சாதிய கட்டமைப்பின் தீண்டகத்தகாத வேலையை, பெருந்திரளான தலித்துகள் மறுப்பது மிகப்பெரிய கலகம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது.

தற்போதைய மக்கள் இயக்கத்தில், தலித்துகளின் கண்ணியம் (Dignity), மனித உரிமைகள், நிலம் & கல்வி, வேலை உரிமைக்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகிறது. எனினும் கூட, ‘செத்த மாட்டை அகற்றும் வேலையை கைவிடுதல்’, ‘மனித கழிவகற்றும் தொழிலை விட்டொழித்தல்’ ஆகியவை அடிப்படை உணர்வாக, உரத்த குரலாக எழுந்துள்ளது. இது பார்ப்பனீய சாதீய அமைப்புக்கு கொடுக்கப்பட்ட மரண அடியாகும். செத்த மாடுகளுடன் குசராத் நாறுகிறது. பசுக் காவலர்கள் (பாசிசக் குண்டர்கள்) இறந்து போன அவர்களது மாதாக்களை (மாடுகளை) அவர்களே அகற்றும் வேலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அமைந்த சாதிய கட்டமைப்பின் தீண்டகத்தகாத வேலையை, பெருந்திரளான தலித்துகள் மறுப்பது மிகப்பெரிய கலகமாகும். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றுபட்டு நின்றால் எல்லைகளை உடைத்து நொறுக்கி செல்ல முடியும் என்பது வரலாறு ஆகியுள்ளது.

நீலத்துடன் சிவப்பு கரம் கோர்க்கிறது!

உனா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் எழுச்சிப் பயணத்தில், ஏற்கெனவே இசுலாமியர் கரங் கோர்த்து விட்டனர். சனநாயக சக்திகள், ராகுல் சர்மா IPS (2002 குசராத் இசுலாமியர் படுகொலைகளில் மோடி & அமித் ஷா வின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய முன்னாள் காவல்துறை தலைவர்) போன்றோரும் பேரணியில் அணிவகுத்து செல்கின்றனர்.

இடதுசாரி கட்சியினரும் கூட பேரணியில் இணைந்து செல்கின்றனர். பேரணி துவக்கத்தில் இருந்தே, CPIML (Liberation) கட்சியின் பீகார்-அரா MLA சுதாமா பிரசாத், மனோஜ் மஞ்சில்,பீகார் மாநில தலைவர்(புரட்சிகர இளைஞர் கழகம், RYA), உபி மாநில RYA செயலாளர் ராகேஷ், உபி மாநில AISA தலைவர் அந்தாஸ் சர்வானந்த் மற்றும் பலர் இணைந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.

CPIML கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், JNU மாணவர் சங்க பொது செயலாளர் ராம் நாகா, JNU தலைவர்கள் ஆனந்த் பிரகாஷ் நாராயணன், பிரதீப் நர்வால், AISA தலைவர் சுஜிதா டே ஆகியோர் தற்போது உனா நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

“ஜெய் பீம்” முழக்கங்களுடன், “லால் சலாம்” முழக்கமும் இணைந்து ஒலிக்கிறது.

புதிய தலைமுறையின் முகம் ஜிக்னேஷ் மேவானி

குசராத் தலித் எழுச்சியின் அடித்தளமாக, ஒரு புதிய தலைமுறை இளைஞர்கள், படிப்பாளிகள் இருக்கின்றனர். அவர்களது முகமாகத் திகழ்பவர் ஜிக்னேஷ் மேவானி- 35 வயது இளைஞர்,பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் ஆவார். ஆகஸ்டு 7 ந் தேதியன்று, தலைநகர் அகமதாபாத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தலித் அணிதிரட்டலின் ஒருங்கிணைப்பாளர். தலித், இசுலாமியர் ஒற்றுமைக்காக நிற்கிறார், செயல்படுகிறார். கார்ப்பரேட் எதிர்ப்பு மற்றும் வர்க்க கோரிக்கையை (தலித்துகளின் நிலம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை ) முன் வைக்கிறார். மாயாவதி, ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்களிடம் இருந்து மாறுபட்டு, புதிய தலைமுறை அம்பேத்கரிஸ்டாக காட்சியளிக்கிறார்.

நெருக்கடியில் தடுமாறும் பாஜக- ஆர்.எஸ்.எஸ்

இந்துத்துவா காவிப் பாசிஸ்டுகள் குசராத்தில், ‘இனிமேல் பழைய வழியில் செல்ல முடியாது ‘ என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆதிக்க சாதி படேல்களின் (Patidars) இட ஒதுக்கீடு கோரிக்கை கிளர்ச்சிகளால் நெருக்கடிக்கு உள்ளான பாஜக- ஆனந்திபென் படேல் அரசாங்கம், தற்போது நடைபெற்று வரும் தலித்துகளின் கிளர்ச்சி முன்னால் தடுமாறிப் போய்விட்டது. RSS தனது கோட்டையிலேயே சவாலை சந்திக்கிறது. ஆனந்திபென் படேலை அகற்றிவிட்டு, ஜெயின் சமூகம் சார்ந்த, அமித் சா சீடர், 2002 குசராத் இசுலாமியர் படுகொலைகளில் மோடி & அமித் சா’வின் குற்ற செயல்களை ஆதரித்த தீவிர RSS ஊழியர் விஜய் ரூபானியை முதல்வராக அமர்த்தி நெருக்கடிகளை கடந்துவர பார்க்கிறது. உனாவிற்கு சாமியார்ளை அனுப்பி தலித்துக்களை சமாதானப்படுத்தவும் முயற்சிக்கிறது.

சொந்த மண்ணில் தலித் சமூகம் கொடுக்கும் அடியைத் தாங்க முடியாத பிரதமர் மோடி, “என்னைச் சுடுங்கள், தலித்துகளைச் சுடாதிர்கள் ” என வசனம் பேசுகிறார். விடுதலை சிறுத்தைகள் பொ.செ இரவிக் குமார், ‘பிரதமர் மோடியின் வார்த்தைகளை நம்புங்கள்’ என்று சொல்ல, ஜிக்னேஷ் மேவானியோ, ‘மோடியின் பித்தலாட்டத்தை நம்பாதீர்கள் ‘ என்கிறார்.

2002 குசராத் இசுலாமியர் படுகொலைகள் போது, “என்னைச் சுடுங்கள், இசுலாமியரைச் சுடாதீர்கள்” என்று மோடி சொல்லவில்லை.

காஷ்மீரில், புர்ஹான் வானி கொலைக்குப் பின்னர், எழுச்சிப் பெற்றுள்ள இளைஞர்களின் கிளர்ச்சிகள், காவற்படை உடனான மோதல்களுக்குப் பின்னர், நூறு பேர் சுட்டுக் கொலை, பெல்லட் குண்டு துப்பாக்கிச் சூடுகள் மூலமாக ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்திய பின்னர்தான், “பேச்சு வார்த்தைக்கு தயார்”, ‘மனிதாபிமானம், சனநாயகம், காஷ்மீரம்’ என வாஜ்பாய் வழியில் தீர்வு” என மோடி நடிக்கிறார். சமீபத்தில், பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி மிகப்பெரிய அணிதிரட்டல் காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.

RSS- நர மோடி பழைய வழியில் தொடர்ந்து செல்ல முடியாமல், முட்டுச் சந்தில் தவிக்கிறார்.

இடதுசாரிகளின் துடிப்பான பாத்திரம் அவசியம் தேவை!

ஆட்சியை பாதுகாக்க, RSS-BJP தற்காலிகமாக பின்வாங்குகிறது. சமூகத்தை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற புதிய வாய்ப்பு, வழிமுறைகளுக்காக காத்திருக்கிறு.

அதேவேளையில், இடதுசாரிகள் குசராத்தில் எண்ணிக்கையில் சிறிய சக்தி என்பதற்காக ஒதுங்கி இருக்க முடியாது. நரவேட்டை ஆட்டம் போடுகிற காவிப் பாசிஸ்டுகளை முறியடிப்பதில், கம்யூனிஸ்ட்களை விட உறுதியான நிலைப்பாடு, செயல்பாடு, வேறு யாரிடம் இருக்க முடியும்?

குசராத் நிகழ்வுகள் மீது, நாம் பாராட்டுரைகளையோ, விமர்சனங்களையோ மட்டுமே வழங்கிவிட்டு ஒதுங்கிவிடக் கூடாது.

ஏற்கனவே, இடதுசாரித் தோழர்கள் மிகச் சரியாக தலித்துகளின் “விடுதலைப் பயணத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். பலரும் குசராத் பயணத்தில் பங்கேற்றுக் கொண்டு இருக்கும் பொழுது, பிறர் ஆக 15ல், நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் நடைபெறவுள்ள பேரணிகள், உறுதி ஏற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

டில்லியில் JNU முதல் குசும்பூர் பஹரி வரையில் நடைபெறும் தூய்மை பணியாளர்களின் பேரணி, உறுதி ஏற்பு நிகழ்ச்சி கட்டமைக்கப் பட்டுள்ளது. CPIML கட்சியானது, குசராத் தலித் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆக.9- 14 வரை இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

காவிப் பாசிஸ்டுகளுக்கு சாவுமணி அடிக்கும் இயக்கத்தில், கம்யூனிஸ்ட்கள் ஒரு கரத்தை தலித்துகளோடும், மறு கரத்தை இசுலாமியர்களோடும் இறுகப் பற்றிக் கொண்டு முன்னேற வேண்டும்; தங்களது இயற்கையானக் கூட்டாளிகளின் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும்!

ஆக. 15 விடுதலைப் பேரணி வெல்லட்டும்!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.