’மர்மக் காய்ச்சலு’க்கு 4 குழந்தைகள் பலி: மு. க. ஸ்டாலின் கண்டனம்

“சென்னையில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான சுகாதார சீர்கேட்டையும், மருத்துவத் துறையில் புரையோடியுள்ள அலட்சியப் போக்கையும் கவனிக்காத தமிழக அரசுக்கு எனது வன்மையான கண்டனம்” என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த சிறுவன் முகமதுவும், அவரது சகோதரியும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் சிறுவன் முகமது, மாலை ஆறு மணியளவில் உயிரிழந்திருக்கிறார். அந்தச் சிறுவனின் சகோதரி உடல் நலம் தேறி வருவதாக முதலில் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த சிறுமியும் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்திருக்கிறாள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி, அதே  மருத்துமனையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பிறகு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதுரவாயலைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி லட்சிகா ஏஞ்சல் இரவு ஒன்றரை மணியளவில் உயிரிழந்திருக்கிறார். இப்படி நேற்று காலையில் துவங்கி நள்ளிரவிற்குள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.

குழந்தைகளை பறிகொடுத்து விட்டு நிற்கும் பெற்றோருக்கு இந்த துயரம் எள் முனையளவு கூட ஈடு கட்ட முடியாதது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கும், காய்ச்சலை உரிய காலத்திற்குள் கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளிக்காததும் காரணம் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அரசு மருத்துமனையில் புரையோடிப் போயிருக்கும் இந்த அலட்சிய மனப்பான்மைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் மர்மக் காய்ச்சல் குறித்தும், டெங்கு போன்ற காய்ச்சல்களின் பாதிப்பு குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களும், நானும் கூட அடிக்கடி அதிமுக அரசின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வந்திருக்கிறோம். ஆனாலும் இது போன்ற கொடிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.

சென்னை மாநகரத்தில் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைந்து இது போன்ற காய்ச்சல்கள் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சென்னை மாநகராட்சி நிர்வாகமும் கடந்த ஐந்து வருடங்களாக தூங்கி வழிந்து இப்போது விடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கினால் கொடிய காய்ச்சல்களின் கொடுமைக்கு குழந்தைகளும் ஆளாகி, இன்றைய சூழ்நிலையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் இறந்து போகும் அவலம் உருவாகி விட்டது.

அரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு கவனமாக சிகிச்சை அளிக்காத காரணத்தால், இப்போது எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை களைந்து, இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய தரமான சிகிச்சை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.