நக்கீரன்

ஒவ்வொரு மொழியும் அது பேசப்படும் நிலத்தின் சூழலில் இருந்தே உருவாகிறது. ஒரு நிலத்தின் சூழல் அழியும்போது அங்குப் பேசப்படும் மொழியும் அழிகிறது. காலனி ஆதிக்கத்தால் பிடுங்கப்பட்ட தம் நிலத்தை இழந்த பல பழங்குடிகள் அத்தோடு தம் சூழலையும் இழந்ததால் படிப்படியாக மொழியையும் இழந்தனர். பல மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி இறந்துவிட்டன. ஆகவே மொழியும் சூழலும் வேறு வேறு அல்ல. அவ்வகையில் தமிழ் ஒரு சூழல் மொழியாகும்.
உயிரினவளம் மிகுந்த ஒரு நிலத்தில் தோன்றும் ஒரு மொழி செறிவான சொல் வளத்தையும், பொருள் வளத்தையும் கொண்டிருக்கும். வெப்ப மண்டலப் பகுதியில் பல்லுயிர் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ் மொழி இவ்வகையில் ஒரு வளமிகு மொழியாகும். ஆங்கிலம் தோன்றிய நிலத்தில் இத்தகைய பல்லுயிர் செறிவு கிடையாது. இதுகுறித்து விரிவாகத் தனிக்கட்டுரை ஒன்று எழுதி வருவதால் ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் இங்குக் காணலாம்.
ஆங்கில மொழியில் மொட்டு என்ற சொல்லுக்கு நானறிந்த வரை Bud என்ற சொல்லும், உபரியாக Sprout, Shoot, Plumule என்கிற சொற்களும் உள்ளன. இதைப்போலப் பூ என்ற சொல்லுக்கு Flower தவிர Floweret, Bloom, Blossom, Burgeon, Effloresce போன்ற சொற்கள் உள்ளன. ஆனால் தமிழில் இவ்விரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 29 சொற்கள் உள்ளன.
அவையாவன: நனை, அரும்பு, முகை, கலிகை, சாலகம், பொகுட்டு, கன்னிகை, மொக்குள், மொட்டு, முகிழ், (முகிளம்), போது, பொதி, போகில், மலர், பூ, அலர், விரிமலர், இகமலர், தொடர்ப்பூ, வெதிர், அலரி. வீ, செம்மல், பழம்பூ, உதிரல், உணங்கல், வாடல், தேம்பல், சாம்பல்
இத்தனை சொற்களும் அதன் வளர்ச்சி படிநிலையை உற்றுக் கவனித்து உருவாக்கப்பட்ட சொற்களாகும். அவ்வளர்ச்சி படிநிலைகள் மொத்தம் ஏழு. அவை நனை, அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ ஆகியவையாகும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நனை – இது தோற்றப் பருவம். உள்ளும் புறமும் ஒருவித ஈரநைப்புள்ள தேன் நனைப்புடன் காணப்பெறுவதால் நனை எனப்பட்டது. இது தேனுக்குரிய மூலச்சாறு கருக்கொள்ளும் பருவம். தவிர நனை என்பதற்குத் தோற்றம் என்ற பொருளும் உண்டு.
அரும்பு – தோற்றத்தின் அடுத்த வளர்ச்சி. அரும் பூவாக ஆவதற்கு அடிப்படைக் கொண்டதால் அரும்பூ – அரும்பு எனப்பட்டது.
முகை – அரும்பில் இதழ்கள் அகத்தே நெகிழ்ந்து, அடிப்பக்கம் சற்றே பருத்து ‘முகைத்து’ தோன்றுவதால் முகை எனப்பட்டது.
போது – முகை பருவத்துக்கு அடுத்து இதழ்கள் நெகிழ்ந்து இடைவெளிப் பெற்று முனையில் வாய் திறக்கும் பருவம் இது. முகைக்கும் மலருக்கும் இடைப்பட்ட சிறுநேரப் பருவம் இது. .
மலர் – போதுக்கு அடுத்து அவிழும் பருவம் மலர். இதழ்கள் தனித்தனியே விலகி விரிந்து நிமிர்ந்து நிற்கும்..
அலர் – காலையில் மலர் என்றால் மாலையில் அலர். புற இதழ்கள் உதிர அக இதழ்கள் விரிந்து கீழ் நோக்கி வளைந்து பரவும்..
வீ – அலருக்கு பிறகு காம்பிலிருந்து கழன்று கீழே வீழும் பருவம். வீ எனும் சொல்லுக்கு நீங்குதல் வீழ்தல் எனப் பொருள். காம்பிலிருந்து நீங்கினாலும் மணம் நீங்காது.
பூவின் இந்த ஏழு படிநிலையை உற்றுக் கவனித்த தமிழர்கள் மனிதர்களின் வளர்ச்சிப் பருவத்தையும் இதனை ஒட்டியே ஏழு பருவங்களாக அமைத்தனர்.
ஆண் – பெண்
பாலன் – பேதை
மீளி – பெதும்பை
மறலோன்- மங்கை
திறலோன்- மடந்தை
காளை – அரிவை
விடலை- தெரிவை
முதுமகன்- பேரிளம்பெண்
இவையடுத்து எட்டாம் படிநிலையாகக் காய்ந்த பூவுக்குச் செம்மல் என்ற பெயரும் உண்டு. ஆனால் அது இறப்புநிலையாதலால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுபோல் மொக்குள், மொட்டு, முகிழ் மூன்றும் ஒரே பொருள் எனினும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
நீர்க்குமிழி போல அரைக்கோள உரு அமைந்தது மொக்குள். அடிப் பருத்து உயர்ந்து மேற்பகுதி மொட்டையாகத் தோன்றுவது மொட்டு. இதழ்கள் நெகிழ்ந்து முனைக் குவிவோடு தோன்றுவது முகிழ். இச்சொற்கள் மானுட உடலியல் கூறுகளுக்கும் விரிப்படுத்தப்பட்டன.
மணம் திறக்கப்படும் பருவமான முகைக்குக் கன்னிகை என்ற பெயரும் உண்டு. பெண்ணுக்கு காதல் உணர்வு திறக்கப்படும் பருவமே கன்னிகை. ஆணுக்கு காளையர். எனவே இப்பருவத்தினர் ‘முகைப் பருவத்தினர்’ எனப்பட்டனர். அடுத்த நிலையான போது வண்டு புகுவதற்கு வாய் திறந்து இடம் கொடுப்பது ஆகும். ஆகவே கன்னி நிலையிலிருந்து கற்பை ஏற்கும் பருவமாக வகுத்தது தமிழ்.
மலர் என்பதைவிடப் பூ என்ற சொல்லையே தமிழர்கள் அதிகம் புழங்குவதற்குக் காரணம் உண்டு. அறிவியல் முறைப்படி மலராத பூக்கள் (cleistogamous flowers) பல உள்ளன. மலர்ந்த பூக்கள்தானே மலர்கள்? எனவேதான் பூக்கள் என்ற சொல் அதிகம் புழங்குகிறது.
ஒரே ஒரு பூவுக்குள் இவ்வளவு பொருள் பொதிந்திருந்தால் முழுச் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்து எவ்வளவு புதையலை வைத்திருக்கும் இம்மொழி?
நன்றி: கோவை இளஞ்சேரன், கு.வி. கிருட்டிணமூர்த்தி.
நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.