அறிவழகன் கைவல்யம்

இந்திய அரசு அலுவலகங்களில் வேலைத் திறனோ, பாலின வேறுபாடுகளோ, வேகமோ கணக்கில் வராது, இங்கே கணக்கில் வருவது அந்த அலுவலகத்தின் குறுக்கு அதிகார வழிமுறை மட்டுமே, சிலரை அலுவலகத்திலேயே மடக்கலாம், சிலரை வீட்டில், இன்னும் சிலரை உணவகங்களில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சட்டப்பூர்வமான நெறிகளைத் தாண்டி ரகசிய செயல்திட்டமும், கூட்டுப் பணப் பொதித் திட்டங்களும் உண்டு. இது ஒரு சங்கிலித் தொடர், இந்த சங்கிலித் தொடர் மாநில அரசின் தலைமைச் செயலகம் முதற்கொண்டு சட்டப்பேரவை வரையில் தங்கு தடையின்றிச் செல்லும்.
நடுவண் அரசு அலுவலகங்கள் பரிசுத்தமானவை, யாரும் அலுவலகத்தில் சல்லிப் பைசா வாங்க மாட்டார்கள். உள்ளார்ந்த செயல்திட்டங்கள் பெரும்பாலும் இல்லை, எல்லாமே வெளிவிவகாரம் தான். தங்க வைர நகைகளாகவோ, அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவோ, வங்கிக் கணக்காகவோ கறந்து விடுவார்கள், அதற்கென்று அருகில் இருக்கிற தங்கும் விடுதிகளில் நிரந்தர அறை வைத்திருக்கும் நடுவண் அரசுப் பணியாளர்களையும், அலுவலர்களையும் எனக்குத் தெரியும்.
வங்கிகளில் பெரும்பாலும் இளநிலைப் பணியாளர்களில் அப்படி ஒரு நிலை இருப்பதைப் போலத் தெரியவில்லை, வங்கிகளில் ஆண்களை விடப் பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்போடும் வேலை செய்கிறார்கள், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் வங்கிகளில் உண்மையில் பெண்களே வேகமாகவும், நுகர்வோரின் தேவைகளை உணர்ந்தும் வேலை செய்கிறார்கள். மற்றபடி இங்கே ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடு தேவையற்றது, வங்கிப் பணிகளில் எந்த நிலையிலும் பாலின வேறுபாட்டை அடையாளம் செய்ய வேண்டிய தேவை இல்லை, அரசு அலுவலகங்களில் கழிப்பறைகளைத் தவிர வேறெங்கும் அதற்கான தேவை இருக்கவில்லை.
பெண்களின் மெனோபாஸ், மாதவிடாய் நாட்கள் என்றெல்லாம் சிலரும், அமெரிக்காவில் ஆட்டிசம் பாதித்தவர்களை வங்கிகள் வேலைக்கு எடுக்கின்றன என்கிற ரீதியிலும் வேறு சிலரும் ஜெயமோகனின் தேவாங்கு மற்றும் கிழவி வசைகளை திசை திருப்புகிறார்கள். மெனோபாஸ் என்கிற முதிர்கன்னிப் பருவ மாற்றம், மாதவிடாய் மற்றும் பெண்களின் இயல்பான உடற்கூறுத் தடைகளை அரச பணிகளின் சிக்கல்களில் கையில் எடுப்பது ஒரு வகையில் அவர்களை பெண் என்கிற அடையாளக் குறியில் முடக்க நினைக்கிற உளவியல் கோட்பாடு, ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது.
அவர் ஆணா, பெண்ணா, கிழவரா, கிழவியா, திருநங்கையா என்றெல்லாம் பார்க்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. மெனோபாஸுக்காகவோ, மாதவிடாய்க்காகவோ பெண்களின் மீது ஆண்கள் பெரிய அளவில் கரிசனம் காட்ட வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் அந்தக் கரிசனமும், பரிதாதப் பார்வையும் தான் காலம் காலமாகப் பெண்களை பலவீனம் கொள்ள வைக்க ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம்.
பிறகு, அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகளில் தனி மனிதருக்கான உரிமைகளும், சேவை முறைகளும் முற்றிலும் மாறுபட்டவை, தொழில்நுட்பத்தில் நம்மை விட 10 ஆண்டுகள் முன்னே நிற்கும் அவர்களது அரசு அலுவலகப் பணிகள் மற்றும் வங்கிப் பணிகளோடு இந்தியாவின் வங்கிகளையோ, அரசு அலுவலகங்களையோ ஒப்பீடு செய்வது ஏறத்தாழ மோடி அரசு இந்தியாவை முன்னேற்றப் பாடுபடுகிறது என்று சொல்லப்படுகிற அண்டப் புளுகு வகை சார்ந்தது.
ஜெயமோகனின் இந்த வசை வழக்கமான டேஷ்பக்தாசின் மேலோட்டமான தேசபக்திக் குரல், மெதுவாக வேலை நடந்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட வேண்டும், ஒரு ரூபாய் அதிகமாக விற்கும் பெட்டிக் கடைக்காரனின் கடையை அடித்து நொறுக்க வேண்டும், காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க உடனடியாக பாகிஸ்தானையும் அதன் மக்களையும் அணுகுண்டைப் போட்டுக் கொல்ல வேண்டும், இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்து உயர் சாதி அறிவாளிகளை உலகெங்கும் பணியில் அமர்த்த வேண்டும் போன்ற அக்மார்க் டேஷ் பக்தாஸ் வாய்சின் ஒற்றைப் பதம் அது.
அரசுப் பணிகள் ஆமை வேகத்தில் நிகழ்வதற்கு அங்கே வேலை செய்யும் எழுத்தர்களும், காசாளர்களும் காரணமல்ல, முழுக்க முழுக்க அதற்குக் காரணம் இந்திய அரசு இயந்திரத்தில் புரையோடிக் போயிருக்கிற பார்ப்பனீய மனநிலை, சுரண்டல், சொகுசு வாழ்க்கைக்கான வர்க்கச் சிந்தனை, வர்ணப் பிரிவினைகள் தலைவிரித்தாடும் பொதுப் புத்தியின் பரவலாக்கம், சமூக அறிவியல் குறித்த எந்த அடிப்படை உள்ளீடுகளும் அற்ற கல்விமுறை என்று பல உண்டு.
உடல் தகுதியற்ற அல்லது ஒடுங்கிய ஒருவரின் பணி வேகக் குறைபாட்டை உணர்ச்சி வசப்பட்டு வசைபாடும் மனநிலையில் தான் இங்கே நமது எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், மாறாக அவர்கள், தாங்கள் வாழும் மாநிலத்தின் முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் செயலிழந்து முடங்கிக் கிடப்பதைக் குறித்து உணர்ச்சி மிகுந்த கட்டுரைகளையும், அறச்சீற்றத்தையும் வெளியிட வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவாக இயங்கும் மோடிக்களின் முகமூடிகளைக் குறித்தும், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் அவமதிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குகிற உயர் சாதிக் காட்டுமிராண்டிகளைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றும் உணர்ச்சி கொண்ட மானுடர்களாகவும் இருக்க வேண்டும்.
சக எழுத்தாளரான அருந்ததி ராயையே குருவி மண்டைக்காரர் என்று சொன்ன ஜெயமோகன், உடல் நலமற்ற ஒரு வங்கிப் பணியாளரை இதை விட மேலாக எப்படிச் சொல்லி விடப் போகிறார்???
அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.
/// தொழில்நுட்பத்தில் நம்மை விட 10 ஆண்டுகள் முன்னே நிற்கும் அவர்களது ///
அபத்தம்! இங்கு நாம் 10 வருடங்களாகப் பயன்படுத்திவரும் என்.இ.எஃப்.டி. பணப் பரிமாற்றமுறை அமெரிக்காவில் இன்றுகூட இல்லை. நம் வங்கிகள் உலக அளவில் பயன்படுத்தப்படும் அதே சாஃப்ட்வேர்களைத்தான் பயன்படுத்துகின்றன.
LikeLike