‘நம்ம பையன்ப்பா. நாசமாயிடக்கூடாதுல்ல’!

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

பரபரப்பான அரசியல் விவாதங்களுக்குப் பெயர் பெற்ற தந்தி டீவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்கு என்ன வேலை? இது பொதுவான அரசியல் நிகழ்ச்சிதானே என்று சொல்லக்கூடும். ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஏதேனும் நடிகர்கள் அந்நிகழ்ச்சியில் அணிவகுத்திருக்கின்றனரா என்கிற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், இதற்குப் பின்னால் உள்ள முடிச்சுக்களும் திரைத் துறையில் ஏற்படத் துடிக்கும் உடைப்புகளும் தெரியவரும். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சியும்கூட ஒரு தவிர்க்கவே இயலாத அரசியல் நிகழ்ச்சிதான். தந்தி டீவி மட்டுமல்ல, அந்த வாரத்தில் ஊடகங்கள் அனைத்தும் சிவகார்த்திகேயனை விரட்டின. அவர் வாயிலிருந்து அவை நிறையச் சங்கதிகளையெல்லாம் பிடுங்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. ஊடகங்களுக்குத் தேவை அந்த ஒற்றை வார்த்தை.

ஆனால் அந்த ஒற்றை வார்த்தை கொண்ட அந்தப் பெயரை அவர் உச்சரிக்கவே இல்லை. அவர் பாணியில், அவரைக் கேள்வி கேட்பவர்களின் பாணியில் சொல்வதென்றால், அந்த வார்த்தை ஏறிவந்த ஏணி. ஏறிவந்த ஏணி யார் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். அதில் யாருக்கும் சந்தேகங்கள் இல்லை. கோடம்பாக்கத்தில் போய் நின்று கொண்டு அந்த ஏறிவந்த ஏணி யார் என்று கேட்டால் சின்னக் குழந்தைகள்கூட சொல்லிவிடும். ஆனால் எதற்காக வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாகப் பேசுகிறார்கள் என்பதில்தான் இந்த சினிமா உலக வணிகச் சூத்திரங்கள் அடங்கியிருக்கின்றன.

பொதுவாகவே தமிழ் சினிமாவை கோடம்பாக்க சினிமா, ஆழ்வார்பேட்டை சினிமா என முன்பெல்லாம் பிரிப்பார்கள். இப்போது அப்படியான பிரிவுகள் கிடையாது என்றாலும், அந்தப் பிரிவுகள் முன்பு வகித்து வந்த பொதுக் குணங்கள் இன்னும் நீடிக்கின்றன. அவை வேறொரு வடிவத்தில் இருக்கின்றன. பலம் பொருந்திய பின்னணியில் இருந்து சினிமா துறைக்கு வரும் நபர்களுக்கு இதுமாதிரியான பிரச்சினைகள் எப்போதும் வருவதில்லை. பீப் பாடலைக்கூட பாடி விட்டோ, இசையமைத்து விட்டோ அடுத்த சில மாதங்களில் அதிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் எந்தவித பின்புலங்களும் இல்லாமல் இந்தத் துறையில் அடியெடுத்து வைப்பவர்களுக்குத்தான் இத்தகைய பிரச்சினைகள் அணி வகுத்து நிற்கின்றன.

சினிமா வரலாறு நெடுக இதுமாதிரி ஒருநூறு சம்பவங்களை அடுக்கலாம். அஜீத் என்கிற ஒரு நபரை மிரட்டி காசு வாங்கலாம். விஜய் சேதுபதி என்கிற நபரை மிரட்டிக் காசு வாங்கலாம். ஏன் இப்போது நடிகர் சங்கச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால்கூட தானும் அப்படியான பிரச்சினைகளைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறாரே? மிரட்டல் என்றால் தெருவோரத்தில் கத்தியைப் போட்டு காசைப் பிடிங்குவது போலல்ல. இது ஒருவகையான நூதனமான மிரட்டல். பிடிக்காத காதலியிடம் போய் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று சொல்வதைப் போல நுணுக்கமான மிரட்டல். அந்த வகை மிரட்டல்களை தனியாக இந்தத் துறையில் நுழைந்த இளைஞர்கள் பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஏன் ஏறி வந்த ஏணிக்களும்கூட இந்த வகை மிரட்டல்களுக்கு ஆளானவர்கள்தான். இப்போது ஆழ்வார் பேட்டை கிளப்பில் சேர்ந்து விட்டதால், இந்த மிரட்டல்கள் மட்டுப்பட்டிருக்கின்றன. ஏறிவந்த ஏணியின் அண்ணனும்கூட இந்த வகை மிரட்டல்களுக்குப் பயந்து சொத்தை விற்றவர்தானே? தன்னுடைய அப்பா பெயரில் படத்தை வெளியிட்டுத் துவங்கிய அவர் வாழ்வு, அவர் மனைவியின் பெயரில் படத்தை வெளியிடும் இக்கட்டான கட்டத்தில் வந்து நின்றிருப்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டியிருக்கிறது.

எதற்காக இந்த நூதன மிரட்டல்கள் என்கிற கேள்வியைக் கேட்டால், சுதந்திரமான வணிகம் என்பதுதான் பதிலாக வந்து விழும். எல்லா துறைகளைப் போலவே சினிமா துறையும் சுதந்திரமான வணிகத்திற்கு தயாராகிவிட்டது. பாரம்பரிய வணிக முறைகள் மெல்ல புழக்கத்திற்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தயாரிப்பாளர் – விநியோகிஸ்தர்- தியேட்டர் அதிபர்கள் என ஒரு முறையான சங்கிலி இருந்தது. ஒருகாலத்தில் இந்த வியாபாரச் சங்கிலியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர். தமிழ்ச் சினிமாவின் கமர்ஷியல் முகமாகவும் தமிழகத்தின் அரசியல் முகமாகவும் இருந்த எம்ஜிஆருக்கே இங்கே முதலாளிகள் இருந்தார்கள். அடுத்துவந்த ரஜினி, கமல் ஆகியோரும்கூட கையைக் கட்டிக் கொண்டு நிற்காவிட்டாலும், அருகில் கால்மேல் கால் போட்டு அமர கொஞ்சம் கூச்சப்பட்டார்கள். அப்போது முதலாளிகளும்கூட அவரவர்க்கான நியாய தர்மங்களுடன் நடந்து கொண்டனர்.

ஆனால் நிலைமை இப்போது மாறி விட்டது. உலகளாவிய சந்தையை உள்ளடக்கிய நியாயமான வணிகத்திற்கு முதலாளிகளும் தயாராக இல்லை. இந்தக் கண்ணியில் இருக்கிற கடைசித் தொடர்பான தியேட்டர் அதிபர்களும்கூட தயாராக இல்லை. முன்னூறு பேர் அமர்ந்து பார்க்கிற சினிமா காட்சியில் வெறும் முப்பது பேர் வந்ததாகக் கணக்குக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
கடந்த இருபது வருடங்களில் இந்தத் துறை மெல்ல மெல்ல சீரழிந்திருக்கிறது. பணம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் படம் எடுத்துவிட முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. சந்தை மதிப்புமிக்க ஒரு கதாநாயகனின் கால்ஷீட் இருக்கிறதென்றால் கோடிகளைக் கொட்டிக் கொடுக்க வட்டிக்கு விடுபவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். வட நாட்டுப் பணம் மட்டுமல்ல, திராவிடப் பணமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது கருப்புப் பணத்தைப் பாதுகாத்து இரட்டிப்பாக்கித் தர முகவர்களை வைத்திருக்கிறார்கள். அந்த முகவர்கள் தங்களைத் தயாரிப்பாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். பாரம்பரிய தயாரிப்பாளர்களான ஏவிஎம் போன்றவர்கள் வேறு வழியில்லாமல் ஒதுங்கி நின்று கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

இந்த முகவர்கள் கொடுக்கும் அழுத்தத்தின் நீட்சிதான் சிவகார்த்திகேயன் சம்பவம். அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் தெளிவாக ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். “நான் படம் பண்ணித் தர மாட்டேன் என்று சொல்லவில்லை. யார் இயக்குனர் என்ன கதை என்ன பட்ஜெட் என எந்த விவரமும் இல்லாமல் எப்படி நடிக்க ஒத்துக் கொள்வது. எனக்கென்று ஒரு சந்தை உருவாகிவிட்டதல்லவா” என எதிர் கேள்வி எழுப்பினார் சிவகார்த்திகேயன். கதை யாருக்குத் தேவை? பூஜை போட்ட அடுத்த நாளே அறுபது கோடி ரூபாய்க்கு படத்தை விற்று விட முடியும் என்பதால்தானே கழுத்தில் கத்தி வைக்கிறார்கள்.

பாரம்பரிய வணிகத்தை ஓரங்கட்டினாலும் இந்தச் சுதந்திர வணிகத்தில் சில நல் உபயங்களும் உண்டு. நமக்கான வணிகத்தை நாமே பார்த்துக் கொள்ள முடியும். நமக்கான சந்தையை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். சிவகார்த்திகேயன் போன்ற இளைஞர்கள் மற்ற துறைகளைப் போல சினிமா துறையிலும் அதைத்தான் செய்ய நினைக்கிறார்கள். அது பாரம்பரிய தயாரிப்பாளர்களை விட இந்த முகவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆசிட் வீசுவது போல் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்களுக்குப் பழக்கமான முறையில் மிரட்டத் துவங்குகின்றனர். இந்த மாதிரியான சூழலைப் பயன்படுத்தி ஏறி வந்த ஏணிகள் தாங்கள் ஏற்றி வைத்த கலைஞனைக் கீழே தள்ள முயற்சிக்கின்றன. இதுதான் இதன் பின்னணி நிலவரம்.

எதற்குச் சுற்றி வளைத்துப் பேச வேண்டும்? நேரிடையாகவே விஷயத்திற்கு வந்துவிடலாம். சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்புத் தந்து மேலேற்றி விட்டவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷை மேலேற்றி விட்டவர் அவருடைய அப்பா கஸ்தூரி ராஜா. அப்பா கஸ்தூரி ராஜாவிடம் பழைய நன்றிக் கடனோடு தனுஷ் இருக்கிறாரா என்ன? அப்பா மகன் என்கிற உறவில் யாரும் நுழைய முடியாது. அதை விட்டு விடலாம். இயக்குனர் நடிகர் என்கிற உறவை தனுஷ் மேற்கொண்டு மேலெடுத்துச் செல்ல விரும்பவில்லையே ஏன்? அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்ய நினைக்கிறார். அவர் விட்டு விடுதலையாகி சுதந்திரமாகப் பறக்க நினைக்கிறார். அவர் தனியாகத் தன்னுடைய கடையைப் போட விரும்புகிறார். பார்ட்டிகளில் தனிக் கடை போட்ட ஒருத்தனை பழைய முதலாளி போய்த் தண்ணீர் எடுத்துக் கொண்டு வா என்று சொல்வதை யார்தான் ரசிப்பார்கள்? அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் சங்கடத்துடன் இந்த விஷயத்தைத்தான் வெளிக்காட்டுகிறார். “அதுக்காக அவங்க சொல்றது எல்லாத்தயும் எப்படிக் கேட்க முடியும். நம்ம என்ன சொன்னாலும் கேட்பான். நம்ம கஸ்டடிலதான் இருக்கான் என எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காங்க” என துல்லியமாக அதை நினைவுகூர்கிறார்.

இங்கேதான் சிக்கல் ஆரம்பமாகிறது. தனித்துச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்கிற வேட்கை இல்லாத கலை ஞர்கள் இருக்க முடியாது. பழைய முதலாளிகள் என்கிற தோரணையில் இப்போது இங்கே யாரையும் அடக்கி வைக்க முடியாது. காலம் மாறி விட்டது என்பதைப் புரிந்து கொண்டதாலேயே ஏவிஎம் போன்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
சரியாகச் சொல்ல வேண்டுமெனில், பெரும் முதலாளிகள் கோலோச்சிய இந்தத் துறை இப்போது, அந்த முதலாளிகளின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் தலைப்பிரட்டைகளின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பெரிய தலைகளையெல்லாம் விட்டு விடுங்கள். இப்போது வந்த சின்ன தலைகளைத்தான் நான் சொல்கிறேன். இவர்கள் பார்ட்டி பண்ணுவதைப் போல சினிமாவைத் தயாரிக்க நினைக்கிறார்கள். இந்தச் சந்தையைக் கைக்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். நானே ராஜா, நானே சந்தை என்கிற மனநிலைக்கு நகர்ந்திருக்கின்றனர்.

குடியும் கூத்துமாய் எப்படி ஒரு தொழில் விளங்கும் என பழைய ஆட்கள் கேட்கிறார்கள். பழைய ஆட்கள் எழுப்பும் நியாயமான குரல்களைப் பற்றிய கவலைகள் இல்லாத இவர்கள் பார்ட்டிகளில் அடித்துக் கொள்வதைப் போல, இந்தத் துறை சார்ந்த வணிகத்திலும் அடித்துக் கொள்கிறார்கள். ஒன்றுகூடி திருட்டுத் தனங்களையும் இந்தத் துறைக்குள்ளாகவே செய்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு பீப் சாங் சம்பவத்தையே எடுத்துக் கொள்வோம். அனிருத்தான் இசையமைத்தார் என முதலில் சொன்னார்கள். நான் இசையமைக்கவே இல்லை என அனிருத் சொன்னார். இரண்டு பேரும் அந்த நேரத்தில் அமைதி காத்துவிட்டு இப்போது சேர்ந்து கொள்ளவில்லையா? இறுக்கமான நட்பை இதுபோன்ற சம்பவங்களில் வெளிக்காட்டும் அவர்கள் சில நேரங்களில் இதே வேகத்தோடு வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் என்னுடைய தம்பி என இதே வாயால் சொன்னவர்தானே தனுஷ். இப்போது என்ன வந்துவிட்டது? ஏனெனில் அந்தத் தம்பி தனுஷ் என்கிற அண்ணன் தனக்காக உருவாக்கி வைத்திருக்கும் டெரிட்டரியை கபளீகரம் செய்யத் துவங்கி விட்டார். காட்டில் ஒவ்வொரு புலிக்கும் 45 சதுர கிலோ மீட்டர் டெரிட்டரி உண்டு. ஒரு புலியின் பிரதேசத்திற்குள் இன்னொரு புலி நுழையாது. ஆனால் சினிமா காட்டைப் போல அல்லவே? உங்களிடமிருந்து கிளம்பி வந்த இளைஞன் என்கிற பிம்பத்தை சிவகார்த்திகேயன் தட்டிப் பறிக்க விழைகிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்தப் பிம்பத்திலிருந்து விலகி ஆழ்வார் பேட்டை கிளப் பக்கமாய் ஒதுங்கி மேல் நோக்கி நகர நினைத்தார் தனுஷ். ஆனால் அது மேற்கொண்டு நகர முடியாத முட்டுச் சந்து எனப் புரிந்து கொண்டார். இப்போது திரும்பிப் பார்த்தால் தான் வளர்த்து விட்ட தம்பி, தான் புறப்பட்ட இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். அது அவருக்குப் பிடிக்கவில்லை. பதட்டமாகிறார். பார்ட்டிகளில் பண்ணுவதைப் போல சில்லுண்டி வேலைகளைச் செய்யத் துவங்குகிறார். இவரும் அண்ணனை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதால், கண்ணைக் கசக்குகிறார். ஒப்பாரி வைக்கிறார்.

சில சமயங்களில் சவால் விடுகிறார்.
இருவரும் இன்னொரு பார்ட்டியில் சேர்ந்து கட்டிப் பிடித்து அழும் காட்சிகளைக்கூட தமிழகம் பார்ப்பதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலத்து இளைஞர்களின் இயல்பு அதுதான். வெறுப்பைக் கக்குகிற வேகத்தில் உடனடியாக அளவுகடந்த அன்பையும் கக்குவார்கள். ஆனால் அந்த இளைஞர்களை தங்களது இயல்புப்படி நடந்து கொள்வதற்கு இந்த முகவர்கள் அனுமதிப்பதில்லை என்பதுதான் இப்போதைய சிக்கல். இந்தப் பிரிவின், இந்தத் தேவையில்லாத மோதல்களின் வழியாக அவர்கள் சுளையான வியாபாரத்தை நடத்தத் திட்டமிடுகின்றனர். அதற்கு இவர்கள் பலியாகியிருக்கின்றனர். அதைத்தான் நடந்த அத்தனை சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன. என்னளவில் இதை இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். இதில் தவறுகளும் இருக்கலாம். ஏறிவந்த ஏணி போல் இல்லாமல், நான் புரிந்து கொண்ட விதத்தில் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள்.

இதில் இன்னொரு விசயத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிவகார்த்திகேயன் சர்ச்சையின் போது முகநூலை மேய்ந்த போது, அவருக்கு ஆதரவு அளித்தவர்களை விட எதிர்த்தவர்களே அதிகம். ரெமோ என்கிற படம் பெண்களுக்கு எதிராகப் பேசுகிறது என்கிற ஒரு காரணம் மட்டும் இதற்குப் பின்னணியாக இருக்க முடியாது என்றுதான் தோன்று கிறது. காரணம் என நான் புரிந்து கொண்டது இதுதான். சிவகார்த்திகேயனும் தான் ஏறி வந்த ஏணியான அவர் புறப்பட்டு வந்த இடத்தை மறந்து விட்டு தனுஷ் போல அந்தக் கிளப்பின் முட்டுச் சந்தில் நிற்கப் பிரயத்தனப்படுகிறாரோ என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ‘நம்ம பையன்ப்பா. நாசமாயிடக்கூடாதுல்ல’ என ஊர்ப்பக்கம் சொல்வதைப் போலவான ஒரு மனநிலை இந்த வெறுப்பிற்கு பின்னால் செயல்படுகிறதோ என்கிற சந்தேகமும் எனக்கு உண்டு. நியாயமாய் இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனுக்காக அவன் புறப்பட்டு வந்த இடத்தில் இருக்கும் நியாயவான்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஏன் எழவில்லை? அவர்களுக்கு இந்தத் துறையில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் இயங்கும் விதத்தில் சந்தேகங்கள் இருக்கின்றன. அதனால் மக்களும் ஏவிஎம்மைப் போல ஒதுங்கி நின்று கை கட்டி இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்க்கின்றனர்.

தன் மீது ஆதரவை விட வெறுப்பு அதிகமாக ஏன் இருக்கிறது என்பதை சிவகார்த்திகேயன்தான் ஆஸ்திரேலியா மாதிரி எங்கேயாவது போய் அமர்ந்து கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் திருச்சியில் நிறைய வெயில் அடிக்கும் என சிவகார்த்திகேயன் நினைக்கக்கூடும். அவர் அப்படி நினைப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவே மக்கள் சந்தேகிக்கிறார்கள். அவர் அப்படித்தான் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. மக்கள் செல்வன் என விஜய் சேதுபதி வீட்டின் சமையலறை வரை வருவதற்கான சுதந்திரத்தைப் பெற்று விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. சிவகார்த்திகேயன்தான் தன்னுடைய அடுத்த நகர்வுகளைச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரைகள் பிடிப்பதில்லை. நான் சேட்டை செய்யும் போதெல்லாம் என்னுடைய அப்பத்தா அடிக்கடி இப்படிச் சொல்லும். “யார் கண்ணயும் உறுத்தாம இருக்கணும்டா. அதுமாதிரி ஊர் வாயிலயும் விழக்கூடாது”. ஆனால் இந்தத் துறையில் நல்லதாகவோ கெட்டதாகவோ ஊர் வாயில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் இந்த பார்ட்டி பாய்ஸ் நினைக்கிறார்கள். அதுதான் அவர்கள் கற்றுக் கொண்ட சினிமா என்கிற போது, அதைக் கேள்விக்குட்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை இவருடைய சமீபத்தில் வெளியான நாவல்கள். இரண்டும் உயிர்மை வெளியீடுகள். விரைவில் அஜ்வா என்ற நாவல் வெளியாகவிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.