“இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல, இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள் என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் கடந்தஒரு வார காலத்திற்கு மேலாக ஒட்டுமொத்த நாடும்துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர், புதனன்று துவங்கியது. இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஒத்திவைப்புதீர்மானம் கொண்டு வரப்பட்டு, உடனடியாக விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டது. மாநிலங்களவையில் முதல்நாள் அரசால்திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பிரச்சனைகளும் ஒத்திவைக்கப்பட்டு, ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியதால் அரசு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மாநிலங்களவையில் விவாதத்தை துவக்கிவைத்து காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா பேசினார். சாதாரண ஏழை எளிய, நடுத்தர பொதுமக்களின் பிரச்சனைகள் பற்றி சற்றுகூட சிந்தனை இல்லாமல் மோடிஅரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது என அவர் விமர்சித்தார்.விவாதத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முதல்நாள் என்பதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி மாநிலங்களவைக்கு வந்து இந்த விவாதத்தை அவசியம் கவனிக்க வேண்டும் என்றும், பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதே கருத்தை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தினர்.

சீத்தாராம் யெச்சூரி

விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, மோடி அரசின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்தார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியநாட்டில் வெறும் 2.6 கோடி மக்கள் மட்டுமே கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளனர் என்று அவர்சுட்டிக்காட்டினார். வரலாற்று நிகழ்வுகளில் இருந்து பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்த யெச்சூரி, பிரெஞ்சு புரட்சி காலகட்டத் தில் ஏழைகளை வதைத்த மன்னர் குடும்பத்தினருடன் மோடியை ஒப்பிட்டார்.

பிரெஞ்சு புரட்சியின் போது அந்நாட்டின் மகாராணி மேரி ஆண்டோநிட்டே, சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லை என்று கதறிய ஏழைகளை பார்த்து,கேக் சாப்பிடுங்களேன் என்று கூறியதை நினைவுகூர்ந்த யெச்சூரி, பிரெஞ்சு மகாராணியை போல இன்றைக்கு பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகள் இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய்களை பயன்படுத்துங்கள் என்கிறார் என சாடினார்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்னும் கடுமையாக விமர்சித்த சீத்தாராம் யெச்சூரி, அவரை ரோமானிய மன்னருடன் ஒப்பிட்டு பேசினார். “ரோமானிய மன்னரை பற்றி அவரது அவையிலிருந்த செனட் உறுப்பினர் ஒருவர், இப்படி கூறுவார்: ரோமைப் பற்றி நமது மன்னருக்கு நன்றாக தெரியும். ரோம் என்றால் மாபெரும் மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தின் முன்பு கண்கட்டி வித்தைகள் காட்டி, அவர்களது கவனத்தை திசை திருப்புவார்.

அவர்கள் அதில் மயங்கி உண்மைகளை தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களது சுதந்திரத்தை பறித்துக் கொள்வார். ரோம் நகரத்து இதயத் துடிப்பு என்பது இந்த மாபெரும் செனட் சபையின் மார்பிள் கற்களில் இல்லை; இந்த இதய துடிப்பு மக்கள் கூட்டம் அமர்ந்திருக்கிற மண்ணில் இருக்கிறது. அவர்கள் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் வேளையில், மன்னன் அவர்களுக்கு மரணத்தை பரிசளித்தான்” என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

தனது பேச்சின்போது கொல்கத்தாவில் நவம்பர் 8ம்தேதியன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு முன்பேஇந்தியன் வங்கி கணக்கில் பாஜக சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட்செய்யப்பட்டுள்ள விபரத்தை ஆதாரத்துடன் அவையில் முன்வைத்தார் யெச்சூரி. அதேபோல, பிரதமரை வாழ்த்தி, பணமில்லாத பொருளாதாரத்தை பிரதமர் உருவாக்கிவிட்டதாக கூறி ‘பேடிஎம்’ என்ற நிறுவனத்தின் சார்பில் முழு பக்க விளம்பரம் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யெச்சூரி, “இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்” என சாடினார்.

பேடிஎம் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் அம்பானியின் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலிருந்து 86 சதவீத பணப்பரிவர்த்தனையை செல்லாதது ஆக்கிவிட்ட பிரதமர் மோடியால், பணமில்லாத பரிவர்த்தனையை எப்படி கொண்டு வர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கறுப்புப் பொருளாதாரமே எனக் குறிப்பிட்ட யெச்சூரி, கறுப்புப் பொருளாதாரம் என்பது ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும், தங்கத்திலும், இதரப் பல வடிவங்களிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கறுப்புப் பணத்தை கைப்பற்றப்போவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மையில் கறுப்புப் பணம் வெளிநாடுகளில், பாதுகாப்பான ‘சொர்க்கங்களில்’ பாதுகாப்பாகவே உள்ளது என்றும் யெச்சூரி கூறினார்.

நன்றி: தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.