தும், ராணுவத்தை அரசியல்மயப்படுத்துவது, அரசியலை ராணுவமயப்படுத்துவது, ஊடகங்களை முடக்குவது, பொருளாதார தர்க்கம், நாடாளுமன்ற நடைமுறைகள் ஆகியவற்றுக்கு முற்றும் முரணாக தற்போதைய நடவடிக்கையால் ஏற்பட்டுள்ளது போன்ற கட்டுக்கடங்காத பேரழிவை மக்கள் மீது திணிப்பது போன்ற மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்குகின்றன.

இந்திய மக்கள் இந்த ஆபத்தை உணரத் துவங்கிவிட்டனர். நாடு முழுவதும் கேட்கிற, ‘நோட்டுகளை அல்ல, ஆட்சியை மாற்றுவோம்’ என்ற முழக்கம் மக்களின் இந்தப் புரிதலை பிரதிபலிக்கிறது. மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரும் இந்த ஜனநாயக உணர்வை முன்னெடுத்துச் செல்வதும், மோடி அரசாங்கத்தின் மோசமான தாக்குதலுக்கு எதிராக உறுதியான போராட்டம் நடத்துவதும் அவசர கடமைகளாகும்.

– எம்எல் அப்டேட் தொகுப்பு 19, எண் 48, 2016 நவம்பர் 22 – 28