வசுமித்ரவும் கருத்து வன்முறையும் எழுத்து மேட்டிமையும் (உப தலைப்பு : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவராத உண்மைகள்)

வெண்புறா சரவணன்

கடந்த 25-9-2016 அன்று தமுஎகச மாநிலக்குழு சார்பில் தேனியில் சிறப்பாக நடந்து முடிந்த மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவில், 2015ல் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு ‘தமுஎகச விருதும்’ படைப்பாளிகளை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக அன்று பகல் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது புத்தகங்கள் குறித்த திறனாய்வு மற்றும் தேர்வு செய்யப்பட்ட காரணத்தை விளக்கி நடுவர்குழு தோழர்களால் முன்வைக்கப்பட்டு படைப்பாளிகளின் ஏற்புரைகளுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்விழாவின் முத்தாய்பான நிகழ்வாக, தமுஎகச வழங்கும் ‘முற்போக்குக் கலை இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஆளுமைக்கான’ கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாகவே விருதுகளை ஏற்கமறுக்கும் கொள்கை முடிவுடைய தோழர் எஸ்விஆர் தமுஎகச தலைவர்களின் தொடர்ச்சியான அன்பு வற்புறுத்தலை ஏற்றுக்கொண்டு விருதுபெற ஒப்புக்கொண்டதோடு விருதுத் தொகை ரூ. ஒரு லட்சத்தை சமூகநீதிப் போராட்டத்தில் களத்திலும் கருத்தாலும் காத்திரமான பங்களிப்பைச் செலுத்திவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அளிப்பதாக மேடையிலேயே அறிவித்தார்!

இதுவெல்லாம் ஏற்கனவே பல தோழர்களாலும் பகிரப்பட்ட செய்திதான். ஆனால், இதுவரை பகிரப்படாத அல்லது பகிரவேண்டிய அவசியமற்றது என்று புறந்தள்ளப்பட்ட ஒரு சிறு நிகழ்வை பகிரவேண்டிய தேவை கருதி இங்கு பகிர்கிறேன். இல்லையென்றால் வசுமித்ர போன்ற கருத்து வன்முறையாளர்களின் அடாவடித்தனத்தையும், பொய் புரட்டுகளையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும்…

“மார்க்சிய அவமதிப்பும், தமுஎகசவும், அடிப்பொடிகளும்…””
என்ற தலைப்பில் ஒரு புரட்டுரையை வசுமித்ர தனது வலைப்பூவில் 3-10-2016 அன்று பதிவு செய்திருக்கிறார்.
(இதற்கு “தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்ற சப்-டைட்டில் வேறு!)
அதை நோண்டிப் பார்ப்பதற்கு முன் அந்நிகழ்வு பற்றிய உண்மைத் தன்மையை சுருக்கமாகப் பார்ப்போம்..

தோழர் எஸ்விஆருக்கு விருது வழங்கி முடித்தவுடன். இரண்டு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஒன்று எஸ்விஆரின் ஏற்புரையைத் தொடர்ந்து, அவருடன் பார்வையாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல். மற்றொன்று இன்றைய இந்துத்துவ அபாயம் குறித்த அவரது உரை.

கலந்துரையாடலைப் பொறுத்தவரை தமுஎகசவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைப்பில், கார்ட்லெஸ் மைக் மூலம் பார்வையாளர்கள் இருக்குமிடத்தில் இருந்தும், எஸ்விஆர் மேடையில் இருந்தும் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மட்டுமல்ல, அவரது எல்லா நிகழ்வுகளுமே அவர் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் திட்டமிடப்பட்டிருந்து.

கலந்துரையாடல் துவங்கியவுடன் பார்வையாளர்கள் துவக்கலாம் என்று ஆதவன் அறிவித்த சிலநிமிடங்கள் வரை மெளனமான சூழல் நிலவியது. அதன்பிறகு, தேனி மாவட்ட தமுஎகச பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலம் துவக்கினார்.
” சமீபத்தில் வெளிவந்த ரங்கநாயகம்மாவின் புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் தேவைப்படுகிறார் நூல் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்வியை முன் வைத்தார்.

இந்தக் கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் மூலம் ஒரிரு நிமிடங்களில் கருத்துச் சொல்லிவிட்டு நகரமுடியாது என்பதை, சமீபமாக இப்புத்தகம் குறித்து எதிரும் புதிருமான கருத்துமோதல்கள் நடந்துவருவதை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்! ஆனாலும், இது குறித்து கேட்கப்பட வேண்டியதும், கருத்துச்சொல்ல வேண்டியதும் அவசியம் என்பதை தமுஎகசவும் அறியும், எஸ்விஆரும் உணர்ந்திருப்பார். அந்த அடிப்படையில் அதுகுறித்த ஒரு நீண்ட விளக்கத்தை அவரது பார்வையில் முன்வைத்து முடித்தபோது, கலந்துரையாடலின் நேரம் கடந்திருந்து. எனவே, ஒருங்கிணைப்பாளரான ஆதவன் இதைச் சுட்டிக்காட்டியும், அடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவரது உரைக்கு வேண்டிய கால அவகாசத்தை குறிப்பிட்டும் கலந்துரையாடலை நிறைவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்தவுடன்… கூட்டத்திலிருந்து எழுந்த வசுமித்ர என்ற ஒரு நபர், எஸ்விஆர் கருத்து குறித்து தான் பேசவேண்டும் என்று மேடைக்கு ஏறப்போனார். உடனே ஆதவன், சிறிது பொறுங்கள் என்று கூறிவிட்டு தான் ஏற்கனவே சொன்னதை மறுபடியும் சுட்டிக்காட்டி விட்டு, ஆனாலும் வசுமித்ர கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது கருத்து மற்றும் எஸ்விஆர் விளக்கத்தோடு இந்நிகழ்வை முடித்துக்கொள்ளலாம் ஒத்துழைப்பு தாருங்கள் என்ற வேண்டுகோள் விடுத்து, பார்வையாளர்கள் கீழிருந்து உரையாடுவது என்ற ஏற்பாட்டையும் தளர்த்தி கருத்துச் சொல்ல வருமாறு வசுமித்ரவை மேடைக்கு அழைத்தார் ஆதவன்.

வசுமித்ர மேடை ஏறியதும், “எஸ்விஆருக்கு எனது புத்தகம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதேபோல், பெரியாரிய, அம்பேத்கரிய போன்றவற்றிற்கு பங்களிப்பு செலுத்தியவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை” என்று ஆரம்பித்தவர், கொஞ்சமும் சபை நாகரிகமின்றி அநாரிகமான தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தார்.
“தமுஎகச இவரை மார்க்சிய அறிஞர் என்று எப்படி அழைக்கிறார்கள்? இவருக்கு அந்த தகுதி இருக்கிறதா? அப்படி என்ன மார்க்கியத்திற்கு இவர் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார். ஒருகட்டத்தில் “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இளம் தலைமுறையை சீரழித்தவர் இவர்” என்ற கீழ்த்தரமான அபத்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரங்கில் இருந்த அனைவரும் முகம் சுழிக்கும் அளவுக்கு சூழல் இருந்தபோதும் அவர் முழுமையாகப் பேசி முடிக்கும்வரை உரிய ‘கருத்துச் சுதந்திரம்’ வழங்கப்பட்டது!
அவரது கீழ்த்தரமான வசைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த எஸ்விஆர் “மார்க்சிய அறிஞர் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை வசுமித்ர. அது இந்த தோழர்களின் விருப்பம்” என்று பொறுமையாகத்தான் பேசினார்.

அதற்குப்பிறகும், ஆதவன் அடுத்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு செய்து கொண்டிருக்கும்போதே மீண்டும் மேடையேற வசுமித்ர முயற்சிக்க,

பொறுமையிழந்த ஆதவன் தார்மீகக் கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் நிதானத்துடன், “ஒரு முக்கியமான ஆளுமைக்கு விருது வழங்கும் விழாவில் அவரப்பற்றி தரக்குறைவாக பேசுவது ஒருவகை மனநோய். இதை மேலும் அனுமதிக்க முடியாது. இப்போது தோழர் எஸ்ஆர்வி தனது உரையைத் துவக்குகிறார். வசுமித்ர இந்த அரங்கில் அமர்ந்தும் கேட்கலாம் அல்லது அரங்கை விட்டு வெளியேறியும் கேட்கலாம்” என்ற வேண்டுகோள் விடுத்து அமர்ந்தவுடன், மீண்டும் பேசுவதற்கு வசுமித்ர முயற்சிக்க, அருகில் அமர்ந்து இருந்த தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள், “அதான் சொல்லிட்டாருல்ல, வெளிய போப்பா” என்று சொன்னவுடன், “நான் ஏன் வெளியே போகவேண்டும்?” என்றவாறு முகத்திற்கு நேராக மிரட்டும் தொணியில் முறுக்கிக் கொண்டு நிற்கும்போது அருகில் நின்ற இரு தோழர்கள் என்ன சண்டையிழுக்க வந்தாயா? வெளிய போய்யா என்று அவரை வெளியேற்ற முயன்றார்கள், அப்போதும் அவர் உடனடியாக வெளியேறாமல் தன் இருக்கைக்குக் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து அரங்கைவிட்டு வெளியே சென்று நிகழ்ச்சி முடியும் வரை வெளியில்தான் இருந்தார்.

ஒரு அறிவார்ந்த புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எதிர்பாராமல் நடந்த இறுக்கத்தைப் போக்கி, வந்திருந்தவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவருதற்கும் உற்சாகப்படுத்தும் நோக்கிலும் மேடையேறிய பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், “ஆம் நாங்கள் தவறு செய்துவிட்டோம். தோழர் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என்று போட்டிருக்கக் கூடாது…
மார்க்சியப் பேரரறிஞர் என்று போட்டிருக்க வேண்டும்!” என்று சொல்லிவிட்டு இறங்கினார்.

இதில் முக்கியமாக இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். இவ்வளவு அசாதாரண நிலையிலும்கூட, தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த தமுஎகச தோழர்களும், தேனி மாவட்ட இடதுசாரித் தோழர்களும் கனிசமாக இருந்த அரங்கில், அவர்கள் தங்கள் இருக்கைவிட்டு எழுந்துவிடவோ, தலையீடு செய்யவோ முயற்சி செய்யவில்லை. வசுமித்ர மீதுள்ள அதிருப்தியையும் கோபத்தைபும் வெளிக்காட்டாமல். மிகவும் கட்டுக்கோப்புடன் அமைதி காத்தார்கள் என்பது ஒன்று. மற்றொன்று, அதே மனநிலையில் வெளியில் நின்றிருந்த -வசுமித்ரவுடன் நட்பில் இருக்கும் – சில தோழர்கள் அவ்வளவையும் சகித்துக்கொண்டு அவரோடு இயல்பாக உரையாடினார்கள் என்பது.

இன்னுமொரு முக்கியமான விசயம், அரங்கில் நடந்த இந்த சர்ச்சை குறித்து தமுஎகச தலைமையும் நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் எவரும் இதுகுறித்து பொதுத்தளத்திலோ, இணையத்திலோ எந்தவொரு பதிவையும் பகிர்ந்து இதையொரு பிரச்சனையாக்க விரும்பவில்லை. ஏனென்றால், வசுமித்ர போன்ற நபர்களை வரலாறெங்கும் சந்தித்த இயக்கத்திற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை! இன்றைய அசமத்துவான சமூகச்சூழலை மேலும் கெட்டிப்படுத்தத் துடிக்கும் பாசிச அரசியல் மற்றும் பண்பாட்டு போக்கு அதிகரித்து வரும் நிலையில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் தமுஎகச என்ற அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், வசுமித்ர போன்ற உதிரிகளுக்கு அந்தப் பிரச்சனையை விடவும், அடுத்தவர் நடத்தும் நிகழ்வுகளுக்குச் சென்று குழப்பத்தை உருவாக்கி குளிர்காய்வதும், அதையே ஒரு பிரச்சனையாக்கி இணையத்தில் தனது இட்டுக்கட்டிய எழுத்துத் திறமையின் மூலம் பல மூத்த தோழர்களைக்கூட இழிவுபடுத்தி விளம்பரம் தேடுவதுதான் அவர்களது – புரட்சிகர செயல்பாடு – தலையாய பிரச்சனை! இது மிகையல்ல என்பதை, நான் குறிப்பிட்ட வசுமித்ரவின் இணைய
எழுத்துப் புரட்சியில் காணலாம். அது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறது!

இனி…

வசுமித்ர தனது வலைப் பக்கத்தில் அவிழ்த்து விட்டிருக்கும் “தன்னெஞ்சறிவது பொய்யற்க”
என்ற, பொய்யும் புரட்டும் நக்கலும் நைய்யாண்டியும் கலந்த அந்த அபத்தக் கட்டுரையை, நான் மேலே குறிப்பிட்ட உண்மை நிகழ்வோடு பொருத்தியும் உரசியும் பார்க்கலாம்.

எடுத்த எடுப்பிலேயே அந்த அபத்தம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது…

//”தமுஎகச தேனியில் வைத்து எஸ். வி .ராஜதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதானையாளர் விருதை வழங்கியது. ராஜதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதோ (முதியோர் விருது *) இன்னும் பல விருதுகளை வழங்குவதோ அவர்களது அமைப்பின் விருப்பம்…”//
என்கிறார்!

உண்மையில் தோழர் எஸ்.வி.ஆருக்கு வழங்கப்பட்டது வாழ்நாள் சாதனையாளர் விருது அல்ல. அதன் பெயர் ‘முற்போக்குக் கலை இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஆளுமைக்கான விருது’. சென்ற ஆண்டுதான் துவக்கப்பட்ட இவ்விருதுக்கு தேர்வான முதல் ஆளுமை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள். தோழர்கள் ஆ.சி.சு, எஸ்.வி ஆர் ஆகிய இருவருமே வயதால் முதியவர்கள்தான். இவர்கள் மட்டுமல்ல இனி வருங்காலங்களிலும்கூட இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவே இருக்கும் சாத்தியக்கூறுகளே அதிகமாக இருக்கலாம்.
ஏனென்றால், ஒருவருடைய நீண்டகால சமூகப் பங்களிப்பை கணக்கில் கொள்ள இந்த வயது விசாலம் முக்கியமானதாக இருக்கும்!
ஆனால், அதைவைத்து //(முதியோர் விருது *)// -என்று கொச்சைப்படுத்துவதும், களத்திலும், கருத்திலும் காத்திரமான பங்களிப்பு செலுத்தும் செயல்பாட்டை வெறும் சாதனை என்று மட்டும் குறுக்கிப் பார்ப்பதுமான சிந்தனை வறட்சியை எள்ளி நகையாடலாமே தவிர ரசிக்க முடியாது!

//அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை.// – என்ற அரிய கண்டுபிடிப்பை வசுமித்ர சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது இதையும் கண்டுபிடித்தார்.

தான் மட்டும்தான் மெத்தப்படித்த மேதாவி என்றும், மற்றவர்கள் எல்லாம் எதுவும் தெரியாத கூமுட்டைகள் என்றும் பார்க்கும் பார்ப்பனிய சிந்தனையின்
வெளிப்பாடுதான், //வந்திருந்த தோழர்கள் பலருக்கு நம்ம சேர்ந்திருக்கிற அமைப்பு யாருக்கோ பரிசு கொடுக்குதாம்ல.. என்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது. அது தவிர வேறு எதும் இல்லை.// -என்ற கதையாடல்.

//சீவிச் சிங்காரித்து எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என்று சொன்ன கொடுமைக்காக அவர் எதைப் பேசினாலும் அதைச் சப்பைக் கட்டு கட்டுவதைத் தவிர அங்கிருந்த முதுபெரும் தோழர்களுக்கு வேறு என்ன பணி காத்துக்கிடக்கிறது.// -என்பது, அனுதினமும் புரட்சிபற்றியே சிந்திக்கும் பணியில் இருக்கும் வசுமித்ரவின் கவலை!

தோழர்கள் அருணன், ச.தமிழ்செல்வன், ச.செந்தில்நாதன், சு.வெங்கடேசன், கே.வேலாயுதம் ஆகிய 5 பேர் கொண்ட நடுவர்குழுதான் இந்த விருதுக்கு இவரை தேர்வு செய்தது. இந்த ‘முதுபெரும் தோழர்கள்’ வேலை வெட்டி ஏதுமற்றவர்கள். எனவே, வசுமித்ர தனது புரட்சிக் கம்பெனியில் ஏதாவது வேலையிருந்தால் போட்டுத்தரம்படி கேட்கலாம்!

சரி, எஸ்விஆரை சீவி சிங்காரித்து (இது என்னவகை புரட்சிகர சொல்லாடலோ!) அழைத்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், சீவி, சிங்காரித்து வந்து, அழையா விருந்தாளியாக யாருடைய மேடையிலும் ஏறி, மைக் பிடித்து, எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அநாகரிகத்தை எந்த மார்க்சிய பட்டறையில் கற்றார் வசுமித்ர!

//ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைப்பாளர் என்ற தோற்றத்தை விடுத்து பாடிகாட் முனிஸ்வரராக முன்னே வந்தார். என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். ( அதற்கு முன்னே கலந்துரையாடலுக்கு என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று அங்கு குறிப்புத் தரவில்லை) அதை அவரிடமே கேட்கிறேன் என்றேன். உடனே என்ன கேள்வின்னு சொல்லுங்க என்று மேடையிலிருந்தே கேட்டார். என் மனதில் தோன்றிய முதல் கேள்வி மசால் போண்டா எப்படிச் செய்யணும் என்பதே! பதில் சொல்ல விரும்பி ராஜதுரை இருப்பதைக் கூட மறந்து என்ன கேள்வி என்னிடம் சொல் என்று மிரட்டுபவரை எப்படி ஒருங்கிணைப்பாளராகக் கருதமுடியும் (ஆனால் இதையே நான் செய்திருந்தால், ஆதிக்க சாதி, தலித் ஒடுக்குமுறை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்று முகநூலில் இந்நேரம் அலப்பறை செய்திருப்பார்!) அதனால்தான் அவரை பாடி காட் முனீஸ்வரன் என்றேன்.//
– இதற்கு நீண்ட விளக்கம் எல்லாம் தேவையில்லை. நான் மேலே குறிப்பிட்ட உண்மை நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்தால், வசுமித்திரவிடம் அப்பட்டமான சாதி ஆதிக்க சிந்தனை இருப்பது புலப்படும்.

//என்னை மார்க்சிய அறிஞர்னு நான் சொல்லலை, தமுஎகச சொல்லுது என்று சொல்வதன் மூலம் இது தமுஎகச பதில் சொல்ல வேண்டிய கேள்வி, என தமுஎகசவை பல்வேறு வாக்கியங்களில் உணர்ச்சிமயமாகத் தூண்டிவிட்டார். (என் கட்சிக்காரர்கள் யாரேனும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்வது போல் வன்முறைக்கான முஸ்தீீபும் அங்கு நடந்தது )!//

– வசுமித்திரவுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பது தவறில்லை. ஆனால், சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சிரியுங்கள் என்று சொன்னால் சிரிப்பு வராது, பரிதாபம்தான் வரும்!

நான், வேண்டுகோளாக அல்ல, சவாலாகவே சொல்கிறேன்…
ஆர்எஸ்எஸ் அல்லது சாதி, இன அடிப்படைவாத அரங்க நிகழ்வுகளில் கூட வேண்டாம், மற்ற இலக்கிய அமைப்புகள், இலக்கிய குழுக்கள் நடத்துகிற அரங்க நிகழ்வுகளில் போய் இப்படி மேடையேறி முரட்டுச் சொற்பொழிவை முழுமையாக உளறிவிட்டு வசுமித்ர இதுபோல் இயல்பாக வெளியேறி, இறதிவரை அங்கிருந்து அனைவரிடமும் சகஜமாக உரையாட முடியுமா?

தமுஎகச இவருக்கு அளித்தது கருத்துச் சுதந்திரம். அதைப் பயன்படுத்தி இவர் நிகழ்த்தியது கருத்து வன்முறை.

அரசியல், கலை இலக்கியத் துறையில் அளப்பரிய பங்களிப்பு செலுத்தி வருபவரும், எவ்வளவு பெரிய கொம்பனையும் நேருக்கு நேர் களத்தில் சந்தித்தவரும், இன்றைக்கு கலை இலக்கியத் துறையில் முன்னணி படைப்பாளர்கள், கலைஞர்கள் பலருக்கும் வளர்நிலையில் ஆகர்சமாக இருந்தவருமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் பற்றி வசுமித்ர //அங்கு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த, ஒரு ஓங்குதாங்கான பெரியவர் “போ போ அதான் பதில் சொல்லியாச்சுல” என ஒரு தெரு நாயை விரட்டுவது போல் கையை வீசிக்காண்பித்து விரட்டினார். “என்ன விரட்டுறீங்களா” என்றதும் அது அது என பம்மினார். ( அவர் எஸ். ஏ . பெருமாள் என்று அறிந்தேன். மிகவும் நகைச்சுவை உணர்வுக்கு ஆளானேன் என்பதை சொல்லவும் தேவையில்லை)// என்று எழுதுகிறார். இந்த உலகப் புரட்சியாளருக்கு எஸ்ஏபி என்றால் யாருன்னே தெரியாதாம்!
தோழர் எஸ்ஏபியின் அரசியல் அனுபவ வயதுகூட இல்லாத இந்த ‘வசு குவேரா’வைப் பார்த்து எஸ்ஏபி பம்மினாராம்!!

எஸ்ஏபி அன்று அமைதி காத்தார் என்றால் அதற்குப் பெயர் பம்முதல் அல்ல… பெருந்தன்மை. எஸ்ஏபி முகத்துக்கு நேரே முறைத்தபடி முறுக்கிக் கொண்டு நின்ற போதும் அரங்கில் இருந்த பெரும்பாலான தமுஎகச தோழர்கள் யாரும் எழுந்துவரவில்லை என்பது வசுமித்ர என்ற பூச்சாண்டிக்கு பயந்துகொண்டு அல்ல… ஸ்தாபன ஒழுங்குக்கு கட்டுப்பட்டு என்று அந்த எல்லாம் படித்துமுடித்த ஏகாம்பரத்திற்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

வசுமித்தரவின் ஆதிக்க மனோபாவத்திற்கு சான்றாக அவரே சொல்வதை பாருங்கள்…

//விழா தொடங்கி தமுஎகச தனது வாசிப்பில் சிறந்த நூல்கள் எனப் பரிசளித்து எழுத்தாளர்களை முன்மொழிந்தது. அது முன்மொழிந்த அனைத்து நூல்களிலும் எனக்கு கருத்து மாறுபாடு உள்ளதெனினும் அது குறித்துப் பேச அந்த மேடையில் ஏதுமில்லை.//

தமுஎகச எந்தெந்த படைப்புகளுக்கு அல்லது யாராருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டாமையிடம் கேட்டு, அவருக்கு கருத்து மாறுபாடு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் தமுஎகச போடும் மேடையில் ஏறி இவர் தீர்ப்புச் சொல்லுவார்!!
இதையே இப்படி வைத்துக் கொள்ளலாமா… இந்த கருத்துச் சுதந்திரப் போர்வாள், ஜனநாயக சக்கரவர்த்தி நடத்தும் எல்லா இலக்கிய நிகழ்வுகள் மற்றும் புத்தக வெளியீடுகளின்போதும் அங்கு கலந்துகொள்ளும் தமுஎகச தோழர்களுக்கு கருத்து மாறுபாடு இருந்தால் அந்த மேடையில் ஏறி அது குறித்து எதுவேண்டுமானாலும் பேச அனுமதிப்பாரா?

யாருக்கு விருது தர வேண்டும் என்றும், யாரை எந்த அடையாளத்துடன் அழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்வதற்கு கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் தமுஎகசவுக்கு நன்றாகத் தெரியும். வசுமித்ர போன்ற இலக்கிய போலீஸ்களிடம் அனுமதியோ அங்கீகாரமோ வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு அதில் மாறுபட்ட கருத்து இருந்தால், தனி மேடை போட்டு பொங்கிக் கொள்ளலாம்!

//தமுஎகசவின் கருத்துச் சுதந்திரமும், அதன் அறிவுச் சூழலும் ஏன் இத்தகைய கடும் நெருக்கடியில் இருக்கிறது?// – என்று இந்தப் ‘புரட்சிப் பரமபிதா’ தமுஎகசவுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்து ஒரு கேள்வித்தாளை பெரியமனதுடன் முன் வைத்திருக்கிறார்! ஏறக்குறைய அதற்கான பதில்களை இந்த நீண்ட எதிர்வினையில் இருந்தே அவர் எடுத்துக் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்!!

அதில் ஒன்று மட்டும், இந்த நிகழ்வுகள் எதனோடும் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி…
அது கேள்வி என்பதைவிட தோழர் ஆதவனுக்கும் சிபிஎம் தோழர்களுக்கும் சிண்டுமுடியும் நரித்தனம் என்பதே பொருத்தமாக இருக்கும்!

//மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகமும் இருப்பது குறித்து தனக்கு கேள்வி இருப்பதாக// – எந்த ஊடகத்தில், எந்தப் பேட்டியில், எந்த சூழலில், எதுமாதிரியான கேள்விக்கு
ஆதவன் சொல்லியுள்ளார்?
சரி, அப்படியே சொல்லியிருந்தாலும் அது அவரது பார்வை. அவரது கருத்து. அதில் வசுவுக்கு என்ன பிரச்சனை? கருத்துரிமை பற்றி வாய்கிழிய பேசும் இவருக்கு ஆதவனின் கருத்துரிமை என்று வருகிறபோது மட்டும் ஏன் எரிகிறது?
எந்த சம்பந்தமும் இன்றி இந்தப் பிரச்சனையில் அதைப் பேசி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சுப் போட வேண்டும்?

ஆரம்பத்தில்… //(ஆனால் இதையே நான் செய்திருந்தால், ஆதிக்க சாதி, தலித் ஒடுக்குமுறை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்று முகநூலில் இந்நேரம் அலப்பறை செய்திருப்பார்!)// என்ற ‘ஆதங்கம்’ வசுவிடம் ஏற்பட்டதையும்…
ஆதவன் சிபிஎம்மை விமர்சித்தது ஏன்? என்பதை ‘கேள்வித் தாளில்’ இணைத்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கேள்விக்கான தேவை ஏன் வந்தது என்பது எளிதாகப் புரியும்!

தமுஎகச தோழர்களை ‘தமுஎகச அடிப்பொடிகள்’ என்று விளிக்கும் வசுமித்ர, எந்த மகா சன்னிதானத்தின் ‘முடிப்பொடி’யாகவும் இருப்பது குறித்து எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை! ஆனால், ஒரு ‘அமைப்புக்கு’ நம்பிக்கையாக இருப்பதாலேயே நாங்கள் அடிப்பொடி என்றால் அது எங்களுக்குப் பெருமையே!

தமுஎகச ஒரு பரந்த விரிந்து ஜனநாயக மேடை. இதில் ‘சமூகப் பொறுப்பு மிக்க’ எல்லா கலை இலக்கிய ஆளுமைகளுக்கும் இடம் உண்டு. தமுஎகசவின் அனைத்து நிலைபாடுகளையும், அழைக்கப்படும் கருத்தாளர்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது கருத்தாளர்கள் அனைவரது கருத்துகளோடும் தமுஎகசவுக்கு முழு உடன்பாடு இருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை.

மாற்றுக் கருத்துள்ள ஒருவர் மற்ற எல்லோருமே தன் கருத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று உத்திரவிடுவதும், மாற்றுக் கருத்தாளருக்கு அளிக்கப்பட்ட உரிய கருத்துச் சுதந்திரத்தை மதித்து சொல்லப்பட்ட கருத்துமீதான தனது விமர்சனத்தை எவ்வளவு கூர்மையாகவும் வைக்கலாம், ஆனால், அதை விடுத்து விருதுக்காக அழைக்கப்பட்டவரை இழிவுபடுத்துவது போல் அராஜகம் வேறு எதுவும் இல்லை. தேனி தமுஎகச நிகழ்வில் வசுமித்ர செய்தது அதுதான்.

முற்போக்கு அமைப்புகள் எதுவானாலும் மற்ற எல்லா முரண்பாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தலைவிரித்தாடும் இந்துத்துவ பாசிசத்திற்கும் சாதி ஆதிக்க வெறித்தனங்களுக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தமுஎகசவின் வேண்டுகோள்.

அதுமட்டுமல்ல…
மார்க்சிஸ்ட் – அம்பேத்கரிஸ்ட் – பெரியாரிஸ்ட்கள் இதே நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டிய இன்றைய காலச்சூழலில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் முற்போக்கு அமைப்புகள் மீது அட்டைக் கத்தி வீசும் சீர்குலைவுவாதிகளை கருத்தியலாகவும் அரசியலாகவும் தமுஎகச சந்திக்கும்.

வெண்புறா சரவணன், எழுத்தாளர்; சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.