என்.டி.டி.வி.க்குத் தடை : கருத்துரிமையை நசுக்கும் பாஜக அரசு! கருணாநிதி கண்டனம்

என்.டி.டி.வி.க்குத் தடை விதித்திருப்பதன் மூலம் கருத்துரிமையை  பாஜக அரசு நசுக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில்,

“பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016 அன்று பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளி பரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 மணி வரை, என்.டி.டி.வி. இந்தி சேனலின் ஒளி பரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவையும் விதித்துள்ளது.

இது பற்றி என்.டி.டி.வி தொலைக்காட்சி நிர்வாகம் கூறும்போது, “பதான்கோட் தாக்குதலை எல்லா தொலைக் காட்சிகளும் நேரலையாகவே ஒளிபரப்பின. அனைத்துப் பத்திரிகைகளும் அது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டன. ஆனால் என்.டி.டி.வி. மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், எங்கள் தொலைக்காட்சி யின் ஒளி பரப்பு பாரபட்சமற்ற வகையில் இருந்தது. நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த இருண்ட காலக் கட்டத்தில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு இப்போது என்.டி.டி.வி. க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அசாதாரணமானது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிடும் மத்திய பா.ஜ.க. அரசின் கடுமையான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகத் துறையினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்திய செய்தி ஆசிரியர் கூட்டமைப்பினர், காட்சி ஊடக செய்தி ஆசிரியர்கள் சங்கத்தினர், எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தோர் உட்பட்ட பலரும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

“இந்து” ஆங்கில நாளிதழ் இன்று எழுதியுள்ள தலையங்கத்தில், “ஊடகச் சுதந்திரத்தை முற்றிலும் மறுத்த கடுமையான செயல்”என்ற மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்திருப்பதோடு, “உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் ஒளிபரப்பு தொடர்பான தர நிர்ணய ஆணையத்தின் விசாரணைக்கும் முடிவுக்கும் இதை ஒப்படைக்காமல், நேரடியாக மத்திய அரசு அலுவலர்கள் கொண்ட ஒரு குழு முடிவெடுத்திருப்பது நியாயம் ஆகாது” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் கழக ஏடான “முரசொலி”க்கும், அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தான் நினைவிற்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத் தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும். எனவே பிரதமர் அவர்களே இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய பாஜக அரசு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, உண்மை என்றாகி விடும்.

அடுத்து, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்களில், மூன்று முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று வர்ணித்திருக்கிறார். இரங்கல் தெரிவிப்பதும், போராட்டத்தை ஆதரிப்பதும் தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையின்பாற்பட்டவை. கைது செய்வதன் மூலம் அதைத் தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம். அந்த திட்டத்தை குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவது பற்றியும், மத்திய பா..ஜ.க அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.