காவிரி பிரச்சினை: மோடி அரசே முதன்மை குற்றவாளி!

மக்கள் கலை இலக்கியக் கழகம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் பிரதமரோ, இந்தியாவின் உட்சப்பட்ச அதிகார அமைப்பான உச்சநீதி மன்றமோ இப்பிரச்சினையில் தலையிடவில்லை. கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் இல்லை. நேரில் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

வன்முறைக்கு யார் காரணம்?

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் துவங்கின. தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொழில்முறை கிரிமினல்களுக்கே உரிய முறையில் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. கன்னட இனவெறியின் பெயரால் இதை பின் நின்று தூண்டிவிட்டு இயக்கியது பா.ஜ.கவும் அதன் குரங்குப்படைகளான RSS இந்துமதவெறி கும்பலும் தான்.
வரவிருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்துவதற்காக காவிரி பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு கன்னட இனவெறியை தூண்டிவிட்டிருக்கிறது இந்து மதவெறி கும்பல். கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது பா.ஜ.க விற்கு புதிதல்ல. மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், பல மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பதற்கும் இந்து முஸ்லீம் கலவரங்களையே பா.ஜ.க பயன்படுத்துகிறது. மோடியும் மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிடாததற்கு இது ஒரு காரணம்.

காவிரியில் தண்ணீர் இல்லையா?

கர்நாடகாவிற்கே போதிய நீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தர முடியும் என்று சில கன்னடர்கள் கேட்கின்றனர். இது உண்மையா? உண்மை தான். கோடைக்காலங்களில் கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுவதும், காவிரியில் போதுமான நீர் இல்லாததும் உண்மையே. கோடைக்காலத்தில் பெங்களூருவில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வட கர்நாடகாவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல குடும்பங்கள் மூன்று மாதங்களுக்கு திருமணங்களையே தள்ளி வைக்கின்றன. இது உண்மை தான் என்றாலும், அதற்காக காவிரியில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.

ஒரு நதி உருவாகின்ற இடத்திற்கு மட்டும் அது சொந்தமல்ல. அது எங்கெல்லாம் பாய்கிறதோ அங்குள்ள அனைவருக்கும் சொந்தமானது. அதிலும் கடைமடைப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது தான் சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஏனெனில், வெள்ளப்பெருக்கு ஏற்ட்டால் அதிக பாதிப்புகளை சந்திப்பது கடைமடைப்பகுதி தான். எனவே தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி, கேரளாவிற்கும் கூட காவிரியில் உரிமை உள்ளது. பற்றாக்குறை காலங்களிலும் இருப்பதை சமமாக பிரித்துக்கொள்வதே சரியானது.

நீர் குறைய யார் காரணம்?

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள குடகுமலையிலிருந்து தான் காவிரி துவங்குகிறது. இப்பகுதி அடர்ந்த கருங்காடாகும். உலகமயமாக்கல் கொள்கை அமுல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் இப்பகுதியில் உள்ள பெரிய காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு முதலாளிகளின் லாபவெறிக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் டீ, காபி, ரப்பர், தேக்குத் தோட்டங்களும், சுரங்கங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்த காடு சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அதற்காக இங்குள்ள நீர்நிலைகளும், காடுகளும் அழிக்கப்பட்டு வார இறுதி வக்கிரக் கொண்டாட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான கூர்க் ரிசார்ட்டுகளும், நட்சத்திர விடுதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இம்மலையில் உள்ள காடுகளும், நீர்நிலைகளும் அழிக்கப்பட்டதன் விளைவாக மழைப்பொழிவு குறைந்து இயற்கை சமநிலை குலைந்துவிட்டது. (முதலாளிகள் குலைத்துவிட்டார்கள்) காவிரியில் நீர் குறைய இதுவே காரணம். எதிர்காலத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாவிட்டால் காவிரி ஆறு இல்லாமல் கூட போகலாம்.

அடுத்து, காவிரியிலிருந்து பெங்களூருக்கு நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இதில் 52% நீர் வீணடிக்கப்படுகிறது, அதாவது 72 கோடி லிட்டர். தண்ணீரை வீணடிக்கும் மெட்ரோ நகரங்களில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

உலகமயமாக்கல் கொள்கை அமுல்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த இயற்கைச் சூழலும், ஏரி, குளங்களும் அழிக்கப்பட்டு லட்சக்கணக்கான சதுர அடிகளில் ஆயிரக்கணக்கான பிரம்மாண்ட ஐ.டி பூங்காக்களும், பன்னாட்டு நிறுவனங்களும், ஷாப்பிங் மால்களும், உல்லாச, ஆடம்பர விடுதிகளும், இரவு நேர கிளப்புகளும், நீர் விளையாட்டு பூங்காக்கள், செயற்கை கடல்கள், கோல்ப் மைதானங்கள், நட்சத்திர விடுதிகள், குதிரைப் பந்தய மைதானங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு தினமும் பல லட்சம் லிட்டர் காவிரி நீர் வீணடிக்கப்படுகிறது. இது தவிர பெப்சி, கோக் ஆலைகளுக்கு தனியே 13 லட்சம் லிட்டர் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய நீர் பன்னாட்டு கம்பெனிகளுக்கு திருப்பிவிடப்படுகிறது. இதனால் பெங்களூர் மக்களுக்கு கோடைகாலத்தில் நீர் கிடைப்பதில்லை. தினமும் 72 கோடி லிட்டர் காவிரி நீர் பன்னாட்டு கம்பெனிகளால் வீணாக்கப்படுவதை கன்னட மக்கள் அறிந்தால் என்னவாகும்? அவர்களை அந்தளவுக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கு தான், ஆளும் வர்க்கமும், அரசியல் கட்சிகளும் இனவெறியை தூண்டிவிடுகின்றன.

விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் கொள்கை

தமிழர்களையும் கன்னடர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் அரசும் ஆளும் வர்க்கமும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. இல்லையென்றால் இத்தகைய மோதல்களை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கை என்பது விவசாயத்தை அழித்து முதலாளிகளை கொழுக்க வைக்கும் கொள்கையாகும். காவிரி பாசன பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் திட்டம் அத்தகையதே. இத்திட்டம் வந்தபோது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் போர்க்குணத்துடன் எதிர்த்ததால் நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், முதலாளிகளுக்கான இந்த அரசு மீண்டும் அதை கொண்டுவரலாம். அப்போது எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் விவசாயம் இருக்கக்கூடாது.

விவசாயம் செய்தால் மக்கள் நிலத்தை காக்க மீதேனை எதிர்த்துப் போராடுவார்கள். எனவே விவசாயத்தை ஒழிக்க வேண்டும், விவசாயத்தை ஒழிக்க வேண்டுமானால் ஆற்றில் தண்ணீர் வரக்கூடாது. காவிரி நீர் கோரி வழக்கு போட்டால் தண்ணீரைத் திறக்கச்சொல்லி நீதிமன்றம் பேருக்கு ஒரு உத்தரவிடும். பிறகு நீதிமன்றமே அதை மதிக்காது. பா.ஜ.க வோ உள்ளுக்குள்ளிருந்து கன்னட இனவெறியை தூண்டிவிடும். கர்நாடகம் பற்றி எரியும், பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வராது. நீரின்றி விவசாயம் அழியும். வேலை தேடி விவசாயிகள் நகரங்களுக்கு சென்றால், முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பார்கள். மீதேன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாம்.

நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார்கள் என்று வழக்குரைஞர்கள் மீது பாய்ந்து பிராண்டி சஸ்பெண்ட் செய்யும் நீதிபதிகள், தமது உத்திரவை மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கும், மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு அதிகாரம் செய்யும் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தாமல் அமைதி காப்பதற்கும், மாநிலத்தின் உரிமைக்காக மாநில அரசு போராடதததற்கும் பின்னால் இத்தகைய மறுகாலனியாக்க காரணங்கள் இருக்கின்றன. கன்னட இனவெறியை தூண்டிவிடுவதற்கும் இது போன்ற காரணங்கள் உள்ளன.

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

40 ஆண்டுகளாக இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான். காவிரி பிரச்சினையால் தமிழக கன்னட மக்களிடையே உள்ள பகை அனைந்துவிடாமல் நெருப்பை ஊதிவிடுவதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. எனவே, தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதிலும் பார்ப்பன பா.ஜ.க வுக்கு தமிழகத்தின் மீது எப்போதும் ஒரு வகை வெறுப்பும் பகைமையும் உண்டு. காரணம் தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபும், திராவிட இயக்கமும் தான். இந்த பிரச்சினையில் மட்டுமில்லை பொதுவாகவே பா.ஜ.க வுக்கும் இந்துமதவெறி கும்பலுக்கும் தமிழகத்தின் மீது வண்மமும், வெறுப்பும், காழ்ப்பும் உண்டு.
எனவே, தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் நடத்தும் மத்திய அரசை பனியவைக்கும் போரட்டங்களை தமிழகம் முழுவதும் வீச்சாக நடத்துவதே இப்பிரச்சினைக்கான தீர்வா அமையும். தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரி செலுத்தப்படக்கூடாது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தையும் செயல்படவிடாமல் முற்றுகையிட்டு முடக்க வேண்டும். நெய்வேலியிலிருந்து மின்சாரத்தையும், நரிமணத்திலிருந்து எண்ணெயையும் நிறுத்த வேண்டும். அத்துடன் தமிழகத்தில் கட்சி நடத்திக்கொண்டு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாரதிய ஜனதா, R.S.S கும்பலை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்தி விரட்டியடிக்க வேண்டும். இத்தகைய கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே மத்திய அரசை பனிய வைத்து காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் (தென்சென்னை) பிரச்சார துண்டறிக்கை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.