பாகிஸ்தான் – இந்தியமக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை; நடப்பது இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமே என்று புகழ்பெற்ற திரைப் பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தீக்கதிர். மேலும் அந்தச் செய்தியில்,
இந்தியா – பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும் பும் வரை, பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங் களில் நடிப்பதற்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடை குறித்து, கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியர்கள் எதிரானவர்கள் அல்ல. அதேபோல் பாகிஸ்தான் மக்களும் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; நடப்பது அரசுகளுக்கு இடையிலான பிரச்சனை மட்டுமே என்று கூறியுள்ளார். சில பணிகளுக்காக அழைக்கப்பட்டு இருப்பதால்தான் பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியா வந்துள்ளார்கள்; அதில் என்ன தவறு இருக்கிறது? என்றும்அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடைவிதிக்கப் பட்டு இருப்பதை, இந்தி நடிகர் சல்மான் கானும் விமர்சித்துள்ளார். “பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் கலைஞர்கள்தான். அனுமதி வழங்குவதும், விசாகொடுப்பதும் அரசாங்கத்தின் பணி ஆகும். இரு நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட வேண்டியது முக்கியமான விஷயம்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.