மாரியப்பனின் காலை அகற்ற சொன்ன மருத்துவர்கள்;அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற தாய்: நம்பிக்கை வென்றெடுத்த தங்கம்!

ரியோ பாரா-ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு  2 கோடியும், மத்திய அரசு 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருகின்றன.

மஹிந்திரா நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான THAR SUV காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல்,  ஹிந்தி திரையுலகின் மிக பெரும் தயாரிப்பு நிறுவனமான YRF ஸ்டூடியோவும் பத்து லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளது.

மாரியப்பனுக்கு பரிசுகள் குவிந்து கொண்டிருக்கும், தந்தை தவிக்கவிட்டு போன குடும்பத்தை தனியொரு மனுஷியாக உணவிட்டுக்கொண்டிருக்கும், தாயார் சரோஜாவின் பக்கமும் ஊடக வெளிச்சம் பரவலாக விழத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சரோஜாவை, ஏராளமானோர் நெகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். மஹிந்திரா நிறுவன உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய சொந்த பணத்தில் பத்து லட்சம் ரூபாயை மாரியப்பனின் தாயார் சரோஜாவிற்கு அளிக்க இருப்பதாக டிவிட்டரில் எழுதியுள்ளார்

இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள சரோஜா, அதில் கூறியுள்ள தகவல்கள் உருக்கமும், நம்பிக்கையும் புரண்டு ஓடுவதாக இருக்கிறது. அதனை தமிழாக்கம் செய்து கீழே தந்திருக்கிறோம்.

“தகப்பன் தவிக்க விட்டு சென்ற குடும்பம் என்பதால், வீடு வீடாக பழம் விற்பது, செங்கல் சுமப்பது, கட்டிட வேலைக்கு செல்வது என்று  கடினமாக, மிக கடினமாக உழைத்துத்தான் நான்கு குழந்தைகளுக்கும் ஒரு வேளை சோறு போட முடிந்தது.

ஒரு முறை கடுமையான நெஞ்சு வலி. சீரியசான நிலைமையில் இருந்த என்னை பார்த்து, நான் இறந்துவிடுவேன்  என்ற முடிவுக்கு என் உறவினர்கள் வந்துவிட்டார்கள். சிலர் என்னுடைய இறுதி சடங்கிற்கான பணிகளையும் தொடங்கி விட்டனர். பூ மாலைகள் வாங்குவது, அனைவருக்கும் சொல்லி அனுப்புவது என்று.

நான்கு குழந்தைகளையும் ஹாஸ்டலில் சேர்த்து விடுமாறு, அப்போது அனைவரும் அறிவுறுத்தினர். அப்போதுதான் என் மூத்த மகள், சுதா, அவளுடைய பள்ளி ஆசிரியரிடம் சென்று, என் நிலையை எடுத்து சொல்லி, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி வந்தாள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு பின்தான் என்னுடைய நிலைமை சற்று சீரானது” என்கிறார் சரோஜா.

மாரியப்பனை மிகவும் பாதித்த இந்த சம்பவமே, சரோஜாவை கடினமான வேலைகளுக்கு செல்ல விடாமல் தடுத்து, ஓரளவிற்கு பாதுகாப்பான, காய்கறி விற்பனையாளராக மாற்றி இருக்கிறது. தற்போது சைக்கிளில்  (அதுவும் ஆண்கள் பயன்படுத்தும் சைக்கிள்) வீடு வீடாக சென்று காய்கறி விற்று வருகிறார் சரோஜா.

vegetable

“தந்தை இல்லாத குடும்பம் என்பதால் , மூத்த மகளான சுதாவை, அவளுடைய 15 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். இன்னமும், அதற்கு வாங்கிய கடன் இரண்டு லட்சத்திற்கான வட்டியை கூட கட்ட முடியாமல்தான் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். கடனில் ஒரு லட்சம் இன்னமும் மீதி இருக்கிறது”

இந்த கடன், மாரியப்பனின் குடும்பத்தை சிதைத்திருக்கிறது என்றால், அது  ஓரளவிற்கு உண்மைதான். மாரியப்பனின் தம்பியான, குமார் தன்னுடைய பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு போக வேண்டிய முழு காரணமாக , கடன் இருந்திருக்கிறது.

“கடவுள் கிருபை என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாய் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார் சரோஜா அந்த பேட்டியில்.

ஆனால்,  பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள,  இரண்டு கோவில்களுக்கு இடையில்தான் மாரியப்பனுக்கு விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பது வாழ்வின்முரண்.

வழக்கம் போல, மாம்பழம் விற்பதற்காக கொண்டிருந்த சரோஜாவை , அக்கப்பக்கத்தினர் கண்டுபிடித்து சொன்ன பின்னர்தான் மாரியப்பனுக்கு நடந்த விபத்தே அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

பேருந்தில் அடிபட்டு, அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த, ஐந்து வயதான மாரியப்பனின் “வலது காலை அகற்ற வேண்டும்” என்று சரோஜாவிடம், மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

“காலை அகற்றுவதற்கு மட்டும் நான் சம்மதிக்கவே இல்லை. அப்படி ஒரு தேவையே இல்லாமல், அவன் உயிர் வாழ்வான் என்று நம்பினேன்”  என்பதாக ஆங்கில நாழிதளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் சரோஜா.

சில நேரங்களில் நம்பிக்கைகள் ஜெயிக்கும்தானே. அப்படியாக, சரோஜா என்ற தாயார் ஜெயித்த வெகு சில நம்பிக்கைகளில் மாரியப்பனும் ஒன்று.

நீண்ட நாள் சிகிச்சைக்கு பின், மெதுமெதுவாக நடக்க ஆரம்பித்த மாரியப்பன்,  உயரே குதிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியையும் கண்டு பிடித்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியும், சரோஜாவின் நம்பிக்கையும் பாரா ஒலிம்பிக்கில் தங்கமாக மாறி இருக்கிறது என்றால், அது உண்மை.

உடல் ஊனமில்லாதவர்களுடன் போட்டியிட்டு, விளையாட்டில் ஜெயிப்பதே மாரியப்பனின் கனவாக இருந்திருக்கிறது என்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.

பாரா ஒலிம்பிக்கில் அந்த சாதனையும் நிகழ்ந்திருக்கிறதுதனே ?  1,500 மீட்டர் ஓட்ட போட்டியில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வேன்றவர்களை விட மிக குறைவான நொடிகளில் ஓடி,  பாரா ஒலிம்பிக் வீரர்கள் சாதனை புரிந்திருக்கிரார்களே !…அது போன்ற ஒரு நாள் மாரியப்பனுக்கும் விரைவில் வரும் என்று நம்புவோம்.

ஆமாம். நம்பிக்கையினால் ஜெயித்த தங்கத்திற்கு, இதை நாம் சொல்லி தரவேண்டுமா என்ன ??? 🙂

 with inputs from Indian Express – The Times Tamil article.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.