ராம்குமார் சாவில்  மர்ம முடிச்சு  அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி

ராம்குமார் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைள்:

சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக  தெரிவித்திருந்தேன்.

நெல்லையில் இருந்து  சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் தூங்காமல் இருந்தாராம்.  காரணம், காவல் துறையினர் அவரை வழியிலே சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று பரிதாபமாகச் சொன்னாராம்.   அந்த ராம்குமார் அப்போது எதை நினைத்து அஞ்சினாரோ,  இப்போது  அது நடந்தே விட்டது.    ராம்குமாருக்கு   அப்போது ஏன்  அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது?   அதற்கும் அப்போது  “தினத்தந்தி” நாளிதழிலேயே ஒரு செய்தி வந்தது.

சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு ராம் குமார் சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், “போலீசார் என்னைக் கைது செய்ய வரும்போது,  நான் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.  ஆனால், நான் எனது கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை.  என்னைக் கைது செய்ய போலீசார் வந்த போது, என் கழுத்தை பிளேடால் அறுத்தனர்.  ஆனால்  தனக்குத் தானே  கழுத்தை அறுத்துக் கொண்டதாக என் மீது போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக என்னைப் போலீசார்  கைது செய்துள்ளனர்.  நான் ஒரு அப்பாவி.  சுவாதியை நான் கொலை செய்ய வில்லை.  என் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்” என்றெல்லாம் தெரி வித்திருக்கிறார்.  அப்போது அவர் தெரிவித்ததற்கும், இப்போது நடந்ததற்கும் பொருத்தமாக இருக்கிறதல்லவா?   ராம்குமார், அவ்வாறு போலீசார் மீது குற்றம் சுமத்திய பிறகும், சிறைத் துறையிலே அவர் தற்கொலை செய்து கொள்ளு மளவுக்கு எவ்வாறு அக்கறையற்று அலட்சியமாக இருந்தார்கள்?  இதிலிருந்தே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்ற சந்தேகம் வருகிறதா? அல்லவா?

ராம்குமாருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது,  சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் சம்மந்தம் கிடையாது;   உண்மையான குற்றவாளியைக் கைது செய்வதற்குப் பதில், அப்பாவி ஏழை வாலிபரான ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும்;  குற்றவாளியை  இரண்டு  நாட்களுக்குள் கைது செய்ய வேண்டுமென்று உயர் நீதி மன்றம்  உத்தரவிட்டதால்,  போலீசார் அவசர அவசரமாக வழக்கினை முடிக்க  ராம்குமாரைக்  கைது செய்து, குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்ப்பந்தம் செய்வதாகவும்  கூறியிருக்கிறார்.

ராம்குமார் உயிரிழந்த தகவல் அறிந்த சென்னையில் உள்ள அவரது சகோதரர் செல்வம்  அவரைப் பார்ப்பதற்காக ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு வந்த போது, அவரை உள்ளே விடாமல் காவல் துறையினர் தடுத்து விட்டார்களாம்.    அதுபோலவே  ராம்குமார் உடலைப் பார்க்க ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் சென்ற போதும், காவலர்கள் அவர்களைத் தடுத்து விட்டார்களாம்.

ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் அளித்த பேட்டியில்,  “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு  ராம்குமார் கோழை அல்ல.   அவரிடம் நான் நேற்று கூட ஒரு மணி நேரம் பேசினேன்.  அப்போது அவர் தெளிவான மன நிலையில் இருந்தார்.  எனவே இது தற்கொலை அல்ல, கொலை.  சிறையில் உள்ள அவர் போலீஸ் பாதுகாப்பில்  இருக்கிறார்.  இது அப்பட்டமான கொலை தான்.  இதற்குச் சிறைத் துறை தான் முழுப்  பொறுப்பு” என்று கூறியிருக்கிறார்.

ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறும்போது,  “சுவாதி கொலையில் எனது மகன் நிரபராதி என்று கோர்ட்டில் நிரூபிக்க நாங்கள் முயற்சி செய்து வந்தோம்.  இன்று ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம்.   தொடக்கத்திலிருந்தே எனது மகனைக் கொல்ல போலீசார்  முயன்றனர்.   அவரைப் பிடிக்க வந்த போது வீட்டுக்குப் பின்னால் கொண்டு சென்று பிளேடால் கழுத்தை அறுத்தனர்.  அதே போல் சிறையிலும் கொல்ல முயற்சி செய்துள்ளனர்.  என் மகனைக் கொல்ல போலீசார் கங்கணம் கட்டியிருந்துள்ளனர்.   சுவாதியைக் கொன்ற உண்மையான குற்றவாளியைப் பிடிக்கத்  துப்பில்லாத  அவர்கள் இப்போது திட்டமிட்டு என் மகனைக் கொன்று விட்டு தற்கொலை என்று பொய் சொல்கின்றனர்.  எனது மகன் சாவுக்கு அரசு கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் இந்த அரசின் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ராம்குமாரின் உறவினர் ஒருவர் கூறும்போது,  “சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்.  அவரைப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த போது,  தப்பிச் செல்லும் ஒருவர் எப்படி பிளேடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் தற்கொலைக்கு முயன்றிருப்பார்?  மேலும் ராம்குமார் கைது செய்யப்பட்டதில் இருந்தே நாங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறோம்.  ஆனால் இது வரை போலீசார் எங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தவில்லை.  தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பீதியிலேயே ராம்குமார் இருந்தார்.    அதிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புழல் சிறை வளாகத்தில் எப்படி ஒரு கைதி மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொள்ள  முடியும்?”  என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

சிறை அறை வளாகத்தில்  லைட் எரியப் பயன்படுத்தப்படும்  இணைப்பில் வரும்  ஒயரை பல்லால் கடித்துள்ளார் என்று கூறுவது நம்பத் தக்கதாக இல்லை.  கைதிகள் மின் ஒயரைப் பல்லால் கடிக்கும் நிலையிலா சிறையிலே வைத்திருப் பார்கள்?   அவர் மின் ஒயரை எடுத்து பட்டப் பகலில் காவலர்கள் யாருக்கும் தெரியாமல் கடித்திருக்க முடியுமா?  காவலர்கள் எங்கே சென்றார்கள்?  மின் ஒயரை அவரே  கடித்தாரா?  அல்லது வேறு யாராவது அவருடைய வாயிலே மின் ஒயரைத் திணித்துக் கொன்றார்களா என்ற சந்தேகம் எல்லாம் சாதாரணமாகவே எழும் அல்லவா?  அதற்கு இந்த அரசும், அரசை ஆளுபவர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இன்றைய “இந்து” ஆங்கில நாளேட்டில், “பல்வேறு கேள்விகளை எழுப்பி யிருக்கும் ஒரு மரணம்”  என்ற தலைப்பில், ராம்குமார் சாவில் எழுப்பப்பட்டு வரும் பல வகையான சந்தேகங்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது.  மேலும் “Going by the National Human Rights Commission guidelines, a comprehensive  suicide prevention programme should have been  rolledout in the Puzhal prison by roping in experts and imparting trainijng to staff on emergency response in cases such as this” (தேசிய மனித உரிமை ஆணையம்  இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுப் பதற்கென நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது.  அதன்படி புழல் சிறையில் நிபுணர்களைக் கொண்டு இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தடுப்பதற்கான வழி முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும்.   மேலும் நெருக்கடியான இப்படிப் பட்ட தருணங்களில் சிறைத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்) என்று விரிவாக எழுதியுள்ளது.

வெளியிலே நடமாடுபவர்களுக்குத் தான் அ.தி.மு.க.  ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்றால், சிறையிலே இருப்பவர்களுக்கே அதுவும் நீதி மன்றக் காவலில் இருப்பவர்களுக்கே  பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியூட்டும்  நிலைமை அல்லவா தமிழகத்திலே ஏற்பட்டுள்ளது.  ராம்குமார் இறந்தது தற்கொலை செய்து கொண்டதாலா அல்லது கொலை செய்யப்பட்டதாலா  என்ற பலத்த சந்தேகம் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் தோன்றியுள்ளது.  இதுபற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்து உலகத்திற்கு தெரியப்படுத்த,  உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு,  உடனடியாக பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.  நடந்தது கொலை அல்ல, தற்கொலை தான் என்றாலும், ஒரு கைதி சிறையிலே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பற்ற அலட்சிய நிலைக்கு யார் யார்  காரணமோ, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூடி மறைக்க முயற்சி செய்தால், இது போன்ற  நிகழ்வு இத்துடன் முடியாது; தொடர்ந்து நடைபெறுவதற்குத் தூபம் போட்டதைப் போலாகிவிடும்;   ராம்குமாரின் சாவுக்கு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.