அன்புசெல்வம்

உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் அமைப்புகளுடன் பிற ஆதரவு சக்திகளும் இணைந்து தங்களின் போராட்ட ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.
தலித்துகள் பாதிக்கப்படும்போது அவ்வப்போது தன்னெழுச்சியாக உருவாகும் இதுபோன்ற பெருந்திரளை தலித்துகளுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்ளும் எழுச்சி வரலாற்று நெடுகிலும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. கடந்த நூறாண்டுகளில் தமிழகத்திலிருந்தும் இது போன்ற எழுச்சிகள் உருவாகியுள்ளன. அது தொடர்ந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க இயலாமல் போனதுக்கு தலித்துகள் மட்டுமே காரணம் இல்லை என்பதை நாமறிவோம். இதன் பொருட்டு இப்போது குஜராத் தலித்துகள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகளில் சிலவற்றையாவது பெறவேண்டும். அதைநோக்கிய ஆதரவும், வேலைத் திட்டங்களும் அமைய வேண்டும்.
அந்த வகையில் உனா எழுச்சிக்கு ஆதரவளிப்பவர்களுக்கு “உணர்ச்சி மற்றும் செயல்பாடு” சார்ந்து குஜராத் சில முக்கியச் செய்திகளை எச்சரிக்கையாகச் சொல்ல வருகிறது.
1) பசுப்பாதுகாப்புப் படையாகியாகிய காவிபயங்கரவாதிகளின் தாக்குதலை மையப்படுத்தி தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் “மோடி – பாஜக” -வுக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. “செத்த மாட்டைத் தூக்க மாட்டோம், மனிதக் கழவகற்றும் தொழிலைச் செய்ய மாட்டோம்” என்கிற உனா முழக்கம் ஆளுகின்ற அரசுக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனால் நாடு முழுவதிலும் தலித்துகள் மீது இழைக்கப்பட்ட தலித் மனித உரிமைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆளுகின்ற பாஜக அரசும், மோடியும் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் மிக முக்கிய நோக்கம்.
2) உனா எழுச்சியில் “பாஜக – மோடி எதிர்ப்பு” என்கிற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே பிரதானமானது இல்லை. ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம், வேலை வாய்ப்பு, இலவசக்கல்வி, தலித்துகளின் சுயமரியாதை, மனித உரிமை பாதுகாப்பு, துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், கார்ப்போரேட் கம்பெனிகளின் உழைப்புச் சுரண்டல், இட ஒதுக்கீடு என பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளையும் முன் வைத்துப் போராடி வருகிறார்கள்.
3) மெவானியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, இத்தகைய எழுச்சிக்கு குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் இருந்து ஆதரவளிப்பவர்கள் மேற்கண்ட தலித் அரசியல் கோரிக்கைகளை தங்களின் இயக்க, கட்சிகளின் கோரிக்கைகளாக வைத்து கடந்த காலத்தில் குரல் கொடுத்தார்களா என்பது சிந்திக்க வேண்டியது. அவ்வாறு போராடியிருந்தால் குஜராத்தில் மட்டுமல்ல நாடு தழுவிய அளவில் தலித்துகளுக்கு வன்கொடுமைகளும், போராட்ட நெருக்கடியும் கூடுதலாக உருவாகியிருக்காது. எனினும் தலித் ஆதரவாளர்கள் இல்லையேல் தலித் விடுதலை தனித்து சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, அவர்களின் தார்மீக ஆதரவை தோழமையுடன் வரவேற்கிறோம்.
தலித் சுயமீட்புக் குழு முன்வைத்திருக்கிற கோரிக்கைகள் “பாஜக – மோடி – இந்து – ஆர்.எஸ்.எஸ்” என்கிற மதவாத அமைப்புக்கு எதிரான மட்டுமே அல்ல. அது இத்தனை ஆண்டுகாலம் எல்லா கட்சிகளாலும், எல்லா ஆதிக்க சாதிகளாலும் பாதுகாக்கப்படுகிற சாதியப்படிநிலை அமைப்புக்கும் எதிரானது. இக்கோரிக்கைகள் தலித்துகளைச் சென்றடையாமல் போனதுக்கு நேரடியான சாதிய சக்திகளும் ஒரு காரணம்.
இவற்ரையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இப்போது குஜராத் தலித் எழுச்சிக்கு ஆதரவளிக்கிறவர்கள் உனாவை முன்னிட்டு வைக்கப்பட்ட தலித் அரசியல் கோரிக்கைகளை உள்வாங்கிக் கொள்ளாமல், மெல்லப் புறந்தள்ளி விட்டு, “பாஜக – மோடி – இந்து – ஆர்.எஸ்.எஸ்” எதிர்ப்பு என்கிற ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்தி மீண்டும் மாட்டுக்கறி திருவிழாவையும், மதவாத எதிர்ப்பு முழக்கத்தையும் கையிலெடுக்கிறார்கள். அதற்கான போராட்டங்களையும் அறிவித்து வருகிறார்கள்.
இத்தகைய உணர்ச்சி அரசியல் தலித்துகளின் எழுச்சியை திசை திருப்பும். தலித் விடுதலைக்கான நீண்டகால போராட்டங்களை முனைமழுங்கச் செய்யும். மீண்டும் தலித்துகளை கலவரக்காரர்களாக, வன்முறையாளர்களாக, வெறுப்புக்குரியவர்களாக மாற்றும். மீண்டும் தலித்துகள் தான் பாதிக்கப்படுவார்கள், வழக்குகளை எதிர் கொள்வார்கள், உயிரிழப்புகளை சந்திப்பார்கள். அது தலித் விடுதலைக்கான அரசியல் எழுச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
உனா எழுச்சிக்கும், தலித் மக்களின் நலனுக்கும் உண்மையிலேயே ஆதரவளிப்பவர்கள் மெவானியின் பொருட்டு தாங்களும் கதாநாயகர்களாக ஆசைப்படாமல், தலித் எழுச்சியை தங்களின் அரசியல், சாதிய லாபத்துக்குத் திருப்பாமல், தலித்துகளை உணர்ச்சிப் பிரவாக கோஷத்துக்குட்படுத்தாமல், புறநிலையில் இருந்து ஆதரவளித்து தலித் விடுதலைக்கு களப்பணியாற்றுவது அம்பேத்கர், காரல் மாக்ஸ், பெரியார், காந்தி, காயிதே மில்லத், கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா போன்றோருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
கட்டுரையாளர் அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com