குளிர்காய நினைப்பது யார்- மு.க.ஸ்டாலின் கேள்வி

மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? பல வருடங்களாக அதிமுக அரசு எதிர்த்துவந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்கவேண்டிய பின்னணி குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவேரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் பொறுப்பு ஆளுநரே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரே நேரடியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுநரின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

மேலும் நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் வழங்கி 11.10.2016 அன்று ஆளுநர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். நிதியமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தினார். மாநில நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் கருதி ஆளுநரின் இந்த முடிவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு இருமுறை அமைச்சரவைக் கூட்டத்தை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். ஆனால் அந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிக்கை செய்திக்குறிப்புகள் ஏதும் இல்லை.

திமுக ஆட்சி நடைபெற்றபோது அமைச்சரவைக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினால், அங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக செய்திக் குறிப்பாக வெளியிடப்படும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளையே ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அதிமுக ஆட்சிக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமைதாங்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. அதிமுக அரசின் இந்தப் போக்கு வேதனைக்குரியது.

இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் “உதய் திட்டம்”, “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்”, “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்” “மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு” உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்துவிட்டு, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தெரிவித்து உள்ளதையும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது.

பிரதமரை 14.6.2016 அன்று நேரில் சந்தித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், “9270 கோடி ரூபாய் இழப்பீட்டை உருவாக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு சம்மதிக்க முடியாது”, என்றார். “மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”, என்றார். “கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் அதே நேரத்தில் மாநிலத்தின் சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்”, என்றும் கூறியிருந்தார். “ஆதார் எண்களை உணவு அட்டைகளுடன் இணைக்கும் பணி மாநிலத்தில் துவங்கியிருக்கிறது. அந்தப் பணி முடிந்த பிறகுதான் உணவு அட்டைப்படியான பயனாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்”, என்றும் கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துமனையில் சேர்க்கப்படும் முன்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்த நான்கு முக்கியப் பிரச்சினைகளிலும் இப்போது அதிமுக அரசு மத்திய அரசின் முடிவுகளுக்கு “கை கட்டி” நின்று சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு நிர்வாகரீதியாக நெருங்கிச்செல்வது வரவேற்புக்குரியது. ஆனால் “உதய் திட்டம்” “நீட் தேர்வு” “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்” “ சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்” ஆகிய அனைத்தையும் அதிமுக அரசு தான் முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு விளக்கவேண்டாமா?

“மக்களுக்காகவே நாங்கள்” என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட உண்மைகளை ஏன் விளக்க மறுக்கிறார்கள்? இப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க அதிமுக அரசு முன்வந்துள்ளது ஏன்?

முதலமைச்சர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின்படி வரிவிதிப்பு குறித்து விவாதிக்கும் ’சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில்’ கூட்டத்திற்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும்கூட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

அரசியல் சட்டப்படி அரசு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டிய மிக உயர்ந்த பொறுப்புள்ள ஆளுநர் பதவிக்கு தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது? யார் ஆட்சி செய்வதற்கு வசதி செய்துகொடுக்கப்படுகிறது?

மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது? மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன. ஆகவே, அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும்.

ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.