“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு காவேரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களும் கதி கலங்கி கண்ணீர் மல்க என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போய் நிற்கிறார்கள்.
தொடர்ந்து ஐந்து வருடங்களாக மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் காவேரி டெல்டா நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வில்லை. மழைக்காலங்களில் ஆற்றில் ஓடிவரும் நீரை உரிய முறையில் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கிடைக்கின்றன சிறிதளவு நீரும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணடிக்கப்படுகிறது.
இதனால் குறுவை, சம்பா ஆகிய இரு சாகுபடிகளும் செய்ய முடியாமல் போய் விட்டது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. வருமானம் இல்லாமல் வறுமையில் வாடுவதால் வாங்கிய விவசாய கடன்களையும் அடைக்க முடியாததால் வங்கி அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் தொல்லைகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கடனில் வாங்கிய டிராக்டர்களை ஜப்தி செய்வது, கல்வி கடன் பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்வது போன்ற செயல்களை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கிறார்கள்.
அடுக்கடுக்கான சோதனைக்கு அதிமுக ஆட்சியில் உள்ளாகும் விவசாயிகள் இப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் அதிமுக அரசோ காவேரி டெல்டா பகுதியை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் தமிழகத்தில் நிகழும் விவசாயிகள் தற்கொலை எல்லாவற்றையும் மூடி மறைத்து மன்னிக்க முடியாத துரோகத்தை காவேரி டெல்டா விவசாயிகளுக்கு செய்து விட்டது.
கழக அரசு 7000 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தது. ஆனால் பிறகு வந்த அதிமுக ஆட்சியோ விவசாயிகளை தற்கொலை செய்யக்கூடிய சூழலுக்குத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து அவர்களின் வாழ்வை இருள் சூழ வைத்து விட்டது . அதுமட்டுமின்றி விவசாயிகள் வருமானத்தை பெருக்க செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதிலும் தமிழகத்தை பின் தங்கிய மாநிலமாக்கி விட்டது அதிமுக அரசு. விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டிய சீர் திருத்தங்களை நிறைவேற்றுவதில் நூற்றுக்கு 17.7 புள்ளிகள் மட்டும் பெற்று தமிழகம் இந்தியாவில் 25 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வின்படி, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றும் தமிழகம் 25 ஆவது இடத்திலும் இருக்கிறது என்றும் வெளிவந்துள்ள அறிக்கை அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இப்படி ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரே வேதனையான சாதனையை மட்டுமே அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்து வருகிறது என்பது கவலை தருவதாக அமைந்திருக்கிறது.
ஆகவே காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, “குறுவை, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால், விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவிற்கேனும் குறைத்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது ” என்ற தீர்மானத்தை மதித்து உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவியும், அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.