கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமுஎகச மற்றும் சமூக ஆர்வலர்கள், கீழடி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர்களது கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் மாநில அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளியன்று கீழடி கிராமத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்தும், இங்கு ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான வாய்ப்புகள், ஒரு உலைக்களம் இயங்கியதற்கான சூழல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை எடுத்துக் கூறினர். பின்னர் இதுவரை சேகரித்து வைக்கப்பட்ட பொருட்களை காண்பித்து அவர்களுக்கு பல்வேறு விபரங்களை எடுத்துரைத்தனர்.

இதைத்தொடர்ந்து கீழடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், கடந்த இரண்டாண்டுகளாக கீழடியில் தொல்லியல் ஆய்வு நடத்தி இந்தியாவின், தமிழகத்தி்ன் 2500 ஆண்டுகால வரலாற்றுத் தொன்மையை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு பொருட்களை சேகரித்துள்ளனர். இவர்களது பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மனதார பாராட்டுகிறது. இவர்களது பணி தொடர வாழ்த்துகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதற்கு கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் ஒரு உதாரணமாகும். இங்கு உலைக்களம் மட்டுமல்லாது, இரும்பு உருக்குவதற்கான தாதுப்பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2000ஆண்டுகளுக்கு முன்பே உலைக்களம் இருந்தது என்பது தமிழகத்தில் அறிவியல்பூர்வ தொழில்வளர்ச்சிக்கு அடிப்படை இருந்துள்ளது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. சுட்ட செங்கல் மற்றும் சுட்ட ஓடுகளாலான பைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா தொன்மையான வரலாறுடைய நாடு. குறுகிய கால வரலாறுடைய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியாவைவிட வேகமாக முன்னேறியது எப்படி?

ஐரோப்பிய நாடுகளில் மதத்தை அரசியலோடு கலக்க முற்பட்டபோது மதம் மக்களது தனி உரிமை. அரசியல் என்பது வேறு என இரண்டையும் பிரித்து மத ஆதிக்கம் தடுக்கப்பட்டதால் இந்த நாடுகளில் அறிவியல் வேகமாக வளர்ந்து முன்னேறிவிட்டன. ஆனால் 2000 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த இந்தியா பின்தங்கி நிற்பதற்கு காரணம் சாதியும், மதமும் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தி வந்ததுதான். இதுதான் அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்திருக்கிறது. கீழடியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய 110 ஏக்கர் நிலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும். கிடைத்துள்ள பொருட்களை கீழடியிலேயே வைத்துப் பாதுகாத்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றார்.

தீக்கதிர் செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.