நிலா லோகநாதன்
இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மத வெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன்.
இந்த முறை புனித பெளத்தக் காவிகள் எனக்கு அறிவுக்கண்னைத் திறந்து விட்டார்கள்.
நேற்று அருந்தப்பில் உயிர் பிழைத்தோம்.இன்றோ நாளையோ, ஏன் நாட்கள் பல கடந்துங்க் கூட எம்மீதான வன்மம் தொடரலாம். வாள் கொண்டு பல நூறு பேரால் வெட்டி வீழ்த்தப்படலாம். நானோ…எனது வீட்டிலுள்ளவர்களோ…எங்கள் வீட்டிலுள்ள பச்சைக் குழந்தையோ கூட…
உங்களுக்கு நினைவிருக்கக் கூடும், எங்கள் வீட்டிற்கு மிக அருகில் பெளத்த விகாரை இருப்பதைப் பற்றியும், மிகச் சத்தமாக பிரித் ஓதுவதைப் பற்றியும், கலை நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கியில் ஒலிபரப்புவது பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
நாங்கள் இந்த வீட்டிற்கு வரும் போது அது ஒரு மிகச் சிறிய அரசமரச் சிலை. இப்போது அதன் விஸ்தீரணம் மிகப் பெரியது.
அதே பன்சலையில் பத்தாவது ஆண்டு விழா. அத்தோடு ஒக்டோபர் மாதத்தில் அவர்களுக்கு புனித நாட்களும் இருக்க வேண்டும்.
நேற்றிரவு பத்தாவது நாள்.
இந்தப் பத்து நாட்களும் சரியாக மாலை 3 மணிக்கு நந்தாமாலினியின் பாடலை ஒலிபரப்பத்தொடங்குவார்கள்.
ஒரே பாடல் மாலை ஆறு மணிவரைக்கும் மீள மீள ஒலிக்கும்.
நடுவில் லமா பாசல மாணவர்கள் ”குவான் விதுலி” சேவை (வானொலிச் சேவை) செய்வார்கள். அதாவது தங்களுடைய மதக் கருத்துக்களை வெளிப் படுத்துவார்கள்; மதக் கீதங்கள் பாடுவார்கள்; நற்சிந்தனைகள் சொல்லுவார்கள்.
இது ஆண்டுவிழாக் காலத்தில் மட்டுமல்ல. தினந்தோறும் மாலை ஆறு மணிக்கு நிகழ்வது.
இப்போது மாலை 3 மணிக்கே தொடங்கி விடும்.
எங்களுடையது பல வீடுகளுக்கு மத்தியிலுள்ள உயரம் கூடிய மாடி வீடு. சுற்று வட்டாரத்தில் மாடி வீடுகள் இல்லை.
எங்கள் வீட்டிற்கு நேரெதிராக இரட்டை ஒலிபெருக்கிகள் எங்களுடைய மதிலின் நேரெதிரே கட்டவிடப்பட்டிருக்கிறது.
ஒரு ஒலிபெருக்கி எங்களுடைய அறையைப் பார்த்து அலரும். எங்கள் அறைக்கதவு இசைக்கவரைப் போல அதிரும்.
கட்டில் அதிரும். கதிரை அதிரும். கண்ணாடிப் பாத்திரங்கள் அதிரும்.
அடுத்த ஒலிபெருக்கி எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கிற இஸ்லாமியர்கள் வீட்டிற்கு இதே தொல்லையைத் தரும்.
எனக்கு சில காலங்களாக மைக்ரேன் இருக்கிறது. மைக்கிரேன் என்பது எப்படி, எந்த நேரத்தில் எதனால் வருமென்று, அது இருப்பவர்களால் மட்டுமே சொல்ல முடியும். அதைத் தவிர வேறொன்றும் சொல்லுவதற்கில்லை.
இப்போது மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஹை டெசிபலில் ”பண” ஓதுவதுடன், மதகுருக்கள் நீண்ட நெடிய உரையும் ஆற்றுகிறார்கள்.
அதிகாலை வரை பதிவு செய்த பண ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று மணிக்கு பெரஹெர நடார்த்துவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும், சாட்டையால் அடித்து, பெர(தோற்கருவி) அடித்து, பேய் நடனம் ஆடி, நெருப்புப் பந்தங்கள் ஏற்றி ஊர்வலம் கொண்டு போவார்கள்.
பின்னர் ஆறு மணிக்கு அதே ஊர்வலம் மீண்டும் எங்கள் தெருவால் வந்து உற்சவம் முடியும்.
நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.
அந்த உரையில் முக்கியமாக
1) சக மதங்கள் எவ்வளவு ஒற்றுமையாக மதக்கட்டமைப்பை தமக்குள் பேணுகிறார்கள், பெளத்தர்களால் பேண முடியவில்லையே…
2) கட்டாயம் எமது மதக்கருத்துக்களை ஏனையவர்களும் கேட்கும் வகையில் உரத்துச் சொல்ல வேண்டும்…
3) இது ஒரு பெளத்த நாடு. இங்கு பெளத்தத்தைத் தவிர எதுவுமே இருக்கக் கூடாது…
போன்ற கருத்துக்கள் மிக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஓதப்படும்.
நேற்று மூன்றாவது முறையாக அவர்களிடம் சென்றேன்.
முதல் முறை மிக நல்ல முறையில் தலைமைப் பீடாதிபதியிடம் எடுத்துச் சொன்னேன். நிறுத்தும்படியல்ல. சத்தத்தைக் குறைக்கும்படி.
இரண்டாவது தடவை, எனக்கே ஒவ்வாத பணிவுடன், ஒலிபெருக்கிகளை வேறு இடத்தில் கட்டமுடியுமா என்று கேட்டேன்.
நேற்றிரவு மூன்றாவது முறை. நிகழ்வுகளின் இறுதி நாள்.
நேற்று இரவு பதினொரு மணிக்கும் மேலாக இந்த ஒலி மிக மிக உபாதையைத் தரத் தொடங்கியது.
கீழே இறங்கிப் போனேன். போனோம்.
மிக மிக மெதுவாகவும், அன்புடனும், பண்புடனும், அதிலொரு வயதானவரை அழைத்து, உரிவயர்களைச் சந்திக்க முடியுமா எனக் கேட்டேன்.
என்ன பிரச்சினை?
பிரச்சினை எதுவுமில்லை. ஒலியைக் கொஞ்சமாகக் குறைக்க முடியுமா? தலைவலியாக இருக்கிறது.
மக்கள்க் கூட்டம் மிகுந்த அன்புடன் சத்சங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது.
எங்கிருந்து வந்தார்களெனத் தெரியவில்லை. முதலில் சுமார் பதினைந்து பேர்.
உள்ளே வாருங்கள் கதைக்கலாம்…
இல்லை, கதைப்பதற்கோ வாதிக்கவோ நான் வரவில்லை. முடிந்தால் சத்தத்தைக் கொஞ்சமாகக் குறையுங்கள்.
சற்ரைக்கு இன்னும் பதினைந்து பேர் அடுத்த பக்கத்தில். இப்போது நான் ஒரு சக்கர வியூக வட்டத்திற்குளிருந்தேன்.
இதனை எதிர்ப்பது எனது நோக்கமல்ல. சத்தம் மிகவும் பாதிப்பதாக இருக்கிறது.
அவர்களுடன் கதைப்பதற்கோ, அவர்கள் உரையாடுவதைக் கேட்பதற்கோ கூட அந்தச் சத்தம் விடவேயில்லை.
திடீரென பெளத்த மதகுருக்கள், மரூன் கலர்க் காவியணிந்தவர்கள் பாய்ந்து வந்தார்கள். தலைமை பீடாதிபதியெனச் சொல்லிக் கொண்டே ஒருவர் வந்தார்.
வாயில் சாராய நாற்றம்.
( நாள் முழுவதும் நிறுத்தாமல் பண ஓதுவதற்கு ஒரு சாதாரன மனிதரால் முடியாது. சாராயம் முதலிய மெல்லிய ஊக்கிகள் மிக அவசியம்)
பலயங் தமுசே!
மேக்க சிங்களே பெளத்த ரட்ட. அப்பி மெஹெமாய்.
உம்ப தெமழ பறயோ பலயங்…
நீ வெளியே போ!
இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான்.
நீ வேளியே போ தமிழ் பறை***
அந்தச் ச்க்கர வியூகம் மிக நெருங்கியது. காற்றுப் புக முடியாத, சுமார் இரு நூறு பேரைக் கொண்ட வியூகமாக மாறியது.
பலயங் தெழோ!
மேக்க பெளத்த ரட்ட. உப பலயங் இந்தியாவட்ட.
மரலா தானவா!
இது பெளத்த நாடு! நீ இந்தியாவிற்குப் போ!
கொலை செய்து போடுவோம்….போய்த்தொலை தமிழ(னே)!
அந்தச் சக்கரவுயூகத்திலிருந்து ஒரு இம்மியும் நகரமுடியாது.
தள்ளுகையும், இழுபறியும். மேற்குற்றிப்பிட்ட கோசங்களையும் குழுவாதங்களையுந் தவிர எதையும் கேட்க முடியவில்லை.
அந்தக் கூட்டத்தில் முழுவதும் சாராய நாற்றம்.
பண ஓதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டே இது நிகழ்ந்தது.
சுமார் அரை மணிநேரக் கலகத்திற்குப் பின்னர், எங்கள் அயல் வீட்டில் வசிக்கும் சிங்கள பெளத்த பெண்னொருவர் எங்களை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, காவாந்து பண்ணினார்.
அதே நேரம் என்னுடைய அக்காவும் அங்கே வந்திருந்தார்.
அவர் அந்த ஏரியாவிலிருக்கும் ஒரே பொது வைத்தியர்.
அவர் காவாந்து பண்ணிய படியே இப்படிச் சொன்னார்.
இது ஒரு பெளத்த நாடு. இந்த தேசத்தில் பிரித் ஓதுவதை நிறுத்த முடியாது. நீங்கள் ஒக்டோபர் மாதங்களில் உங்கள் சொந்தக் காரர் வீடுகளில் போய்த் தங்கிக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது.
இந்த ஊரில் வெள்ளமும், புயலும் வராமலிருப்பதற்கு விகாரையில் பிரித் ஓதுவதே காரணம்.
உங்களுடைய அக்கா ஒரு வைத்தியராக இருக்கலாம். ஆனால் அவர் கொடுக்கும் மருந்தா இந்த மக்களைக் காப்பாற்றுகிறது? நிச்சியமாக இல்லை.
பிரித் ஓதுவதால்த்தான், எங்களுடைய மகத் கிரியைகள் தான் மருந்தால், உடலைக் குணமாக்க வைக்கிறது.
***
அங்கு நாமிருந்தோம். எமது வீட்டிற்குள் அத்து மீறி தலைமைப் பீடாதிபதியும் ஐம்பது பேர் கொண்ட சாராயக் கும்பலும் புகுந்து கொண்டது.
இப்போது வந்த தமிழர் எங்களிடம் கேள்வி கேட்பதா? இப்போது வெட்டிக் கூறு போடுவோம்.
அந்தச் சூழ்நிலை எப்படியென அதிகம் எழுத விரும்பவில்லை.
பொலிஸ் வந்தது!
மத குருக்களுக்கு ஏன் அடித்தீர்கள் எனக் கேட்டது.
மதகுருக்களுடன் சேர்த்து எங்களுக்கும் அடித்தார்களென சுமார் பத்துப் பேர் முன் வந்து நின்றார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கோ, மதகுருக்களுக்கோ, எங்களுக்க்கோ, ஏன் சுற்றியிருந்தவர்களுக்கோ கூடத் தெரியும், கற்பனையில் கூட நடவாத கதையைக் கதைக்கிறார்களென.
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார் மதகுரு.
பின்னர் மக்கள், காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென திரைப்படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் கோரசாகச் சொல்வதைப் போலச் சொன்னார்கள்.
மன்னிப்பு மட்டும் வேண்டுமானால், செய்யாத பிழைக்காகக் கேட்கலாம் என்று சொன்னேன்.
ஒரு கூட்டமே, எங்களை விகாரைக்குள் அழைத்துச் சென்றது.
அங்கு நடு மேடையில் ஒரு ஆபிரிக்கவழித் துறவியும், சீனத் துறவியும் இருந்தார்கள். சுமார் 50 துறவிகள் சிறிதும் பெரிதுமான வயதில் இருந்தார்கள்.
200 பேரளவில் மக்கள் வெள்ளையாடையில் மிகத் தூய்மையாக வீற்றிருந்தார்கள்.
அந்த மதகுரு பேசத்தொடங்கினார்.
1) இந்தத் தமிழ் நாய்கள் எங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
2) இவர்கள் கேள்வி கேற்பதைப் பார்த்துக் கொண்டிருக்க பெளத்தர்களுக்கு…சிங்களவர்களுக்கு முதுகெலும்பில்லையா?
3) இவர்களை இங்கு எத்தனை பேர் அடித்தே கொல்லுவீர்கள்?
4) எங்கே அவர்களெல்லோரும் கையை உயர்த்துங்கள்?
5) சரி, நான் தான் மன்னித்து விட்டாலும், இந்த மக்கள் தான் மன்னிப்பார்களா, அவர்களுடைய மதத்தை எதிர்ப்பவர்களை இந்த மக்கள் கொல்லுவார்களோ, அடிப்பார்களோ….கால் கையை வெட்டிப் போடுவார்களோ…மக்களே ….இது உங்களின் கையில்.
6) எனக்கு சந்திரிக்காவைத் தெரியும். நான் இலங்கை பெளத்த சங்கத்தில் இதைப்பற்றிக் கதைப்பேன்.
7)யாழ்ப்பாணத்தில் போய் எங்களால் இப்படி மதத்தை எதிர்க்க முடியுமா?
8) விக்னேஸ்வரனை அடித்தால் எல்லாம் சரிவர்ரும்.
9) சரி வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள்.
மன்னிப்பு மட்டும் வேண்டுமானால், செய்யாத பிழைக்காகக் கேட்கலாம். காலில் விழுவது நான் எங்கும் செய்வதில்லை. அதைச் செய்ய முடியாது!
வயதில் முதியவர்களெல்லோரும், எங்களை எதிர்த்தார்கள். சிறிய மாணவர்கள் நாங்கள் சொல்லுவதைக் கவனித்தார்கள்.
பக்கத்திலிருந்த கணவரின் கழுத்தை எட்டி நெரித்துப் பிடித்துத் தொங்கி, உன்னை இப்படியே தூக்குவேன் என்று சொன்னார், மிகவும் உயரங்குறைந்த அந்தப் பிக்கு.
நீ பெண் என்பதால்த் தான் கை வைக்காமல் விடுகிறேன்.
சூழ்நிலையை விளக்க்கிச் சொல்ல முயன்ற போது, கட்ட வாஹ்ப்பந்! சமாவ வித்தரக் ஓனே என ஓங்கினார் அந்த மதகுரு.
விளக்கம் சொல்லாதே! மன்னிப்பு மட்டும் கேள்!
இங்கு நடக்காத ஒரு செயலுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதோடு எங்களை 300 பேர் புடை சூழ அடியும், தள்ளுகையுமாக வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் பிரித் அதே டெசிபலில் ஒலித்தது.
உங்களைக் கொல்ல எத்தனை பேர் இருக்கிறோம் பார்த்தீர்களா?
இந்தப் பெரிய பெளத்த தேசத்தில் உங்களுக்கு இருக்க என்ன அருகதை இருக்கிறது?
காலையில் பாருங்கள், என்ன நடக்கிறதென?
சுபம்.
இந்த மக்கள் மீது எனக்குக் கிஞ்சித்தும் கோவமில்லை. பரிதாப உணர்ச்சியும், பாசவுணர்ச்சியுமே இரவிலிருந்து மேலிடுகிறது.
இவர்கள் பாவம் புத்தபிரானே! இவர்களுக்கு பரிநிர்வாணத்தைக் கொடும்…அல்லது அது பற்றி ஒரு ஸ்டேட்டசாவது எழுதிப் போடும்.
மனித உயிர்களையும், மக்களையும், மக்களது மிக அடிப்படையான தேவைகளையும் புறக்கணிக்கும் எந்த அதிகாரக் கட்டமைப்பும், உடையாமல்ப் போகாது. என்ன அது ஒரு ஆயிரம் வருடங்களுக்கான நிகழ்ச்சிநிரல்.
இன்று, தனி மனுசியாக, அத்தனை மதத்துவேசிகளுக்கும் நான் சவாலாக இருந்திருக்கிறேன். என்னைப் பற்றிய பேச்சுக்களும், கதைகளும், சரி பிழைகளும் விவாதங்களும் ஒவ்வொரு குடும்பத்திலும் கடைசி அடுத்த ஆண்டுவிழா வரைக்குமாவது நினைவிலிருக்கும்.
அங்கு சிறு மாணவர்களிருந்தார்கள். அவர்கள் சிந்திப்பார்கள்.
இந்தப் பெரிய அசைவியக்க அலையில்
ஒரு சதவீதத்தையேனும் நாங்கள் நிகழ்த்தியிருக்கிறோம்.
உயிர்கள் எப்படி தமக்கான தேவைகளைத் தேடிக் கண்டறிந்து கூர்ப்படைந்தனவோ, மனிதர்கள் எப்படித் தமக்கான தேவைகளைக் கண்டறிந்து நாகரீகமடைந்தார்களோ, இந்த மனிதர்களும், மனிதர்களுக்கு மிகத் தேவையான, சரியான வழியைக் கண்டு பிடிப்பார்களென்கிற மிகுந்த நம்பிக்கை என்னிடமிருக்கிறது.
இவர்களை வேறு யார் அடித்தாலும், நான் தான் முதலில்க் கேள்வி கேட்பேன்.
இவர்கள் மீது எனக்குத் துவேசமோ வன்முறையோ கிடையாது. நான் மதங்களை மட்டுமே வெறுக்கிறேன். மனிதர்களையல்ல.
–
நிலா
30-10-2016
நிலா லோகநாதன் முகநூலில் எழுதிய பதிவு. தற்சமயம் தற்காலிகமாக தனது வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவித்துள்ளார் நிலா.
சொந்தமக்களை கொன்று
குவிக்கும் கோழை ராணுவம்
ஒற்றுமை இல்லாத மக்கள்
நியாயமற்ற அரசாங்கம்
ஒழுக்கம் கெட்ட துறவிகள்
நெறியற்ற நீதிமன்றம்
அசிங்கமான நிர்வாகம்
காலிகளும் கயவர்களும்
போலிகளும் போக்கிரிகளும் ஆளும்நாட்டில் யாரிடம் போய்
முறையிட முடியும். இதை நாடு என்பதா நரகம் என்பதா?
காலம்மாறும் நம்பிக்கையோடிருங்கள் தீமை
உலகில் நீண்ட நாள் ஜெயித்ததில்லை, நியாயம்
தன்னை வலுபடுத்திக்கொண்டு மீண்டும் நிட்சயம்வரும்
அதுவரை காத்திருக்கத்தான்
வேண்டும்.
LikeLike
Change Word Press Symbol Its Not Suitable for a News Website
LikeLike