‘பிசாசு’வை நேசிக்க வைத்த மிஷ்கினின் மாற்றுப் பாதை!

கீட்சவன்

அம்மா நள்ளிரவுகளில் திடீரென எழுப்புவார்.

“டேய்… டேய்…”

“என்னமா..?”

“உனக்கு கேக்குதா?” என்று ரகசியமாக கேட்பார்.

“ஒண்ணும் கேக்கலம்ம்மா… படும்மா…” என்று அலுத்துக்கொள்வேன், பல ‘இனிய’ கனவுகள் சிதைந்த கவலையுடன்.

பகலில் வேறு மாதிரி அனுபவம். அம்மா கிச்சனில் சமைத்துக்கொண்டோ அல்லது பாத்ரூமில் துணிகள் அலசிக்கொண்டோ இருக்கும்போதும் எனக்கு அழைப்பு வரும்.

“டேய்…”

“வந்துட்டேம்மா… நீ எதுவும் சொல்ல வேண்டாம். உன் பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி தோணுது. அவ்ளோதானே? நீ வேலைய முடிக்கிற வரைக்கும் நானே நிக்கிறேன். பேச்சுக் கொடுக்கிறேன். போதுமா?”

“ஓவரா பண்ணதடா?”

பேய்ப் படங்கள் பார்த்தால் இந்த பீதி இரட்டிப்பாகும். அம்மா டிசைன் டிசைனாக அலறுவதைப் பார்த்து கலாய்ப்பதா, கவலைப்படுவதா என்று நினைத்தே குழம்புவது உண்டு. ஆனால், திகில் படங்கள் பார்ப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும்.

அம்மா அன்றும் ஒரு பேய்ப் படம் பார்த்தார். அடுத்த நாளே அவரது அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. விசாரித்தேன்.

“உனக்குத் தெரியாதுடா… பேய், பிசாசு எல்லாமே நல்லதுங்கடா. நாமதான் தேவையில்லாம பயப்படுறோம். நம்ம வீட்ல இருக்கிற பிசாசை பாக்கணும்போல இருக்குடா. பேசணும்னு தோணுதுடா” என்று அம்மா அடுக்கிக்கொண்டே போனபோது எனக்கு பகீரென்றது.

எனக்குத் தெரிந்து என் வீட்டில் இல்லாத அந்தப் பேயை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என் அம்மா. அவரை இப்படி மாற்றிய தமிழ் திரைப்படத்துக்கு ‘பிசாசு’ என்று பெயர்.

(இது என் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட உண்மையின் செயற்கையான எழுத்து வடிவம்.)

*

தமிழில் வரிசையாக பேய்ப் படங்கள். அவற்றில் பெரும்பாலும் ஒரே ஃபார்முலா. நிறைய காமெடி, கொஞ்சம் கிளுகிளுப்பு, கொஞ்சம் திகில். தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே ‘பேய்’ பிடித்த காலம் அது. பயங்கரமும் பழிவாங்கலும்தான் எல்லா பேய்களுக்கும் இருக்கும் ஒற்றுமை. ஆனால், எப்படி பயங்கரமாகக் காட்டப்படுகிறது, எப்படி பழிவாங்கப்படுகிறது என்பதில்தான் வேறுபாடுகள்.

ட்ரெண்ட் என்பதும் ஒரு குறிப்பிட்ட போக்கு நிலவும்போது, எளிதில் வெற்றி பெறக் கூடிய ஒரே ஃபார்முலாவைப் பின்பற்றி, அந்த வெற்றியில் தங்களையும் இணைத்துக்கொள்வது என்பது பெரிதல்ல. ஆனால், அத்தகைய போக்கையும் தங்கள் தனித்துவத்தைக் காட்டும் வகையில் ‘மாற்றி யோசி’த்து அணுகினால் பெருமித வெற்றியை அடைய முடியும். இதற்கு மிகப் பொருத்தமான முன்னுதாரணப் படைப்புதான் இயக்குநர் மிஷ்கினின் ‘பிசாசு’.

ஒரு ஸ்கூட்டரை மோதிவிட்டு பறக்கிறது கார். தலையில் காயத்துடன் சரியும் இளம்பெண்ணை அவசர அவசரமாக ஆட்டோ மூலம் மருத்துவமனை கொண்டு செல்கிறார் ஓர் இளைஞர். மருத்துவமனையில் அந்த இளைஞனின் கையை இருகப் பற்றியபடியே இறுதி மூச்சை விடுகிறார். இடிந்துபோய் உட்காரும் அந்த இளைஞருக்கு மிஞ்சியது, அந்த தேவதையின் ஒற்றைச் செருப்பு மட்டுமே.

இசைக்கலைஞரான அந்த இளைஞரை இப்போது பிசாசு பின்தொடர்கிறது. அச்சம், தவிப்பு, சோகம் சூழ, அந்தப் பிசாசுவை விரட்ட, அந்த விபத்துக்குக் காரணமான குற்றவாளியை நோக்கிய தேடல் பயணம் தொடர்கிறது. தன் வசம் நாடிய பிசாசுக்குத் தேவை பழிவாங்கல்தான் என்ற பொது எண்ணத்தில்தான் தொடங்கும் இந்தப் புலனாய்வில் கிடைக்கும் விடையோ எவரும் எதிர்பாராதது. அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமினறி, பார்வையாளர்களையும் அதிர்ச்சி கலந்த அன்பின் உச்சத்தை உணரவைக்கும் பின்னணி அது.

*

உலகிலேயே மகத்துவம் வாய்ந்தது மனித இனம்தான் என்று நம்புவது உண்டு. அது பொய் என ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’ படங்கள் மூலம் மனிதர்களுக்குள் மறைந்துகிடக்கும் படுபாதகர்களைப் படம்பிடித்துக் காட்டிய மிஷ்கின், நம்மில் பெரும்பாலானோரும் மிக மோசமானவை என நம்பும் பேய், பிசாசுகளுக்கும் பொதிந்து கிடக்கும் மகத்துவத்தை எடுத்துச் சொல்கிறார். ‘பிசாசு’வை இந்தக் கோணத்திலும் பார்க்கலாம்.

கடவுளும் பேயும் காண முடியாததும், சில வேளைகளில் உணரக் கூடியதுமான நம்பிக்கைதான். கடவுளின் மேன்மையான தன்மைகளை மட்டுமே வரிசைப்படுத்தும் மனிதர்கள், பேய் என்று வந்துவிட்டால் பீதி நிறைந்த பாதகத் தன்மைகளை மட்டுமே அடுக்குகின்றனர். தங்கள் வசதிகளுக்காக பரப்பும் இந்த நம்பிக்கையை தன் படைப்பாற்றல் மூலம் வலுவாக அசைத்துப் பார்க்கிறார் மிஷ்கின். ‘பிசாசு’வை இந்தக் கோணத்திலும் பார்க்கலாம்.

ஏற்கெனவே பலரும் சென்றதால் எந்த இடையூறுகளும் இல்லாத இலகுவானதாக மாறிவிட்ட பாதையில் பயணிக்க முடிவெடுப்பதுதானே சாதுர்யம். இதுவரை யாரும் போகாத பாதையைத் தேர்ந்தெடுப்பதால் எத்தனை விளைவுகளைச் சந்திக்க நேரிடும்? அந்தப் பாதையில் முட்கள் நிறைந்திருக்கலாம், மனிதர்களைக் கொன்று திண்ணும் மிருகங்களைச் சந்திக்க நேரிடலாம், முன்னேறிச் செல்லவும், பின்னே திரும்பவும் கூட முடியாத நிலை வரலாம். மாறாக இவை ஏதுமின்றி, சொர்க்கத்தில் நடக்கின்ற சுகமும் அந்தப் பாதையில் கிடைக்கலாம். யாரும் பயணிக்காத அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது ஆபத்து. ரிஸ்க். ஆனால், அதைத் தேர்ந்தெடுப்பவன்தான் தனித்துவன். அவர்களில் ஒருவன்தான் மிஷ்கின்.

சினிமா, கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் உருவாக்கத்துக்கு மட்டும் அல்ல; நம் அன்றாட வாழ்வின் மிகச் சாதாரணமானவை தொடங்கி எதிர்காலத் திட்டங்கள் வரையில் எல்லா முடிவுகளை மேற்கொள்வதற்கும், இந்தப் ‘பாதைத் தேர்ந்தெடுப்பு’ வியூகம் கைகொடுக்கும்.

பர்சனல் முதல் புரொஃபஷனல் வரை எல்லா விதமான வாழ்க்கைகளிலும் இந்த ‘மாற்றி யோசி’த்தல் நம்மை தனித்துவத்துடன் மேம்படுத்தும். ஆனால், மாற்றி யோசித்தால் மட்டுமே போதாது, யாரும் போகாத பாதையைத் தேர்ந்தேடுத்தால் மட்டுமே போதாது, அந்தப் பாதையில் மிக நிதானமாகவும், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தால் மட்டுமே சாதக விளைவுகள் சாத்தியம் என்பதையும் மிஷ்கினைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

‘பிசாசு’ம் அன்பு செலுத்தக்கூடியதே என்று ஒற்றை வாக்கியமாகச் சொல்வது எளிது. அதை அறிவு – உள்ளப்பூர்வமாக நம்பவைப்பதில் இருக்கிறது ரிஸ்க். அதாவது, அந்த வாக்கியத்துக்கு கலை வடிவம் கொடுத்து நம்பிக்கையை விதைப்பதுதான் முக்கியம். அதை மிகச் சிறப்பாக செய்து, நம்மையும் பிசாசை நேசிக்கவைத்தார் மிஷ்கின்.

*

அது ஒரு மோசமான இரவு.

எட்டு மணி இருக்கும். ஒரு தனியார் மருத்துவமனையின் வாசலில் என் நண்பர் ஒருவருக்காக காத்திருந்தேன். படு வேகமாக ஒரு கார் நுழைந்தது. பெரும் பரபரப்பு. ஒரு நோயாளியை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.

5 நிமிடம்கூட கடந்திருக்காது. கதறியபடி இருபது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் வெளியே வந்தார். செல்போனில் கதறி அழுதபடி தகவல் பகிர்ந்தார்.

“அம்மா போயிட்டாங்கண்ணா…”

“……………”

“இப்பதாண்ணா…”

இப்படி கண்ணீருடன் கூடிய ஒருவரி உரையாடலைக் கேட்டபோது மனம் கனக்க ஆரம்பித்தது எனக்கு. ஆனாலும், அந்த உரையாடலைத் தொடர்ந்து கேட்டே தீர வேண்டிய தூரத்தில் நான்.

“…………….”

எதிர்முனையில் ஏதோ கேட்கப்பட,

“ஆமாண்ணா, ‘பாடி’ய வீட்டுக்குதான் கொண்டு வர்றோம்” என்று அந்த இளைஞர் கேஷுவலாகச் சொன்னது, என் மனதைக் குத்திப் போட்டது.

சென்ற நொடி வரை அம்மாவாக இருந்தவர், இந்த நொடியில் தன் மகனுக்கே ‘பாடி’ ஆனது எப்படி?

நம் வாழ்க்கையை அறிவியல்பூர்வமாக அணுகத் தொடங்கிவிட்டதன் தாக்கமா? இயல்பு வாழ்க்கையின் வெளிப்பாடா அல்லது இயல்பு மீறிய வாழ்க்கையின் விளைவா?

அந்த ஒற்றை வரி பதில் எத்தனையெத்தனைக் கேள்விகளை எழுப்புகின்றன. இன்னும் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்தச் சம்பவம் எனக்கு வலியாகவே மாறிவிட்டது.

அவ்வப்போது என் நெஞ்சைத் தாக்கிய அந்த வலிக்கு நிவாரணம் எப்போது கிடைத்தது தெரியுமா?

ஆம், ‘பிசாசு’வை தரிசித்த பிறகுதான்.

*

அந்த அப்பா தன் மகள் இறந்து சடலம் ஆன பிறகும்கூட குழந்தையாகவும் மகளாகவுமே பார்க்கிறார். அந்தக் குழந்தையை புதைக்கவும் எரிக்கவும் மனமின்றி பாதுகாப்புடன் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்கிறார். அப்போது, ‘வீட்டில் 5 நாட்களாக மனைவியின் சடலத்தை வைத்திருந்த கணவன்’, ‘வீட்டில் தாயின் சடலத்துடன் வசித்து வந்த மகன் மனநல மருத்துவமனையில் சேர்ப்பு’ என்பன போன்ற நான் எப்போதோ படித்துக் கடந்து சென்ற சிங்கிள் காலம் செய்திகள் மனத்திரையில் விரிந்தன.

அந்த சிங்கிள் காலம் செய்திக்குள் புதைந்திருக்கும் புனிதத்தன்மையை பிசாசு அப்பாதான் எனக்குச் சுட்டிக்காட்டினார். மனித மனதின் அதீத அன்பின் வெளிப்பாடு அது. அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர சக மனிதர்களின் உறுதுணை இருந்தால் மட்டும் போதும். அதுபோன்ற அதீத அன்பு மிக்க மனிதர்களை நாம் இயல்பு மீறியவர்களாகப் பார்க்கிறோம்.

நாம் இயல்பை மீறிவிட்டாதாலேயே, இயல்பாக இருப்பவை அனைத்துமே நம் கண்களுக்கு இயல்பு மீறியவையாகப் படுகின்றன. அதாவது, நாம் அப்-நார்மல் ஆகிவிட்டதால், நார்மலாக இருப்பவர்களை அப்-நார்மலாகப் பார்க்கிறோம்.

அன்பு நிறைந்த அந்தப் பிசாசை அழகு நிறைந்ததாகவும் மிஷ்கின் காட்டியிருக்கலாம். ஆனால், அவர் காட்டவில்லை.

ஏன்?

அன்புக்கும் அழகுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மையைச் சொல்லவே அந்தப் பிசாசுவை அழுக்காக வடித்திருந்தார். அந்தப் பிசாசுவின், மன்னிக்கவும், அந்த மகளின் கரங்களைப் பிடித்து அந்த அப்பா பேசும்போதும், வீட்டுக்கு அழைக்கும்போதும் அழகு என்று சொல்லப்படும் போலிகள் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை; அன்புதான் எல்லாமே என்று வலுவாக உரைக்கிறது.

ஆமீர் கான் நடித்து தோல்வியைத் தழுவிய இந்தி பேய்ப் படம் ‘தலாஷ்’. ஆனால், அந்தப் படத்தால் தனிப்பட்ட முறையில் நான் அடைந்த பலன் பெருமதிப்பு மிக்கது. தலையே போகிற வேலைகளாக இருந்தாலும், என் அருகில் உள்ள குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தது, ‘தலாஷ்’ பார்த்த பிறகுதான்.

அப்படித்தான், என் கண்முண்ணே உள்ள அத்தனை மனித வடிவ பேய்களிடமும் ஒளிந்திருக்கும் அன்பைத் தேட ஆரம்பித்தது, மிஷ்கினின் ‘பிசாசு’வைப் பார்த்த பிறகே!

கீட்சவன், திரை எழுத்தாளர்.

பிசாசு படத்தின் திரைக்கதை நூலாக வந்துள்ளது. தள்ளுபடி விலையில் இங்கே வாங்கலாம். இயக்கத்தில் வெளியான மொத்த படங்களின் திரைக்கதை நூல்களையும் இங்கே தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

One thought on “ ‘பிசாசு’வை நேசிக்க வைத்த மிஷ்கினின் மாற்றுப் பாதை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.