அரிசி விலையை  மும்மடங்கு உயர்த்தி  பொது வழங்கல் திட்டத்தை முடக்குவதா?

“தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவதற்கு மாற்றாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவு தானியத்தை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு  ஈடுபட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் தேவைகள், விலைவாசி ஆகியவை குறித்த உண்மைகளை  அறியாமல் எந்திரத்தனமாக மத்திய அரசு முடிவெடுத்து திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான  அரிசியின் விலையை மும்மடங்கு உயர்த்தியிருப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். தமிழகத்தில் மொத்தமுள்ள 2.03 கோடி  குடும்ப அட்டைகளில் 1.91 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக அரிசி வழங்கப்படும் போதிலும், அதை வெவ்வெறு விலைகளில் மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு வாங்கி வருகிறது. அந்தியோதயா அன்னயோஜனா எனப்படும் பரம ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.3 என்ற விலையிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான அரிசியை கிலோ ரூ.5.65 என்ற விலையிலும், வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியை கிலோ ரூ.8.30 என்ற விலையிலும் தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை கிலோ ரூ.22.54 ஆக கடந்த மாத இறுதியில் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த ஆணையால் தமிழகத்தில் பொது வழங்கல் திட்டம் கடுமையாக பாதிக்கப் படும் ஆபத்து உள்ளது.  ஏனெனில், தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 2.96 லட்சம் டன் அரிசி நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் 1.26 லட்சம் டன் அரிசி, அதாவது 42.56%, வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விலை ரூ.22.54 ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் மாதத்திற்கு ரூ.177.87 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.2134.50 கோடி கூடுதலாக செலவாகும். தமிழகத்தில்  அரிசிக்காக ரூ.3458.50 கோடி உட்பட பொதுவழங்கல் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.5300 கோடி மானியம் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக ரூ.2134.50 கோடி ஒதுக்குவது சாத்தியமில்லை. அவ்வாறு ஒதுக்காவிட்டால் பொதுவழங்கல் திட்டமே முடங்கிவிடக்கூடும்.

வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியது இயல்பாக நடந்த ஒன்றல்ல; அதற்கான தேவையும் எழவில்லை. மாறாக, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால் தமிழக மக்களை பழிவாங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள  குடும்ப அட்டைதாரர்களில் 50.55 விழுக்காட்டினருக்கு மட்டுமே உணவு தானியங்களை மானியத்தில் வழங்க முடியும். இதனால் மீதமுள்ள ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்காமல் அனைவருக்கும் பயனளிக்கும் பொதுவழங்கல் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. இதை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது.

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்ட இலக்குகளே தவறானவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். உண்மையில் அனைவருக்கும் உணவுத் திட்டம் என்ற பெயரில் அனைவரும் பயனடையும் வகையில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மட்டும் தான் மானிய விலை அரிசி என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உதாரணமாக இந்தியாவில் கிராமப்புறங்களில் மாதம் ரூ.447 வருவாய் ஈட்டுவோரும், நகர்ப்புறங்களில் மாதம் ரூ.501 வருவாய் ஈட்டுவோரும் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்  கூறுகின்றன. ஒரு மனிதனின் உணவுத்தேவைக்காக மாதம் சுமார் 20 கிலோ அரிசி தேவைப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் அரிசி வழங்கப்படாது எனில், அவர்கள் வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.30 என்ற விலையில் தான் வாங்க வேண்டும். அதற்காக மாதம் ரூ.600 செலவழிக்க வேண்டும். மாதத்திற்கு 447 ரூபாயும், 501 ரூபாயும் வருவாய் ஈட்டும் ஒருவரால் உணவுத் தேவையின் ஓர் அங்கமான அரிசிக்கு மட்டும் மாதம் எப்படி ரூ.600 செலவழிக்க முடியும்? தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அனைவருக்கும் பயனளிக்காத ஒன்று என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை. உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்பது இதுவரை உணவு கிடைக்காதவர்களுக்கும் உணவு வழங்குவதாக இருக்க வேண்டும். மாறாக, மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உணவை பறிப்பதாக இருக்கக்கூடாது. ஆனால், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கு பதில் உணவை பறிப்பதாக உள்ளது.

அனைவருக்கும் உணவு வழங்குவது தான் அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்கு அரிசி தேவையில்லை என்றால் அவர்கள் அதை வாங்காமல் இருப்பார்கள். அதற்கு மாறாக வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர்களுக்கு அரிசி மானியம் இல்லை என மத்திய அரசு கூறினால் அது நாட்டில் பசியும், பட்டினியும் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும். கடந்த வாரம் வெளியிடப்பட்ட உலக பட்டினிக் குறியீட்டில், உலகிலுள்ள 118 வளரும் நாடுகளில் இந்தியா 97 ஆவது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றை விட இந்தியாவில் பட்டினிக் கொடுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை இந்தியாவில் பட்டினிக் கொடுமையை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

எனவே, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான அரிசியின் விலையை மும்மடங்காக உயர்த்தி பிறப்பித்த ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அனைவருக்கு உணவுத் திட்டமாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.