பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சக கைதியால் தாக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. ஆட்சியில் சிறையிலே இருக்கும் பேரறிவாளன் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு, மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கும், சிறையிலே இருக்கும் கைதிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலைமைதான் உள்ளது என்பதற்கும் எடுத்துக்காட் டாக உள்ளது. மற்றொரு கைதியால் தாக்கப்பட்டார் என்றாலும், அவருக்கு இரும்புக் கம்பி எவ்வாறு கிடைத்தது, கைதிகள் நினைத்தால் எதுவும் கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

முன்னாள் இந்தியப் பிரதமர், இளந்தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர், முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவையில் 30-8-2011 அன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற, மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். அதே முறையில்தான் இந்த மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டு மென்ற அக்கறையுடன் தமிழக அரசும், ஜெயலலிதா வும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்ற நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.மு. கழக அரசு செய்தது – இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் – மேலும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் – நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு – இருபதாண்டு காலத் திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களை, தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கருணை காட்டப்பட வேண்டும்; அவர்கள் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியது என்ற போதிலும், அவர்கள் அனுபவித்த மிக நீண்ட தண்டனைக் காலத்தைக் கருதிப் பார்த்து மனிதாபிமானத்தோடு மன்னிக்க முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்; இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி. சதாசிவம் கூறும்போது, “எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத் திடம் அறிக்கை கோர வேண்டும். அதன் பின்னரே உரிய முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைத் தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்” என்றெல்லாம் நீதிபதி கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மாநில அரசுதான் இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

2-12-2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மத்தியப் புலனாய் வுத் துறை தொடுத்த வழக்கில், ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கான முதன்மையும் அதிகாரமும் மத்திய அரசுக்கே உண்டு என்று தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, சட்டச் சிக்கல் மீதான விளக்கம் தானே தவிர, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் விடுதலையை முற்றிலுமாகத் தடுக்கக்கூடிய அம்சம் எதுவும், அந்தத் தீர்ப்பில் இல்லை என்று தான் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், சி.பி.ஐ. அமைப்பைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழே வைத்திருக்கின்ற மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்றும், அதன்படி தொடர்புடைய அரசு முடிவு செய்ய வேண்டுமென்கிற போது, குறிப்பிட்ட இந்த வழக்கில் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதும் தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பொருளாகும். அதாவது மத்திய அரசின் அனுமதியுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் மையநோக்கம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் சிறையாக உச்சநீதிமன்றம்தான் குறைத்தது. உச்சநீதிமன்றமே கூறிய காரணத்தால், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகச் சட்டப்பேரவையில் மாநில அரசு 2014ஆம் ஆண்டு பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானம் நிறைவேற்றியதும், குற்றஞ் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்வதாகக் கூறியதும் தவறு அல்ல. அப்படிச் செய்த போது மத்திய அரசுக்குக் கட்டளையிடும் பாணியில், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று, அப்போது நிபந்தனை விதிப்பதைப் போல ஜெயலலிதா அரசு நடந்து கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படி இறுமாப்போடு தமிழக அரசு இறுக்கமாகக் கருத்துத் தெரிவித்த காரணத்தால் தான், தமிழக அரசின் விடுதலை நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்திட நேரிட்ட தென்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

2014 மார்ச் மாதம் 2ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள் துறைக்கு அனுப்பிய கடிதத்தில், சிறையில் இருந்த ஏழு பேரையும் விடுவிப்பது பற்றி மத்திய அரசின் முடிவினைத் தெரிவிக்க வேண்டுமென்று எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைக்கூடத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்தான் எழுதியிருந்தாரே தவிர, முதலமைச்சர் எழுத முன் வரவில்லை. அது மாத்திரமல்ல; உண்மையிலேயே இவர்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், முதலமைச்சரோ அல்லது மூத்த அமைச்சர்களோ டெல்லி சென்று பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் பார்த்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அதனால் மத்திய அரசு எழுதிய பதிலில், இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் எந்த முடிவும் இப்போது எடுக்க முடியாது என்று கூறிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதற்கும் தமிழக அரசுதான் காரணம். மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதி விட்டு, அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்த காரணத்தால், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

அண்மையிலே கூட நளினி செய்தியாளர்களிடம் கூறும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவிலேயே அவர்களையெல்லாம் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். அதிலிருந்தே அவர்களின் விடுதலை தாமதமாவதற்குக் காரணம் தமிழக அரசுதான் என்பது தெளிவாகிறது. 23-10-2008 அன்று தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போது, ஜெயலலிதா, “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து தப்புவிக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சுகள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்” என்று சொன்னதையும்; 19-2-2014 அன்று அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, “பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும்” என்று நான் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எனவே, “மிகவும் தாமதமாகிவிட்ட இந்த நிலையிலாவது இவர்களை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முறைப்படி மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசனை செய்து, மத்திய அரசின் அனுமதியினைப் பெற்று, தண்டனை பெற்றவர்களை விதிமுறைகளை அனுசரித்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிட வேண்டும்” என்று சில மாதங்களுக்கு முன்பு கூட நான் அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் தமிழக அரசு இந்தப் பிரச்சினை பற்றி எந்த வழக்கறிஞரிடமும் ஆலோசனை கேட்டதாகத் தெரியவில்லை.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராஜீவ் கொலையாளிகள் அனைவரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார் ஜெயலலிதா. அந்த அறிவிப்பில் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசைக் கலந்தா லோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும், மத்திய அரசு மூன்று நாட்களுக் குள் முடிவு தெரிவிக்க வில்லை என்றால், மாநில அரசுக்கு உள்ள அதிகா ரத்தைப் பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்தாரா? இல்லையா? ஏன் இதுவரை விடுதலை ஆகவில்லை?

இந்த அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணையில் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், கோவைக்கு வருகை தந்திருந்த சதாசிவம், தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே மாநில அரசு விடுவிக்க முடியும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435க்கு விளக்கமளித்து தீர்ப்புக் கூறியது. தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கப் பிறப்பித்த உத்தரவு சரியா தவறா என்பதை விசாரித்து தனியாக தீர்ப்பளிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

குற்றவாளிகளுக்குத் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய மாநில அரசுக்கு குற்றவியல் நடை முறைச் சட்டம் 435ஐத் தவிர அரசியல் சாசன சட்டப் பிரிவு 161ன் படி அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தின் படி மாநில அரசு அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து, விடுதலை செய்வது என்று முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு அனுப்பி விடுதலை செய்ய முடியும். 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் இது வரை கேள்விக்குள்ளாக்கப்பட்ட தில்லை.

மேலும், அரசியல் சாசனப் பிரிவு 161ன்படி விடுதலை செய்வதில், குற்றவாளிகளின் வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததா, மாநில போலீஸ் விசாரித்ததா என்பது போன்ற நிபந்தனைகளும் இல்லை. அது மாநில அரசுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகாரம். ஆனால் இந்த அதிகாரத்தை ஜெய லலிதா பயன்படுத்தாமல், மீண்டும் குற்றவியல் நடை முறைச் சட்டத்தில் உள்ள 435வது பிரிவு அதிகாரத் தைப் பயன்படுத்தியே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா அல்லது மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற வழக்கில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் முன் அனுமதி பெற்றே குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 161 வழிவகுக்கிறது. இதைப் பயன்படுத்தி, யாரையும் கேட்காமல் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது பேரறிவாளன் சிறைக்குள்ளே கடுமையாகத் தாக்கப்பட் டுள்ளார். அவர் தாக்கப்பட்டதற்கு சிறைத் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக பேரறிவாளனையும், அவருடன் கைதானவர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 161 இருக்கும்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435ஐத் தேடி அலைவானேன்? வெண்ணெயைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்காக யாரும் அலைவரா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.