இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலையைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். கஸ்தூரிபாய்நகர் மாடித்தொடர்வண்டி நிலையம் அருகிலிருந்து அடையாறு பகுதியிலுள்ள யுனிசெஃப் அலுவலகம் நோக்கி, பு.இ.மு. அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்தச்சென்றனர். தமிழ்வாணன் தலைமையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அவ்வமைப்பின் 30 பேர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழீழ மக்கள் இனப்படுகொலை செய்வதை சிங்கள இனவெறி அரசின் இன்னும் நிறுத்தவில்லை; தமிழீழ மக்களின் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, முன்னாள் போராளிகளை நஞ்சூட்டிக் கொல்வது போன்றவை இதை உறுதிப்படுத்துகின்றன; அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ’எழுக தமிழ்’ நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு முக்கியமானது என்பதால், அவர்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்காக, கொடூரத்தின் உச்சமாக அப்பாவி மாணவர்களை படுகொலை செய்திருக்கிறது சிங்கள இனவெறி இராணுவம்; தமிழினத்தை அழிக்கும் இந்த முயற்சிக்கு தெற்காசியாவில் விரிவாதிக்கத்தில் ஈடுபடும் இந்திய அரசும் ஐநாசபையும் வல்லரசுகளும் துணையாக நிற்கின்றன; இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் முழக்கமிட்டனர்.
யுனிசெஃப் அலுவலகத்தை முற்றுகையிடச் செல்ல முயன்ற பு.இ.மு. அமைப்பினரை தடுத்துநிறுத்திய போலீசார், அவர்களைக் கைதுசெய்தனர். சிறுவர்கள், பெண்கள் உட்பட 30 பேர் அடையாறு இந்திராநகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் பிடித்துவைக்கப்பட்டனர்.