பகத் சிங்: யார்?

சு. இரவிக்குமார்
சு. இரவிக்குமார்
சு. இரவிக்குமார்
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதிகளுள் ஒருவர் என வரலாற்றாசிரியர்களால் மதிக்கப்படுகிறார்.இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணா நோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது. இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.

தன் வயதை ஒத்தப் பல சீக்கியர்களைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார். பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.

1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார். மார்ச் 1926இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார். ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தி னர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார்.

அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
பகத்சிங் அம்ரித்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார். மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். செப்டம்பர் 1928இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவராகவும் அவர் உருவெடுத்தார்.

இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.

பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.

மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,
“பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார். சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.”

சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார்.

பின்னர் அரசின் ஆட்சி மன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்து துண்டு பிரசுரங்களையும் நாட்டு வெடிகுண்டையும் வீசிய
இக்காரணங்களினால் 26 வயதில் பகத்சிங்குக்கும், அவரோடு ராஜகுரு, சுகதேவுக்கும் சேர்த்துத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தம்மை விடுவிக்கக் கோரி தம் தந்தை செய்த முயற்சிகளையும் பகத்சிங் தடுத்தார்.

பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.

சாகப்போகும் கடைசித்தருணத்திலும் புரட்சியாளர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.

இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் சிறை முழுவதும் எதிரொலிக்க, முகத்தை மூடாமல் கண்களால் தான் நேசித்த தேசத்தைப் பார்த்தபடியே 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

தூக்கிலிட்ட மூவரின் உடல்களையும் பெற்றோர்களிடம் கூட ஒப்படைக்காமல் மக்களின் உணர்வெழுச்சி கண்டு அஞ்சி ஆங்கிலேய அரசாங்கம் சட்லெஜ் நதிக்கரையில் இரகசியமாக எரியூட்டியது.

கேள்விப்பட்ட மக்கள் அலைஅலையாகக் கண்ணீரோடும் வீரத்தோடும் தங்கள் வீரப்புதல்வர்களுக்கு அங்கே சென்று அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் எரிந்து கிடந்த சாம்பலை எடுத்து அதுபோன்ற வீரப் புதல்வர்கள் தங்களுக்கும் பிறக்க வேண்டும் என நினைத்துத் தங்கள் வயிற்றில் பூசிக் கொண்டனர் கர்ப்பிணிப் பெண்கள்.

இந்தியாவின் உண்மையான விடுதலைக்காக இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் கோடானுகோடி இளைஞர் மனங்களில் இன்றும் கனன்று கொண்டிருக்கிறது பகத்சிங் என்கிற துடிப்பான இள நெருப்பு.

பகத் சிங் பிறந்தநாள் (செப்டம்பர் 28, 1907 ) இன்று.

சு. இரவிக்குமார், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்; ஸ்ரீரசா என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.