காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

அறிவழகன் கைவல்யம்

அறிவழகன் கைவல்யம்
அறிவழகன் கைவல்யம்

கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள்.

அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் பிறவித் தகுதிகளால் பெற்றுக் கொண்டு ஆளுமை செய்பவர்கள். மற்றபடி தமிழக ஒடுக்கப்பட்டவனுக்கும், கன்னட ஒடுக்கப்பட்டவனுக்கும் எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லை. கன்னட மக்கள் தொகையில் ஏறத்தாழ 30 விழுக்காடு இருக்கும் இவர்கள் வெறுப்பு அரசியல் செய்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.

இரண்டாவதாக பெங்களுர் ஊரகம், மைசூர் மற்றும் மாண்டியா போன்ற டெல்ட்டா மாவட்டங்களில் வசிக்கும் கன்னட விவசாயிகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வும், காவிரி நீரின் தேவை குறித்த விழிப்பும் கொண்டவர்கள், குறிப்பாக மாண்டியா மாவட்டம் பரவலாக காவிரி கலகத்துக்குப் புகழ் பெற்றது.

உணர்ச்சி மிகுந்த பல்வேறு போராட்டங்களை அவர்கள் எப்போதும் நடத்துவார்கள், நெடுஞ்சாலைகளில் கும்பலாக வன்முறை செய்யும் நெடுநாளைய பழக்கம் அங்கிருக்கும் கல்வி அறிவற்ற இளைஞர்களுக்கு உண்டு, திரைக்கவர்ச்சி அதிகம் கொண்ட உணர்ச்சி மயமான இம்மாவட்ட மக்களும் தமிழர்களைக் குறி வைத்துத் தாக்கிய வரலாறெல்லாம் இல்லை.

உள்ளக மாவட்டங்களில் வாழும் கன்னடர்கள் காவிரிப் பங்கீட்டுச் சிக்கலை பெரிய அளவில் சிந்திப்பவர்கள் இல்லை, தங்கள் மாநில உரிமை என்பதன் அடையாளமாக ஒரு சில போராட்டங்களை நிகழ்த்தி விட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆக ஏறத்தாழ 70 விழுக்காடு கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்துபவர்கள் அல்ல.

எஞ்சியிருக்கும் 30 விழுக்காடு கன்னடர்கள் யார், இவர்கள் ஏன் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால், இந்துத்துவ அரசியல் கட்சிகள், அடிப்படைவாதக் கன்னட இயக்கங்கள் மற்றும் கன்னடர் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக ஒளிந்து கொண்டு அரசியல் மற்றும் நிலம் சுரண்டும் வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட குழுவினர்.

இவர்களுக்கு தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளில் வசதியாக அமர்ந்து கொள்ள எப்போதும் ஒரு உணர்ச்சி மிகுந்த இனம் அல்லது மொழி சார்ந்த வெறுப்பு அரசியல் தேவைப்படுகிறது, குறிப்பாக இந்துத்துவ பாரதீய ஜனதாவின் ஆசி பெற்ற ஒட்டுக் குழுக்களாக இயங்கும் பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு முறை காவிரிச் சிக்கல் வரும்போதும் வாய்ப்பாகத் தங்கள் கூலிக்கு மாரடிக்கும் வன்மத்தை வளர்க்கும் செயல்களில் ஈடுபடத் துவங்குவார்கள்.

இந்த அடிப்படைவாத இயக்கங்களின் முழு நேர வேலையும் நன்கொடை வசூல் செய்வதும், இந்துத்துவ விழாக்களைக் கொண்டாடுவதும் மட்டுமே. கன்னட மக்களுக்காக இதுவரை இந்த நாட்டாமைகள் எந்த ஒரு நன்மையையும் செய்ததில்லை. கன்னட அரசியலில் இவர்களின் தாக்கமும் பெரிய அளவில் இல்லை.

மிக முக்கியமானதாக நான் நினைக்கிற ஒன்றைக் கடைசியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது, இந்த அடிப்படைவாதிகளோடு மெல்ல மெல்ல தொல்குடிக் கன்னடர்கள் இணைந்து கொள்கிறார்கள் என்பது வலிமிகுந்த உண்மை. பெங்களுர் மற்றும் கர்நாடகாவில் குடியேறி வசிக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் வாழ்ந்த நிலையில் இருந்து பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள், அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

1991 இல் நிகழ்ந்த கலவரம் தவிர்த்துப் பெரிய அளவில் பூசல்கள் இல்லாமல் அமைதியாகவே வாழ்கிறார்கள். ஆனால், நீண்ட காலமாகவே பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களின் உடல் மொழியும், வாழ்வியலும் கடந்த 10 ஆண்டுகளில் அங்கிருக்கும் கன்னடர்களை எரிச்சலடைய வைக்கும் வகையிலேயே இருக்கிறது என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.

அடிப்படை ஒழுக்கம் அற்ற வீதிச் சண்டைகளில் ஈடுபடும் எண்ணற்ற இளைஞர்களே தமிழின் அடையாளம், தமிழ்ச் சங்கம் தொடங்கி அரசியல் இயக்கங்கள் வரை தங்கள் வழக்கமான சாதி ஆதிக்க உணர்வுகளையும், மொழி மற்றும் இனவாதம் பேசும் வழக்கத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவதே தமிழனின் அடையாளம். இந்த நிலையை மாற்றி இணக்கமான, அடிப்படை ஒழுக்கம் நிறைந்த ஒரு சமூக வாழ்க்கை முறையை நோக்கித் தமிழர்கள் முன்னேறியாக வேண்டும்.

உண்மையில் பெங்களூரில் நிகழ்ந்து கொண்டிருப்பது தமிழர்களுக்கு எதிரான வன்முறையோ, காவிரி நதி நீரில் அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கான போராட்டங்களோ அல்ல, மாறாக, முழுமையான அரசியல் விளையாட்டு, இந்துத்துவ அடிப்படைவாதிகளும், இனவெறியர்களும் சேர்ந்து நிகழ்த்தும் மட்டக்கரமான தெருக் கலவரத்தில் கன்னடர் – தமிழர் என்கிற வெறுப்பரசியலை விதைக்கும் சித்து வேலை.

பெங்களூரில் நிகழ்ந்த அத்தனை வன்முறைகளிலும் ஒரு இடத்தில் கூட கன்னட விவசாயியோ, கன்னட உழைக்கும் மக்களோ இல்லை, எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கலவரங்களால் கிடைக்கும் வாக்கு வங்கி அரசியல் அறுவடையை நோக்கித் திரும்புவதும், பொது மனிதர்களின் மீதான அக்கறையற்ற, மானுடத்தின் மீதான பெரிய அளவிலான புரிதலும் அக்கறையும் இல்லாத தலைவர்கள் நாடெங்கும் விரவிக் கிடப்பதும் நம்பிக்கையின்மையைத் தருகிறது.

காவிரி இப்போது காவிகளின் கையில் சிக்கி இருக்கும் இன்னொரு அரசியல் ஆயுதம், தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பின் மூலமும், மத அடிப்படைவாத உணர்ச்சிக் குவியல் மூலமும் ஆட்சியைப் பிடித்திருக்கும் காவிக் கும்பலின் கைகளில் கர்நாடக மாநில ஆட்சி மாறுமேயானால் காவிரியின் பெயரில் இன்னொரு குஜராத் மாதிரிக் கலவரத்தைக் காவிக்கும்பல் வரும் காலங்களில் திட்டமிட்டு நிகழ்த்தக் கூடும்.

அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.

One thought on “காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

  1. ஏதோ காவிகள்தான் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்பது படு அபத்தம். வட்டாள் நாகராஜஃ காவி கோஷஃடியா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.