அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை என்பது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ “தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை” அமலில் இருக்கிறதா என்று அதிமுக அரசைப் பார்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பொருத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறது. “அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். “மாநில அரசு பைனான்சியல் எமெர்ஜென்ஸி” எதையும் அறிவிக்கும் உத்தேசம் இருக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் விளக்கமான பதிலை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் தலைமை நீதிபதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே “110 அறிவிப்புகளும்” “நிதிலை நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட திட்டங்களும்” இன்னும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருக்கின்றன என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நானும், கழகத் தலைவர் என்று முறையில் தலைவர் கலைஞர் அவர்களும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு அறிவித்து வந்திருக்கிறோம். மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை அதிமுக அரசு என்பது இப்போது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிய வந்திருக்கிறது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறை மிக முக்கியமான தூண் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்த நீதித்துறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய 150 கோடி ரூபாய் நிதியை அதிமுக அரசு செலவிடாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கே திரும்பிச் சென்றிருக்கிறது. நீதித்துறை சார்பாக தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு அதிமுக அரசு ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் நேற்றைய நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நீதித்துறைக்கு அறைகலன்கள் வாங்குவதற்கு கோரிய 9.41 கோடி ரூபாய் நிதியைக் கூட தமிழக அரசு வழங்காமல் நீதி பரிபாலனத்திற்கே சவால் விட்டு கேலி பொருளாக்கும் போக்கை அதிமுக அரசு கடைப்பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தேங்கி கிடக்கும் வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டியது இன்றைக்கு மிக முக்கியமான பணி என்று நீதித்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அந்த நீதித்துறையின் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு அதிமுக அரசு செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நீதித்துறைக்கே முட்டுக்கட்டை போடும் முயற்சியாகும். இது போன்ற சூழ்நிலையில் தான் தமிழக அரசைப் பார்த்து “பைனான்சியல் எமெர்ஜென்ஸி”யை அறிவிக்கப் போகிறீர்களா என்று கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசின் நிதி மேலாண்மை வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த ஒரு அரசும் உயர்நீதிமன்றத்திடமிருந்து பெற்றததில்லை என்ற புதிய ஆனால் எதிர்மறை வரலாற்றை உருவாக்கியுள்ளது அதிமுக ஆட்சி.
தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது என்றும் நான்கு லட்சம் கோடிக்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் தி.மு.க. சார்பில் தொடர்ந்து சுட்டிக்காட்டி நிதி மேலாண்மையை சரி செய்யக் கோரியிருக்கிறோம். அப்போதெல்லாம் “நிதிநிலைமை நன்றாக இருக்கிறது. மாநிலத்தின் கடன் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது” என்றும் “”மரங்கள் சொல்லி காற்று வருவதில்லை. தேனீக்கள் சொல்லி பூக்கள் மலர்வதில்லை” என்றெல்லாம் ஏமாற்றுகவிதை பாடி முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு மழை பொழிவதில் தான் நிதியமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் கவனம் செலுத்தினாரே தவிர, மாநில அரசின் நிதி நிலைமையை சீர்படுத்த எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. இதன் விளைவாக “தமிழகத்தில் பைனான்சியல் எமெர்ஜென்ஸி அறிவிக்கப் போகிறீர்களா” என்று மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இது போன்ற கண்டனத்தைப் பெற்றதற்காக, அதிமுக அரசு மக்கள் மன்றத்தில் வெட்கி தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் சட்டம் 356 வது பிரிவின் கீழான “எமெர்ஜென்ஸியை”ப் பார்த்திருக்கிறோம். அந்த நெருக்கடி நிலையை சந்தித்து எதிர்நீச்சல் போட்டு இன்றைக்கு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எங்கே “பைனான்சியல் எமெர்ஜென்ஸி” வந்து விடுமோ என்ற அச்சம் இப்போது தலை தூக்கியிருக்கிறது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மிகவும் பின்தங்கி விட்டது. தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இந்தியாவில் 18 வது இடத்திற்கு போய் விட்டது. வேளாண் வளர்ச்சியில் 20வது இடத்திற்கு போய்விட்டது. இப்போது “பைனான்சியல் எமெர்ஜென்ஸி” யில் வேறு தமிழகத்தை தள்ளிவிட்டு, ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியையும் படுகுழியில் தள்ள அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திட வேண்டும். சாமான்ய மக்கள் தங்களின் நியாயத்தை நிலைநாட்ட இறுதியாக நம்பியிருக்கும் நீதித்துறைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி சட்டத்தின் ஆட்சி மேலோங்குவதற்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள்ளார்.