அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர்.
அதோடு, அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்ட 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று சபாநாயகர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை எப்படியாவது அவையில் இருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவையில் பேசி வருகின்றனர்.
அதிமுக உறுப்பினர்கள் பேசக் கூடாத, எதைப் பேசினால் எங்களுக்கு ஆத்திரம் வரும் என்பதை அறிந்து, புரிந்து சில வார்த்தைகளை சொல்கிற போது அதிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதனை திரும்பப் பெற வைக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும், திமுக உறுப்பினர்கள் அனைவருமே, அவையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக அவைத் தலைவர் தினமும் கூறி வருகிறார்.
ஆனால், நாங்களே, மதியம் அல்ல, இரவு வரை நடந்தாலும் அவையில் இருந்து செயலாற்றுவோம் என்று நேற்று கூட அவையில் தெரிவித்தேன்.
அதே நேரம், வேகத்தோடு, ஆத்திரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் எதையேனும் பேசினால் அதற்காக வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். ஏன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளேன்.
ஆனால் இன்று நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர் என்று அதிமுக உறுப்பினர் கருணாகரன் கூறினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நானும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அவையில் இல்லை.
இதுபோல் ஒவ்வொரு முறையும் நடக்கிறது. இது தவறானது. எனவே, அதிமுக உறுப்பினர் பேசியதை நீக்கிவிட்டால் நல்லது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவைக்கு வந்த போது பணிவோடு அவைத் தலைவரை கேட்டுக் கொண்டார். ஆனால், அவைத் தலைவர் மறுத்துவிட்டார்.
பின்பு, அவைக்கு வந்த நான், அவையில் நடந்தவைகளை அறிந்து, “நமக்கு நாமே பயணம் குறித்து பேசியது குறித்து எனக்கு பெருமைதான். இது குறித்து முதல்வர் கூட பொதுக் கூட்டம் ஒன்றில், கதை சொல்லி பேசியிருந்தார். எனவே, எனது பயணம் அவர் மனதிலும் இடம்பெற்றிருக்கிறது” என்று கூறி பேசி அமர்ந்தேன்.
அடுத்து அவை நடவடிக்கை தொடங்கியது. இந்த நிலையில், அவை நடவடிக்கைகளில், நான் கூறியதில், முதல்வர் பொதுக் கூட்டத்தில் பேசினார் என்று நான் சொன்னதை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது, அதிமுக உறுப்பினர் நமக்கு நாமே திட்டம் குறித்து பேசியதையும் அகற்றுமாறு நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இதையடுத்தே நாங்கள் வெளியேற்றப்பட்டோம். அவைக் காவலர்கள் எங்களை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியே தள்ளப்பட்டோம். அதை நீங்களே பார்த்தீர்கள். அடுத்து வரும் ஒரு வாரத்துக்கு காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெறும். அப்போது நாங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான் நாங்கள் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என்று ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே திமுக கொறடா சக்கரபாணி, திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.