மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்: பெ. மணியரசன்

ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என சொல்லிக்கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது பதவி விலக வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உச்ச நீதிமன்றம் நேற்று (16.11.2016), “சல்லிக்கட்டு” எனப்படும் தமிழர் ஏறுதழுவல் விழாவிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோகிந்தன் நாரிமன் ஆகியோர் அமர்வு, தடைக்கானக் காரணங்களாகக் கூறியிருப்பவை சட்ட நெறிகளுக்குப் புறம்பானவையாக இருக்கின்றன.

இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரப் பகிர்வுப் பட்டியலில், மாநிலப்பட்டியல் 14 – 15, கால்நடைகள் பாதுகாப்புக்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது. சல்லிக்கட்டு விளையாட்டை ஒழுங்குபடுத்தவும், காளைகளுக்குத் துன்பம் நேராமல் பாதுகாக்கவும் உரிய விதிகளை ஏற்படுத்தி, 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இயற்றிய, “தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் – 2009” (Tamil Nadu Regulation of Jallikattu Act, 2009) என்ற சட்டம், இந்த அதிகாரத்தின்படிதான் இயற்றப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றம், “1960ஆம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானதுதான் தமிழ்நாடு அரசின் சட்டம்” என்றுகூறி, சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

“ஏறுதழுவுதல் நிகழ்ச்சியைப் பார்த்து மக்கள் மகிழ்வது என்று கூறுவது மனிதர்களின் கீழ்த்தரமான மகிழ்ச்சியை ஆதரிப்பதாகும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு, தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. குதிரைகளைத் துன்புறுத்தி, ஓட்டப்பந்தயம் நடத்தி அதைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டணம் செலுத்திப் பார்த்து மகிழ்வதென்பது “கீழ்த்தரமான மகிழ்ச்சி” வகையில் சேராதா? மனிதர்களை ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள – குத்திக் கொள்ள – கீழேத் தள்ளி மிதிக்க – பல வகைகளில் துன்புறுத்திக் கொள்ளச் சொல்லி நடத்தப்படும் குத்துச் சண்டையை வேடிக்கைப் பார்ப்பது “கீழ்த்தரமான மகிழ்ச்சி” இல்லையா?

இவற்றையெல்லாம் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம், தமிழர்களின் ஏறுதழுவுதல் விளையாட்டை மட்டும் தடுத்திருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை உச்ச நீதிமன்றமே மீறியதாக அமைகிறது!

தமிழ்நாடு அரசு சட்டத்தில் (2009), “சல்லிக்கட்டு விளையாட்டிற்கு காளைகளைப் பழக்குவது அவற்றைத் துன்புறுத்துவதாகாது“ என்று கூறியிருக்கிறது. இதனை “ஏற்க முடியாது” என்றும் “சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது” என்றும், “பழக்குவது என்பது வீட்டு விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதுதான்” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஏர் உழுவுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பழக்குவதுகூட இனி தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. கன்று குடிப்பதற்காக சுரக்கும் மாட்டின் பாலை கறப்பதும் துன்புறுத்துவதுதான் என்று உச்ச நீதிமன்றம் இனி தடை போடுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, மாடுகளை – ஆடுகளை – மற்ற பிராணிகளைக் கொன்று சாப்பிடுவது மிகப்பெரிய துன்புறுத்தல் என்று உச்ச நீதிமன்றம் தடை போடுமா?

தமிழ்நாடு அரசுக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சேகர் நபாதே, சிறப்பாகவே தருக்கம் செய்துள்ளார். அவர், “ஏறுதழுவல் என்பது சமயத்திருவிழாவோடு தொடர்புடையது. தீபாவளி உட்பட எல்லாத் திருவிழாக்களும் சமயத்தில் வேர் கொண்டுள்ளவைதான். பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாகத்தான் ஏறுதழுவல் விழா இருக்கிறது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 25, இவ்வாறான சமய விழாக்களைத் தடை செய்யக் கூடாதென்று கூறுகிறது. அதற்கு முரணாக, ஏறுதழுவுதலைத் தடை செய்யக் கூடாது” என்று வாதிட்டுள்ளார்.

அதற்கு, “இவ்வாறு வாதாடுவது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருந்தகைகளின் புகழுக்கு இழுக்கு சேர்ப்பதாகும்” என்று நீதிபதி மிஸ்ரா கூறியிருக்கிறார். இது சட்ட நெறிப்பட்ட மறுமொழி அல்ல! அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் “புனிதத்தைக்” கூறி, அதற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு – தன் விருப்பப்படி தீர்ப்பெழுதும் உத்தி இது!

தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல் விழாக்கள், கிராமப்புறங்களின் நாட்டுப்புறத் தெய்வங்களின் வாசலிலிருந்தோ அல்லது அத்தெய்வங்களின் திருவிழாக்களாகவோ நடத்தப்படுகின்றவைதான். இந்த விழாக்கள், சமயத் தெய்வங்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தாலும் சமயச்சார்பற்று (Secular), சாதிச்சார்பற்று நடக்கிற தமிழர்களின் பொது விழாக்களாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் சமயச் சார்பு விழாக்களுக்கு வழங்கியிருக்கின்ற உரிமையை (உறுப்பு 25) மீறும் செயலாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்திய அரசின் இரட்டை வேடம் இதில் அம்பலமாகியுள்ளது. வேடிக்கைக் காட்டுவதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளில் பட்டியலில் உள்ளவை, சிங்கம், புலி, கரடி, குரங்கு, சிறுத்தை ஆகிய வரிசையில 2011இல், காளையையும் அன்றைய காங்கரசு நடுவணரசு சேர்த்தது (Ministry of Environment And Forests Notification, Dated 11.07.2011, F. NO. 27-11201 1-AWD).

இந்த ஆறு விலங்குகளில் காளையைத் தவிர எஞ்சிய ஐந்து விலங்குகளும் விலங்குக் காட்சி சாலைகளில் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டிருப்பவை! வீட்டில் வளர்க்கப்படுபவை அல்ல! வீட்டில் வளர்க்கப்படும் காளையை கண்காட்சி சாலையிலுள்ள காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்தது ஏன்?

காங்கிரசு அரசு காளையையும் அப்பட்டியலில் சேர்த்ததை அப்படியே வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கிறோம் என்று பா.ச.க. அரசு கூறுவது அரசியல் மோசடி அல்லவா? அந்தப் பட்டியலில் காளை இன்றும் இருப்பதுதான், உச்ச நீதிமன்றம் ஏறுதழுவலுக்குத் தடை விதிக்க வாய்ப்புத் தருகிறது.

இந்த வழக்கில் வாதாடிய நடுவணரசு வழக்கறிஞர் முகில் ரோத்தகி, தடை செய்யப்பட்டப் பட்டியலிலிருந்து காளையை நீக்க எந்த உறுதியும் தரவில்லை. தமிழ்நாட்டு சல்லிக்கட்டுக்கு விதித்தத் தடையை மட்டும் நீக்க வேண்டுமென்று அவர் வாதாடியது வெறும் பாசாங்குதான் என்பது உச்ச நீதிமன்றத்துக்கும் தெரியும்!

இந்திய அரசின் தமிழ்நாட்டு ஒலிபெருக்கியாக உலா வந்து கொண்டிருக்கும் நடுவண் அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், சல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று அடிக்கடி வாக்குறுதி கொடுத்து வந்தார். இந்த வழக்குத் தீர்ப்புக்குப் பிறகாவது, இந்திய அரசின் இரட்டை வேடத்தைக் கண்டித்து அவர் பதவி விலக வேண்டும்! காவிரிச் சிக்கலில் – தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக அவர் பேசி வந்ததைப் போல் இதிலும் அவர் நடந்து கொள்ளக் கூடாது!

தமிழ் மக்கள் தங்கள் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்த தமிழின மரபுத் திருவிழாவான சல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்குரிய சட்டத் திருத்தம் வரும் வரையில், நீதிக்கான அறப் போராட்டமாக சல்லிக்கட்டு விழாக்களை கட்டுப்பாட்டுடனும் தமிழ்நாடு அரசுச் சட்டத்தின் ஒழுங்குமுறை விதிகளைக் கடைபிடித்தும் ஊர் ஊராக நடத்தி சட்ட ஏற்பிசைவுக்கு வழிகாண வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.