“சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்

சென்னை நகரம் பலருடைய கனவுகளை கிளர்த்தெழவைக்கும் நகரம். பகட்டான வாழ்வியலுக்கு மட்டுமல்ல, அது தன்னகத்தே அடுக்கான கதைகளைக் கொண்ட நகரம். எனக்குள் இன்னமும் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கும் நகரம். இந்நகரத்தின் கதைகளை படிக்கும் ஆர்வம் மேலோங்கிய நேரத்தில் ‘கறுப்பர் நகரம்’ நாவலை வாசித்தேன். ஒரு படைப்பு உங்களை உலுக்க வேண்டும் என பேசுவார்களே அதுபோன்று என்னை உலுக்கிய படைப்பு ‘கறுப்பர் நகரம்’. செங்கேணியும் ஆராயியும் என்னை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு பயணிக்க வேண்டுமென என் கால்கள் என்னை இழுக்கின்றன. இந்தத் தேடலில் நாவலாசிரியருடன் உரையாடுவது சிறப்பாக இருக்கும் என தோன்றியது. எழுத்தாளர் கரன் கார்க்கியுடனான சந்திப்பு அமைந்தது அப்படியொரு இயல்பான தேடலில்தான்.

மெட்ராஸின் உதிர்க்க இயலாத வரலாறை சுமந்துகொண்டிருக்கும் ஒரு பகுதியான வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் உள்ள எழுத்தாளர் கரன் கார்க்கியின் இல்லத்தில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது. முதல் சந்திப்பில் கறுப்பர் நகரத்தின் கதைகளே பேசி தீர்க்க முடியாதபடியால், மீண்டும் ஒரு நாள் மற்ற விடயங்களுக்காக உரையாடல் நடத்தினேன். அழிந்துவிட்ட பாணியிலான கரன்கார்க்கியின் மச்சுவீடு, பழம் கதைகள் பேச சிறப்பான இடமாக எனக்குப் பட்டது. இரண்டு நாட்களும் அன்போடு உபசரித்த எழுத்தாளர் கரன் கார்க்கியின் இணையருக்கு பேரன்போடு நன்றி சொல்கிறேன். இனி உரையாடலுக்குள் போகலாம்…

உங்களுடைய பின்புலம் என்ன? சென்னைதான் உங்கள் பூர்வீகமா?

“சென்னை தான் என் பின்புலம். பிறந்தது வளர்ந்தது எல்லாமே இங்கேதான். என் தாத்தா 1930கள்ல சென்னை வந்தவர். அவர் துறைமுக தொழிலாளியா இருந்தவர். அம்மா, அப்பா எல்லாம் இங்கே பிறந்தவர்கள் தான். புது ஜெகநாதபுரத்தில் அப்ப இருந்தாங்க, 84-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அங்கேயிருந்து கன்னிகாபுரத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். அப்போ தென்னந்தோப்பாக இருந்த கன்னிகாபுரத்துல நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினாங்க. முன்பு இருந்த இடம் கன்னிகாபுரத்திலேர்ந்து  4 கிலோ மீட்டருக்கு முன்னாடி இருந்தது. இப்போ அந்த இடமெல்லாம் மாறிப்போய் இருக்கு. என் தாத்தாவோட இடம்பெயர்வைதான் அறுபடும் விலங்கு நாவல்ல நான் சொல்லியிருக்கேன்”.

அறுபடும் விலங்கு, கறுப்பர் நகரம் இரண்டுமே சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவுகளா?

“இளம் வயதிலேர்ந்தே நிறைய புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் எனக்கிருந்தது. சாண்டில்யன், அம்புலிமாமான்னு வாசிக்க வாசிக்க, அடுத்தக் கட்டமா ருஷ்யா படைப்புகள் அறிமுகம் கிடைச்சது. என்னுடைய நண்பர், பொறியியல் கல்லூரி மாணவர் அவர். விடுதியில் தங்கிப் படித்தார். அவர் அறையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. மரிய பிரிலேட ஏவா எழுதிய ‘லெனினுக்கு மரணமில்லை’. பெரிய புத்தகம் ரொம்ப நாள் வச்சி படிக்கலாம்னு அதை எடுத்துக்கிட்டு வந்தேன். அதுக்கு முன்னாடி சார்லஸ் டிக்கின்ஸனோட இருபெரும் நகரங்கள் நாவலை வாசிச்சிருக்கேன். ஆனா இது வேறு ஒரு உலகத்தைப் பேசியது. இருபெரும் நகரங்கள் பிரெஞ்சு புரட்சி பத்தி பேசுனது. ஆனா இது இன்னொரு தளத்தைப் பத்தி பேசியது. உழைக்கும் மக்களின் துயரங்களை குறைப்பதான அரசியலைப் பேசியது. அந்தப் புத்தகம் பதின் பருவத்துல  இதுவரை இல்லாத பதட்டத்தை உண்டாக்கியது. அது நாவலா, வரலாறா என்கிற குழப்பமும் இருந்தது. நூல் முழுக்க புகைப்படங்கள் இருந்தன. அந்த நூலின் மீதான பிரமிப்பில் அதை 10, 15 முறை வாசிச்சிருப்பேன். இது எங்கே பிரசுரிக்கப்பட்டது என்பதைப் பார்க்கும்போது சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது என இருந்தது. சோவியத் நாடுங்கிறது ரஷ்யாவாச்சே. அங்க எப்படி தமிழ் புத்தகம் என யோசிக்கும்போது அது ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. பிறகு மதுரை முகவரி ஒன்றும் சென்னை நியூ சென்சுவரி புக் ஹவுஸ் முகவரியும் போட்டிருந்தார்கள். நியூ சென்சுவரி புக் ஹவுஸ் போனேன்.  தாய், வீரம் விளைந்தது என மிகக் குறைந்த விலையில் பல சோவியத் படைப்புகளை வாங்கிவந்தேன்.  ஐந்து ஆண்டுகாலம்..ஆட்டிப் படைத்த படைப்புகள் அவை. என் பள்ளி ஆசிரியர்கள் யாரும் நினைவில் இல்லை. எனக்கு இந்த நூலாசிரியர்கள்தான் ஆசான்கள் ஆனார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு  படிச்சதும் செப்பு காசை அமிலத்துல போட்டு எடுத்தது போல இருந்தது. தொடர்ந்து மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வாசிச்சேன்.

ஒரு கட்டத்துல நண்பர்கள் எப்பப்பாரு ஏண்டா வாயில நொழையாத பேரா சொல்ற தமிழ் இலக்கியங்களும் வாசின்னு சொன்னதால மீண்டும் தமிழ் படைப்புகளை வாசிச்சேன். நகரத்துல இருந்திருந்ததாலோ என்னவோ எதுவும் ரசிக்கிற மாதிரி கிடைக்கல. பூமணியோட பிறகு  முற்றிலும் வேறு அனுபவமா இருந்தது. அதன் வழியா இலங்கை எழுத்தாளர் கே. டானியல் புத்தகங்கள், பல விடயங்களைப் புரிய வைத்தன. வா. ரா.வின் படைப்புகள், ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ இந்திய சமூகத்தை அப்பட்டமாக உணர வைத்தன. அதன் பிறகு படிப்பது என்பது நமக்கு வெறும் பொழுதுபோக்கு இல்லன்னு தோணுச்சி. வாசித்தலும் அறிதலும் சமூகத்தை ஊடறுத்து பார்க்கிற நிலைமையை உண்டாக்குச்சு. கண்ணிகள் புலப்பட, நான் எழுதணுங்கிற ஆசை உண்டானது. சிஐடி விட்டல்ங்கிற பேர்ல நாலைந்து நாவல்கள் எழுதினேன். அத்தனையும் எழுதி கிழிச்சிட்டேன்.

அதற்கு முன்பே தண்டல் காரன் மாதிரி ஒரு சின்ன நோட்ல கவிதைகளை எழுதி, கக்கத்துல வெச்சிக்கிட்டு அலைவேன். நண்பர்களுக்கு காதல் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன்.கல்யாணம்னா வாழ்த்து கவிதை எழுதிக்கொடுப்பேன். கலீல் கிப்ரானோட ஒரு காதல் பறவையின் முறிந்த சிறகுகள் பெரியார் தாசன் மொழிபெயர்ப்புல வந்த கவிதை வாசிச்சேன். அப்போது தான் நான் கவிதை எழுதுவது நமக்காக என முடிவெடுத்தேன். நான் எழுதிய கவிதைகளையெல்லாம் கிழிச்சி போட்டுட்டேன். பிறகு சிறுகதை எழுதினேன். ஆனந்த விகடன், குமுதம் மாதிரியான பத்திரிகைகளுக்கு அனுப்பி வெச்சேன். அப்போ சிறுபத்திரிகை தொடர்புகளெல்லாம் கிடையாது. அனுப்பினதெல்லாம் உங்கள் படைப்புகள் வெளியிடமுடியாதுன்னு கார்டு குறிப்போட திரும்பி வரும்.

92க்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பிரச்சினை. ரொம்ப வெறுமையான காலம். ஒன்னு திரும்பவும் வாசிக்கணும். இல்ல எழுதணும். அப்பதான் இதிலிருந்து விடுபட முடியும்னு எனக்குப் பிடித்தமான மொழிபெயர்ப்புகள் படிக்கிறேன். படிக்க முடியலை. எழுத உட்கார்ந்தேன். நம்முடைய பாட்டன் கிராமத்திலிருந்து எப்படி நகரத்துக்கு வந்தான்ங்கிறதை எழுதணும்னு எழுதத் தொடங்கினேன்.  கூடுதல் தகவல்களுக்காக உறவுகள்கிட்ட நிறைய தரவுகளை சேகரிச்சேன். அதுதான் அறுபடும் விலங்கு நாவல் எழுதிய பின்னணி.  நான் எழுதியதை படிச்சிப் பார்த்தேன். முந்தைய எழுத்துக்கள் போல இல்ல, நான் படிச்ச, என்னை உலுக்கிய நாவல்கள் போல அது இருந்தது. நண்பர்கள் கையில கொடுத்தேன். ஆர்வத்துல ஏதோ எழுதியிருப்பேன்னு நினைச்சோம், நீ ஏதோதோ ஏரியாக்களை தொட்டிருக்கன்னு சொன்னாங்க.  சரி, இதைப் புத்தகமாக்கலாம்னு முயற்சி பண்ணேன். ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆனது அது பிரசுரமாக, அது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது”.

முதல் நாவல் பிரசுர முயற்சிகள்… வெற்றி-தோல்விகள் பற்றி சொல்லுங்களேன்…

“நான் படிக்கிற நூல்களில் பதிப்பாளர் எழுதிய பதிப்புரைகளைப் படிச்சி, இதுக்காகவெல்லாம் இவங்க சிலாகிச்சிருக்காங்களே… நம் நாவலை நிச்சயம் பாராட்டுவாங்க, பிரசுரிப்பாங்கன்னு பதிப்பகம் பதிப்பகமா ஏறி இறங்கியிருக்கேன். கொடுத்துட்டுப் போங்க, நாங்க படிச்சி பார்க்கிறோம்னு சொல்வாங்க. அடுத்த நாள் வாங்க, அடுத்த வாரம் வாங்கன்னு மூணு மாசம் கழிச்சி வாங்கன்னு சொல்லுவாங்க. நான் விடாம போயிக்கிட்டே இருப்பேன். பக்கங்கள் நிறைய இருக்கு இன்னும் படிக்கலைம்பாங்க..வேணும்னா நீங்களே எடுத்துட்டுப் போங்கன்னு தந்துருவாங்க. விழுப்புரத்துல ஒரு எழுத்தாளர் இருக்காரு, அவர்க்கிட்ட படிக்கக் கொடுத்திருக்கோம்னு சொல்வாங்க. நானும் நம்பிக்கையா காத்திருப்பேன். 365 நாளும் அப்படித்தான் கடக்கும். ஆர்வத்துல கற்பனையா “இந்த பதிப்பகத்திலேர்ந்து என் நாவல் வரப்போகுது”ன்னு நண்பர்கள்கிட்ட சொல்லுவேன்.

2007-ஆம் வருடம் மூன்று வருடம் வைத்திருந்து திருப்பி தந்த ஒரு பதிப்பகத்துலேர்ந்து கையெழுத்துப் பிரதியை கோபமா வாங்கிட்டு கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் நோக்கிப் போயிட்டு இருந்தேன்.  வழியில் என்னைப் பார்த்த நண்பர் அமலன், என்னை அழைச்சிட்டுப் போய் டீயும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொடுத்து என் பசி மயக்கத்தைப் போக்கி, என்னாச்சுன்னு கேட்டார். நான் விஷயத்தை சொல்லவும் என்னை அன்னிக்கு ஆறு பதிப்பகங்களுக்கு அழைச்சுட்டுப் போனாரு. யாரும் பிரசுரம் பண்ண தயாரா இல்லை. ஆனா எல்லோரும் ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. 40 ஆயிரம் ரூபா வரைக்கும் செலவாகும்னு. அந்த நண்பர் உனக்கு ஏதாவது இலக்கிய அமைப்பு தெரியுமான்னு கேட்டாரு. எனக்கு யாரும் தெரியாதுன்னு சொல்லவும். யாழினி முனுசாமி தோழர் பத்தி சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். எல். எல். ஏ. பில்டிங்ல முரண்களரி கூட்டம் நடக்கும். அங்க நடந்த எல்லாக் கூட்டங்களிலும் நான் கலந்துக்குவேன். நாவல் எழுதி பல வருசம் கழிச்சி இப்பதான் முதல்ல அதப்பத்தி பேசறாங்கன்னெல்லாம் எழுத்தாளர்கள் மனக்குறையோடு பேசுவாங்க. இந்தக் கட்டத்துல ‘அறுபடும் விலங்கு’ கையெழுத்து பிரதியை யாழினி முனுசாமி தோழர்க்கிட்ட படிக்கக் கொடுத்தேன். அதைப் படிச்சிப் பார்த்துட்டு நல்லாயிருக்கு இத நாமளே போடலாம்னு சொன்னார். இதுதான் என் வாழ்க்கையில கேட்ட மிகவும் மகிச்சியான சொல். அதைப் பேசியும் மூணு வருசம் ஓடிவிட்டது. ஆனாலும் நம்பிக்கையோடு இருந்தேன்.

DSCN5149

ஒரு கட்டத்துல நானும்கூட அவ்வளவு செலவு செய்ய முடியாது; குறிப்பிட்ட தொகை நீங்க கொடுத்தா உதவியா இருக்கும்னு அவர் சொல்லவும். என் தங்கையிடமிருந்து வாங்கி 10 ஆயிரம் ரூபா கொடுத்தேன். இன்னும் பணம் தேவைப்பட்டது. என்னோட வழக்கறிஞர் நண்பர் ஒருத்தர் தோழர் செல்வப் பெருந்தகை அழைச்சிட்டுப் போனார். நாவலைக் கொடுத்துட்டுப் போங்க, என் உதவியாளர்கிட்ட கொடுக்கிறேன். அவர் படிச்சி சொன்னதும் நான் உங்ககிட்ட பேசறேன் சொன்னார். அந்த நண்பர் நாவல் பெரிசா இருக்கவும் நேரம் ஒதுக்கிப் படிக்க சங்கடப்பட்டுக்கிட்டு தள்ளிவெச்சிட்டாரு. நான் தினமும் போன் போட்டு கேட்பேன். ஒரு கட்டத்துல என் தொந்திரவை சகிக்க முடியாம நாவலைப் படிச்சிட்டார்.  அவருக்குப் பிடிச்சிருந்தது. என் கைல அரைமணி நேரம் பேசினார்.  இந்த நாவல் வெளிவந்தா நான் 100 புத்தகம் வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பேன்னு சொன்னார். அப்புறம் தோழர் செல்வப்பெருந்தகை 10 ஆயிரம் ரூபா கொடுத்தார். யாழினி முனுசாமி தோழர் மீதி பணத்தைப் போட்டு  புத்தகம் போடக் கொடுத்தோம். வீட்டு செவத்துல வரைஞ்ச ஓவியங்கள்ல ஒன்னை அட்டைப்படமா போட்டோம்.

நண்பர்கள் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க, நாவல் எந்த விதத்துல நல்லாயிருக்குன்னு யாரும் சொல்லல. ஆனா எனக்கு இன்னமும் இது நாவல்தானான்னு சந்தேகம்..முன்னுரைக்காக பாண்டிச்சேரி ரவிக்குமார் தோழர்கிட்ட யாழினி முனுசாமி தோழர் கொடுத்திருந்தார். நாவலைப் படிச்சிட்டு அவர் முன்னுரை எழுதி வெச்சிருந்தாரு ஆனா கொடுக்கலை. நேர்லதான் கொடுக்கணும்னு சொல்றாரு. அந்த சமயம் அவரோட நேருங்கிய உறவினர் மருத்துவமனையில் இருக்காங்க. மருத்துவமனைக்கே வர சொல்லிட்டார். போனா அங்க நெருக்கடியான நிலை. அந்த சூழல்லேயும் அவர் உங்ககிட்ட அரைமணி நேரம் பேசனும்னு வாங்கன்னு மருத்துவமனை மாடிக்கு அழைச்சுட்டுப் போய் நிறைய பேசினார். அவர் பேசப் பேச என்னுடைய 10 ஆண்டு காத்திருந்த துயரம் எல்லாம் காணாமல் போயிடுச்சி. 10 ஆண்டு துயரத்தை அரை மணி நேரத்துல அடிச்சு நொறுக்கிட்டாரு. குலுங்கி குலுங்கி அழுதுட்டேன். இதுக்கு தானேப்பா இத்தனை நாள் ஏங்கினோம்னு ஒரு உணர்வு. முகம் தெரியாத ஒருத்தர் பத்தி இவ்வளவு எழுதியிருக்காரேன்னு நினைச்சேன். இன்னும் எழுதறேன்னு சொன்னாரு. போதும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன். நாவல் வந்து சேர்ந்தது.

நாவல் வெளியீட்டு விழா வேறு இரண்டு புத்தகங்களோட என்னுடையதும் ஒன்னா நடந்தது. கார்க்கி தப்பா எடுத்துக்கக் கூடாது. நாவல் பெரிசா இருக்கிறதால படிக்க முடியலைன்னு பிரபஞ்சன் சொல்லிட்டார். நான் கேட்டுக்கிட்டதால தோழர் ரவிக்குமாரே விழாவில் நாவல் பத்தி பேசினார். 10 ஆண்டு நான் பட்ட பாடுகளை ஒரு சொற்பொழிவே நிகழ்த்திட்டேன். எல்லா வலியையும் அங்க கொட்டிட்டேன். அறுபடும் விலங்கு தமுஎகச விருதையும், சீதம்மாள் கலை இலக்கிய விருதையும் பெற்றது.  அறுபடும் விலங்கு நிறைய பக்கங்கள்ல இருந்ததுதானே பிரச்சினையா இருந்தது குறைவான பக்கங்கள்ல என்னோட எழுத்து திறமையை சோதித்து பார்ப்போம்னு எழுதினது கறுப்பு விதைகள்.. 230 பக்கம்தான். என்னால அதை புத்தகமாக்க நான் நிறைய அலையவேண்டியிருக்கல. என்சிபிஎச் ல கொடுத்தேன். அவங்க ஒரு பெரிய எழுத்தாளர்கிட்ட கொடுத்து கருத்து கேட்டாங்க. இது புனைவு வகை நாவல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் படியான நாம் தினமும் சந்திக்கும் எளிய மனிதர்களை கதாபாத்திரங்களாகக் கொண்ட நாவல். நல்லாயிருக்குன்னு அவர் குறிப்பு எழுதி அனுப்பியிருந்தார். அதையேதான் பின் அட்டையில் போட்டிருந்தோம். அவர் வேற யாருமில்ல பொன்னீலன் தான். ஆனா அவர் பேர் போடாமதான் அந்தக் கருத்து வெளியானது. அறுபடும் விலங்கு புத்தகமா வந்த 10வது நாள் கறுப்பு விதைகள் நாவல் புத்தகமா வந்தது. ஒரு வேலையை நம்பிக்கையோடு செஞ்சா அது காலம் கடந்தும் பேசப்படும் என்பதை நான் புரிஞ்சிக்கிட்டேன்”.

அறுபடும் விலங்கு, கறுப்பு விதைகள் நாவல்களைக் காட்டிலும் மூன்றாவதாக வந்த கறுப்பர் நகரம்  கவனிக்கப்பட்டது. கறுப்பர் நகரம் நாவலின் பின்னணியை எப்படி தீர்மானித்தீர்கள். அதன் பின்னணியைச் சொல்ல முடியுமா?

“தீவிரமா எழுதற பண்பு மேலோங்கியிருந்த காலக்கட்டத்துல ஒரு கிளியையும் ஒரு கிழவனையும் சேர்த்து வச்சி ஒரு கதைக்களம் கிடைச்சது. ஒரு கிளி ஒன்னு எங்க வீட்டுக்கு பறந்து வந்து விழுந்துச்சி. அது பேசலை. பறக்கவும் முடியலை. அதை ஊமைக்கிளின்னு சொல்லி அதோட அம்மா, அப்பா துறத்திட்டாங்கன்னு சொல்லி நானும் என் மகனும் அதை கூண்டுல போட்டு வளர்த்தோம். கூண்டுல அது வளர்ந்து பெரிசாயிடுச்சி. ஒரு அட்டைப் பெட்டிய கூண்டா மாத்தி கிளியை அதுல விடும்போது கிளி பறந்துருச்சி. நானும் என் மகனும் ரொம்பவும் வருத்ததோட இருக்கும்போது நாலு வீடு தள்ளி கிளி விழுந்துருச்சின்னு சொல்லி எங்க வீட்லேயே கொண்டு வந்து விட்டுட்டாங்க. பறக்கமுடியாம இருக்கு, எங்கேயாவது விழுந்து சாகப் போகுதுன்னு சொல்லி நாங்க ரெக்கையை வெட்டிட்டி அதை வளர்த்தோம். கொஞ்ச நாள்ல கிளி கத்த ஆரம்பிச்சது. கிளி ஊமையில்லன்னு என் மகன் சந்தோசப்பட்டான். அடுத்த கட்டமா தினமும் காலை 6 மணிக்கு கிளி சத்தம் போட்டு கத்த ஆரம்பிச்சது, இந்த சத்தத்தைக்கேட்டு தூரத்தில் ஒரு கிளி சத்தம் போடத் தொடங்குச்சு. சுதந்திரமா பறந்து திரியுற கிளி ஒன்னு காலைல 6 மணிக்கு சரியா வந்து ஏதாவது மரத்துல உக்காந்து பதில் குரல் கொடுக்கும்.

கொஞ்சம் கொஞ்சமா எங்கோ கேட்ட சுதந்திரமான கிளியோட சத்தம் எங்க வீட்டு முருங்கை மரத்துல கேட்டது. சரி அந்தக் கிளியோட இந்தக் கிளியை விளையாட விடுவோமேன்னு விட்டோம். இரண்டு மாதம் தினமும் இப்படித்தான் நடந்தது. ஒரு நாள் உறவினர் கல்யாணத்துக்குப் போயிட்டு இந்தக் கிளி வருமேன்னு நான் மட்டும் முன்னாடியே வந்துட்டேன். அந்தக் கிளியும் வந்துடுச்சி. இந்தக் கிளி கூண்டிலிருந்து வேகமாக பறக்க எத்தனிச்சு பறக்க முடியாம மாடி கைப்பிடியிலிருந்து முருங்கை மரத்துமேல விழுந்துச்சு  அங்கேருந்த பூனை அதைப் பிடிச்சிடிச்சிருச்சி.. அடுத்த நிமிசமே பாஞ்சி துரத்திவிட்டாலும் அதைக் காப்பாத்த முடியலை..நகம் பாய்ஞ்சதால இறந்துடுச்சி. ரெக்கையை வெட்டினது தப்பு. ரெக்கையை வெட்டினா வளராது. இறகைப் பிடிங்கணும்னு பிறகு தெரிஞ்சது. இதை தெரியாம அந்தக் கிளியைப் பாழ் பண்ணிட்டோமேன்னு ஒரு உணர்வு. மகனும் ரொம்ப நாள் கிளி எங்கப்பான்னு கேட்டுக்கிட்டு இருந்தான். அந்தக் கிளியையும் கிழவனையும் வெச்சி ஒரு கதை எழுதணும்னு விதை விழுந்தது இந்த சம்பவத்தாலதான்.

அப்ப யாழினி முனுசாமி தடாகம் வெப்சைட்ல என்னை ஒரு தொடர் எழுதக்கேட்டாங்க என்னால இப்ப எழுத முடியலை நீ எழுதறையான்னு கேட்டாரு. நம்ம திறமையை செக் பண்ண ஒரு வாய்ப்புன்னு நினைச்சு சரின்னு சொன்னேன். கிழவன் யாருன்னு தீர்மானிச்சிட்டேன். எழுதத் தொடங்கினேன். வார வாரம் அது தொடரா வந்தது. ஆனா ஏனோ அவங்க தொடர்ந்து போட அவங்க ஆர்வமாயில்ல. அதனால என்ன தொடர்ந்து நான் ஆர்வமாயிட்டேன். ஆனாலும் அந்தக் கதையில கிளி வரவே இல்லை. .. ரெண்டு மாதம் முடிவை எழுதாம வச்சிருந்தேன். ஏன்னா முடிவு ஆராயிக்கு நேர போற துன்பம் ஆனா எழுதித்தானே ஆகணும். கதை செப்பமா வந்துடுச்சி..கிழவன் தனக்கான வாழ்க்கையை அவன் வழியில வாழ்ந்து முடிச்சிட்டான். இதுல கிளி வரவேண்டிய அவசியம் இல்லை. பாரதி புத்தகாலயம் நாவலை பிரசுரிச்சாங்க. முதல் மூன்று ஆண்டுகள் வாசிச்ச ரெண்டு மூணு பேரு என்னாண்ட பேசுவாங்க..ஆனா ஒரு பரந்த வெளியில விவாதம் எதுவும் நடக்கலை.. தடாகத்துல சலனமற்று இருக்கிற தாமரைப் போல அப்படியே இருந்தது.”

கறுப்பர் நகரம் நாவலில் உண்மைத்தன்மை அதிகமாக உள்ளது. அது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதா?

கறுப்பர் நகரம்  இடம் சார்ந்த நாவல். சித்ரா டாக்கீஸ்லேர்ந்து பேசின் பிரிட்ஜ் மின் நிலையத்துக்கு இடைப்பட்ட நீண்ட பகுதியின் தொடர்ச்சியான இடம்தான் நாவல் களம். அந்த இடத்தின் வாழ்வியல்தான் கதைக் கரு. 13 வயதுக்கு முன்னாடி என்ன சந்திச்சனோ பார்த்தேனோ அதோட பதிவு..வரலாற்றின் மீதான புனைவுதான் இது. இடங்கள் முழுக்க முழுக்க உள்ளதுதான்.  அந்த இடத்தில் குடியிருப்புகள் இப்ப இல்லை.. பூங்காக்களா மாறிடுச்சி. குப்பை மேடாகவும் சில இடங்கள் இருக்கு. அந்த நாவல் கிழவன் ஜெயிலேர்ந்து வந்து ஒரு குப்பை மேட்ல நின்னுக்கிட்டு எங்கடா என் ஊருன்னு கேட்பான். குப்பையெல்லாம் பறந்து அவன் வாழ்ந்த குடிசை பகுதி வரும்.  நாவலில் வருகிற பெயர்கள்கூட ஒரிஜினலானதுதான். செங்கேணி, ஆராயி எல்லாமே. நபர்களின் பெயர்களை மாற்றியிருப்பேன்.  எல்லோருமே நான் பார்த்த முகங்கள்தான்.. மாட்டிறைச்சி கடை, மாவுலி, பாளையம், கோவிந்தம்மாள்.. வரலாறுதான் அது..

கணவன் மனைவிக்கான காதல்… எல்லாமே இங்க சத்தமா இருக்கும்; அதுல உண்மையிருக்கும். 80களுக்குப் பிறகு அந்த இடங்கள் மாறிவிட்டன. முன்னுரையில் இதைப் பற்றி நிறைய சொல்லியிருப்பேன்”

இதுவரை தமிழ் இலக்கியம் பதிவு பண்ண விளிம்பு நிலை மக்களோட வாழ்க்கை எப்படியிருந்தது? உங்களை ஈர்த்த அப்படியான படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் யார் யார்?

“தமிழில் சென்னை குறித்த இலக்கியங்கள், குறிப்பாக வட சென்னை குறித்த உண்மைக்கு நெருக்கமான பதிவுகள் இங்கே இல்லை. குறிப்பா ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு.. ஏதோ பொருட்காட்சியைப் பார்த்த ஒருத்தரோட எழுத்தாதான் இருக்கும். ஆனா நான் அந்தப் பொருட்காட்சி பொருளா வாழ்ந்திருக்கேன். இங்கே இருக்கிற யதார்த்த கள நிலவரம் வேற.. 70 கள்ல ஒரு உடல் மொழியும் பேச்சும் இந்த மக்களிடம் இருந்தது; 80.கள்ல இருந்த உடல் மொழியும் பேச்சும் வேற. 90 கள்ல இருந்தது வேற; 2000க்குப் பிறகும் அது மாறியிருக்கு. குந்திக்கினு.. இஸ்துகினு.. ஏஞ்சிக்கினு.. இருக்கிறன்னு லூஸ் மோகன் சொல்லி கமல் பேசின மொழி மாதிரி…தவறான புரிதல் இங்க நிறைய இருக்கு.

இங்க இருக்கிறவங்களல்லாம் அதிகபட்சம் 100 வருசத்துக்கு முன்னாடி இங்க வந்தவங்களா இருப்பாங்க. ரெண்டு தலைமுறையாதான் நாங்க இங்க இருக்கோம். என் தாத்தாவும் இங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு கிராமத்துலதான் இருந்தவர்தான். அங்க வந்து பேசின மொழியில முழுமையான உரையாடல் இருந்திருக்காது. தேவையின் பொருட்டோ, நிர்பந்தத்தின் பொருட்டோ அவங்க இங்க வர்றாங்க. வெள்ளையர்கள்தான் வேலைத் தர்றாங்க. அறைகுறையா புழக்கத்தில் இருக்கிற வார்த்தைகளை இவங்களும் அவங்களும் பேச, கூடவே இங்கிருந்த இஸ்லாமியர்கள், தெலுங்கர்கள் பேசிய மொழியும் சேர்ந்து அது ஒருமாதிரி வடிவத்துக்கு வருது. என்னோட தேடல்ல நான் தேடி கண்டடைஞ்ச சென்னை மொழிக்கான காரணம் இதுதான். அதோட வட சென்னைங்கிறது ஒரு பகுதி மட்டுமல்ல,  ஒரு பகுதிக்குள் பல பகுதிகள் இங்க இருக்கு.

பழைய அழுத்தமான கொச்சை மொழி மாறி ஓரளவு சென்னை மொழியுடன் பொது மொழி வருகிறது. நான் கொஞ்சம் ஆவேசம் அடைஞ்சா அந்த மொழி பேசுவேன். மத்தபடி  நான் வாசிக்கிறேன், எழுதறேன், வேறு பகுதிகளைச் சேர்ந்த நண்பர்கள்கிட்ட பேசறேன்ங்கிறதால சென்னை மொழி என்னைவிட்டு போயிடுச்சி. ரிக்‌ஷாக்காரன் பேசறதும் சாப்பாட்டு கூடைக்காரம்மா பேசறதுதான் சென்னை மொழின்னு சொல்லிடமுடியாது.  அது ஒரு தட்டையான பார்வை. கறுப்பர் நகரத்தை எத்தனை திட்டமிட்டு விழிப்பு நிலையில் எழுதியிருந்தாலும் அது தான அது அதுக்கான கலை நயத்தை கட்டமைச்சுக்கிட்டது. விநாயக முருகன் நாவல்கள், பாக்கியம் சங்கர்னு சென்னை பத்தி இப்ப வர ஆரம்பிச்சிருக்கு. மத்தபடி இதற்கு முன்பு சென்னை குறித்து உண்மையான பதிவை நான் வாசிச்சதே இல்லை.

பெருமிதமா சொல்வேன்… வடசென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம். வட சென்னைங்கிறதே ஒரு பாவனைதான்.. இங்க வியாசர்பாடியிலேர்ந்து சைதாப்பேட்டை பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் மேற்குல அயனாவரம் இதுதான் சென்னை. மற்ற பகுதிகள் சமீபகாலத்தில் உருவானவை. இங்கே அண்ணாநகர் பத்தியும் மயிலாப்பூர் பத்தியும் பெசண்ட நகர் பத்தியும் தான் எழுதுவாங்க. என்னைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் எழுதியவை ஆபாசம். நான் கொடுக்கிறன் நீ வாங்கிக்கோன் ஏதோ எழுதினது போல இருக்கு. எல்லா மட்டத்திலேயும் சமூகத்திலேயும் எம்ஜிஆர் மேல விருப்பமா பெண்கள் இருந்திருக்காங்க. ஆனா சித்தாளுதான் ஜெயகாந்தனுக்கு கிடைக்கிறாங்க. உண்மையில் எத்தனை சித்தாள்கள் எம்ஜிஆர் படுக்கைக்குப் போனாங்க. எம் ஜி ஆர் படுக்கைக்கு உண்மையிலே போனவங்கெல்லாம் எந்த சமூகத்திலிருந்து வந்தவங்க. எம்ஜிஆர் பனியனைப் போட வெச்சுதான் தன் கணவனை சித்தாளு அணைச்சான்னு சொல்றதெல்லாம் ஆபாசம். இப்படி எழுதினவங்களெல்லாம் வருத்தைத்தான் உண்டு பண்ணாங்க. அந்த உளவியலேர்ந்துதான் கறுப்பர் நகரத்தையும் அறுபடும் விலங்கையும் எழுதினேன்.”

அழுத்தமான நாவல்களை எழுதியிருக்கீங்க…ஆனா தமிழ்ச்சமூகம், இலக்கிய-வெகுஜென ஊடகங்கள் எதுவும் இந்நாவல் குறித்து பேசவில்லையே…இந்த வருத்தம் உங்களுக்கு உள்ளதா?

“தமிழ் இலக்கிய உலகம், ஒரு பாவனையான உலகம். ஒரு பெரிய நட்சத்திர பிம்பத்தைக் கட்டமைக்கிறது, அதை வியாபரமா மாத்துறதுதான் இங்க நடக்குது. யாருன்னா ஒரு ஜாம்பவான் இங்க உலக இலக்கியம் வரலைன்னு பேசினா வாயிலே ஒன்னு போடனும்னு இருக்கும். எங்க நீங்க வழிவிடுறீங்க.. உலக இலக்கியம் எதுன்னு ஒரு ஸ்கேல் வெச்சி அளபீங்களா என்னா? இங்க தட்டையான புத்தகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டிருக்கு. மீடியாக்கள் அதப்பத்தி விவாதிக்கும்.. இது தெரிந்த கதை தானே, ‘கறுப்பர் நகரம்’ இந்த அளவுக்கு வந்தது பெரிய விசயம்தான். எழுத்தாளர் விநாயக முருகன் தான் முதன்முதல் கறுப்பர் நகரம்  நாவல் பத்தி எழுதினார். அந்தளவு இலக்கிய நேர்மை பல பேரிடம் கிடையாது.எஸ்.ரா கூட முக்கியமான நாவல்கள் பட்டியல்ல கறுப்பர் நகரத்தையும் சேர்த்திருந்தார்.  மற்றபடி கறுப்பர் நகரத்தைப் பத்தி விமர்சனமா காத்திரமா இங்க யாரும் பேசினதில்லை. ஆனால் கறுப்பர் நகரம் குறித்த முணு முணுப்புகள் கேட்டபடியே தான் இருக்கிறது. ஒரு நாவல் வெளிவர்றதுக்கு முன்னாடியே அரை பக்கத்துக்கு நாளிதழ்கள்ல எழுதப்படுது. அந்த நாவல்களை நானும் வாங்கிப் படிக்கிறதுண்டு. அதுல ஒன்னுமே இருக்காது”.

கரன் கார்க்கி தன் இணையருடன்
கரன் கார்க்கி தன் இணையர் அபிராமியுடன்

விளிம்பு நிலை சமூகத்திலிருந்து எழுதுவது இந்த ஒதுக்குதலுக்குக் காரணமா?

“அதுவும் ஒரு காரணம். கறுப்பர் நகரம் நாவலைப் படித்த ஒருவர், வெளியூர்க்காரர் என்னைச் சந்தித்தார்.  அவர் சென்னையில் 80கள்ல வேலைப்பார்த்திருக்கிறார்.   நான் வாழ்ந்த வாழ்க்கை அது, மஞ்சள் பூசிய கறுப்பு முகம் எழுதியிருக்கியே ஆராயி, அந்த ஆராயியை நான் பார்த்திருக்கேம்பான்னு விசிம்பினார். அவர் கண்ணீர் என் கட்டை விரல்ல பட்டது.  ஆராயியை இப்படிக் கொன்னுட்டியே பான்னு எனக்கு சில புத்தகங்கள் வாங்கி பரிசளிச்சார்.  இந்த சமூகம் இந்த எளிய மனிதர்களை கொல்லுது. ஆனால், அவர்கள் பண்பானவர்கள்; அன்பான மனிதர்கள், யாரையும் சுரண்டி பிழைக்கணும்னு அவங்களுக்கு ஆசையே இல்ல. எந்த அறிவும் இல்லாம  யதார்த்தமா எதிர்த்து கேள்விக்கேட்கிறாங்க, எந்த பின்புலமும் இல்லாம கத்துக்க விரும்புறாங்க. அவங்களை நீங்கதான் பண்பாடு, கலாச்சரம் சொல்லி கொல்றீங்க..ஒதுக்குறீங்க.”

விளிம்பு நிலை மக்கள் பண்பாடு அற்றவர்களாக தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்தென்ன?

“மனிதர்கள் பிறப்பிலேயே யோக்கியமானவர்கள்தான். ஒழுக்கமாக, காதலா, பாசாங்கு இல்லாத மனிதனாதான் அவன் வளர்றான். ஒரு மனிதன் பிரச்சினையாகிறானென்றால் அவனுடைய  புறச்சூழல் எங்கோ சிக்கலா இருக்குன்னு அர்த்தம். செங்கேணியும் ஆராயியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்க, சேர்ந்து வாழணும் நினைச்சாங்க. வேற சில அழுத்தங்கள் இருக்கு..தப்பிச்சு போய் வாழறாங்க.. அன்பு மட்டும் இருக்கும்போது கழுத்துல எதுக்கு ஒரு அடையாளம் வெச்சிக்கணும்?

அவங்க இயல்பா வாழறாங்க. ருஷ்ய இலக்கியங்கள் தான் எனக்கு முன் மாதிரி. அதில் கற்று தான் நான் எழுத ஆரம்பிச்சேன். இவ்ளோ பெரிய வாழ்க்கையிருக்கு இங்கே. ஆனா ஜெயகாந்தன் மாதிரியானவங்க… இலக்கியம்ங்கிற பேர்ல உழைக்கும் மக்களை எப்படி சித்தரிக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை ஒழுக்கக் கெட்டவர்களாக காட்டுவது இங்கே எளிதாக இருக்கிறது. இதே சமூகத்தில் ஒழுக்கத்துக்காக செத்துப் போன பல பெண்களைப் பார்த்திருக்கேன். கண் முன்னாடி எரிஞ்ச பெண்களைப் பார்த்திருக்கேன். இந்த சமுதாயத்தில் எல்லோருக்கும் ஒரு பண்பாடு இருக்கு. இது ஆறு, ஏழு லேயர் உள்ள சமூகம். ஒரு அடுக்கை மட்டும் பார்த்துவிட்டு மற்றதெல்லாம் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.  ரோட்டோரம் இருக்கிறவங்கள்லாம் மிகச் சமீபத்தில வந்தவங்களா இருப்பாங்க..ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குதான் பண்பாடு, அரசியல். வரலாறு இருக்குன்னு சொல்றது காலம் காலம் ஏமாற்றுவதற்காக, சுரண்டு வதற்காக சொல்லப்படுவது. என்னைச் சுற்றியும் பண்புள்ள மனிதரையே நான் அதிகமாகப் பார்க்கிறேன். எல்லா சமூகத்திலும் பண்பற்ற மனிதர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் என்று சொல்வதே சுரண்டும் பண்புதான்”.

கறுப்பர் நகரம் நாவலில் செங்கேணியும் ஆராயியும் தாலி கட்டி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார்கள்.  அது குறித்து நாவலில் புரட்சியாகவோ, உடைப்பாகவோ அல்லாமல் அச்சமூகத்தில் இயல்பாக நடப்பதாகவே காட்டப்பட்டுள்ளது. இப்போது தாலி இல்லா திருமணம் என்கிற ஒரு பண்பாட்டுச் சூழல் நிலவுகிறதா?

“பொது சமூகத்துக்கு வேணும்னா அது அதிர்ச்சியா இருக்கும். இங்க இதுதான் இயல்பு. செங்கேணி நல்லவன், பிழைப்புக்கு கட்ட வண்டி வெச்சிருக்கான். அவன் வேலையை அவன் பார்க்கிறான். அவ, செங்கேணியை விரும்புறா. இரண்டு பேரும் வாழ நினைச்சு வேற இடத்துக்குப் போறாங்க. அங்க போய் தாலியெல்லாம் கட்டாமதான் வாழறாங்க. ஆனா அவங்க உலகின் எந்த உயர்ந்த காதலையும் விட குறைவற்ற விதத்தில் தங்கள் காதல் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது அவங்களுக்குப் பெரிய விசயமே இல்லை. உடைப்பெல்லாம் இல்லை. அவங்களை சமூகம்தான் ஓடிப்போயிட்டாங்கன்னு சொல்லுது. ஒருத்தரை ஒருத்தர் விரும்பி வாழப் போயிருக்காங்க. அதை ஓடிப்போயிட்டாங்கன்னு சொல்றதுக்கு நமக்கென்ன யோக்கியதை இருக்கு? இப்படி ஓடிப்போயி தாலி கட்டாம சேர்ந்து வாழ்ந்து பிள்ளைங்க எல்லாம் பெரிசான பிறகு ஊர் உலகத்துக்காக தாலி கட்டிக் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

வட்டார இலக்கியங்கள் சாதி இலக்கியங்களாக உள்ளது என்கிற விமர்சனம் இருக்கிறது. சென்னையின் விளிம்பு மக்களின் இலக்கியம் தலித் இலக்கியம் என்கிற பிரிவில் சேருமா?

“தலித்துங்கிறது சாதி கிடையாது. நசுக்கப்பட்டவன், வீழ்த்தப்பட்டவனை குறிக்கும் சொல் அது. நால்வர்ணத்துக்குள்ள இருக்கிறவங்கதான் சாதிக்குள்ள வருவாங்க. நால் வர்ணத்தை ஏற்காதவன்தான் தலித். உழைக்கும் விளிம்பு மக்கள் சாறு பிழியப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள். அவங்களுக்கு சாதியே இல்லை. பவுத்தத்தின் கூறுகளை அவர்களிடம் இன்னமும் காண முடியும். 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இங்கே சைவமும், வைணவமும் பரவியது. தலித் என்பதை ஒரு குழுவை குறிப்பதாகவே நான் நினைக்கிறேன். நான் எந்த சாதியைச் சேர்ந்தவனாகவும் என்னை நினைக்கலை. இந்தியாவே மாந்த முகங்களின் கண்காட்சின்னு அறிஞர்கள் சொல்கிறார்கள். அதை சென்னையில் காண முடியும். விதவிதமான மனிதர்கள், விதவிதமான வாழ்க்கை முறை, விதவிதமான நிறங்கள்…ஒரு குட்டி மாந்த கண்காட்சி இது. இவர்கள் எல்லோரும் உழைக்கும் மக்கள்தான். தங்களோட அபத்தமான அரசியல் நம்பிக்கைகளால் நிகழ்காலம் வரைக்கும் நசுக்கப்படறாங்க. இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

இவர்கள் தொல் குடிகள், ஆதி குடிகள். பண்பாடும் வரலாறும் இவர்களுக்கு இருக்கு. சாட்டையடிகளால் துரத்தப்பட்டவர்கள். உழைக்கும் விலங்காக மாற்றி சுரண்டிய அநீதியான சமூகம், உழைக்கும் சமூகம் நான் அந்தப் பார்வையிலேர்ந்து எழுத விரும்புகிறேன்.”

அறுபடும் விலங்கு, கறுப்பர் நகரம், வருகிறார்கள்.. இந்த நாவல்கள் ஒன்றோடொன்று தொடர்ச்சி உள்ளவையா? இவற்றை ‘டிரையாலஜி’ வகைக்குள் பொருத்தலாமா?

“அறுபடும் விலங்கின் தொடர்ச்சியாக கறுப்பர் நகரத்தை சொல்லலாம். அறுபடும் விலங்கு கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் புலம்பெயர்வை சொல்வது. 1930களின் காலக்கட்டத்தை விவரிக்கிறது. நகரத்திலேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயர்வது கறுப்பர் நகரம். அறுபடும் விலங்கில் பேய்க்காளி சாராயம் குடிக்கிறவனா இருப்பான். குடித்தகராறில் மாட்டிக்கொண்டு, அங்கேருந்து கொஞ்சம் மேடான பகுதிக்கு இடம் பெயர்வான். அவனேதான் கறுப்பர் நகரத்துல சாராயம் விக்கிறவனா மாறிடுவான். இதுபோல சில தொடர்ச்சிகள் இருக்கிறது.

வருகிறார்கள் முற்றிலும் வேறு களம். நிகழ்காலத்தின் சமூக-அரசியல் நிலையைப் பேசுகிறது. கறுப்பு விதைகள் மூன்று குப்பை பொறுக்கும் சிறுவர்களைப் பத்தின நாவல்..”

சென்னையின் விளிம்பு நிலை மக்கள் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்களா? இங்கு சாதி எந்த அளவுக்கு உள்ளது?

“கட்டி வெச்சி அடிச்சி வேலை வாங்கிறது.. நேத்து புள்ளையை பெத்தவகூட வயல் வெளிக்கு வந்துடணும், அழுவுற குழந்தைக்கு பால்கூட கொடுக்கக்கூடாது. சேர்ந்துவிட்ட முலைப்பாலை அப்படியே வயல்ல பீச்சி அடிக்கணும்ங்கிற நிலைமை இப்ப இல்ல. ஆனா ஒடுக்குமுறையின் தன்மை மாறியிருக்கு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தோட கோயிலுக்கு உள்ள இவங்கள்லாம் வரக்கூடாதுன்னு டிவில உட்கார்ந்துக்கிட்டு இங்க ஒருத்தரால சொல்ல முடியுது. இவங்கதான் தங்கள் குழந்தைகள் படிச்சிட்டு அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் போகணும்னு விரும்புவாங்க. ஆனா அங்க போனா இவனும் கறுப்பன்தான். சுத்த வைஷ்ணவரா போன காந்திக்கு தென் ஆப்பிரிக்காவில் என்ன நடந்தது..?

சென்னை விளிம்புநிலை மக்களைப் பொறுத்தவரைக்கும் சில சாதி பெயர்களைக் கேள்விப்பட்டால் இப்படியான சாதி இருக்கான்னு கேட்கிற அளவுக்குத்தான் இருக்காங்க.. இந்தப் பகுதியை விட்டு வேற நண்பர்கள்கிட்ட பழகும்போதுதான் சாதி இருக்குங்கிற விஷயமே ஒரு சிலருக்குத் தெரிய வரும். கிராமங்கள்ல காலனியிலேர்ந்து வர்றான்னு சொல்லுவாங்க. இங்க ஏரியாவிலேர்ந்து வர்றான்னு சொல்லுவாங்க.

இன்றைய நிலைமையில் மக்களோட வாழ்நிலை மாறியிருக்கு. துறைமுகம், ரயில்வே, ஐடி என பல துறை பணிகளுக்குப் போறாங்க. காரும் ஏசியும் வச்சிருக்காங்க..தலித்தே தன்னை பார்ப்பனராக கருதிக்கொள்கிற நிலையும் இருக்கு. வசதி வாய்ப்புகள் பெருகிய உடனே வேற பகுதிக்கு போயிட விரும்புகிறார்கள். பொதுவாக இங்கே வாழ்கிற இந்தத் தலைமுறை பசங்களுக்கு சாதி என்னனு தெரியாதுன்னுதான் சொல்லுவேன். வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து பிழைப்புத் தேடி சென்னை வருகிறவர்கள்தான் சாதியைத் தூக்கி சுமந்தபடி வருகிறார்கள்”

தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளரா வாழ்வதற்குரிய சூழல் இருக்கிறதா?

“என்னோட பின்புலத்துக்கு அது சாத்தியமில்லை. ஆனா முழுநேரமும் எழுதுவதைத்தான் செய்யறேன்.  இப்படியே செய்தால் அதுவே சீக்கிரம் மரணத்தை தந்துடும். குறைஞ்சபட்சம் தினசரி டீ செலவுக்குக்கூட போதுமான வருவாயை எழுத்து எனக்குத் தரவில்லை. பாரதி புத்தகாலயம் போன்ற பதிப்பகங்கள் போட்டதால்தான் நான் ஓரளவாவது கவனிக்கப்பட்டேன். சின்ன பதிப்பகத்துல போட்ட்டிருந்தா இதுகூட நடந்திருக்காது. ரொம்ப பிற்போக்குத்தனமான சூழல் இது. தட்டையான எழுதுக்கு இங்கே கிடைக்கிற மரியாதையே வேறு. மக்கள்தான் என் படைப்புகளைக் கொண்டு போவாங்கன்னு எழுதிக்கிட்டு இருக்கேன்.

மெர்லின் என்ற படத்தில் கோ டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கேன். நல்ல சினிமா செய்யணும்னு ஆசை. முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.”

சமகால எழுத்தாளர்கள் பற்றி..

ராஜுவ் காந்தி சாலை மூலமாதான் விநாயக முருகனைத் தெரியும். நரியங்காடு எனக்கு மிகவும் பரிட்சயமான பகுதி. அதுபற்றி நானும் ஒரு ஆய்வை செய்து வெச்சிருந்தேன். சென்னை மெட்ரோ பாலிடன் கிளப்பில் ஃபாக்ஸ் ஹண்டிங் பற்றிய ஓவியம் ஒன்னு வெச்சிருக்காங்க அப்படீங்கிற தகவலோட சில பணிகளை செய்து வைத்திருந்தேன். ஆறு ஏழேழு தீவுகள், கடல், ஆறு, சதுப்பு நிலம் காடுன்னு காடும் கடலும் சார்ந்த பகுதிதானே சென்னை. இங்கே நரிகள் இருந்தது பற்றின வரலாற்று பின்புலத்தோட  புலனாய்வு மாதிரியான நடையில் வாசகர்களை கவர்ந்திழுக்கக்கூடியது வலம்.  நாவல் வாசிச்சதிலிருந்து அவர் இன்னும் நெருக்கமாகிட்டார். அப்புறம் சரவணன் சந்திரன் நல்லா எழுதறார். அவரொட பாணியும் தனிச்சு தெரியுது.”

அடுத்த எழுதிக்கொண்டுருக்கும் நாவல், வர இருக்கும் நாவல் குறித்து…

“அரை மனநிலையில் காணாமல் போன கிழவர் சாலையோர பெண்ணொருத்தியிடம் அடைக்கலமாகிறார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது பிணம்தான் அவர் சொந்த ஊருக்குப் போகிறது. சாலையோர வாழ்க்கைப் பற்றி பேச முயன்றுள்ளேன். அந்த சாலையோர பெண்ணுக்கும் கிழவருக்கும் ஏற்படும் உறவுதான் ஒற்றைப் பல். தொடர்பில்லாத இருவருக்குள் ஏற்படும் அப்பா-மகள் உறவை கவித்துவமா சொல்ல முனைந்திருக்கிறேன்.

அடுத்து சயாம்-பர்மா மரணம் ரயில் குறித்து என்னுடைய பார்வையில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மரப்பாலம் மறக்கப்பட்ட வரலாற்றின் மீதான புனைவாக இருக்கும். முக்கியமான நாவலாக இருக்கும்.”

பதிவு 17-9-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.