முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் சந்தை பகுதி, பெரம்பூர் இந்தியன் வங்கி ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் ஆகிவந்த நிலையில் தற்போது 100,150,200 ரூபாய் கூட வியாபாரம் ஆகவில்லை என வருத்தப்பட்டு சொன்னார்கள். ’யாரிடமும் 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுகள் இல்லை, எல்லோரும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எடுத்து வருகிறார்கள்; அதற்குகூட எங்களால் சில்லறை கொடுக்க முடியவில்லை’எனச் சொன்னார்கள். அது மட்டுமல்ல வங்கிகளில் மக்கள் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு காலையிலிருந்து இரவுவரை வரிசையில் நிற்கும்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசு ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என சொல்லியிருந்தார்கள். ஆனால் மீண்டும் நேற்று இன்னொரு வாரகாலம் ஆகும் என சொல்லியிருக்கிறார்கள். முதலில் 4000 ரூபாய் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என சொல்லப்பட்ட நிலையில் இன்றைக்கு 2000 ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என அறிவித்திருப்பது மருத்துவமனைச் செலவுகளுக்கு, வீட்டில் சாப்பாட்டிற்கு அரிசி, காய்கறிகள்கூட வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெண்கள் சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றது.
சொந்தப் பணத்தை எடுப்பதற்கு மை வைக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு எல்லோரும் வேதனைப்படுகிறார்கள். வங்கிகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பது, தேவையான இடங்களில் குடிநீர் வசதிகளை திமுகவினர் செய்ய வேண்டும். ஏனெனில் அரசு இது சம்பந்தமாக எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, இது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. முதலமைச்சரை பொறுத்த வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவருடைய இலாக்காக்களை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்க வேண்டும். எந்தவிதமான அறிக்கையும் கிடையாது. அது மட்டுமல்ல கூட்டுறவு வங்கிகளில் மத்திய அரசு பண பரிவர்த்தனை செய்யக் கூடாது என அறிவித்த காரணத்தால் விவசாய பெருமக்கள் பணம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது.
இதையெல்லாம் மத்திய அரசு உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. கலைஞர் உட்பட எல்லோரும் இது சம்பந்தமாக வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறோம். ஆனால் இதை அமல்படுத்துகிற முறையில் தான் சிக்கல்கள் இருக்கின்றது. இதையெல்லாம் முறைப்படுத்திவிட்டு, இதையெல்லாம் சரிசெய்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதனால்தான் சொன்னேன், ஆபரேஷன் பொறுத்த வரையில் சக்ஸஸ் பேஷன்ட் டெட் என்று. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மீனவர்களும் எல்லையில் தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த இலட்சணத்தில் டெல்லியில் தமிழகத்தைச் சார்ந்திருக்க கூடிய அமைச்சர் இங்கிருக்ககூடிய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அதேபோல இலங்கை தூதரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எந்தவிதமான பலனும் இல்லை. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் பொழுதே மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இலங்கைத் தூதரக அதிகாரிகளையாவது சந்தித்து முறையிடவேண்டுமென மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.