பழம் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் மாயோன் தெய்வம் தான், தற்போதைய கிருஷ்ணனாகக் கொண்டாடப்படுகிறார் என சொல்கிறார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண ஜெயந்தி சுவரொட்டிகள். தமிழனின் முப்பாட்டன் முருகன்(குறிஞ்சி நிலத் தலைவன்) என சொன்னவர்கள், “எங்கள் மூதாதை மாயோன்” என இந்து மதக் கடவுளான கிருஷ்ணனை தமிழர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஐந்திணை நிலங்களில் மாயோன் முல்லை நிலத் தலைவன். இம்மக்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதால், இந்து புராணங்களில் மாடு மேய்க்கும் கடவுளாக குறிப்பிடப்படும் கண்ணனை, மாயோன் என சிலர் நிறுவுகிறார்கள்.
இந்தப் போஸ்டர் குறித்து எழுத்தாளர் விநாயக முருகன் முகநூலில் எழுதிய பதிவு:
“இன்று காலை எனது வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் ஆற்காடு சாலையெங்கும் சில வித்தியாசமான சுவரொட்டிகளை பார்த்தேன். எங்கள் தெருவில்தான் சீமான் அலுவலகம் உள்ளது. சுவரொட்டியில் வலதுப்பக்கம் சீமான் கைகட்டி நிற்கும் படத்துடன் இடதுப்பக்கம் கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதும் படமும் இருந்தது. சீமான் தலைக்கு மேலே ஓம் என்று வேல் இலச்சினை (லோகோ) இருந்தது.
ஆயர்குலத் தலைவன் முல்லைநில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் பெரும்புகழ் போற்றி! போற்றி! என்று அந்த சுவரொட்டியில் அச்சாகியிருந்தது. கிருஷ்ணன் படத்துடன்
போஸ்டரில் படங்களுக்கு மேலே
“பண்பாட்டு புரட்சி அல்லாது அரசியல் புரட்சி வெல்லாது” என்று இருந்தது.
ஒரே போஸ்டரில் முல்லை நிலத்தையும், குறிஞ்சி நிலத்தையும் இணைத்தார் பாருங்க. அங்க நிக்குது நம்ம தமிழ்ப்பண்பாடு. ஒரு கிரகத்தில் 9 லக்கனங்களும் உச்சம் பெற்ற ஒருவனால்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும்”