வர்க்கப் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தலித் இயக்கம் முன் செல்ல முடியாது: ஜிக்னேஸ் மேவானி

உனா தலித் அத்யாச்சார் லதாய் சமிதி (Una Dalit Atyachar Ladhai Samiti) தலைவர் ஜிக்னேஷ் மேவானி நேர்காணலின் கட்டுரை வடிவம்
தமிழில்: சி. மதிவாணன்
சி. மதிவாணன்
சி. மதிவாணன்

தலித்துகள் தங்களை அணிதிரட்டிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. அதேசமயம், அம்பேத்கரிய இயக்கங்கள் மத்தியில் கடுமையான முட்டல்- மோதல் நடந்துகொண்டிருக்கிறது. இளைஞர்கள் இயக்கங்களை நோக்கிப் பெருமளவில் ஈர்க்கப்படுகிறார்கள். ரோஹித் வெமுலாவிற்குப் பின்பு, ஜவஹர்லால பல்கலைக்கழக சம்பவங்களுக்குப் பின்பு, புனே திரைப்படக் கல்லூரி நிகழ்வுகளுக்குப் பின்பு இளைஞர்கள் பெருமளவில் இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டில் நிறைய தலித் போராட்டங்கள் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால், என் கருத்தின்படி, இதுவரை இந்த இயக்கங்கள் எல்லாம், சரியான அரசியல் பிரச்சனைகளைத்தான் கையில் எடுத்துக்கொண்டுள்ளன. கவனியுங்கள், தற்போதிருக்கும் அரசியல் நிலைமை இளைஞர்கள் பெருமளவு அரசியல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கோருகின்றன. பாசிச அபாயம் பிரும்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது.

தலித் இயக்கங்கள் என்ன பிரச்சனைகளை இப்போது கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பல்வேறு அரசியல் பிரச்சனைகள் நம்மை எதிர்கொள்கின்றன. அவற்றை நாம் அரசியல் ரீதியாகச் சந்திக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக தொழிலாளர்கள் எப்படி குறிவைக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள். அரசின் உணர்வற்ற கொள்கைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனைகளை தலித் இயக்கம் கையாள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அது அரசியல் இயக்கம் ஆகும்.

இதற்கு முன்பும் கூட நீங்கள் அடையாள அரசியலின் எல்லைகள் பற்றி பேசியிருக்கிறீர்கள். தலித் இயக்கம் அடையாள அரசியலைப் பெருமளவு கொண்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சாதிப் பிரச்சனை மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் இந்துத்துவ அரசியல் வலுப்பெற்று வரும்போது சாதிப் பிரச்சனை மிக முக்கியமானது ஆகிறது. ஆனால், பிரச்சனை அடையாளத்துடன் நின்றுவிடவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் தலித்துகள் சாதி மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். நீங்கள் சாதியை ஒழிக்க விரும்பினால், நீங்கள் சாதிப் பிரச்சனையை மட்டுமல்ல வர்க்கப் பிரச்சனையையும் கையாண்டாக வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில், இந்தியா தாராள மயம், உலகமயம் கொள்கைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் உழைக்கும் வர்க்கத்தின் நிலை சீர்குலைய ஆரம்பித்தது. உண்மையில் உலகமயத்தால் மிகுந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் தலித்துகளே. எனவே, வர்க்கத்தை புறந்தள்ளுவது தலித் மேம்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பது. இங்குத்தான் அடையாள அரசியலின் எல்லை இருக்கிறது. அவர்கள் இந்த வேறுபாட்டை முற்றூடாக ஒதுக்கி வைக்கிறார்கள். அடையாளத்தை அதீதமாக அழுத்துவது சாதியை ஒழிக்கப்பயன்படாது. அதற்கு மாறாக, அது (சாதி) அடையாளத்தை வலுப்படுத்தும். அடையாள அரசியல் வர்க்கப் பிரச்சனைகளை ஓரத்துக்குத் தள்ளிவிட்டு வைத்திருக்கிறது. அதேசமயம், சாதிக் கட்டமைப்புக்கு எதிரான நமது போராட்டத்தின் குறியாகக் கொள்ள வேண்டிய பண்பாட்டுப் பிரச்சனைகளும் இருக்கின்றன. இந்த இரண்டுப் போராட்டங்களும் ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். மனு நீதி ஒழியட்டும் என்று முழங்குவது மட்டும் போதாது. முஸ்லீம்களையும் தலித்துகளையும், முன்பில்லாத அளவிற்கு இந்துத்துவ சக்திகள் தாக்கி வரும் நிலையில், சரியான அரசியல் அணுகுமுறையை மேற்கொள்வது, ஜனநாயகம் பிழைத்திருக்க அதி முக்கியத்துவம் உள்ளதாகிறது.

இன்றைய இந்தியாவில் இந்துத்துவாவை எதிர்த்து சண்டையிடுவது என்று வரும்போது, தலித்- முஸ்லீம் கூட்டு தேவையானது என்று பலரும் சொல்கிறார்கள். அப்படியொரு கூட்டு வடிவம் பெற்று வருகிறதா?

தலித்- முஸ்லீம் கூட்டு தேவையென்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. தலித்துகள்- முஸ்லீம்களின் வாழும் விதத்தில் பல ஒத்த அம்சங்கள் இருக்கின்றன. இரண்டு பிரிவினருமே இந்துத்துவா அரசியலின் பலியாடுகள். இந்துத்துவா முஸ்லீம்களைக் குறிவைக்கிறது. இந்துத்துவத்தின் அடித்தளமாக இருக்கிற சாதிக் கட்டமைப்பு தலித்துகள் மனிதர்களாக வாழ்வது என்பதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லீம்கள், நாட்டின் பல பகுதிகளில் ஒதுக்கப்பட்ட சேரிகளில் வாழ்கின்றார்கள். தலித்துகளின் நிலையும் இதுதான். கிராமங்களின் ஒதுக்குப்புரத்தில் வாழும்படி தலித்துகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால், தலித்- முஸ்லீம் கூட்டு என்பது தற்போது ஒரு முழக்கம் என்ற அளவில்தான் இருக்கிறது. அதனை ஓர் அரசியல் யதார்த்தம் ஆக்க வேண்டும் என்றால் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனைச் சாதித்தால் மட்டுமே இந்துத்துவாவிற்கு எதிரான சண்டையை முறையாக நடத்திச் செல்ல முடியும்.

இதனைச் சாத்தியமாக்குவதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட அனைத்துப் பிரிவினர்களையும் ஐக்கியப்படுத்தும் முயற்சியை நான் எடுத்துள்ளேன். தலித்துகள், பழங்குடியினர், முஸ்லீம் இன்ன பிறரை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுதான் உண்மையான மக்கள் இயக்கமாக இருக்க முடியும். இதனை தேர்தல் கூட்டணியாகப் பார்க்க முடியாது.

தலித் பிரச்சனைகள் கையிலெடுக்கும் ஒரு கட்சியாக பிஎஸ்பி இருக்கிறது. உத்திரபிரதேசத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதற்கு செல்வாக்கு இருப்பதற்கு காரணம் இதுதான். ஓரங்கட்டப்பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பிஎஸ்பி எதிர்கொள்ள முடியுமா? சாதிப் பிரச்சனைகளுக்கு மட்டும் அழுத்தம் கொடுப்பது போதாது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?

பிஜேபியை உத்திரபிரதேசத்தில் தோற்கடிப்பது மிக முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றால், இந்திய ஜனநாயகம் அழிந்துவிடும். எனவே, உத்திரப் பிரதேசத் தேர்தலில் பிஜேபி தோல்வியடைவது அதி முக்கியமானது. அது தீர்மானகரமான அளவுக்கு முக்கியமானது. அப்புறம் அவர்கள் (பிஎஸ்பி), துப்புரவுத் தொழிலாளர்கள், தலித் பெண்கள் பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டியிருக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஒருவர் கையிலெடுக்கவில்லை என்றால், அவர்கள் தலித் சமூகத்தின் மத்தியில் உள்ள சாதிப் பிரச்சனையைக் கையிலெடுக்கவில்லை என்று பொருள். இவையெல்லாம் பிஎஸ்பியில் இதுவரை நடக்கவில்லை. ஆனால், அவர்கள் இப்பிரச்சனைகளை உடனடியாகக் கையில் எடுக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இடதுசாரிகள்- தலித்துகள் கூட்டு என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இடதுசாரிகள்- தலித்துகளுக்கான கூட்டுக்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறீர்களா?

சாதிப் பிரச்சனையை எதிர்கொள்வதில் நாட்டின் இடதுசாரிகள் வரலாற்றுப் பிழைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைமையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் அளித்ததில்லை. அதனால், பலரும் அவர்களை பிராமணிய இடதுசாரிகள் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது. இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புள்ள முற்போக்கு தலித் செயல்வீரர்கள் இந்திய இடதுசாரி இயக்கத்துடன், இடதுசாரி இயக்கம் சாதிப் பிரச்சனையை அணுகிய விதம் குறித்து விவாதத்தைத் துவங்கும் வரை இடதுசாரிகள் அப்பிரச்சனை பற்றி விவாதிப்பது பற்றி கவலைப்படவில்லை. இந்திய இடதுசாரிகள் இந்திய நிலைமை பற்றிய யந்திர கதியிலான புரிதலின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். மற்றொரு பக்கம், தலித் இயக்கங்களுக்கு அவர்களுக்கே உரிய பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் இயக்கங்கள் வர்க்கப் பிரச்சனையை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்கள். எனவே, இப்போது, தலித் இயக்கங்களுக்கும் இந்திய இடதுசாரிகளுக்கும் இடையில் ஒத்துழைப்பிற்கான கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.

அதாவது, பிரதான இடதுசாரிகளுடன் தலித் இயக்கங்கள் அரசியல் கூட்டு வைத்துக்கொள்வார்கள் என்று பொருளா?

இல்லை. சிபிஐ எம் போன்ற கட்சிகளுடன் கூட்டு என்பதற்கான வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. பிராதான இடதுசாரி நீரோட்டத்தில் இல்லாத இடதுசாரி குழுக்கள், மற்றும், பிரதான இடதுசாரிப் போக்கை விமர்சிக்கும் இடதுசாரி அறிவாளிப் பிரிவினருடன் ஒத்துழைப்பு என்று நான் சொன்னேன். சிபிஐ எம்மைப் பொறுத்தவரை தேர்தல் நோக்கத்திற்காக தலித்துகளைக் கவர்ந்திழுக்க நினைக்கிறார்கள். நாங்கள் உனா இயக்கத்தைத் துவக்கியபோது, சிபிஐ எம் தோழர்கள் சிலர் எங்களுக்கு ஆதரவாக வந்து சேர்ந்துகொண்டனர். அவர்கள் எங்களுடன் சேர்ந்து நில உரிமை குறித்து முழக்கம் எழுப்பினர். ஆனால், குஜராத்திலும், வேறு இடங்களிலும் தலித்துகளின் நில உரிமை பற்றி பேசுகின்ற அந்தக் கட்சி, கேரளாவில் நில உரிமை வழங்க மறுக்கிறது. இதைத்தான் சிபிஐ எம் செய்கிறது. வரும் மாதங்களில் கேரளாவில் நில உரிமைக்காக மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். அப்போராட்டம் சிபிஐ எம்மை அம்பலப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். உனாவிற்குப் பின்பு உடுப்பி.. திருவணந்தபுரம் போவோம் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் பிரச்சாரம் செய்யும் தேசியத்திற்கு எதிராக காஷ்மீரிலும் வடகிழக்கு இந்தியாவிலும் நிறைய போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்போராட்டங்கள் பற்றிய தலித் கட்சிகளின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தங்களின் உரிமைக்காகப் போராடும் முற்போக்கு குழுக்களை தலித் இயக்கங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரை தலித் இயக்கங்கள் இதுவரை கவலைப்படவில்லை. வடகிழக்கு இந்தியாவின் இயக்கங்கள், காஷ்மீர் விதவைகளின் போராட்டங்கள், போன்றவற்றுடன் தலித் இயக்கங்கள் ஒருமைப்பாடு கொள்ளவேண்டும். இந்து ராஜ்ஜியம் என்ற கருத்தாக்கத்தை எதிர்ப்பதுதான் அம்பேத்கரின் சிந்தனையின் சாரம். எனவே, அவர்கள் சொல்கிற தேசியவாதத்தையும் தலித் குழுக்கள் எதிர்த்து நிற்கும். அப்படியானால், தங்களின் இருத்தலுக்காகப் போராடும் பல்வேறு குழுக்களுடன் தலித்துகள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் இயக்கம் அரசியல் கட்சியின் வடிவத்தை எடுக்குமா?

தேர்தல் என்ற கோணத்தில் நான் யோசிக்கவில்லை. இருந்தபோதும், நாங்கள் எடுக்கும் பிரச்சனைகள் மிகுந்த அரசியல் தன்மை உள்ளவை. நானோ அல்லது இயக்கத்தின் வேறு சில தலைவர்களில் ஒருவரோ எம்பி ஆவது அல்லது ஒரு மந்திரி ஆவதைக் காட்டிலும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியும் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன். நான் தேர்தல் அரசியலுக்கு எதிரானவன் அல்லன். நாங்கள் எங்கள் போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்தால், எங்களின் கோரிக்கைகளை தங்களின் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்படி அரசியல் கட்சிகள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அதுதான் மிக முக்கியமானது. தலித்துகள்- முஸ்லீம்கள் மற்றும் பிற பலவீனமான பிரிவினர் கொண்ட தேசிய முன்னணி ஒன்றை அமைக்க நாங்கள் திட்டமிடுகிறோம். அந்த முன்னணியின் மூலம், தலித் கட்சிகள் என்று அறியப்படுபவை உள்ளிட்ட அரசியல் கட்சிகளை நாங்கள் அம்பலப்படுத்துவோம். தலித்துகளின் பிரச்சனை என்று வரும்போது அரசியல் கட்சிகள் எங்கே நிற்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வார்கள். வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து செயல்படுவது என்பது என்ற கேள்வியே எங்களுக்கில்லை. என்ன ஆனாலும், சிபிஐ, சிபிஐ எம் உள்ளிட்ட கட்சிகளுடன் எந்த கூட்டும் இல்லை.

தலித் மேம்பாடு என்று வரும்போது வர்க்கப் பிரச்சனையின் முக்கியத்துவத்திற்கு நீங்கள் அழுத்தம் கொடுக்கிறீர்கள். அதேசமயம், நீங்கள் பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இருந்தபோதும், நீங்கள் மார்க்சியத்துடன் உங்களைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

ஆம். நிச்சயம். நாங்கள் மார்க்சியத்துடன் எங்களை ஈடுபடுத்திக்கொள்வோம். விரைவிலோ அல்லது பின்னரோ நாங்கள் ஒருவகைப்பட்ட மார்க்சிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். முதலாளித்துவமும் பிராமணியமும் தலித்துகளின் இரண்டு எதிரிகள் என்று அம்பேத்கர் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். தலித் இயக்கங்கள் நேர்மையானவை என்றால், வர்க்கங்கள் எப்படி பிறப்பெடுத்தன என்பதை அவர்கள் புரிந்துகொண்டாக வேண்டும். எப்படி அது பிழைத்திருக்கிறது என்பதையும் இன்ன பிறவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு மார்க்சியம் வேண்டும். மார்க்சிய முறையில் சமூகத்தை ஆய்வு செய்வது நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

(ஆங்கில வடிவத்திற்கு http://en.southlive.in/…/jignesh-mevani-says-for-dalit-eman…)

One thought on “வர்க்கப் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தலித் இயக்கம் முன் செல்ல முடியாது: ஜிக்னேஸ் மேவானி

  1. கீழ்க்கண்ட ஆறு இயல்களும் முறையாக ஒன்றிணைய வேண்டும். சமதர்மவியலே பிற ஐந்து இயல்களினதும் குவிமைய இயலாக அமையவேண்டும். அப்போதுதான், அப்போது மாத்திரந்தான் சமதர்ம சமுதாயம் எனும் முரணற்ற ஜனநாயகக் கனவு நனவாகும். இப் பேட்டி அதைநோக்கிச் செலவதைக் காணக்கூடியதாய் உள்ளது. தேசப்பற்றியலைப் பற்றியும் பாலினசமத்துவம் பற்றியும் இப் பேட்டியில் கூறப்படாதது முழுநிறைவுத்தன்மையை மாசுபடுத்துவதாகவே அமைகிறது. 1. . Patriotism
    2. Federalism and Nationalism
    3. Gender Equalitarianism
    4. Secularism
    5. Anti-Casteism
    6. Socialism

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.