மார்க்சியத்தை மார்க்சியத்தால் வீழ்த்துவது: ரங்கநாயக்கம்மா நூலை முன்வைத்து…

சி.மதிவாணன்

mathivanan
சி.மதிவாணன்

தமிழ்நாட்டிற்கு புதியதோர் புத்தகம் வருகை தந்திருக்கிறது. ரங்கநாயகம்மா என்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் குறளி பதிப்பகத்தால் (ஆங்கிலம் வழி) தமிழில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஸ்வீட் ஹோம் என்ற ஆந்திர நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்பே புத்தகம் என்ன சொல்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. வெளியான பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அடுத்த பதிப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

தமிழகத்தின் இன்றைய நிலையைச் சற்று பார்ப்போம். நாகை அருகே பழங்கள்ளி மேடு என்ற கிராமத்தில் கோவில் வழிபாட்டில் உரிமை கேட்ட தலித்துகளின் உரிமை அரசால் மறுக்கப்படுகிறது. பிள்ளைமார்களின் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்த தலித்துகள் தங்களை அறுதியிட்டுக்கொள்ள முயன்றபோது, வழிபாட்டில் ஓரளவுக்கு இடம் தர பேச்சுவார்த்தை நடந்தது. தலித்துகள் மற்ற சமூகங்கள் போல சம உரிமை கேட்டதால் பிரச்சனை தீவிரமடைந்தது. அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற முடிவு செய்த காரணத்தால், இந்து மத அமைப்புகள் தலையிட்டுள்ளன. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அரசு செயல்பட முடியாது என்றும், சமத்துவத்தை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை பிரச்சனை தீரவில்லை. ஆகம விதிகளின்படிதான் நடப்போம் என்று ‘இந்து‘ தரப்பினர் சொல்லியுள்ளனர் என்பது இன்றைய (21 ஆகஸ்ட்) நிலவரம்.

இதற்கு முன்னமேயே கண்டதேவி கோவில் பிரச்சனை பத்தாண்டுகளாய்த் தீர்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது. அனைத்திற்கும் சிகரம் வைத்தார்போல, உசிலம்பட்டியை அடுத்த உலைப்பட்டியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடுத்து மதுரை மாவட்ட காவல்துறை சாதனை புரிந்தது. தலித் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை- கொலை என்று பட்டியல் நீள்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவருக்கு ஒரு ஓட்டு- ஒரு தகுதி என்ற அரசியல் சட்ட மாண்புக்கு விரோதமாக தமிழ்நாட்டின் சமூகப் போக்கு இருக்கிறது. அந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு தமிழக அரசு- ஆளும் கட்சி துணையாகச் செயல்படுகிறது.

ஜனநாயகத்திற்கான குரலை வலுப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டிய நேரமாக இது இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மோடியின் நாடகத்தை ஆதரிக்க, அது தவறு என்ற ஆனூர் ஷா நவாசின் குரல் அவர் கட்சிக்குள் ஒடுக்கப்படுகிறது. இதர தலித் கட்சிகள் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவலைக்குரிய அரசியல் – சமூகப் பிரச்சனைகளாக எடுத்துக்கொண்டு இயக்கம் காண்பதில் பற்றாக்குறை இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்பிரச்சனைகளில் எடுக்கும் முயற்சிகள் கூட தனித் தீவுகளான முயற்சிகளாகவே இருக்கின்றன.

ஆனால், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றபின்னர், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை இந்துமத அடிப்படை வாதம் என்ற ஜனநாயக விரோத பாதைக்கு- பாசிசப் பாதைக்கு இழுத்துச் செல்லவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு தோதான நிலையில் இந்திய சமூகத்தைப் பிணைக்கவும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறது. இதனை எதிர்த்து எழுந்த ஜனநாயகப் போராட்டங்களின் முகமாக மாணவர் இயக்கங்கள் இருந்தன. ஜெய்பீம்- லால் சலாம் என்ற முழக்கங்கள் முன்னுக்கு வந்தன. தற்சமயம், குஜராத்தின் தலித்துகள் இந்துத்துவ வெறிவாத அரசியலை பின்னுக்குத்தள்ளும் மாபெரும் இயக்கத்தை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சிபிஐ எம்எல், அதன் மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் உனா நோக்கிய பேரணியில் பங்கெடுத்திருக்கின்றனர். நாட்டின் பல்வேறு ஜனநாயக சக்திகள் பல்வேறு மாநிலங்களில் ஆதரவு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர். சென்னையிலும் கூட சுதந்திர தினத்தன்று உனா ஆதரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இவற்றுடன் கூட, இந்த ஒட்டுமொத்த போக்கின் விளைவாக, முஸ்லீம்கள் மத்தியிலும் கூட, இடது ஜனநாயகப் போக்கை நோக்கி ஈர்ப்பு தென்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பின்புலத்தில் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் தம்மால் இயன்ற அளவு களத்தில் இறங்குகின்றன.

இந்த அகில இந்திய- தமிழக பின்புலத்தில் கம்யூனிஸ்ட்- தலித்- சிறுபான்மையினர்- முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை முக்கியமானதாகிறது. அதனை எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு வலுப்படுத்த பணியாற்ற வேண்டியிருக்கிறது.

இந்த சூழலில்தான் ரங்கநாயகம்மாவின் புத்தகம் தமிழில் கொண்டுவரப்பட்டு அம்பேத்கரின் ‘குறைகள், குற்றங்கள்‘ பட்டியலிடப்படுகின்றன. கொஞ்சம் கூட தெளிவில்லாத ஒருவர் என்பதாக, முன்னுக்கு முன் முரணாகப் பேசியவர் என்பதாக, கம்யூனிச விரோதி என்பதாக இப்படி சாத்தியமான முறையிலெல்லாம் அம்பேத்கரை இழிவுபடுத்துவதற்கு- சிறுமைபடுத்துவதற்கு அந்த புத்தகத்தில் முயற்சியெடுக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மாபெரும் தலைவரையும் விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது. எந்த ஒரு தலைவரும், மனிதரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உங்களுடைய கருத்து சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு உதவியானதாக இருக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் என்றால், அதற்கும் மார்க்சியத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், மார்க்சியம் ஒரு தத்துவம் என்பதற்கு அப்பால், அது உழைக்கும் மக்களின் அரசியல் ஆயுதம். இன்றைய இந்தியாவின் நிலையில் மார்க்சிய அரசியல் மேற்கொள்ள வேண்டிய பாதைக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தாக்கத்தை, அதுவும் மார்க்சிய விமர்சனம் என்ற பெயரில் வருகின்ற, அடிப்படையிலேயே தவறான விமர்சனத்தை விவாதத்திற்கான கருத்து என்று எடுத்துக்கொண்டு வக்காலத்து வாங்குவது முற்போக்கு அரசியலுக்குக் குழிபறிக்கும் முயற்சியாகும்.

அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பதற்காக நான் முகநூலில் அவசரக் குறிப்பு ஒன்றை எழுதினேன். நான் முன்வைத்த வாதங்களை எதிர் தரப்பார் மறுக்கவில்லை. மாறாக, விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனவே, அடிப்படையான விஷயங்களை முன்வைப்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

ரங்கநாயகம்மாவின் மையமான வாதம் என்ன?

அவரின் மேற்படி நூலின் சாரத்தை அவரே சுருக்கி ஒரு கட்டுரையில் தருகிறார். அந்தக் கட்டுரை, ‘புத்தர்- அம்பேத்கர்- மார்க்ஸ் தலித் அறிவாளிகளும் இடதுசாரி அறிவாளிகளும் ‘ என்ற தலைப்பில் பிராண்டயர் இதழ் 44ல் வெளியானது. (Vol. 44, Nos. 11-14, Sep 25-Oct 22, 2011 ) (http://frontierweekly.com/…/vol-44-2011-12/vol-44-11-14/dal…)

அவர் என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்:

  1. சாதிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அம்பேத்கர் பயன்படமாட்டார் என்று நான் சொல்லவில்லை, மாறாகப் போதுமானவர் அல்ல என்றுதான் சொல்கிறேன்.
  2. சாதிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இட ஒதுக்கீடு போதுமானதல்ல, அதனால் வெகு சிலருக்கே வேலை கிடைக்கிறது. இட ஒதுக்கீடு முதலாளித்துவ அரசியல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
  3. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது சாதி ஒழிப்புக்கோ தலித்துகளின் வாழ்வாதாரத்திற்கோ உதவாது.
  4. அம்பேத்கர் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் முதலாளித்துவ அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் என்பதால் அவர் முதலாளித்துவ சிந்தனையாளர். அவர் எப்படி மார்க்சிய சிந்தனையாளராக இருக்க முடியும்?
  5. முதலாளித்துவ முறையில் சீர்திருத்தம் விரும்பும் முதலாளித்துவ அறிவாளி ஒருவர் தாராளவாத (புதிய கருத்துக்கு- மாற்றத்திற்கு வாய்ப்பளிக்க விரும்பும்) முதலாளியாக இருக்கலாம். அவரை (தன்னை) மார்க்சிய அறிவாளி என்று அழைப்பதை அம்பேத்கர் விரும்பவில்லை.
  6. மார்க்சியத்தை பன்றிகளின் தத்துவம் என்று குறிப்பிடும் அம்பேத்கர் முதலாளித்துவ அறிவாளியாகத்தான் இருக்க முடியும். உழைப்பைச் சுரண்டுவதை ஆதரிப்பவராகத்தான் இருக்க முடியும்.
  7. நிலத்தை தேச உடமையாக்குவது, அதனை மக்களுக்குப் பிரிந்து தருவது (குத்தகை அடிப்படையில்) மற்றொரு சுரண்டல் முறையே.

இதற்கு மேலும் ரங்கநாயகம்மா நிறைய சொல்கிறார். இருந்தபோதும் நமது ஆய்வுக்கு இதுவரையிலான அவரின் கருத்துகள் போதும் என்று நினைக்கிறேன்.

ரங்கநாயகம்மா எங்கு தவறு செய்கிறார்?

மேலே குறிப்பிட்டுள்ள ரங்கநாயகம்மாவின் கூற்றுகளைப் படிப்பவர் ஒரு விஷயத்தை யூகிப்பதற்கான சாத்தியம் மிக அதிகம். அவர் அம்பேத்கரின் கருத்துகள்- பாத்திரத்தை விமர்சிக்கும்போது, ஒரே ஒரு சின்ன, ஆனால், மிக முக்கியமான அம்சத்தை விட்டுவிடுகிறார். மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை விட்டுவிடுகிறார். வரலாறு நிகழ்ந்துவந்த வளர்ச்சிப் போக்கில், சமூகத்தின் எந்தப் பொருளீய சக்தி அம்பேத்கரை இயக்கியது? பிற சக்திகளின் செயல்பாடு என்ன? அதற்கு அம்பேத்கர் ஆற்றிய எதிர்வினை என்ன? என்பதை அவர் தன் ஆய்விலேயே எடுத்துக்கொள்ளவில்லை. முன்னமே செய்து முடித்து தீர்த்து வைக்கப்பட்ட கோட்பாடுகளில் தொகுதியாக ரங்கநாயகம்மா மார்க்சியத்தைக் கையாளுவதுதான் அவரின் பிரச்சனை. ரங்கநாயகம்மா தனது கருத்துகளை வெளிப்படுத்த அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால், அதனை அவர் மார்க்சியம் என்று சொல்வாரென்றால், அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பாரென்றால், அதனைத் தமிழகத்தில் திணிப்பதற்கு இங்கே சிலர் முயற்சிப்பார்கள் என்றால், நாம் ஒன்றைச் சொல்ல வேண்டும். ரங்கநாயகம்மா முன்வைப்பது மார்க்சிய ஆய்வு அல்ல.

சரி, அம்பேத்கர் பற்றிய மார்க்சிய- அதாவது வரலாற்றுப் பொருள் முதல்வாத மதிப்பீடு என்னவாக இருக்க முடியும்? அதனை இந்திய மார்க்சியர்கள் யாரும் செய்துவிடவில்லையா?

அப்படியொன்று இருக்கிறது. அதனைக் கீழே தருகிறேன். இங்கே விரிவாக எடுத்தாளப்பட்டுள்ள, மேற்கோள் காட்டப்படும் கருத்துகள் தோழர் வினோத் மிஸ்ரா 1994ல் எழுதியவை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அம்பேத்கர் பற்றிய மார்க்சிய மதிப்பீடு:

“இந்துத்துவத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதுதான் காந்தியின் அடிப்படையான அணுகுமுறை. சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசின் சவர்னா (உயர்சாதி) தலைமையின் கீழ் தீண்டத் தகாதவர்களின் ஆதரவை உறுதி செய்வதுதான் அந்த அணுகுமுறை. அதனை காந்தி ‘ஆக்கபூர்வமான பணி’ (Constructive Work) என்று அழைத்தார். இதற்கு மாறாக, சாதி முறையையே ஒழிப்பதற்காக முற்போக்கான வகையில் இந்து மதத்தை மறுகட்டமைப்பு செய்யவும், எழுந்துவரும் தலித்துகளின் ஆதர்சங்களுக்கு அரசியல் தளம் அமைத்துக்கொடுக்கவும் அம்பேத்கர் அரும்பாடுபட்டார். காந்தி மற்றும் அம்பேத்கரின் இந்த இரண்டு நேரெதிர் அணுகுமுறைகள்தான் அவர்கள் தங்களுக்குள் கொண்ட உறவு முறையையும் முஸ்லீம் போன்ற பிற சமூகங்களோடு கொண்ட உறவையும் பிரிட்டிஷ் அரசுடன் கொண்ட உறவையும் தீர்மானிப்பதாக அமைந்தன.“

இந்த வரலாற்றுப் பின்புலத்தை மறந்துவிட்டு, அம்பேத்கரை விமர்சிப்பது இயங்கியல் அணுகுமுறை அல்ல. அப்படி அணுகினால், அம்பேத்கரின் அரசியல் பயணத்தைத் தவறாக மட்டுமே புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், அம்பேத்கர் அவர்காலத்து அரசியல்வாதிகளில் முற்போக்கானவர். எப்படி என்பதை வினோத் மிஸ்ரா விளக்குகிறார்:

“காந்தியின் பொருளாதாரத் தத்துவம் பற்றி கருத்துரைக்கும்போது அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்: ”யந்திரங்கள் மற்றும் அவற்றின் மீது கட்டப்பட்ட நாகரீகம் பற்றிய காந்திய ஆய்வு சொல்கின்ற பொருளாதாரக் கேடு என்பதில் எதுவும் புதிதில்லை. ரஸ்சல், புஷ்கின், டால்ஸ்டாய் ஆகியோர் கூறியதைத் திரும்பக் கூறும் பழைய மற்றும் தேய்ந்துபோன வாதங்கள்தான். அவருடைய பொருளாதாரக் கருத்துகள் தேற முடியாத அளவுக்கு தவறானவை. ஏனென்றால், யந்திரமயமான உற்பத்தி முறை மற்றும் நாகரீகத்தின் கேடுகள் யந்திரங்களால் ஏற்படுபவையல்ல அவை தனிச்சொத்துரிமையையும் தனிநபர் லாபத்தையும் முற்றிலும் புனிதமானவை என்று ஆக்கிவிட்ட தவறான சமூக அமைப்பினால் ஏற்படுகின்றன…. எனவே, இதற்கான தீர்வு யந்திரங்களை எதிர்ப்பதல்ல. மாறாக, பலன்கள் சிலரால் கைப்பற்றப்படுவதற்கு மாறாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சமூக அமைப்பை மாற்றியமைப்பதுதான்.”

இப்படி அம்பேத்கர் எழுதுவது அவர் சுரண்டல் சமூகத்தை ஏற்றவர் என்ற ரங்கநாயகம்மாவின் கருத்தைத் தவறென்று காட்டுகிறது. அதேசமயம், இந்திய வரலாற்றில் காந்தி வகித்த பிற்போக்கு முதலாளித்துவத்திற்கு நேரெதிரானதாக அம்பேத்கரை முன்னிறுத்துகிறது. காந்தியுடன் நடைபெற்ற மோதலில், முற்போக்கு சமூக பொருளாதார திட்டத்தின் ஆதரவாளராக அம்பேத்கர், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி வெளிப்படுகிறார்.

மேலும் வினோத் மிஸ்ரா எழுதினார்,

“தீண்டத்தகாதவர்களின் சொந்த பிம்பம் எப்படி மாறியிருக்கிறது என்பதை ஹரிஜன் என்பதிலிருந்து துவங்கி தலித் என்பது வரையிலான பயணம் வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றத்தின் பின்னுள்ள உந்து சக்தி அம்பேத்கர் தவிர வேறு யாரும் அல்ல. தலித்துகளின் சமூக விழிப்புணர்வையும் அரசியல் அறுதியிடலையும் இணைப்பதில் நல்ல வெற்றி கண்ட, அனேகமாக, முதல் தலித் தலைவர் அவர்தான்.

அம்பேத்கரின் மற்றொரு முக்கியமான பங்களிப்பு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதாகும். அவர் நேருவின் நவீன இந்தியா என்ற கனவைப் பகிர்ந்துகொண்டார். சில அம்சங்களில் நவீன இந்தியாவைப் பற்றிய நேருவின் அகப்பார்வையை விட மேம்பட்ட அகப்பார்வையை அம்பேத்கர் கொண்டிருந்தார். நேருவின் ‘இந்தியா கண்டெடுப்பு’ (Discovery of India) பற்றிய அழுத்தத்திற்கு மாறாக, “நாம் ஒரு தேசம் என்று நம்புவோமானால், நாம் மாயமான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பொருளாகும். உருவாகிக் கொண்டிருக்கும் தேசமாக மட்டுமே நமது தேசம் இருக்கிறது”, என்று அவர் பிரகடனம் செய்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படியான சோசலிசம் தேவை என்றார். வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நிலையெடுத்தார். நிலத்தைத் தேச உடமையாக்குவது, அதனை கூட்டுப் பண்ணை விவசாயத்திற்காக விவசாயிகள் மத்தியில் பிரித்துக்கொடுப்பது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறைகளை தேசமயமாக்குவது உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைக்காக வாதிட்டார். இதுபோன்ற பொருளாதாரத் திட்டமும், அதற்கு பின்புலமாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு சாதகமான வகையில் பாரபட்சம் காட்டும் அரசு நல்வாழ்வு நடவடிக்கைகளும் இருக்கும் என்றால் அது அவரின் இறுதி இலக்கான ‘சாதியை அழித்தொழிப்பது’ நோக்கி இட்டுச் செல்லும் என்று அவர் நம்பினார்.”

ரங்கநாயகம்மா குறிப்பிடுவதுபோல இடஒதுக்கீட்டின் மூலம், சாதி ஒழிந்துவிடும் என்று கருதிய அற்ப புத்திசாலி அல்ல அம்பேத்கர். சமூகம், அரசியல், பொருளாதாரம், அரசின் முற்போக்கான பாத்திரம் பற்றிய ஒட்டுமொத்த பார்வையுள்ள மாபெரும் இந்திய சிந்தனையாளர் என்பதை முந்தைய பத்தியில் வெளிப்படும் மார்க்சிய மதிப்பீடு மிகத் தெளிவாக காட்டுகிறது. (மேலும், நிலம் தேசியமயம் பற்றிய அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிக்கும் ரங்கநாயகம்மாவின் எழுத்துகள் மார்க்சிய பொருளாதாரம் பற்றிய அறிவும் அவருக்கு இல்லை என்பதை காட்டுகிறது. ஆனால், அதைப் பற்றி நான் இங்கே விவாதிக்க இடமில்லை.) ஆனால், தலித் சமூகத்திலிருந்து எழுந்துவந்த நேர்மையான அறிவாளியான அவர், தலித்துகளின் விடுதலையை தனது ஆன்மாவிற்கு நெருக்கமான- மேலான ஒன்றாக கருதியதில் எந்த ஆச்சரியமும் இல்ல. தோழர் வினோத் மிஸ்ரா அந்த கட்டுரையின் தொடர்ந்து இப்படி எழுதினார்:

‘’தலித்துகளின் சமூக விடுதலைக்கான யுத்தம்தான் அவரின் மையமான விஷயமாக இருந்தது. இந்து சட்டம் பற்றிய பிற்போக்கினரின் நெருக்கடிக்கு நேரு அடிபணிந்த போது அம்பேத்கர் நேருவிடமிருந்து பிரிந்தார். சாதிவாதம்தான் இந்துத்துவத்தின் அடிப்படை என்பதிலும் அதன் பிடியை உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதிலும் அம்பேத்கர் மேலும் நம்பிக்கைகொள்ள இது காரணமாயிற்று. எனவே, புதிய சமூக பண்பாட்டு விழிப்புணர்வு விடியலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் புத்த மதத்திற்கு நவீன பொழிப்புரை அளித்து அந்த மதத்தைத் தழுவினார்.’’

நிச்சயம், அம்பேத்கர் மார்க்சியர் அல்ல. மேலும், ஆண்டாண்டு கால அடிமை முறையில் வாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த அவர், தலித்துகளை இந்து மதத்தில் இருந்து விடுவிக்கும் முறையாக அதனைக் கருதினார். ‘இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாகமாட்டேன்‘, என்று சொன்ன அவர் அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக, இந்து மதத்திற்கு மரண பயம் ஊட்டும் காரியம் என்று கருதி அதனைச் செய்தார். அது போதாது என்று நாம் கருதலாம். ஆனால், எப்படியும் மக்களை மதம் என்ற மூடத்தனத்திற்குள் மக்களை நிறுத்தும் சதிச்செயல் என்றோ, அவர் மார்க்சியம் தெரியாதவர் என்றோ சொல்வது நமது விருப்பங்களை அவர் மீது திணிப்பதாக மட்டுமே இருக்கும். எப்படியானாலும், அவர் தனக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தவற்றை உதறித் தள்ளிவிட்டு சாதியொழிப்பில் முன்னென்றவர் என்ற உண்மையை எந்த விமர்சனமும் மறைக்க முடியாது.

எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு வர்க்கத்தின் கருத்தை வெளிப்படுத்தும் என்று மார்க்சியர்கள் சொல்வார்கள். அம்பேத்கர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நிற்கவில்லை என்று சொல்லி (அது இரங்கநாயகம்மா சொல்வது போல உண்மையல்ல,) எனவே அவர் முதலாளித்துவ அறிவாளிதான் என்று இயந்திர கதியில் முடிவுக்கு வருகிறார் ரங்கநாயகம்மா. சமூகத்தில் எதிரெதிர் வர்க்கங்களான முதலாளி- பாட்டாளி வர்க்கங்களுக்கு அப்பால், வேறு வர்க்கங்களும் கூட இருக்கின்றன. அவை தமக்கான விடுதலை கனவையும் கொண்டிருக்கின்றன. அதற்கான கருத்துகளை உருவாக்குகின்றன என்பதுதான் யதார்த்தம். தோழர் வினோத் மிஸ்ரா அம்பேத்கர் பிரதிநிதித்துவப் படுத்திய வர்க்க நலனை இப்படி மதிப்பிடுகிறார்:
“வர்க்க வார்த்தைகளில் சொல்வதானால், சிறு மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தை உள்ளடக்கிய குட்டி முதலாளித்துவப் பிரிவினரை அம்பேத்கர் பிரதிநிதித்துவப் படுத்தினார். இந்த குறிப்பான சமூகப் பொருளாதார நிலைமைகள்தான் அம்பேத்கரின் முற்போக்குவாதத்திற்கு வேராகவும் அவருடைய வரம்புகளின் (Limitaions) மூலாதாரமாகவும் அமைந்தன. அப்போதைய நிலைமைகளில், பண்டைய காலத்து சமூக இயக்கமின்மையையும் தேக்கத்தையும் உடைப்பதற்கான உபகரணமாக, முதலாளித்துவத்தின் முழுமையான வளர்ச்சிக்கும் வலுவான முதலாளித்துவ நல்வாழ்வு அரசுக்கு மட்டுமே அவர் பாடுபட்டிருக்க முடியும். அவர் கம்யூனிச நடைமுறை பற்றி அளித்த ஒப்புதல் குறிப்புகளும் சோசலிச முழக்கங்களைக் கையாண்டதும் அவரின் முற்போக்கு முதலாளித்துவ ஜனநாயக சாரத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. நான் இப்படிச் சொல்வது அவரை குற்றம் சொல்வது ஆகாது. அதற்கு மாறாக, பிற்போக்கு முதலாளித்துவப் பாதைக்காக, அம்பேத்கரின் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதென்றால், ‘பார்ப்பனிய- பனியா கூட்டு’க்காக நின்ற, அவருடைய சமகாலத்து வரலாற்று பிரமுகர்கள் பலருக்கும் மேலாக அவரை நிறுத்துவதாகும்.
அம்பேத்கருடைய இருத்தலின் சமூக பொருளாதார நிலைமைகளிலிருந்தே அவருடைய ஊசலாட்டங்களும், சமரசங்களும், இறுதியாக, மத தத்துவ நடைமுறைக்குத் திரும்பியதும் எழுந்தன. ஒரு தலித் குட்டி முதலாளியின் இந்த உள்ளார்ந்த வரையறையுடன் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டியிருந்தது, சில சமயம் காந்தியுடனும் காங்கிரசுடனும் சமரசம் செய்துகொள்ளவும், வேறு சில சமயம் ஆங்கிலேயரின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளியது. இந்திய நகர்புர பாட்டாளிகளையும் கிராமப்புர பாட்டாளிகளையும்- அவர்களில் மிகப் பெரும் பகுதியினர் தலித்துகள்- பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கம்யூனிஸ்டுகளால் மட்டுமே மாற்று செயல் தந்திரத்தை வகுத்திருக்க முடியும். அனைத்து வகைப்பட்ட முற்போக்கு முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுடன் நெருக்கமான கூட்டு வைத்திருப்பது அந்த மாற்று செயல் தந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்திருக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தவறியது. ஆனால், அது மற்றொரு சமயம் எழுதப்பட வேண்டிய விஷயம்.“

தோழர் வினோத் மிஸ்ராவின் மதிப்புரை அம்பேத்கரின் அரசியல் பாத்திரத்தையும், வரவேற்கத் தக்க முற்போக்கான பங்களிப்பையும் காட்டுகின்றது. மார்க்சிய இறுமாப்புடன், ஒரு வரலாற்றுப் ஆளுமையைக் கொச்சைப்படுத்துவதை அவர் செய்யவில்லை. ரங்கநாயகம்மா மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற பெயரில் மார்க்சிய அணுகுமுறையை -வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் அணுகுமுறையை- கைவிட்டுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

ரங்கநாயகம்மாவின் சாதி பற்றிய அணுகுமுறையின் பிரச்சனை

சாதி பற்றிய ரங்கநாயகம்மாவின் கருத்துகள், அவரின் ரெடிமேட் மார்க்சியப் பார்வையத் தெளிவாகக் காட்டுகின்றன. அவர் எழுதுகிறார்,

“மீண்டும் மீண்டும் மார்க்ஸ் முன்வைத்த அவதானிப்புகளைத் தொடர்ந்து, நாம் இந்தியாவின் வர்க்கங்களை ஆய்வு செய்வோமானால், எல்லா கீழ்நிலை சாதிகளும் உழைக்கும் வர்க்கத்தினராய் இருக்கின்றனர். மேலும், இந்தப் பிரிவினர் பெருமளவிலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இந்தச் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். சுரண்டல்வாத சமுதாயம் உருவாக்கிய உழைப்புப் பிரிவினையை அவர்கள் மாற்ற வேண்டும். அதற்கு அவர்கள் வர்க்கப் போராட்டப் பாதையிலேயே செல்ல வேண்டும். அந்தப் பாதையை உணராது, அதில் செல்லாது போனால், இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர வேறெந்த பாதையும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூறு வருடங்களாக சாதியமைப்பில் உழன்று கொண்டிருப்பதுபோல், அது மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலிருந்து தப்ப வேறெந்த வழியும் கிடையாது.“

உழைப்புப் பிரிவினைதான், அதாவது வர்க்கம்தான் சாதியின் அடிப்படை என்று ரங்கநாயகம்மா சொல்கிறார். அது உண்மைதான் என்பதை மார்க்சிய பரிச்சயம் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், உற்பத்தி உறவுகள் பெரும் மாற்றம் கண்ட பின்னரும் சாதி ஏன் நீடிக்கிறது? அது மறுபடியும் மறுபடியும் தன்னைத் தக்க வைத்துக்கொள்வது எவ்வாறு நிகழ்கிறது? தீர்மானகரமான அடிப்படை அம்சம் ஒன்றாக இருக்கிறது என்பதால் இரண்டு வெவ்வேறு கூறுகள் ஒன்றாக இருப்பதில்லை என்பதை இயங்கியல் அறிந்த எவரும் அறிவர். எனவே சாதி- வர்க்கமாக இருக்கிறது. அதேசமயம் ஒரு சாதி வர்க்கங்களாகவும் பிளவுண்டு இருக்கிறது.

உதாரணமாக, கீழ் நிலை சாதிகள் அனைத்தும் உழைக்கும் வர்க்கங்களாக இருக்கின்றன என்ற ரங்கநாயகம்மாவின் கூற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மறுதலையை இப்படி சொல்லாம் ‘அனைத்து உயர் சாதிகளும் உழைப்பைச் சுரண்டும் வர்க்கமாக இருக்கின்றன‘. இந்த கூற்று உண்மையா? இல்லை. உயர் சாதியினர் மத்தியில் உழைக்கும் வர்க்கம் உட்பட பல வர்க்கங்கள் உருவாகியிருக்கின்றன. கீழ்ச்சாதிகளில் கூட உழைப்பைச் சுரண்டுபவர்கள் (வட்டிக்கு விடுபவர்கள், குலக்குகள், அரசு அதிகாரிகள்) உருவாகியிருக்கிறார்கள் என்பதை நாம் கண் எதிரே காண்கிறோம்.

உதாரணமாக, சாணார்கள் முன்னேறி, நாடார்கள் ஆகி தமிழகத்தின் சொத்துடமை வர்க்கம் ஆகியிருக்கிற அதேசமயம், சாணார்கள் இன்னும் மரமேறும் தொழிலில், மிகக் கொடூர வறுமையில், பனை தொழிலில் முதலீடு செய்யும் (சில சமயம், நாடார் வணிகர்கள் உள்ளிட்ட) வணிக முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். அப்படியானால், சாதியும் வர்க்கமும் ஒன்றுதான் என்ற வாதம் எத்தனை சிறு பிள்ளைத்தனமானது?

எனில், உற்பத்தியில் மேற்கொள்ளும் பங்கினால் தீர்மானிக்கப்படும் சாதி- வர்க்கம் என்ற இரண்டு மாறுபட்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றேயான இரண்டுக்கும் இடையிலான இயங்கியல் உறவு என்ன? தோழர் வினோத் மிஸ்ரா சொல்வதைக் கேளுங்கள்:

“வர்க்கம்தான் அடிப்படை வகையினம். சில குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் அது தன்னை சாதியாக வெளிப்படுத்திக்கொள்ளலாம். வேறு சில நிலைமைகளில் அவ்விரண்டும் பின்னிப் பிணைந்தவையாக, ஒன்றின் மீது ஒன்று பொதிந்தாக, அதேசமயம் ஒன்றையொன்று குறுக்கு நெடுக்காய் மோதிக்கொள்வதாக இருக்கலாம். மேலும், மற்றொரு நிலைமையில் சாதிகள் சிதைந்து வர்க்கமாய் உருப்பெறுகின்றன. வினியோக முறையைக் கட்டுப்படுத்துவது என்ற சாதியின் பாத்திரம் அழித்தொழிக்கப்படுவதுவரை, இவ்விரண்டுக்கு இடையிலான முரணிசைவு, இவ்வாறுதான், முன்னேறிச்செல்கிறது“,

அம்பேத்கர் இந்த இயங்கியல் முன்னேற்றப் பாதையை, அவர் எதிர்கொண்ட தேச உருவாக்கம் என்ற பிரச்சனையில் மிகத் தெளிவாக வேறு வார்த்தைகளில் சொல்கிறார்.

“நாம் ஒரு தேசமாக இருக்கிறோம் என்று நம்புவோம் என்றால், நாம் பெரும் மயக்கத்தில் மகிழ்கிறோம் என்று நான் கருதுகிறேன். ஆயிரம் சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்கள் ஒரு தேசமாக இருக்க முடியுமா? உலகத்தின் மனோவியல்- சமூகவியல் பொருளில், நாம் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் நாம் உணர்கிறோமோ அவ்வளவு அது நமக்கு நல்லது. ஏனென்றால், அதன்பின்தான் நாம் தேசமாக உருவெடுக்க வேண்டியதின் அவசியம் நமக்குப் புரியும். அதன்பின்தான் இலக்கை அடைவதற்கான வழி வகைகள் பற்றி நாம் காத்திரமாக யோசிக்கவும் முடியும். இலக்கை இனம் காண்பது மிகவும் சிரமமானதாக இருக்கப் போகிறது…. சாதிகள் தேச விரோதமானவை. அதற்கான முதல் காரணம், அவை சமூக வாழ்க்கையில் பிரிவினையைக் கொண்டு வருகின்றன. மேலும், ஒரு சாதிக்கும் மற்றொரு சாதிக்கும் இடையில் பொறாமையையும் வெறுப்பையும் கொண்டுவருகின்றன என்பதாலும் சாதிகள் தேச விரோதமானவை. நாம் உண்மையில் ஒரு தேசம் ஆக வேண்டும் என்று விரும்புவோம் என்றால் இந்த அனைத்துத் தடைகளையும் (சாதிகளையும்) நாம் தாண்டி வந்தாக வேண்டும். ”

(1949 ம் ஆண்டு, நவம்பர் 25 அன்று அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசியல் சட்ட நிர்ணய சபையின் கூட்டத்தில் அம்பேத்கர் பேசியது)

இதுபோல, மார்க்சியமும் அம்பேத்கரின் கருத்துகளும், வெவ்வேறு உலக கண்ணோட்டத்தில் உருவானவை என்றாலும், ஒன்றுக்குத் துணையாக மற்றொன்று நிற்பதை பல்வேறு உதாரணங்கள் காட்டி விளக்க முடியும். ஆனால், இந்த கட்டுரையில் அப்படியொரு விரிவான வேலையைச் செய்வது சாத்தியமற்றது என்று நினைக்கிறேன். ஆனால், ஒரு உண்மையை நாம் புரிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அம்பேத்கர் இந்திய சாதிச் சமூகத்தின் எதிர்வினை- முற்போக்கு ஜனநாயகத்தின் குரல்!

மார்க்சியத்தைப் போற்றும் ரங்கநாயகம்மா மார்க்சியத்தைத் தோற்கடிக்கிறார்

மார்க்சியம் உட்பட, அனைத்து சமூக விமர்சனங்களும் சமூகத்தின் இயக்கத்தால் உருவாகின்றன. அவை சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற பேரவாவினால் உருவாகின்றன. ஆனால், அவற்றுக்கே உரிய வரலாற்று நிபந்தனைகளால் பாதிப்புக்கு ஆளாகின்றன. மார்க்சியம் எந்த வகையில் முற்போக்கானது? அது சமூகத்தை மாற்றியமைப்பதற்கான அறிவியல் பூர்வ வழிகளைச் சொல்வது மிக அடிப்படையான காரணம் என்பதை நாம் அறிவோம். அதனால்தான் நாம் மார்க்சியர்களாக இருக்கிறோம். அதேசமயம், மார்க்சியம் மூடுண்ட, முழுவளர்ச்சியையும் கண்டு தேங்கிப்போன தத்துவம் அல்ல. அது தனக்கு முன்னர் வந்த, தனக்குப் பின்னர் எழுகின்ற சமூக விமர்சனங்களிலிருந்து இருந்து உள்வாங்கிக்கொண்டு முன்னேறும் ஆற்றல் உள்ளதாக இருப்பதுதான் அதன் அடிப்படை பலம். அடிப்படை இயக்க விதிகளைப் புரிந்துகொண்டு மாறும் சூழலில் கொள்ள வேண்டியதைக் கொண்டும் தள்ள வேண்டியதைத் தள்ளியும் அது முன்னேறிச்செல்லும் ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றலை உருவியெடுத்துவிட்டு, அதனை முன்னமேயே எழுதப்பட்ட பழைய வேதாகமம் போல போற்றித் திரியும் ரங்கநாயகம்மா, மார்க்சியத்தை வீழ்த்தும் வேலையைச் செய்கிறார்.

நாம் எங்கே தவறினோம்?

இப்படியொரு கேள்வியை நாம் கேட்டுக்கொள்வது நல்லது. ஏறக்குறைய இந்தியாவிற்கான கம்யூனிச திட்டத்தின் அடிப்படையை உருவாக்கிய பகத்சிங்கின் முன்வைப்புகளுக்குப் பின்னால், இந்திய கம்யூனிச இயக்கம் பின்னடைவுகளைச் சந்தித்தது. சோவியத்- சீன என்று உலகப் புரட்சி முன்சென்ற காலத்தில் இந்தியாவிற்கான திட்டத் தயாரிப்பைக் கூட முடிக்காதிருந்தது. 60 களில் பிளவுகளைச் சந்தித்தது. காங்கிரசுக்கு மாற்றான தேசிய எதிர்க்கட்சியாக இருந்த நாம், பிராந்தியக் கட்சிகளாகச் சரிந்தோம். இப்போதும் கூட, கம்யூனிச இயக்கம் இந்தியாவில் தோன்றிய காலத்தை ஒட்டி தோன்றிய ஆர்எஸ்எஸ் இந்திய அரசை தன் கையில் வைத்துக்கொண்டிருக்க நாம் எதிர்த்து போராடும் ஆற்றலைத் திரட்டிக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கையாளுதல், மண்டல் இயக்கம், வேகமாக மாறும் சமூக நிலைமைகள்- அதனுடன் சரிக்குச் சரியாக சாதியைத் தக்கவைக்கும் இந்திய அரசியல் நிறுவனங்கள் என்ற பின்புலத்தில் தலித்துகள் தங்களின் கதாநாயகனா அம்பேத்கரைக் காண்பது மிக இயல்பானது.

“அப்படியெல்லாம் செய்யக் கூடாது… எங்கள் பின்னால் வரவேண்டும்… நாங்கள்தான் ஒட்டுமொத்த புரட்சிக்கும் குத்தகை எடுத்துள்ளோம்“, என்று முழங்குவது திண்ணைப் பேச்சு வெட்டிவேலை மட்டுமே. அதற்கும் மார்க்சியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்ன நடக்கிறது நாட்டில்?

இந்து மதவெறி பிற்போக்குவாதிகள், இந்திய தொழில்நிறுவனத் தேர்வாக மாறி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றனர். கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர்களின் எதிரிகளாகிய முஸ்லீம்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள். சாதிக்கட்டமைப்பு என்ற பிற்போக்கு சமூக நிறுவனத்திற்குள் தாழ்ந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலித்துகளுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

அதற்குப் பதில் வினையாக இந்தியாவில் சமூக கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டுள்ளது. . அவையாவும் சமீபத்திய நிகழ்வுகள்தான் என்பதால், அவற்றை இங்கே விளக்க வேண்டிய தேவையில்லை. கடைசியாக நிகழ்ந்துள்ள உனா இயக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ‘செத்த மாடுகளை நீங்கள் சுமந்துகொள்ளுங்கள். எங்களுக்கு நிலத்தைக் கொடுங்கள்‘, என்று தலித்துகள் முழங்குகிறார்கள். கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த நிலச்சீர்திருத்தம் என்ற பிரச்சனையைக் கையில் எடுக்கிறார்கள். அம்பேத்கர் முன்னெடுத்த நிலத்தை தேச உடமையாக்க வேண்டும் என்ற முழக்கத்திலிருந்து உற்சாகம் பெறுகிறார்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

காவி பயங்கரத்துக்கு எதிரான சமூக எதிர்வினையுடன் சேர்ந்து நின்று அதனோடு முன்னேறப் போகிறோமா? அல்லது “உங்கள் நோய்க்கு எங்களிடம் மருந்து இருக்கிறது… எங்களிடம் வாருங்கள்“, என்று புத்தகம் போட்டு அதனை “படித்துவிட்டு விவாதியுங்கள்“ என்று அறைக்குள் அமர்ந்திருக்கப் போகிறோமா?
பின்குறிப்பு:
ரங்கநாயகம்மா 90களில் எழுதியதை தற்போது தமிழ்நாட்டில் வெளியிட வேண்டிய புறக்கட்டாயம் என்ன இருக்கிறது? மார்க்சியம் என்று சொல்லிக்கொண்டு எழுதுவதை அப்படியே மார்க்சியம்தான் என்று ஏன் எடுத்துக்கொண்டார்கள்? அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டினால்,

ஏன் பேச மறுக்கிறார்கள்? இப்படியான கேள்விகள் எழுகின்றன.

அவற்றைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, சிறுபான்மையினர்- தலித்துகள்- கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்ட பயணம் வரலாற்றுத் தேவை என்றான காலகட்டத்தில் மலிவு விலைப் பதிப்பு வெளியிட்டு கருத்து கட்டமைப்பு வேலையை ஏன் முன்னெடுக்கிறார்கள்?

நுண்ணரசியல்வாதிகள் அம்பேத்கரைக் கொண்டு மார்க்சை வீழ்த்தும் வேலை செய்த காலம் போய் வரலாறு எதிர் திசையில் திரும்புகிறதோ? மார்க்சை உயர்த்திப் பிடித்து அம்பேத்கரைக் கொச்சைப்படுத்தும் தற்போதைய நுண்ணரசியலின் நோக்கம்தான் என்ன? அவர்களின் நிறுவன நலன் என்ன?

எனது கட்டுரையின் திருத்தப்படாத நகலைப் படித்த தோழர்கள் மேற்படி கேள்விகளை என்னிடம் எழுப்பினர்.

இவை பற்றியும் இன்ன பிற பற்றியும் தேவை – வாய்ப்பு கருதி பிறகு பேசுவோம்.

சி.மதிவாணன், சமூக- அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.