அருண் நெடுஞ்செழியன்
மூலதனத்தின் அடிப்படை முரண்பாடுகளை முதலாளியம் களையாதவரை,அதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.அப்படி அது களையும் பட்சத்தில் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது.
மூலதனத்தை திரட்டுதல்,மறு உற்பத்தியில் உபரி மூலதனத்தை முதலீடு செய்தல்,மீண்டும் உபரி மூலதனத்தை படைத்தல் என்ற அதன் சுற்றோடத்தில் எழுகிற அடிப்படை முரண்பாடுகளாக டேவிட் ஹார்வி(மார்க்சின் வழி) சுட்டிக் காட்டுவது
• மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடுகள்
• உபரி மூலதனத்தை பங்கிடுவதில் எழுகிற (வறுமைx வளம்) ஏற்றத்தாழ்வுகளை மேலாண்மை செய்வதில் எழுகிற முரண்பாடுகள்
• நிலவுகிற உற்பத்தி முறையில் இயற்கையிலிருந்து அந்நியமாகிற முரண்பாடுகள்
மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளை அதன் எல்லைக்குள்ளாக தீர்க்க இயலாத காரணத்தால் உலகப் பொருளாதார நெருக்கடிகள் வடிவில்,நிலவுகிற அமைப்பின் போதாமைகள்,சுரண்டல் அம்ச பொருளாதார முறைகளில் அம்பலத்திற்கு வருகின்றது.
உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமைகளானது, நிலவுகிற முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் அடித்தள கோளாறையும் அதன் மேல் கட்டப்பட்டுள்ள அரசு நீதி பரிபாலன அமைப்புகளின் தடுமாற்றத்தையும் பட்டவர்த்தமாக வெளிப்படுத்துகிற முக்கிய சமூக அரசியல் நிகழ்வாக இருந்துவருகிறது.
ஒவ்வொரு நெருக்கடி நிலையிலும்,நிலவுகிற அமைப்பின் மீதான தன் சொந்தக் கட்டுப்பாட்டை,மேலாண்மையை முதலாளித்துவம் இழந்துவருவதை அதன் வரலாற்றில் கண்டு வருகிறோம்.அதிலிருந்து மீள்வதற்கு எவ்வளவு முயன்றாலும் அது தற்காலிகத் தீர்வாகவே அமைகிறது.அல்லது மீண்டுமொரு பெறும் சுழலில் சிக்குகிறது.காலனியம் அடுத்து கீனிசியம் அடுத்து நவதாரளமயம் அடுத்து …???
உற்பத்திக் குவிப்பிற்கும் நுகர்வுக்குமான முதலாளித்துவ அமைப்பின் இந்த அடிப்படை முரண்பாடானது அதன் தோற்றம் தொட்டே நிலவிவருகிற உள்ளார்ந்த குணாம்சமாகும்.1826 இல் தொடங்கிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளானது ஒவ்வொரு பத்தாண்டிற்கும் சுற்றி சுழன்றடித்து தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறது.உற்பத்தி-உற்பத்திப் பெருக்கம்-எழுச்சி-தேக்கம்-நெருக்கடி மீண்டும் உற்பத்தி என கடந்த ஒன்றரை நூற்றாண்டாக அதன் முரண்பாட்டு சுற்றோட்டோம் தொடர்கதையாகிவருகிறது.
முன்னதாக 1940 களின் பொருளாதார நெருக்கடி காலத்தின்போது கீனிசியம் என்ற மாற்று பொருளாதாரம்,ஆதிக்கம்பெற்று நடைமுறைக்கு வந்தது.உற்பத்தி மட்டத்தில் அரசின் தலையீட்டை வற்புறுத்துகிற இந்த முதலாளிய சீர்திருத்தமானது,சில பத்தாண்டுகள் வரை சிறு சிறு நெருக்கடியோடு தொடர்ந்தது.பின்னர் 1980 களில் முற்றிய இந்நெருக்கடியானது, தாராளமயம்,தனியார்மயம் என்ற மாற்று பொருளாதாரத்திற்கு இட்டுச் சென்றது.தற்போது நவதாராளமயமாக்கலும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிற நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு முதலாளித்துவ அறிஞர்களிடம் பதிலில்லை!
ஏனெனில் தாராளமயக் கட்டத்தில், முதலாம் உலக நாடுகளின் உபரி மூலதனம், மூன்றாம் உலக நாடுகளில் பாய்ந்து உழைப்பையும் இயற்கை வளத்தையும் சுரண்டிக் கொழுத்தது.இந்தியா,சீனா ,பிரேசில், போன்ற ஆசிய லத்தின் அமெரிக்க நாடுகளின் சந்தையும் உபரி மூலதனப் பெருக்கத்திற்கு ஆதரவாக இருந்தது.இன்று இந்நாடுகளில், கடந்த கால் நூற்றாண்டு தாராளமய சூழலில் நிலைமைகள் வேறாக மாறியுள்ளது.சுரண்டலின் அழுகல்தன்மை வெளிப்படத் தொடங்கியுள்ளது.
1980 களில் தொடங்கிய இச்சுற்று 2016 இல் அதன் அந்திமக் காலத்ததை நெருங்கியுள்ளது.90 களில் பிரேசில்,மெக்சிகோ,சிலியின் முற்றிய பொருளாதார நெருக்கடிகள் தற்போது 2015-16 இல் சீனாவையும், இந்தியாவையும் சுற்றிவளைத்துள்ளன.
2008 நெருக்கடியில் அமெரிக்கா சிக்கத் தவித்த போது,சீனாவின் சந்தையே அதன் மீட்சிக்கு பெரிதும் உதவியது.சீனாவின் குறைவான கூலி வீதம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது,அதிவேக வளர்ச்சிப் பாதையில் சீனாவை செலுத்தியது.சீன அரசோ வங்கிகளின் ஊடாக கடன் செலாவணியை நிறுவனங்களுக்கு வாரி வழங்கின,இன்று அதன் கடன் அளவு பல மடங்கு பெருகியுள்ளது.தற்போது சீனாவோ,வெளிநாடுகளில் தேவை குறைந்ததை அடுத்து உள்நாட்டு நுகர்வை மையப்படுத்தி பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு வருகிறது.வளர்ந்த நாடுகளோ,இந்த நிலவுகிற பொருளாதார நெருக்கடிக்கு சீனவைக் காரணம் காட்டி வருகின்றன.
சீனாவில் முற்றிய நெருக்கடி வெடித்தால்,அது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்ந்தே உள்ளன.
உலகளாவிய பொருளாதாரமனது தேங்கிய நிலையில் சுமார் 3.5 விழுக்காட்டுவீதத்தில் சிக்கித் தவிக்கிறது.ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்தை அடுத்து இத்தாலியும்,பிரான்சும் கூட வருகின்ற நாட்களில் விலகுகிற சூழ்ல்நிலைகள் தென்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை,கடந்த எட்டு-பத்து ஆண்டுகளில் அதன் அந்நியக் கடன் வீதமானது.அதன் வரலாற்றில் இல்லாத வகையில் 485 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு சந்தையை பொறுத்தவரை, சேவைத் துறையைத் தண்டி பெரிய தொழிற்துறை பங்களிப்பை எதுவும் இந்தியா செய்யவில்லை.அதேபோல உள்நாட்டில் குறிப்பாக உள்காட்டுமான வளர்ச்சிக்கு அதிக கடன் செலவாணிகளை வழங்கி சீனா போன்று பெரும் வங்கி நெருக்கடியில் இந்தியா சிக்கியுள்ளது.உள்நாட்டு பெரு முதலாளிகளிடம் தொக்கி நிற்கிற வாராக் கடன் மட்டுமே சுமார் 8 லட்சம் கோடி வங்கிக்கு வெளியே உள்ளது.
இந்த சூழலில், அந்நிய மூலதனத்தின் வரவு குறைந்தாலோ, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலோ, சீனாவில் பொருளாதார நெருக்கடி முற்றினாலோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தினாலோ நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உலகப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுதான் என்ன? கீனிசியம் என்ற மாற்றும், தாராளமயம் என்ற மாற்றும் காலாவதியாகியுள்ள நிலையில் மாற்றுப் பொருளாதாரம் என்று எதை நோக்கி ஏகாதிபத்தியம் நகர முடியும்? தன்னை தக்க வைக்க முயலும்?
அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
முதலாளித்துவம் பல நெருக்கடிகளை சந்தித்து மீண்டுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ளவற்றையும் சந்தித்து அது மீளும். அது உன்னதமானது என்று கூறவில்லை. இன்று அதற்கான உலகளாவிய மாற்று என்று எதுவும் இல்லை. எனவே மாற்றங்கள் ஏற்படும் அவற்றினூடே முதலாளித்துவம் தன்னை தக்க வைத்துக் கொள்ளும். இது போன்ற கட்டுரைகள் வாய்ப்பாடு மார்க்சியர்களால் எழுதப்படுபவை. அந்த வாய்ப்பாடு மார்க்சியத்தால் நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை.
LikeLike