8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

 

பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி.

பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்று வேலை தலத்தில் எதிர்நோக்கும் வன்முறை; போராட்டங்களின் போது அரசு/காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறை; தலித்/பழங்குடியின பெண் என்பதால் வரும் சாதிய வன்முறை, மதவெறித் தாக்குதலில் நடக்கும் வன்முறை. இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் கட்சி அணியினர் முன்வரிசை படையாக நிற்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளில் ஒன்றாகப் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறோம். எங்கள் கட்சியின் திட்டத்திலேயே, பாலின சமத்துவ போராட்டம், ஜனநாயகத்துக்கான ஒரு பகுதி என்பதையும், குடும்ப ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இடம்பெற வைத்திருக்கிறோம். குடும்ப வன்முறையை ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய குற்றமாகக் கருதுகிறோம்.

தமிழகத்தில் அன்றாடம் நடந்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வுகளில் கட்சியும், பெண்கள், வாலிபர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அயராமல் தலையிட்டு வருகின்றன.

காதலுக்கு எதிரி அல்ல என்று ஒரு புறம் நீங்கள் சொன்னாலும், மறுபுறம் காதல் திருமணங்கள் மீதான வெறுப்பு, குறிப்பாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் திருமணம் குறித்து தீர்மானிப்பதில் உங்களுக்கு ஒவ்வாமை இருப்பது வெளிப்படுகிறது.

காதல் வழி சாதி மறுப்பு திருமணம் சாதிகளை ஒழிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அது மட்டுமே உதவாது என்பது உண்மை தான். தலித் மக்களுக்குப் பொது சொத்தின்/நிலத்தின் மீதான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பன போன்ற பொருளாதார நடவடிக்கைகளும் இணைந்து எடுக்கப்பட வேண்டும் அதே சமயம், அகமணமுறை என்பது சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் கோட்டை என்னும் போது, அதில் மாற்றம் வந்தால், கட்டமைப்பு பலவீனப்படும் என்பது சரியானது தானே? ஒரு வாதத்துக்கு  – இல்லை என்றே வைத்துக் கொள்வோம்அதற்காகக் காதல் திருமணங்களே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா? வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் திருமணம் செய்கிறார்கள் என்றும் கூற முடியாது. விரும்புகிறவர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள். இது அரசியல் சட்டம் அளித்திருக்கும் ஜீவாதார உரிமை.

பெற்றோர் விருப்பத்துடன் திருமணங்கள் நடப்பது நல்லது தான். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள், பெற்றோரையும் உடன்பட வைக்கும் போராட்டத்தை நடத்துவது தேவையானது. அதே சமயம், காரண காரியமின்றி, சாதியை மனதில் வைத்து அல்லது தன் மகன்/மகள் சுயமாக முடிவெடுப்பதை விரும்பாமல் பெற்றோர் மறுக்கும் போது, வேறு வழியில்லாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள் என்பதே யதார்த்தம். இது குறித்து பொது வெளியில் விவாதிப்பது கூட பயன் தரும்.

ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் காதல் திருமணங்களில் மட்டும் நாம் பார்ப்பது இல்லை; வெவ்வேறு சாதி இணையும் திருமணங்களில் மட்டும் நடப்பதில்லை. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில், ஒரே சாதிக்குள்ளான திருமணங்களில் கூட எத்தனை எத்தனை ஏமாற்று, மோசக்கார வேலைகள், வரதட்சணை கொடுமைகள்! நெருக்கமான உறவினர் குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை வந்தாலும், பெண் வன்முறைக்குத் தப்புவதில்லை. ஏராளமான வழக்குகள் எங்களுக்கும் வருகின்றன. பெண்ணின் தாழ்ந்த சமூக அந்தஸ்து, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு போன்றவை தான் இந்த ஏமாற்று வேலைகளுக்கும், கொடுமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. நோயின் வாய் நாடி சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

காதலை கார்பைடு வைத்து கனிய வைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதே போல் திருமணத்தில் இரு மனங்கள் கனிய வேண்டும், நமது குழந்தைகள் என்பதாலேயே கார்பைடு வைத்துத் திருமணத்தைக் கனிய வைக்கக் கூடாது. கட்டாய காதல் அல்லது கட்டாய திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போதிக்க வேண்டும். காதலிக்க மறுத்தாலும் பெண்ணுக்கு வன்முறை, காதலித்து திருமணம் செய்தாலும் சாதி ஆணவ கொலை இரண்டும் வேண்டாம் என்று உரத்து குரல் கொடுப்போம்.

அதே சமயம், காதலுக்கு சம்பந்தமே இல்லாமல் நடக்கிற வன்முறை பற்றிக் கவலைப்பட வேண்டாமா?. கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர் நடத்திய வன்கொடுமை என்ன?, சேலம் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு அண்டாவில் திணித்து வைக்கப்பட்ட பிரச்னை என்ன?, தஞ்சை சாலியமங்கலம் இளம் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட கொடுமை என்ன?, நெகமம் அருகில் 8 மாத பச்சை குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு மண்டை ஓடு சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அராஜகம் என்ன?, இதில் காதல் எங்கிருந்து வருகிறது?.

சாதிய கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக ஆணாதிக்கம் இருக்கிறது. ஒன்றைப் பாதுகாத்துக் கொண்டே மற்றொன்றை முழுமையாக ஒழித்து விட முடியாது. பாலின பாகுபாட்டைத் தன் லாப வேட்கைக்காக முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. இவற்றையும் கணக்கில் எடுத்து, பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்குப் பின்புலமாக இருக்கும் கொள்கைகளையும், அவற்றின் விளைவுகளையும் ஒரு துளி கூட சமரசம் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.