மகிஷாசுரன் அரக்கனா? அரசனா?

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் Mahishasur: Brahmanizing a Myth என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:

மைசூரு, கர்நாடகத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கிமு 245ல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும் படி அனுப்பிவைத்தார். மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறுவினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட்சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.

கிபி 1399 ஆம் ஆண்டு மைசூர் யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூர் மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கிபி 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூரை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங்கள் பலவற்றில் மைசூர், மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரிலிருந்து ஸ்ரீரங்க பட்டணாவுக்கு கிபி 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூரின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூர் ராஜாங்கத்தை விரிபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங்கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரங்களையும் செய்துகொள்ளவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூர், உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை அரியணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளிகளாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூர் சுதேசி மாகாணமாக மாறியது.

சிறுநகரமாக இருந்த மைசூர், நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ணராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டுமானங்களை நிர்மாணித்து, பொருளாதாரா ரீதியில் விரிபடுத்தி மைசூரை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தார். அவர் ஜனநாயகவாதி, மனிதநேயம் மிக்கவர், வளர்ச்சியை முன்வைத்து நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடையார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தியாவின் அங்கமானது மைசூர்.

பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட புத்தரின் சிற்பம், பொஜ்ஜனகொண்டா, விசாகப்பட்டணம்.
பவுத்தத்துக்கும் பிராமணியத்துக்கு இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பிராமணியம், சாதி அமைப்பையும் சாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின் மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயகமற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பிராமணியத்தை நடைமுறைப் படுத்தினார்கள். ஆரியர்களின் புரட்டுகள் மூலம் மண்ணின் மைந்தர்களான, மகிஷா போன்ற ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

மைசூர், மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டத்தில் எருமைகள் உழவுக்கும் பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூர், எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், ‘அன்’ விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக்கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலக்கட்டத்தில் இந்த மாகாணத்தில் ஏராளமான நகரங்கள் இருந்திருக்கின்றன.

பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண்டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கு மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுருவலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.

ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப் படுத்தினார்கள். அவர்கள் விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி(The Palace of Mysor நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க்கதையைப் பரப்பினர் என்கிறார்.

மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள். சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மகிஷன் உண்மையில் பவுத்த-பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வால் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்பதாகவும் உள்ளது மகிஷனின் உருவம். மகிஷனின் வீரத்தை வாளும் நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.

நாட்டுப்புறவியல் நிபுணர் காலேகவுடா நாகாவார், “தற்போது மைசூரு என வழங்கப்படும் மகிஷ மண்டலத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகியாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட்டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்து புராணங்கள் மகிஷனை எதிர்மறையாகக் காட்டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும்” என்கிறார்.

பிரபல எழுத்தாளர்(கன்னட) பன்னூர் ராஜா, “சாமுண்டி மலை முன்பு மகாபலேஸ்வரம் என அழைக்கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது. பூசாரிகளுடன் ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந்தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக்கத்தக்கது” என்கிறார்.

முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: “மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச்சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இறையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர்”.

வரலாற்றை மீட்டெடுத்தல்:

மைசூர் மகாணாத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது மகிஷனுக்கு அக்டோபர் 11, 2015 அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்புகளின் துணையுடனும் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூர் மக்கள் தங்களுடைய நகரத்தின் தோற்றம் குறித்தும் வரலாற்றின் படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர்விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.