இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி: சிலபிற்சேர்க்கைக் குறிப்புகள்

ஏர் மகாராசன்

ஏர் மகாராசன்
ஏர் மகாராசன்

அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமராசு அவர்களின் முகநூல் பதிவுகள் குறித்துக் காட்டமான பதிவுகள் இரு தரப்பிலும் வெளிப்பட்டன. போதாக்குறைக்கு நானும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

கபாலி படம் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசவில்லை , தலித் அரசியலையும் பேசவில்லை. இரஞ்சித் இயக்கத்திலும் தாணு தயாரிப்பிலும் இரசினி நடித்த ஒரு வணிகப் படம் அவ்வளவே. ஆயினும் , தமிழ்த் திரையில் காட்டப்படாத காட்சிகளும் பேசப்படாத உரையாடல்களும் பதிவு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில் ஏன் இத்தனைத் தயக்கம் ? என்பதான பதிவை இட்டதோடு நான் நிறைவடைந்து விட்டேன்.

இப்போது தான், த.தருமராசு அவர்களின் நான் ஏன் தலித்தும் அல்ல? நூலைப் படித்து முடித்திருக்கிற நிலையில், கபாலி படம் குறித்து வேறு விதமான உரையாடல்கள் தோன்றுகின்றன. பொதுவெளியில் இவை விவாதிக்கப்பட வேண்டியவை என்றே கருதுகிறேன்.

கபாலி படம் வணிகப் படம் தான். ஆனால், அது கற்பனையான கதை மட்டும் அல்ல. சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுதான் வேறு மாதிரியாய் வணிகப் படமாய்த் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

கபாலி படத்தின் கதைக் களம் மலேசியா என்பதற்குப் பதிலாகத் தமிழ் நாடாய் இருந்திருந்தால் கபாலி கதைப் பாத்திரம் யாராக அடையாளப்பட்டிருக்கும் ? சாதிய ஆணவத் திமிர்க் கதைப் பாத்திரங்களை எதிர்க்கும் கபாலி பாத்திரமானது இமானுவேல் சேகரனைப் போலச் செய்தல் பாத்திரமாகத் தான் அமைந்திருக்கும்.
கல்வியின் வாசம் நுகர்ந்து, தான் சார்ந்த மக்கள் கூட்டத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதை வாழ்க்கை இலக்காக அமைத்துக் கொண்ட அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்ட கபாலி பாத்திர உருவாக்கமும் உரையாடல்களும் இமானுவேல் சேகரனை உருவகப்படுத்தக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் , நான் முன்னுக்கு வருவது தான் உனக்குப் பிரச்சினையின்னா உழைப்பேன்டா, கோட் சூட் போடுவேன்டா, கால் மேல் கால் போடுவேன்டா என்பது போன்ற உரையாடலை இந்தச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டிய மனிதப் பனுவலாய் வரலாற்றில் பதிவாகி இருப்பது இம்மானுவேல் சேகரன் தான்.

தமிழ்நாட்டின் பதற்ற நிலமாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் முகவை மாவட்டம், சாதிய மேலாதிக்கச் சீண்டல்களைத் தொடுப்பதும், அதே சாதிய மேலாதிக்கச் சீண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்து களம் காண்பதுவுமாகக் கலகம் பூசிக் கிடந்தது. இந்நிலையில், உயர்த்திக் கொண்ட சாதிய மேலாதிக்கத்தை அசைத்தும் எதிர்த்தும் பார்த்த ஒரு நிகழ்வு தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.

எடுப்பு வேலைகளும் ஏவல் வேலைகளும் செய்ய வேண்டும், காடு கழனிகளில் பண்ணை வேலை செய்திட வேண்டும், அந்த வட்டாரத்தில் ஆளுமை செய்திடத் துடித்த ஒரு குறிப்பான சாதியினருக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பவை போன்ற சாதிய ஒடுக்குமுறை நினைப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிராக இம்மானுவேல் சேகரன் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றி இருக்கிறார். அதாவது, சாதிய மேலாண்மைக்கு முன்பாக இருந்த ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறார்.

இரு தரப்பின் முற்றிய முரண்பாடு ஒரு கட்டத்தில் வெடித்திருக்கிறது. 1957 இல் முதுகுளத்தூரில் நடைபெற்ற அமைதிக்கான பல சமூகப் பேச்சுவார்த்தை நிகழ்விற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இம்மானுவேல் சேகரன் அழைக்கப்பட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை அரங்கினுள் இன்னொரு தரப்பினரின் ஆளுமை உள்நுழைந்த போது, அங்கிருந்த எல்லோருமே எழுந்து நின்று மரியாதை செய்ததாகவும், இம்மானுவேல் சேகரன் மட்டும் எழுந்திருக்காமல் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், இன்னொரு தரப்பினரின் ஆளுமைக்கு முன்பாகவே கால் மேல் கால் போட்டும் உட்கார்ந்திருக்கிறார். அதோடு, அங்கேயே அவர் முன்பே புகையும் பிடித்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னாலேதான் சாதிய ஆதிக்கத்தினரால் பரமக்குடியில் படுகொலை செய்யப்படுகிறார் என்றே இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
இம்மானுவேல் சேகரனின் இந்தச் செய்கையைப் போலச் செய்தலாகவும் திரும்பச் செய்தலாகவும் தான் இந்தச் சமூகம் பார்த்தது.

சாதியம் அப்பிக்கிடந்த களத்தில் நிகழ்ந்த இம்மானுவேல் சேகரன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தைத் தான் கபாலியாகப் போலச் செய்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.
இம்மானுவேல் சேகரன் குறித்த அண்மைக்கால நிகழ்வுகள் திருப்பிச் செய்யும் நிகழ்வாகச் சாதியச் சமூகம் புரிந்து வைத்திருப்பதனால் தான் இருதரப்பினரிடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் தான், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்த கபாலியின் களம் மலேசியாவாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவராக(கேங் லீடராக) இருந்த இம்மானுவேல் சேகரனைத் தான் மலேசியத் தோட்டத் தொழிலாளர் தலைவராக (கேங் லீடராக)ப் போலச் செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட போலச் செய்தல் தான். ஆனால், இதைக் குறித்துப் பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

கபாலி படத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரையாடல்கள் இயக்குநர் இரஞ்சித்தை மய்யமாகவே வைத்தே நகர்ந்தன. படைப்பின் வழியிலான போலச் செய்தலாய் வெளி வந்த கபாலி, இம்மானுவேல் சேகரனை நினைவுபடுத்தும் திரை மொழி என்பதான உரையாடல் வெளிப்பட்டிருந்தால் இரஞ்சித், இரசினி ஆதரவாளர்களால் மட்டுமல்ல, இன்னொரு தரப்பினராலும் கூட இன்னும் அதிகமாகவே தூக்கிக் கொண்டாடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதே வேளையில், மிகக் கடுமையான எதிர்ப்பையும் கபாலி சந்தித்திருக்கும். ஏனெனில், இம்மானுவேல் சேகரன் எனும் குறியீடு சாதியத்திற்கு எதிரான திருப்பிச் செய்தல் குறியீடாய் இன்னும் இருப்பதனால், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலியும் திருப்பிச் செய்த கலைப் படைப்பாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அதனால் தான், கபாலி -போலச் செய்தல் படம் தான் என்பதையே இரஞ்சித்தும் அவரது ஆதரவாளர்களும் நிறுவ முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது அதன் வணிகத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே, போலச் செய்தல் நிகழ்வும் படைப்பும் சாதியச் சமூகத்தின் எதிர்ப்பைப் பெறுவதில்லை. அதேவேளையில், திருப்பிச் செய்யும் நிகழ்வும் படைப்பும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்பவை என்பதைச் சமூக ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்தப் பின்னணியில் கபாலி படம் குறித்து உரையாடல்கள் தொடர வேண்டும்.

போலச் செய்தல் – திரும்பச் செய்தல் குறித்து த.தருமராசு (நூலாசிரியர் தம்மை டி. தருமராஜ் என்றே பதிவு செய்கிறார்)அவர்களின் நான் ஏன் தலித்தும் அல்ல? எனும் நூலில் மேலதிகத் தரவுகளும் உரையாடல்களும் உள்ளன.

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். பெண்மொழி இயங்கியல் நூலின் ஆசிரியர்.

One thought on “இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி: சிலபிற்சேர்க்கைக் குறிப்புகள்

  1. இருக்கலாம் நீங்கள் சொல்வது போல, கபாலியில் குறியீடாய் சிவப்பு பச்சை அதுதானோ.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.