இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்!

முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை.

ராதாகிருஷ்ணன் யார்?

ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி வைத்திருந்த மக்களை விடுவிக்க ஜோதிராவ் புலே, அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றோர் இயங்கிக் கொண்டிருக்க, இன்னொரு சாரார் இந்து ஞானவியல் மரபின் மூலமாக மக்களை இந்துக்களாக முன்னிறுத்திக் கொண்டிருந்தார்கள். தத்துவார்த்த ரீதியாக கல்விப்புல பின்னணியுடன் இந்த பிரச்சாரங்களுக்கு தன்னுடைய எழுத்துக்களின் மூலம் வலிமை சேர்த்தவர்  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆசிரியர் பணி செய்தவர். 1939- 1948 ஆம் ஆண்டு வரை ஹிந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். பெரும்பாலும் உயர்பதவிகளிலும் வெளிநாடுகளில் துணை தூதராகவும் இருந்தவர். பிறகு, இந்திய குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், பிராமண முறைகள் மூலம் இந்திய தத்துவவியலை சொன்னவர்.

இந்திய தத்துவவியல் மூலம் பார்ப்பன கருத்தியலுக்கு எதிராகத் தோன்றிய சமண, பௌத்த மதங்களை ‘இந்து’ என்கிற ஒரு குடையின் கீழ்கொண்டுவந்த திரிபு வேலையைத் தொடங்கி வைத்தவர் என்றும் இவரைச் சொல்லலாம். இந்த சாராங்களை உள்ள வாங்கிய இந்து மதம், சமண, பௌத்த கோட்பாடுகளை உள்வாங்கி தனதாக்கிக் கொண்டது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணின் நினைவாக இந்து தத்துவவியல் தினம் கொண்டாடலாமேயன்றி, ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை.

இந்திய வரலாற்றில் ஆசிரியர் என்ற சிறப்புக்குரியவர் ஒருவரே!

ஏப்ரல் 11, 1827ஆம் ஆண்டு காய்கறி விற்பரின் மகனாகப் பிறந்த ஜோதிராவ் புலே, இந்தியர்களால் மறக்கப்பட்ட, வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட முன்னோடி ஆசிரியர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிற்படுத்தப்பட்ட மாலி சமூகத்தில் பிறந்த ஜோதிராவ், ஆரம்பக் கல்விப் படிப்பை முடித்ததும் அப்பாவுக்குத் துணையாக விவசாயம் செய்ய வேண்டியிருந்தது. ஜோதிராவுக்கு பயில்வதில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த இஸ்லாமிய, கிறித்துவ அண்டை வீட்டார் அவருடைய தந்தையிடம் மேற்கொண்டு படிக்க வைக்க பரிந்துரைத்தனர். புனித ஸ்காட்டிஸ் பள்ளியில் உயர்நிலை பள்ளிப் படிப்பை படித்து முடித்த ஜோதிராவுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்த அவருடைய குடும்பத்துக்கு உதவும் வகையில் ஏன் அவர் பணியை ஏற்கவில்லை?

தன்னுடன் படித்த பல பார்ப்பனர்கள் ஜோதிராவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தனர். அப்படியான ஒரு நண்பரின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஜோதிராவ் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சாதியைக் காரணம் காட்டி, ஜோதிராவ் அவமானப்படுத்தப்பட்டார், கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவமே ஜோதிராவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய மிகப்பெரிய பணி சமூகத்தின் சாதி படிநிலைகளை அகற்றுவது என முடிவு செய்தார். கல்வி ஒன்றே சாதி படிநிலைகளை அகற்றும் என்ற முடிவுக்கு வந்தார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி அளிப்பதன் மூலம் அதைச் செய்ய முடியும் என நம்பினார். அதன் முதற்படியாக தன் மனைவி சாவித்ரி பாய்க்கு கல்வி அளிக்க ஆரம்பித்தார்.

பெண்களுக்கென முதல் பள்ளி!

பெண்களுக்கென முதல் பள்ளியை தொடங்கினார் ஜோதிராவ் புலே. இது நடந்தது 1848ஆம் ஆண்டில். தாழ்த்தப்பட்ட பெண்கள் படித்த பள்ளி மாணவிகளுக்கு கல்வியைத் தர எவரும் முன்வராத காரணத்தினால், தன் மனைவி சாவித்ரியிடம் அவர்களுக்குக் கல்வியை போதிக்கும்படி சொன்னார். தன் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சாவித்ரி மீது உயர்சாதியினர் கற்களை வீசினர். பள்ளியை இழுத்து மூட ஜோதிராவுக்குச் சொல்லும்படி அவருடைய தந்தையை அவர்கள் நிர்ப்பந்தித்தனர். இதனால் ஜோதிராவும் சாவித்ரியும் தந்தையின் வீட்டிலிருந்து செல்ல வேண்டியிருந்தும் அவர்கள் தங்கள் பணியிலிருந்து பின்வாங்கவில்லை. போதிய நிதி இன்மையால் சிறிது காலம் இந்தப் பள்ளி செயல்படவில்லை. நிதி திரட்டி மீண்டும் செயல்படுத்தினார், பெண்களுக்கென மேலும் இரண்டு பள்ளிகளைத் திறந்தார். தாழ்த்தப்பட்ட மஹர், மங் சமூகத்தினருக்கென்றும் பள்ளிகளைத் திறந்தார்.

வரலாறு அதிகார மையங்களால் எழுதப்படுகிறது

கல்வியும் அதிகாரமும் பார்ப்பனர்களுக்கே என்கிற நிலை இருந்த காலக்கட்டத்தில் கல்வியின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியைத் தொடங்கி வைத்த ஜோதிராவ் புலே குறித்து எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? கல்வியோடு நின்றுவிடாமல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தும் விதவைகள் திருமணத்தை ஆதரித்தும் தொடர்ந்து களப்பணிச் செய்த சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் ஜோதிராவ். அவர் இந்திய வரலாற்றில் நினைக்கப்படாமல் போனது எதனால்? அவர் மனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தை மறுத்த இந்து மரபை எதிர்த்தார் என்பதே காரணம். சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இந்து ஞான மரபை முன்னிறுத்தி போலி சமத்துவத்தையும் போலியான சீர்திருத்தத்தையும் பரிந்துரைத்த பிரம்ம ஞான சபை போன்றவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார். பார்ப்பனர்களை வேடதாரிகள் என்றார். பார்ப்பன விதவைப் பெண்கள், பார்ப்பன பணக்காரர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதைக் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பன விதவைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். எனவே பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய பார்ப்பனர்களாலும் சுதந்திரத்திற்குப் பிறகு உயர் பதவிகளை அலங்கரித்த உயர்சாதி இந்துக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவராக மஹாத்மா புலே ஆனார்.

வரலாறு எப்போதுமே அதிகார மையங்களாலே எழுதப்படுகிறது. இந்துப் பெண்கள் சதி என்கிற பெயரின் உடன்கட்டை ஏறுவதை தடுத்த அவுரங்கசீப், வரலாற்றுப் பாடங்களில் மிக மோசமான மொகலாய மன்னனாக குறிப்பிடப்படுகிறார். அவருடைய பெயர் தாங்கிய சாலைக்கு, இந்து சனாதன கருத்துகோளில் செயல்பட்ட அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுகிறது. பன்முகப்பட்ட இந்திய சமூகம், இந்து சமூகமாக கட்டமைக்கும் பணியைக் காலம்தோறும் அதிகார மையம் செய்துகொண்டே இருக்கிறது. சாமானியர்களின் நாயகர்கள் இப்படித்தான் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

5 thoughts on “இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்!

 1. ஒருவரை கொண்டாடுவதற்காக இன்னொருவரை அவதூறு செய்வது சரியல்ல. ராதாகிருஷ்ணன் இந்த்துவ தத்துவஞானி என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஆசியராக இருந்து நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்த பதவியை அலங்கரித்தவர் அவர். இந்திய தத்துவம் குறித்த விவாதங்கள் அவர் பிறக்கும் முன்னரே துவங்கியவை, இன்றும் தொடர்பவை. ராதாகிருஷ்ணன் பிற மதங்கள் மீது அவதூறு கூறியவர் அல்லர்.

  Like

  1. இது அவதூறு அல்ல, பணிக்கேற்ற மரியாதை கொடுங்கள் என்பதே. ராதாகிருஷ்ணன் ஆசிரியராக பணியாற்றிய காலம் மிகக் குறைவே. அவரைப் பற்றி இந்திய அரசின் குறிப்பே, தத்துவமேதை குடியரசுத் தலைவர் என்றே குறிப்பிடுகிறது. அவர் இந்து தத்துவவியல் நூல்களுக்காகத்தான் அறியப்பட்டவர். அவர் எழுதிய டஜனுக்கும் மேற்பட்ட நூல்கள் மேலை நாடுகள் வரை பிரபலம். அதிகம் தேட வேண்டியதில்லை. கூகுள் செய்தால் கூட அவரைப் பற்றிய விடயங்கள் கிடைக்கும்.

   Like

 2. அவரை இந்த்துவ தத்துவஞானி என்பது அவதூறன்றி வேறென்ன. உங்களுடைய பிரச்சினை அவர் இந்த்து தத்துவங்களைப் பற்றி எழுதியதுதானா. ராதாகிருஷ்ணனை கொண்டாடுவது என்பது புலேயை மறுப்பது அல்ல. இதை புரிந்து கொள்ளுங்கள். அவுரங்கசீப்பின் பெயரில் இருக்கும் சாலைக்கு புதுப் பெயர் தேவையில்லை. அதே சமயம் அவுரங்கசீப் கொடுங்கோலர் என்பதையும் ஏற்க வேண்டும்.
  சதியை ஒழித்தது என்பதால் பிரிடிஷ் ஏகாதிபத்தியமே சிறந்தது என்றா வாதிட முடியும். இந்து மத விரோதமே முற்போக்கு, இடதுசாரி சிந்தனை என்றால் அது ஒரு போதும் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறாது.

  Like

  1. அவர் இந்து தத்துவ ஞாநி தான், அம்பேத்கார் நீண்ட காலம் ஆய்வு செய்து புத்தமும் அவரது தர்மமும் என்ற நூலை வெளியிடப்போகிறார் என்று தெரிந்தது, புத்தரை முழுக்க முழுக்க இந்து மதச் சாமியாராகச் சித்தரிக்கும் அவரது நூலில் புத்தரின் பகுத்தறிவுச் சிந்தனையை புத்தரின் போலிக்கோட்பாடு என்று குறிப்பிட்டிருப்பார்.
   இந்த நூலை அரசு செலவில் வெளியிட வைத்தும் சாதித்துக் காண்பித்தார்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.