ழாக் தாத்தி என்ற பெயரில் ஒரு சினிமாக் கலைஞன்

ஆர்.ஆர்.சீனிவாசன்

ஆர். ஆர். சீனிவாசன்
ஆர். ஆர். சீனிவாசன்

ஆழ்ந்த தனிமையிலிருந்தும், வாழ்க்கை அபாயத்திற்குள்ளாக்கும் முயற்சியிலிருந்தும் நகைச்சுவை பிறக்கிறது. கலைப்படைப்பை போல. நகைச்சுவையை மாபெரும் கலைப்படைப்பாக்கி இவ்வுலகத்தை வசீகரம் செய்தவர்களில் முதன்மையானவர் சாப்ளின். ஃபிரெஞ்சு நாட்டைச் சார்ந்த ழாக் தாத்தி (Jacques Tati) தனது விபரீதமான விளையாட்டிகளின் மூலம் உலக சினிமாவின் போக்கை கொஞ்சம் தடுமாற வைத்தான்.

நகைச்சுவை நடிகன், நகைச்சுவை சினிமா என்றும்இவனது உலகத்தை ‘குழந்தைகள் சினிமா’ என்றும் அழைப்பது இவனது படைப்புகளைக் சுருக்குவதும் அதே வேளையில் அற்புதமான விஷயமாகவும் இருக்கிறது.

‘குழந்தைகள் சினிமா’ என்ற பொழுது, அவ்வார்த்தைச் சேர்க்கையில் முக்கியமான பதம் ‘சினிமா’. தமிழில் சினிமாவின் அற்புத மொழியை உணர்ந்து, நவீன வாழ்க்கையின் தன்மையைப் புரிந்து எவரும் படம் எடுத்துருகிறார்களா? எனவே குழந்தைகள் சினிமாவும் இல்லை. தமிழ்ப் படங்களில் வரும் எல்லாக் குழந்தைகளுமே ‘Miniature Adults’ தான்.

குழந்தைகள் மனைதைப் புரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை வசிகரபடுத்தவோ எவரும் இதுவரை முயலவில்லை. சிரீய இலக்கியத்திற்கு ஒப்பாக குழந்தைகள் இலக்கியத்தையும் தீவிர அக்கரையுடன் எவரும் கண்டு கொள்ளவில்லை தமிழில். குழந்தைகள் சினிமாவில் முக்கிய அம்சமாக வருவது அதீத கற்பனை (Fantasy), கலாபூர்வமான நகைச்சுவை, அபத்த உலகம், புதிரின் மித மிஞ்சிய ஆளுமை, உடலின் சேஷ்டைகள்(Slapstick), அஃறிணைகளின் உலகம், நீதி புகட்டும் தன்மை. தாத்தியின் படங்களின் இவையனைத்தும் உண்டு. ஆனால் வேறுவிதமாக அதீத கற்பனை, நகைச்சுவை எனும் போது தாத்தியின் படங்களில் வாழ்க்கையே உள் முகமாகத் தரிசிக்கும் வழியிலிருந்து பிறப்பது. வாழ்க்கைதான் நமக்குத் தெரியுமா அதனால் இல்லாத உலகம் தேவை எனற நோக்கிலும் அல்ல. வாழ்வின் கொடுரங்களையும், யதார்த்ததின் குறுக்கு வெட்டு தோற்றத்தையும் உணரும் போது அதிலிருந்து உருவாவது. மரணத்தின் நிழலிலிருந்து பிறக்கும் போது தான் கலைப் படைப்பாக மாறுகிறது.

உலக சினிமாவில் ‘Marginalists’ என்ற சில பேரைத்தான் குறிப்பிட முடியும். தாத்தி அவர்களில் ஒருவர். இவருடைய உலகம் அதீத Innocence -ல் இருந்து பிறப்பது. விளிம்பு என்பதும் மரணம் சம்பந்தப்பட்டதுதான். கலைஞர்கள், கலைப்படைப்பு இவையனைத்துமே விளிம்பு நிலை சார்ந்த விஷயங்கள். நாடோடிகள், கோமாளிகள், மன நோயாளிகள் அனைவருமே கலைஞர்களில் உருவகமாகத்தான் கொள்ள வேண்டும். விளிம்பு நிலை படைப்பு என்பது தர்க்கத்திலிருந்து வருவதும் அல்ல.

சாப்ளினோடு அவரை நாம் ஒப்பிட முயன்றாலும் இருவருக்குமிடையில் பொதுவான அம்சமும், தனித்த திறமைகளும் வேறுபட்ட உலகங்களும் உண்டு. ஹாலிவுட்டுக்கு வெளியே இயங்கிய ஐரோப்பாவின் மாபெரும் நகைச்சுவை நடிகரும், இயக்குனரும் இவர்தான். முழுக்க ஃபிரெஞ்சுக் கலாச்சாரத்தை பிரதிபலித்த இவர் எந்த இயக்குனரையும் நினைவு படுத்துவதில்லை. தாத்தி சினிமாவிற்கு, புதிய சினிமா மொழியை அளித்தவர் தன்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் ஐந்து படங்கள்தான் எடுத்துயிருக்கிறார். ஃபிரெஞ்சு சினிமாவின் விசித்திர உலகங்களை முன் வைக்கும் தாத்தியை ஒப்பிட வேண்டுமெனில் ராபர்ட் பிரெஸ்ஸனோடு ஒப்பிடலாம். முழுமையான ஃபிரெஞ்சுக்காரன் என்று அடையாளப்படுத்துகிறது. இவரது சினிமா ஃபிரெஞ்சுத் தேசத்தின் அமெரிக்கப் பாதிப்பை அவரது படங்கள் ஆராய்கின்றன. ஃபிரெஞ்சு அடையாளத்தை பயமுறுத்தும் வகையிலுள்ள அமெரிக்க வார்த்தைகள், வாழ்க்கை முறைகளை விட முடியாதபடி உள்ளவற்றையும், அமெரிக்கர்களைப் போல செய்ய முயற்சித்து தோற்றுப்போவதை, தாத்தி தனது நகைச்சுவையின் களமாக கொள்கிறார்.

நகைச்சுவை சினிமாவின் வரலாற்றில் இவரின் சாதனையை சாப்ளின் ,பஸ்டர் கிட்டன், ஹெரால்ட் லாய்ட் ஆகியவரோடு தொடர்ந்து வித்தியசப் படுத்துவதையும் காணலாம்.

“நகைச்சுவை தர்க்கத்தின் சங்கமம். சிரிப்பானது, குறிப்பிட்ட அடிப்படையான அபத்ததிலிருந்தே பிறக்கிறது. சில விஷயங்கள் தங்களுக்குள்ளாக நகைச்சுவைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அதனை வெட்டிப் பார்க்கும் போது சிரிப்பாக மாறிவிடுகிறது”. என்கிறார். தாத்தி. இவரது நகைச்சுவை வாழ்வின் அபத்தத்தை உணர்ந்த சுவாரஸ்யத்தின் உச்சக் கட்டம். கற்பனையின் வீச்சு அதிகமில்லாமல், பாவனைகளை உற்றுக் கவனிப்பதிலிருந்தும். அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்தும் பிறக்கிறது, இவரது கலை. இயல்பை சற்று மிகைப்படுத்திக் காட்டுவதில்தான் இவரது படைப்புத்திறன் அடங்கி இருக்கிறது. தன்னை நோக்கியும், வாழ்வின் உள்பகுதிக்குள்ளாகவே கேமராவை திருப்பியதில் இவரது வெற்றி உள்ளது.

ஒலியின் வருகைக்கு பின்னர் மொளன நகச்சுவையைக் கையாண்டவர் தாத்தி. ஒலி, சூழலை உருவாக்க மட்டுமே இவருக்கு உதவியது. நகைச்சுவை காட்சிகளை, நகைச்சுவை வசனங்களாக தனியே பிரிக்காமல், முழு நகைச்சுவையையும் காட்சிப் பூர்வமாகவே அமைத்தார். இவரது படங்களில் நகைச்சுவையானது ஒரு காட்சியில் தொடங்கி இன்னொரு காட்சியில் முடிந்து, மூன்றாவதில் வளர்ந்து, நான்காவதில் திரும்பச் செய்யப்பட்டு ஐந்தாவது காட்சியில் நீக்கப்படுகிறது. நிகழ்வுகளின் ஒழுங்கற்ற தன்மையினூடாக முழுமையை நோக்கி செல்வது. இதுவே யாரும் செய்யாத சாதனை.

கோடார்ட் இவரை ‘விபரீதமான கலைஞன்’ என்றும் பிரச்சினைகளே இல்லாத இடத்தில் பிரச்சினைகளை கண்டுபிடிக்கிறார்என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தாத்தி ஆழ்ந்த commitmentஇல்லாமல் எந்தப் படத்தையும் ஆரம்பிப்பதில்லை. தார்மீகத்தைச் சார்ந்தோ அல்லது எதிர்த்தோ அவரது காலகட்டத்தின் முன்னனி சினிமாவை மிஞ்சியே இருந்தது, இருக்கிறது. எல்லாப் படைப்பாளிகளிடம் இருப்பதை போல குறிப்பிட்ட வகையான உணர்ச்சிகளாக தனிமனிதத்துவ சாயல், குடிகாரனின் கண்ணீர் மல்கும் செண்டிமென்ட்ஸ், நாய்க்குட்டிகள், நோஸ்டால்ஜியா, நவீன உலகத்தின் புரியாத கருத்துருவத்தோடு ஒன்ற முடியாத தன்மை, எல்லோருக்கும் நல்லதை செய்ய நினைக்கும் மனம், ஆனால் அப்படி செய்ய நினைக்கையில் ஏற்படும் குழப்பங்கள் என்று இவரின் படங்கள் உலகைப் பார்த்தது. நவீனத்திற்கும், மரபிற்கும் இடையே சுயமான முயற்சி இவரது சினிமா. இசையால் வார்க்கப்பட்ட படங்களை எவராலும் மறுக்க முடியும்,

நான் ‘My Uncle’ என்ற இவரின் ஒரே ஒரு திரைப்படத்தைத்தான் பார்த்திருக்கிறேன். அதுவரை என் மனதில் இடம் பெற்றிருந்த மகா கலைஞர்களெல்லாம் பின்னுக்கு தள்ளி என்னை ஆழ்ந்த குழப்பத்திலும், மழை முடிந்த பிறகு வெளியே வரும் வெயிலின் தன்மையை உணர்ந்தேன். உலகமே புதுத்தன்மையோடு காட்சியளித்தது. சொல்லத் தயங்கிய, வெளிப்படுத்த இயலாத தன்மையை இவர் எப்படி படம் எடுத்தார்? படத்தில் நடித்ததும் அவரே என்று தெரிந்த பிறகு அதைவிட வியப்பு. இயந்திரமயமாகிவிட்ட உலகத்திலும், இயந்திரமயமாக்கப்பட்ட பெற்றோரிடத்திலும் புரிதலுக்கான சாத்தியங்கள் குறைந்த இவ்வுலகத்தில் வாழும் சிறுவனுக்கு தாத்தி மாமாவாக வருகிறார். மாமாவும் மருமகனும் ஒரே மனநிலையில் உலகத்தை எதிர்கொள்கிறார்கள். தாத்தி பதிவு செய்த சின்னச் சின்னக் கவிதைகளைப் பார்க்கலாம். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் தாத்தி கண்ணாடி கதவுகளை திறக்கையில் ஒளி பிரதிபலித்து கூண்டினுள் இருக்கும் காதற் பறவைகள் சப்தமிடுகின்றன. அன்றிலிருந்து சப்தத்தை வெளிப்படுத்துமாறு கண்ணாடு கதவை சரியாக திருப்பி வைப்பதை வழக்கமாக்குகிறார். இயற்கையின் ஆழ்ந்த விசயங்களை தன்னுள் கொண்டிருக்கும் தாத்தி வீட்டை விட்டு இறங்கிய பிறகு உலகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் சாரம். நாய்க்குட்டிகள் ஓடிவருவதில் ஆரம்பித்து நாய்க்குட்டிகள் ஓடுவதோடு படம் முடிகிறது. நாய்க்குட்டிகளின் சப்தலயம் கார் சத்தத்திலும், பஸ்ஸர் ஒலியிலும், டெலிபொன் மணியிலும், ஆலைகளின் சத்தத்திலும் அலைந்து திரிகிறது. திட்டமிட்ட அமைப்பு எவ்வாறு வாழ்வதற்கு ஒவ்வாததாகவும், புரியாததாகவும் உள்ளது, இயற்கைக்கு விரோதமான உலகை எவ்விதம் பார்ப்பது? யாருடைய கோணத்திலிருந்து? யாருடையா கோணமுமில்லாமலா? ஒரு நட்சத்திரம் பார்ப்பது போல் இவ்வுலகத்தின் நிகழ்வுகளை பார்க்க முடியுமா? எவ்வித சார்புமின்றி ஒளியை உமிழ்ந்தபடி உலகத்திலுள்ள எல்லா உயிர் நிகழ்வுகளுமே முக்கியம் தானா? தரம் பிரித்து உயர்ந்ததை அடையாமல் வாழ்க்கை இருக்கிறதா? ‘வாழ்க்கை இருக்கிறது’ என்ற படி அழைக்கிறது தாத்தியின் கேமரா. இவ்வளவு நுட்பமாக உலகத்தை கவனித்து தனக்கு தானே சிரிக்க முடியுமா? சிரித்துக் கொண்டிருக்கையில் உலகமே தன்னைப் பார்த்து சிரிப்பதை உணர்ந்த மனம் தாத்திக்குச் சொந்தமானது. இயந்திரங்களின் தகடுகள் மூடி மறைத்து வைத்திருக்கும் ‘innocence’ ஐ நம்மையுமறியாமல் வெளிக்கொணரும் வித்தையைத் தாத்தி சிறுவனின் அப்பாவைக் கொண்டு செய்கிறார். நாய்க்குட்டிகளும், தோட்டிகளும், காதற் பறைவைகளும், சிறுவர்களின் சேஷ்டைகளும், அனைத்துமே தாத்திதான். உயரமான, அவலட்சணமான, யாரிடமும் ஒட்டாத தாத்தியின் எல்லாப் படங்களையும் பார்த்த இன்னொருவரோ அல்லது ஒரு நாய்க்குட்டியோ சற்று விரிவாக எழுதும் போது இக்கட்டுரை முடிகிறது.

உதவிய கட்டுரைகள் :

  1. Jacques Tati – jean Andre Fieschi.

  2. Silent Comedy with sound.
    The film of Tati -Chidananda Das Gupta

ஆர். ஆர். சீனிவாசன், திரை செயற்பாட்டாளர்; சூழலியல் செயற்பாட்டாளர்.

கட்டுரை அகவிழி-1997 இதழில் வெளியானது

முகப்புப் படம்: http://www.themoviejerk.co.uk

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.