சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் குண்டு தயாரிக்கும்போது வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ பற்றி செய்திகள் அதிகமாக பரப்பப் பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் இப்படி குண்டு தயாரித்து இறந்திருந்தால் அவரை ‘தீவிரவாதியாக’ சித்தரிக்கும் ஊடகங்கள், பாஜகட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ‘தொண்டர்’ என அழைப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. ஒரு செய்தித் தொலைக்காட்சி இணையதளத்தின் லட்சினையுடன் அந்தச் செய்தி பரவியது, தொடர்புடைய நிறுவனம் இது நாங்கள் வெளியிட்ட செய்தி இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த நிறுவனம் செய்தி வெளியிடவில்லை என்பது உண்மையானாலும் அந்தச் செய்தி உண்மைதான்.
ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் விமர்சித்ததுபோல் பாஜக ‘தொண்டர்’ என்றே செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள்…ஆங்கில ஊடகங்களும் அப்படித்தான் எழுதியுள்ளன. வேற்று மதத்தைச் சேர்ந்தவர் இதைச் செய்திருந்தால், குறிப்பாக இஸ்லாமியர் இதைச் செய்திருந்தால் ஊடகங்கள் அவரை பற்றிய முழு விவரத்தையும் துப்பு துலக்கியிருக்கும். ஆனால், இந்தச் செய்தியைப் பொறுத்தவரை, இரண்டே வரி விவரங்கள் தான்…
“கேரளத்தின் கூத்துப்பரம்பா அருகேயுள்ள கோட்டயம்பொய்யிலில் உள்ள வீட்டில், சனிக்கிழமை மாலை குண்டு வெடித்தது. இதில் தீட்சித் என்ற பாரதிய ஜனதா கட்சி தொண்டர் பலியானார்.
தீக்ஷித் வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டரை தலச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்பதாகத்தான் செய்தி வெளியாகியுள்ளது. அவர் ஏன் குண்டு தயாரித்தார், குண்டு தயாரிப்பதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து ஒரு ஏடும் துப்பு துலக்கவில்லை.
இதைத்தான் சமூக ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன. உண்மையில் ஊடகங்களின் முகத்திரையைக் கிழிக்கும் இத்தகைய தொடர் செயல்பாடுகளால்தான் சமூக ஊடகங்களின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.