இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

தண்ணீருக்கான பொது மேடை

எண்ணூர் கழிமுகமும், பக்கிங்காம் கால்வாயும்,கொசஸ்தலை ஆறும் காமராஜர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கத் திட்டத்திற்காக வேகமான வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடசென்னையின் நிலத்தடி நீர்மட்டம், சாம்பல் கழிவு மற்றும் வெந்நீர் கலப்பால் அழிவுக்குள்ளாகியிருக்கும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றின் பல்லுயிரியம் இவற்றோடு இன்னும் வளர்ச்சியின் பேரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற துறைமுக, அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் பேரழிவின் எல்லைக்கு இப்பகுதியை தள்ளிக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் விதிமுறைகள்அனைத்தும் வெற்று காகிக அறிக்கையாக மட்டுமே உள்ளது.

மோசமான நீர்நிலை ஆக்கிரமிப்பாலும் மாசுபடுத்தலாலும் உப்பங்கழி ஆற்றிலும், கழிமுகப் பகுதியிலும் மீன்,இறால்கள்பிடித்து வந்தமீனவத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிற்கின்றனர். தினமும் அழிந்துகொண்டிருக்கும் எண்ணூர் கடற்கழியின் பிரச்னையை,மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமே கருதமுடியாது. இதை சென்னையின் ஒரு ஜன நெருக்கடியான பகுதியின் வெள்ளப் பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். இச்சூழல் சீரழிவைத் தடுக்க வேண்டிய அரசு இயந்திரமும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

முறையற்ற தொழிற்துறை வளர்ச்சியும் வடசென்னையும் :

மின்சார உற்பத்தி நிலையங்கள், துறைமுகம், உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கனரக உதிரிப்பாக தயாரிப்பு நிறுவனங்கள் என வடசென்னையை மையமாகக் கொண்டு உருவான தொழிற்சாலைகளும் அதில் உழைக்கிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்தான் இன்றைய சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குமான அடித்தளத்தை அமைத்தனர்.

90 களில் இங்கே அறிமுகமான தாராளமய, உலகமய, நவ தாராளப் பொருளாதாரக் கொள்கை பெரு முதலாளிவர்க்க சுரண்டலை இன்னும் தீவிரப்படுத்தியது. இத்திருப்புமுனை கட்டத்தில், வடசென்னையானது, உழைக்கும் மக்களின் உழைப்புச்சுரண்டலுக்கும், இயற்கை வளச்சுரண்டலுக்கும் இரையானது. எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பணிகள், சாலை விரிவாக்கங்கள்,கப்பல் கட்டுமானப் பணிகள் போன்ற அழிவு வளர்ச்சிப் பணிகள் பழவேற்காடு முதல்எண்ணூர் வரையிலான கடற்கரை மீனவக் கிராமப்பகுதியின் வாழ்வாதாரத்தை அழித்துப் போட்டது.

அலையாத்தி காடுகளின் மரணம்:

எண்ணூர் கழிமுகமானது, அடையாறு கூவம் போன்ற சிறிய ஆறுகளின் முகத்துவாரப் பகுதியல்ல. தெற்கிலிருந்து வருகிற ஆரணியாறும் கிழக்கிலிருந்து வருகிற கொசஸ்த்தலை ஆறும் ஒன்றாக இணையும் ஒரு பெரும் கழிமுகப் பகுதி. ஆக,ஆரணியாறும் கொசஸ்தலையாறும், புழல் ஏரியின் உபரி நீரும் இணைகிற இப்பகுதியானது வெள்ள பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகும்.

கொசஸ்த்தலையாறு  கடலில் கலக்கிற முகத்துவாரக் குப்பத்தில் தொடங்கி பழவேற்காடு வரை விரிகிற கழிமுகப்பகுதியானது, பல நீர்வாழ் உயிரினங்களும் பறவைகளும்,பூச்சியினங்களும் வாழ்கிற அதி அற்புத உயிர்ச்சூழல் மண்டலமாகும். அமேசான் காடுகள் நிலத்தின் மழைக்காடுகள் என்றால் அலையாத்திக் காடுகள் நீரில் முளைத்த அற்புத கண்டல் காடுகள் எனலாம்.மேலும் இக்கண்டல் பகுதிகளுக்கே உரித்தான பிரத்யேக இறால் இனங்கள், நண்டு இனங்கள், மீன் இனங்கள், நத்தை இனங்கள்,பூச்சியினங்கள் இங்கே வாழ்கின்றன.

சமீபத்தில்,மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதும் கட்டுமானங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் எண்ணூர் கழிமுக அலையாத்திக் காடுகளோ, இன்று வேருடன் பிடுங்கப்பட்டு, மண் கொட்டி மூடப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுக விரிவாக்கத்திற்காக ஆழப்படுத்துகிற பணியில் எடுக்கப்படுகிற மண், கழிமுகத்தை மூடப் பயன்படுத்தப்படுகிறது. அனல் மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கலந்து கழிமுகத்தின் ஒரு பகுதி சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது.

அழிவின் வளர்ச்சி:

1960-களில், எண்ணூர் அனல் மின் நிலையம், 1980-களில் வட சென்னை அனல் மின் நிலையம் , 2001-இல் காமராஜர் துறைமுகம் (முன்னர் எண்ணூர் துறைமுகம் என்று அழைக்கப்பட்டது) என வடசென்னையில் மையமிட்டு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கும் சூழலுக்கும் அழிவின் வாசலை திறந்துவிட்டன.

வடசென்னை அனல் மின் நிலையம் தனது வெப்பமான கழிவுநீரை ஆற்றில் வெளியிட்டது. பிறகு உப்பளங்களையும் மீன் குளங்களையும் விழுங்கி செப்பாக்கத்தில் பிரம்மாண்டமான சாம்பல் ஏரியை அமைத்தது. ஏரியிலிருந்து சாம்பல் கசிந்து கடற்கழியில் பரவி, அதன் ஆழத்தை குறைத்தது. கான்க்ரீட் தளங்களில் குழாய்கள் ஆலையிலிருந்து ஏரிக்கு சாம்பல் கொண்டு செல்வதற்கு கட்டப்பட்டன. பழுதடைந்த குழாய்களிலிருந்து கசியும் சாம்பல் குழம்பு ஆற்றில் பரவி, ஆற்றின் மணற்பரப்பிற்கு மேல் சிமெண்ட் போர்வை போர்த்தி ஆற்று மண்ணிலிருக்கும் உயிர்களை கொன்றுவிட்டது. ஆற்றின் ஆழமும் குறைந்துவிட்டது. மூன்று ஆள் ஆழம் இருந்த பகுதிகளில் இப்போது குதிங்காலளவுகூட நீர் இல்லை. பல இடங்களில் படகுகளை சாம்பல் தீவுகளுக்கு மேல் தள்ளிக்கொண்டு போகிற நிலைமை வந்துவிட்டது. காட்டுப்பள்ளி தீவில் அமைக்கப்பட்ட காமராஜர்துறைமுகம் ஆழப்படுத்துவதற்கு தூர் வாரிய கடல் மண்ணை அத்திப்பட்டில் உப்பளங்களில் கொட்டி செட்டிநாடு இரும்பு தாது மணல் மற்றும் நிலக்கரி கிடங்கு அமைத்தார்கள். கொட்டப்பட்ட மண்ணிலிருந்து நுண் மணல் கசிந்து, ஆற்றில் பரவி ஆற்றின் ஆழத்தை கடுமையாக குறைத்துவிட்டது. அதே சமயம் கிடங்கை துறைமுகத்துடன் இணைக்க ஆற்றை மறித்து ஒரு சாலையும், சாலையோரம் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயரும் அமைக்கப்பட்டுள்ளது. முழு வெள்ளத்தில் 500 மீட்டர் அகலமாக ஓடும் ஆற்றுக்கு வெறும் 10 மீட்டர் வழி மட்டுமே விடபட்டுள்ளது.

இதற்கும் மேலாக எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு அமைக்கப்படும் சாலையானது பக்கிங்காம் கால்வாயையும் கொசஸ்தலையாற்றையும் மறித்து அமைக்கப்பட்டுவருகிறது. இதை எதிர்த்து நிறுத்தாவிட்டால் எர்ணாவூரிலிருந்து புழுதிவாக்கம் வரை ஆற்றைமறித்து சாலை கட்டி ஆற்றை நிரவி விடுவார்கள்.

ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவோம்:

பக்கிங்காம் கால்வாயும் கொசஸ்த்தலை ஆறும் எண்ணூர் முகத்துவாரமும் சென்னைப் பெரு வெள்ளத்தின் போது, ஒட்டுமொத்த சென்னையைக் காப்பாற்றியதில் பெரும் பங்காற்றின. வெள்ள வடிகாலான நீர்வழித்தடமும், வெள்ள நீரைக் கடலில் சேர்க்கிற முகத்துவாரமும் இல்லாமல் போயிருந்தால் பாதி சென்னையே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.

அழிவின் வளர்ச்சியும், வளர்ச்சியின் அழிவும் பிரம்மாண்டமாகி வருகிற நிலையில் சூழல் படுகொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்படுகிற உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து இவ்வழிவைத் தடுத்தாக வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

நாள்:22.09.2016,வியாழன்,காலை 10.00 மணி முதல்

இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சென்னை

தண்ணீருக்கான பொது மேடை (மக்கள் இயக்கம்)

9842391963|9444078265

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.