கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச். ஜி. ரசூல்
ஹெச். ஜி. ரசூல்

கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் என அடித்தட்டு மக்கள் சார்ந்த கதாபாத்திரங்களில் நின்று உருவாகி காதலியோடு இணைப்பாடல் பாடுவதும், வில்லன்களிடமிருந்து காதலியை காப்பாற்றுவதும்,சண்டையிட்டு எதிரிகளை மண்ணைக்கவ்வ வைப்பதுமான ஒரு கற்பனாவாதம் பிம்ப அரசியலாய் திரைகளில் எழுப்பப்பட்டன. வாசகர்கள் இதைக்கண்டு மயக்கமுற்றனர்.
இத்தகையதான ஒரு திசைவழியிலும்தான் ரஜினிகாந்தின் திரைப்பயணமும் இருந்தது. தன்னை ஆட்டோக்காரனாக உருவகித்து பாட்டுப்பாடி நடித்ததும், தீமைகளை,அநியாயங்களை ஒழிக்கும் நாயகபிம்பங்களாக தன்னை காட்சிப்படுத்திய எஜமான், சந்திரமுகி, எந்திரன் தரவரிசை திரைப்படங்களும் இந்த வகையில்தான். என்றாலும் பதினாறு வயதினிலே திரையிலிருந்து துவங்கி போக்கிரிராஜா, பில்லா என எதிர்மறை கதாபாத்திரங்களிலும் தனித்தன்மையோடு நடித்து ஒரு வாசகப்பரப்பை உருவாக்கிய ஆளுமையாகவும் ரஜனிகாந்தை அணுகமுடியும்.
இந்த வரிசையில் இன்று தமிழ் சூழலில் உருவாகி வந்துள்ளதலித் இயக்க எழுச்சி, தமிழ் அடையாள உருவாக்கம் என்கிற இரு குவிமைங்களில் கபாலியின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. இவை சந்தைமயப்படுத்தப்பட்டுள்ளன. காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும் அம்பேத்கர் கோட் மாட்டினதுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு’, `நான் கோட் போடுறதும் கால் மேல கால் போடுறதும் உனக்கு எரியுதுன்னா, போடுவேண்டா…என்பதாக அம்பேத்கரிய தலித் அரசியல் சார்ந்த வசனங்கள் தமிழக அரசியல் களத்துக்கு மிகுந்த வலுவை சேர்க்கின்றன.

மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக வேலைக்குப் போய் அடிமைக் குடிமகன்களாக மாறிய தமிழர்களுக்காக போராடுவதும்,சீனர்களின் இனவெறியை எதிர்த்துபோராடுவதும், போதைமருந்து கடத்தலுக்கு எதிராக களம் இறங்குவதுமாக தமிழர் அரசியல் என்பது உலகதமிழர்களின் கவன ஈர்ப்புக்காக மிக கவனமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவேதான் மலேஷியா,சிங்கப்பூர் , தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஒரே நாளில் வெளியிடப்பட்ட கபாலி கார்ப்பரேட் சினிமாவின் அடையாளமாக அமைந்திருக்கிறது. இதில் வசனங்கள் சார்ந்த தெறிப்புகளைத் தாண்டிய பிரமாண்ட காட்சி சித்திரங்கள் வாசகனை மொழியற்ற ஒரு உலகில் கூட பார்வையாளனாக வாய்பிளந்து பார்க்க வைத்துவிடுகின்றன.

கபாலியின் வெற்றிக்கு அடிப்படைகளில் ஒன்று இயக்குநர் ப. ரஞ்சித் முன்வைக்கும் காட்சி சித்திரங்களில் குடும்ப உறவுகள் சார்ந்து இயங்கும் அகம் வாசகனை நெக்குருக வைக்கிறது.. ரஜினியின் மகள் தன்சிகா திகில் காட்சிகளில் அப்பா,அப்பா, என அழைத்து பாசத்தை வெளிப்படுத்துகையில் ஏனோ இனம்புரியாத உறவின் நுட்பம் மனசுக்குள் விழுந்து விடுகிறது. குமுதவள்ளியாக நிறை மாத கர்ப்பிணியாக, பின் காதோர நரை நடுத்தர வயதுபெண்மணியாக ராதிகா ஆப்தே ஹாசம். ரஜினியைப் பார்த்து பேசும் “உன் கண்ண ரெண்டுநிமிஷம் பார்த்து நான் மயங்கிட்டேன் உன் சிரிப்பில் நான் மூழ்கிப்போகிறேன், உன் கருப்புகலர அப்படிய எடுத்து என் உடம்பு முழுதும் பூச ஆசை என்பதான வசனங்கள் காதல் மிகை உணர்ச்சிகளை தீவிரத்தில் மிதக்க விடுகின்றன.

கணவன் மனைவியாக வாழும் நெருக்கமும்,பிரிவும், சந்திப்பும் உணர்ச்சிகரமான இழைகளால் பின்னப்பட்டிருக்கின்றன. ஆழமான அன்பும் பாசப் பரிதவிப்பும் நெகிழ்ச்சியும் நமக்குள் இரக்கத்தை கசிய விடுகின்றன.கபாலியின் வெற்றிக்கான மூலகாரணங்களில் ஒன்றாக இந்த நுட்ப உணர்வாக்க காட்சிகளைச் சொல்லலாம். அருமைத் தோழன் முரளியின் ஒளிவண்ணம் மலேஷியாவின் பச்சைவண்ண தோட்ட வனப்புகளையும் இரவுகளின் ஒளிரும் பிரமாண்டங்களையும் கதாபாத்திரங்களின் முக உணர்ச்சி , அசைவுகள், சுழற்சிகள் என அனைத்தையும் தொழில்நுட்பம் தாண்டிய விசித்திர ஒளிப்பதிவுக்குள் காட்சிப்படுத்தி அற்புதங்களை செய்கின்றன. சந்தோஷ் நாராயணனின் இசையில் உமாதேவியின் மாயநதியை மார்பில் தவழவிட்டணைசை மிக தத்ரூபமானது. இதன் எதிர்திசையில் நெருப்புடா ஒரு பெருந்தீயாய் கனன்று எரிகிறது.கபாலி நாலாந்திரமான செயற்கையாக கட்டமைக்கப்பட்டு வாசகனை முட்டாளாக்குகிற நகைச்சுவையை முற்றிலுமாக நிராகரித்து உள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்? விடை தருவான் கபாலி தான்
மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி விழி திறந்திடுமே
கபாலியில் இடம்பெற்ற கபிலன் – விவேக் எழுதிய இப்பாடல்வரிகள் தேவையற்ற சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்‌ கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வி.மகாராஜன் என்பவர் மனு தாக்கல் செய்த சம்பவமும் கபாலி கதாபாத்திரத்தின் தலித்விழிப்பு அரசியலை பொறுக்கமாட்டாமல் தடைசெய்த முயற்சியின் விளைவாகக்கூட கருதலாம். இதே ரஜினிகாந்த் எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைக்கச் சொன்ன இடைசாதி ஆதிக்க அரசியலை வெளிப்படுத்திய போது இதுபோன்ற எதிர்ப்புக்குரல்கள் வெளிப்படவில்லை என்பதும் கவனிப்பிற்குரியது.எனினும் எல்லாவற்றிலும் அசல்களை மறந்து விட்டு நகல்களில் மூழ்கிப்போகிறான் நமது சினிமா வாசகன்.

2

உலகமய அரசியலின் கார்ப்பரேட் சினிமா அடையாளமாக கபாலி வெளிப்பட்டிருக்கும் தருணத்தில் அதற்கு எதிர்திசையில் பிரம்மாண்டங்களை மறுத்து எளிமையாக வட்டார மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளின் உள்ளீடாக உள்ளூர்மயமாக்கலை வெளிப்படுத்தியிருக்கும் ஒரு அரசியல் திரைப்படம் ஜோக்கர். கூத்துப்பட்டறை வார்ப்பு குருசோமசுந்தரம் ஜோக்கராக தனது ஆழ்ந்த உயிரூட்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நியோ ரியலிச திரைப்பட உலகம் சத்யஜித்ரேயையும்,மிருளான் சென்னையும் நமக்குத் தந்திருக்கிறது. தமிழ்சினிமாவின் வரலாற்றில் இந்த வகையில் பேசப்பட்ட பல இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஜோக்கர் என்கிற பகடி செய்கிற , மனப்பிறழ்வு கொண்ட ஆனால் தீவிரமாக மக்களுக்காக செயல்படுகிற மன்னர்மன்னன் பிரிசிடென்ட் பாத்திரம் ஒரு அபூர்வ உருவாக்கம். பகடியின் வழியான சமூக விமர்சனம் என்பது கிராமப்புற அடித்தள மக்களின் உள்ளுணர்ச்சியோடும்,தீராத வாதைகளுடனும் இயைந்து உயிரோட்டமான சித்திரங்களை அள்ளித்தருகிறது. மந்தைத்தனமான அரசு எந்திரத்தின் கையாலாகாத தனமும், ஆளும் அரசியல்வாதிகளின்போலிமை ஆடம்பரங்களிலும், கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டிக்கொடுக்கும் அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் மீதான கடும் வெறுப்பையும் உருவாக்கும் யதார்த்தமும் படத்தின் மைய இழையாகி விடுகிறது.

காதலின் ஆழ்ந்த பேருணர்வு கழிப்பறையில்லா வீட்டை எண்ணி சிதைவடைய துவங்குவதும் நிகழ்கிறது. சொந்தமாக ஒரு வீடுகட்டவேண்டும், ஒரு அரசு உத்தியோகம் வேண்டும், மருத்துவம் படிக்க சீட் வேண்டும் என்பதாக அமையாமல் ஒரு கழிப்பறையைமட்டுமே கனவுகாணும் துயரம் நிரம்ப விரக்தியானது.மல்லிகாவாக மாறிய ரம்யாபாண்டியனின் உணர்ச்சித்தும்பும் அசைவின் மொழி உள்ளபடியே நம்மை மெய்மறக்க செய்கிறது..பெருமழையில் நள்ளிரவில் கழிவறை இடிபாடுகளில் மரணநிலைக்கு ஆளாகிவிட்ட மல்லிகாவைப்போல் பெருந்துயரத்திலிருந்து நாமும் மீள முடியாதவர்களாக உறைந்து போகிறோம்.

விவசாய நிலம் சார்ந்த உலகமும், இலவசமாக கிடைக்கும் இயற்கையின் வளமான தண்ணீர் தொழிற் முதலாளித்துவத்தின் தண்ணீர்பாட்டில் நிறுவன சந்தைப்பொருளாக மாறிவிட்டதையும் அரசியல் கட்சிகளுக்கு அடிமாடுகளாய் வாடகைக்கு வாங்கப்படும் உழைக்கும் மக்களும், மணல் லாரி கடத்தல்காரர்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட பயங்கரங்களும்,சாதிய அரசியல் பின்புலமும் களம்சார்ந்து இயங்குகின்றன. இலக்கியவாதி பவாசெல்லத்துரையின் தேர்ந்த நடிப்பின் வெளிப்பாடும் அரசியல்விமர்சன தெறிப்புகளும் இன்னும் புதிய மறைக்கப்பட்ட அரசியல் உலகங்களை முன்னெடுக்க முனைகிறது.

மக்கள் கலைஞன் அறந்தாங்கி பாவாவின் முதன்மைக்குரல் பெருமாளின் குரலோடு இணைந்து ஒலிக்கும்
என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்
நூறு கோடி மனிதரு யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப் போன நீங்க ஊழலோட டீலரே
யுகபாரதியின் பாடல் வரிகளுக்கு இசையமைத்த மக்களிசை நாயகன் ஷான் ரோல்டன் பாடல்கள் படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. சின்னாட்டு மண்ணே என் பொன்னே செருவாட்டு காசா என் ரோசா செலவாகி போகாதே செல்லம்மா என் செல்லம்மா என விரியும் பாடல் நம் மனசில் இனம்புரியாத வலி உணர்வை பரப்பி அப்படியே நிலை குலையச்செய்கிறது.

செழியனின் ஒளிப்பதிவு இருளில் மிதக்கும் ஒளியையும், மழையில் சிந்தும் கண்ணீரையும் துயரங்களின் கூடாக மிதஒளியில் காட்சிப்படுத்துகிறது.

கழிப்பறை பெருமழையில் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரற்ற பிணமாக வாழும் கதா பாத்திரம், மனப்பிறழ்வுநிலைக்கு ஆளாகிவிட்ட ஜனாதிபதி கதாபாத்திரத்தின் நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்,ஏதிலியாக உயிரற்று கிடக்கும் மனைவியை கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜோக்கர்,எப்போதுமே மக்களுக்காக போராடி மக்களிலிருந்தே அந்நியப்பட்டு நிற்கும் புரட்சிகர இயக்கத் தோழராக மு.ராமசாமியின் பீதியும் கோபமும் தெறிக்கும் சித்தரிப்புகள் அதி தீவிர துணிச்சலோடும் வாசகனின் முகத்தில் அறைந்து செல்கின்றன.முகநூலில் அரசியல் பதிவுகளால் ஒரு வித அணிதிரட்டலை செய்ய முனையும் மதுவில் கணவனை இழந்த பின் மக்கள் போராட்டங்களில் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் இசையெனும் தோழியர் காய்த்ரி கிருஷ்ணா கதாபாத்திரம் என ரத்தமும் சதையுமாக ஜோக்கர் நம் மனசை அறுத்துச் செல்கிறது.

குக்கூவிலிருந்து மாறுபட்டு ராஜுமுருகன் ஒரு மக்கள் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

ஹெச். ஜி. ரசூல், கவிஞர்; விமர்சகர்.  மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள், பூட்டிய அறை உள்ளிட்ட ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. பல முக்கிய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் மலாயா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.