இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

இனியன்
இனியன்
இனியன்
90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு வருடமும் சிலைகரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

இளைஞர்களைக் குறிவைத்து இந்த ஊர்வல நிகழ்வினை மதம் சார்ந்த கட்டாயச் சடங்காக மாற்றியமைத்ததில் இந்துவா அமைப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியடந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும் பெருகிவருகிற நமது இளைஞர் பட்டாளங்களையும் அதில் அவர்களுக்கான ஈடுபாடுகளை மீறிய வெறித் தன்மையைப் பார்கின்ற போது. இதுபோன்ற வெறித் தனமான செயல் பாடுகளில் அதிகளவில் ஈடுபட வைக்கப்படும் இளைஞர்கள் யார்யார் எனச் சற்று ஆராய்ந்தால் அனைத்திலும் பின்தங்கியிருக்கக் கூடிய அடித்தட்டு இளைஞர்கள் தான். இவர்களைப் பின்பற்றி இவர்களது அடுத்தது தலைமுறையினரான குழந்தைகளும் இவ்வகையான ஈடுபாடுகளில் தானாக வந்துவிடுவார்கள்.

அடுத்ததாக இந்துத்துவா அமைப்புகள் உள்ளே நுழைந்திருப்பது நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்நடுத்தர வர்க்கக் குழந்தைகளிடம் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பெயரில்.

ஆம், நேற்று முன்தினம் பள்ளிகளிலும், நேற்று வீடு மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கிருஷ்ணன் மற்றும் ராதைகளின் வேடமிட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்தான் ஆக்கிரமிப்புச் செய்திருந்தன.

எனது சிறு வயதிலெல்லாம் பிராமிணர்கள் மற்றும் அய்யங்கார் வீடுகளில் மட்டுமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். அதுவும் இதுபோன்ற வேடங்கள் போன்ற கிறுக்குத் தனமான செயல்பாடுகள் இருக்காது. சீடை, சுழியன், பாயாசம் போன்ற பதார்த்தங்களுடன் சிறுசிறுப் பாத வடிவங்களாலான கோலங்களுடன் மட்டுமே முடிந்துவிடும்.

ஆனால், கடந்த சில வருடங்களால் வித்யாலையா, விகாஸ், விஹார், மற்றும் சாதியச் சாராய அமைப்புகளால் நடத்தப் படுகின்ற அநேகத் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் படிக்கும் பெரும்பான்மைக் குழந்தைகளைக் கட்டாயமாகவோ அல்லது விருப்பத்தைத் தூண்டியோ கிருஷ்ணன், ராதை வேடமிடச் செய்து பெரியளவில் கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் மறைமுகத் திணிப்புகள் நடைப்பெற்று வருகிறது. இதற்கு இடது, முற்போக்கு, பகுத்தறிவு எனப் பேசிக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் விதிவிலக்கில்லாமல் குழந்தைகளுக்கு வேடம்மிட்டுப் பெருமைப் பொங்கப் புகைப்படங்கள் எடுத்தும் பதிந்தும் விளம்பரப் படுத்தியும் வருகின்றனர்.

இதையெல்லாம் கேள்விக் கேட்டாலோ அல்லது பகடிச் செய்தாலோ கோபமும் படுகின்றனர். நேற்று இதைப் பற்றிய விவாதமொன்றில் நண்பன் ஒருவன் கிருஸ்த்துவப் பள்ளிகளில் கிறிஸ்த்துமஸ் கொண்டாடுவது இல்லையா என அதிபுத்திசாலித் தனமான கேள்வியை முன்வைக்கிறான். அனைத்துக் கிறிஸ்த்துவப் பள்ளிகளிலும் கிறிஸ்த்துமஸ் கொண்டாடப்ப்படும்தான். ஆனால் அங்கு அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் ஏசப்பா வேடமோ? சான்டோகிலாஸ் வேடமோ? மேரிமாதா வேடமோ? போடவேண்டுமென்றக் கட்டாயத் தேவையில்லை. மேலும் இங்கிருக்கும் அநேகக் கிருஸ்த்துவப் பள்ளிகள் மேற்படிப்பிற்கானத் தளத்தத்தில்தான் இருகின்றனவே தவிரக் குழந்தைகளுக்கான கல்வி நிலையங்கள் மிகவும் குறைவு தற்காலத்தில். அதைத்தவிர இவர்களைப் பார்த்து அவர்களும் குழந்தைகளை இதுபோலக் கட்டாயப் படுத்தினால் அதுவும் தவறுதான்.

இவற்றையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் ஐந்து வயது குழந்தை மேடையேறி அரசியல் முழக்கமிட்டமைக்காகக் குழந்தைகள் உரிமைக் காக்கப் போராடியவர்களும், குழந்தைகள் வளர்ப்பு முறைப் பற்றியும், குழந்தைகளிடம் ஏன் அரசியலைத் தினிக்கின்றீர்கள் எனக் கேள்விகள் கேட்ட அனைவரும் ஒரு மதத்தையும், மதம் சார்ந்த அறிவையும் தினிப்பவர்களிடம் கேள்விகள் கேட்காமல் அழகு குட்டிகள், செல்லங்கள், என விருப்பம் தெரிவித்து அமைதிக் காக்கும் அறிவுஜீவிகள் நிறைந்த உலகமாகவேயிருகிறது. மேலும், பள்ளிகளில் ஆசிரியர்களிடமும், நிர்வாகத்திடமும் குழந்தைகள் மீது செலுத்தப்பட்ட சில தினிப்புகளுக்காகச் சண்டையிட்டேன் என மார்த்தட்டிக் கொண்ட பெற்றோர்களும் கூடச் சமத்துவம் பேணவேண்டிய பள்ளிகளில் இப்படி ஒற்றை மதச் சிந்தனையைத் தினிகின்றீர்களே என எக்கேள்விகளும் எழுப்பாமல் குழந்தைகளுக்கு வேடமிட்டு டாட்டா காண்பித்து வழியனிப்பி வைப்பதுதான் சிரிப்புக்குகந்த விசையமாகப் படுகிறது. ஆனால், எதால் சிரிப்பது என்பதுதான் புரியவில்லை.

மற்றுமொரு மிகமுக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது. இவ்வாறு கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்ட குழந்தைகளில் பெரும்பான்மையானவர்களில் மாநிறம் மற்றும் மாநிறத்திற்கு மேலுள்ள குழந்தைகள்தான். அதேபோல எந்தச் சேரிப் பகுதிக் குழந்தைகளும், அரசுப் பள்ளிக் குழந்தைகளும் இப்படிப்பட்ட வேடங்களை இட்டுக் கொண்டு திரியவில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையானோர் பிள்ளையார் சிலை ஊர்வலங்களுக்குத் தயார்படுத்தபட்டுக் கொண்டிருகின்றனர்.

இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் குழந்தைப் பருவம் முதலே எளிதில் மற்ற மதங்களின் மீதுள்ள வெறுப்புணர்வைத் தூபமேற்றி வளரும் தலைமுறையினரைத் தங்களுக்கான சேவையாட்களாக மாற்றியமைத்து அனைத்து மட்டங்களிலும் கேள்விகேட்காத அடிப்படிவாதிகளாகவே குழந்தைகளை வளர்த்தெடுக்கும் செயல்திட்டதிற்குதான் அனைத்து வித்யாலயா, விகாஸ், விஹார் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ளன அறிவுப் புலத்தில்.

ஆகமொத்தம் சமத்துவம், சகோதரத்துவம், இறையாண்மைப் போன்றவற்றில் இம்மியளவேனும் முன்னேற்றம் கண்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக வேலைச் செய்கிறது காவிக்கும்பல். அதற்கு இடது, முற்போக்கு, பகுத்தறிவு எனப் பேச்சளவில் வாய்சவடால் விட்டுக் கொண்டிக்கும் பெற்றோர்களும் நேரிடையாகவும் மறைமுகமாகும் இணைந்துத் தூபமேற்றிக் கொண்டிருக்கினர்.

வாழ்க பெற்றோர்!!!… வளர்க பள்ளிகள்!!!…வீணாய் போகட்டும் குழந்தைகள்!!!… நாசமாய்ப் போகட்டும் சமூதாயம்!!!…

இனியன், பாரம்பரியமான விளையாட்டுகள் ஆவணப்படுத்தும் “பல்லாங்குழி” என்ற அமைப்பின் நிறுவனர். இந்த அமைப்பின் மூலம் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அறிமுகப்படுத்தி விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி வருகிறார். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.