மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்

வடுக்கப்பட்டி ஜூலை 2013, அருண்குமார் தலித் மாணவன் தன்னுடைய பள்ளிக்கு சென்றுவிட்டு தன் காலனிக்கு கையில் செருப்புடன் வந்தான்.அப்போது அவன் நண்பர்கள் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அவனும் சேர்ந்து கொண்டான், வெயில் தாளாதால் அவனுடைய செருப்பு மேல் நின்றுக்கொண்டிருந்தான். அதை பார்த்த ஆதிக்க சாதியை சார்ந்த ஒருவன் அவனை தெருத் தெருவாய் செருப்பை தலை மீது சுமந்து நடக்கவைத்தான். மனம் ஒடிந்த அந்த தலித் மாணவன் பள்ளிக்கு போகாமல் முடங்கி போனான்.
ஆகஸ்ட் 29 ,2016 அங்குசெட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தலித் மாணவிகள் கேள்விகேட்கின்றனர். ‘பறப் பையன் படிக்கிறான் உங்களுக்கென்ன என்று இழுவுபடுத்தும் ஆசிரியரை வேலையைவிட்டு எடுக்கவேண்டும். குப்பை பொறுக்கவும், கக்கூஸ்கழுவவா நாங்க வந்தோம்? எங்களுக்கு டி.சி. கொடுங்க, நான் இந்த வருசமே பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணிவிடுவேன்’ என்று சவால்விடும் மாணவியின் வேகமும் போராடும் துணிச்சலும் கேள்வி கேட்கும் தைரியமும், சுயமரியாதைக்கு குரல்கொடுக்கும் வலிமையும் நெகிழவைக்கிறது.
கபாலி திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் ரஜினியின் வசனம் நினைவுக்கு வருகிறது.
கபாலி சொல்வார் “நான் முன்னுக்குவருவது தான் உங்களுக்கு பிரச்சனைனா நான் முன்னுக்குவருவேண்டா, கோட்சூட் போடுவேண்டா, கால்மேல கால் போட்டு உக்காருவேண்டா, அதபொறுக்க முடியலைன்னா”..
கபாலி பேசும் அந்த வசனத்தைவிட அந்த மாணவியின் ஆதங்கத்தோடு, தன் சுயமரியாதை குத்தப்பட்டு ரணமானபின் உமிழும் வார்த்தைகள் கடலூர் மாவட்டத்தை நடுங்க வைத்திருக்கும். ‘எல்லோருக்கும் டி.சி. குடுங்க இந்த வருசமே நாங்க பத்தாம் கிளாஸ் எழுதுறோம்’. எவ்வளவு துணிச்சல், தைரியம், நிச்சயம் பள்ளிக்கூடம் அதைக்கொடுக்கவில்லை….
புதியக் கல்விக் கொள்கை இவர்களைப் போன்ற மாணவர்களை வடிகட்டி 8 ஆம் வகுப்பிலேயே குலத்தொழில் செய்யவழிகுக்கும், அப்போது இந்த மாணவி போன்று கேள்வி கேட்க எவரும் இருக்க மாட்டார்கள்…
அரவிந்தன் சிவக்குமார், மனநல மருத்துவர்.