மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா?

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலித்துகளை அடிப்பதை நிறுத்தி விட்டு தன்னை அடியுங்கள் என பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி!’ என ஒரு பதிவு எழுதியிருந்தார்.

அந்தப் பதிவில்,

“பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். ‘தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் என்னைச் சுடுங்கள் தலித்துகளை சுடாதீர்கள்’ என்று அவர் பேசியிருக்கிறார்.

குஜராத்தில் வெடித்தெழுந்துள்ள தலித் மக்களின் போராட்டங்கள், நெருங்கிவரும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் – என அவரது பேச்சுக்குப் பின்னே ‘மறைந்துள்ள’ காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கோ, அவரது பேச்சையும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு எள்ளி நகையாடுவதற்கோ; இதே தொனியில் முஸ்லிம்களைப்பற்றியும் பேசுவாரா? எனக் கேள்வி எழுப்புவதற்கோ ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. எனினும் பிரதமரின் பேச்சை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அவர் பாஜக தலைவர்களில் ஒருவராக இதைப் பேசவில்லை, இந்த நாட்டின் பிரதமராக நின்று பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை ஊடகங்கள் மட்டுமின்றி காவல் அமைப்பும் நீதி அமைப்பும் நிர்வாக அமைப்பும் கவனத்தில்கொள்ளும். அதுமட்டுமின்றி அவர் சார்ந்துள்ள பாஜகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் அது கட்டுப்படுத்தும்.

ஒரு பிரதமரின் பேச்சு அவரது இதயத்திலிருந்து முகிழ்த்தாலும் உதட்டிலிருந்து உதிர்ந்தாலும் அதற்கான மதிப்பு ஒன்றுதான். மாண்புமிகு பிரதமர் அவர்களே! உங்களுக்கு என் நன்றி!”.

ரவிக்குமாரின் இந்தக் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் சமூக ஊடகங்களில் எழுதினர். எழுத்தாளரும் ஆய்வாளருமான அன்புசெல்வம் இதேபோன்றதொரு கருத்தை முன்வைத்தார். அதை இங்கே படிக்கலாம்.  இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ், இந்த கருத்தையொட்டி விசிக தலைவருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை முகநூல் எழுதினார்.

அந்த கடிதம்:

“அன்புள்ள தலைவர் அவர்களுக்கு,

நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. சாதியைப் பாதுகாக்கும் இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சிரித்தாலும், அழுதாலும், சிந்தித்தாலும், எழுதினாலும், பேசினாலும், செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும். அவர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். இது உலகறிந்த உண்மை என்பதாலேயே அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் அதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் நிராகரித்து வருகின்றனர்.

அந்தவகையில் திருவள்ளுவரை வைத்து தருண் விஜய் நடத்திய நாடகத்தை தமிழகம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால், பொதுச்செயலாளரின் முயற்சியால் நம் கட்சி தருண் விஜய்யை ஆதரித்தது.

பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கரை புகழ்வதும், அவருக்கு விழா எடுப்பதும், சிலை வடிப்பதும், நினைவகம் எழுப்புவதும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கை என்று நாடே தூற்றுகிறது. ஆனால், பொதுச்செயலாளர் அவர்கள் அதற்காக மோடியைப் பாராட்டி வெளிப்படையாக எழுதுகிறார்.

அண்மைக்காலமாக பசுவின் பெயரால் தலித்கள் தாக்கப்படுவதை எதிர்த்து இந்தியா முழுவதும் தலித் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் தீவிரத்தை உணர்ந்த மோடி, “தலித்களைத் தாக்காதீர்கள் என்னைத் தாக்குங்கள்” என பேசினார். மோடியின் இந்தப் பேச்சு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே சொல்வது அபத்தம். ஆனால், இந்த அபத்தப் பேச்சுக்காக மோடியைப் பாராட்டி நன்றி சொல்லியுள்ளார் நம் பொதுச்செயலாளர். பிரதமரே பேசிவிட்டதால் இனி தலித்கள் மீதான தாக்குதல் குறையும் என்று அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியுள்ளார். ஆனால், பிரதமர் அப்படி பேசிய பிறகுதான், ஆந்திராவில் பசு பாதுகாப்பு கும்பலால் தலித்கள் தாக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.

இந்துத்துவத்தை எதிர்த்து தீவிரமாகப் போராடுவது, மாநாடு நடத்துவது என நம் கட்சியின் செயல்பாடுகள் ஒருபுறமும், இந்துத்துவ சக்திகளான தருண் விஜய்யை ஆதரிப்பது மோடியை பாராட்டுவது என பொதுச்செயலாளரின் அணுகுமுறை மறுபுறமும் தொடர்வதால் கட்சியின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரே நேரத்தில் ஒரே விசயத்தில் மோடியை எதிர்த்து கட்சியும், மோடிக்கு நன்றி சொல்லி பொதுச்செயலாளரும் கருத்து சொன்னால் அது பொதுவில் குழப்பத்தையும் ஐயத்தையுமே ஏற்படுத்தும். அதுதான் தற்போது நடந்து வருகிறது. இது கட்சியில் உள்ள என்போன்ற பலருக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இப்படி தொடர்ந்து பொதுச்செயலாளர் இயங்கி வருவது, மதச்சார்பற்ற சக்திகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதை அவ்வப்போது உங்கள் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன். எனினும், கட்சி நலன் கருதி இதுவரை நான் இதுகுறித்து பொதுவில் கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிச் செல்வதால் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசும் நிலைக்கு ஆளாகியுள்ளேன். இதில், தலைவர் என்ற வகையில் கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் உறுதிபட தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மிக இளம் வயதில் எனக்கு பொறுப்பு வழங்கி, வேட்பாளராக்கி அழகு பார்த்தவர் நீங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்து முழங்குபவன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையிலேயே அந்த அங்கீகாரத்தை வழங்கினீர்கள். அதன்படி எப்போதும் என் குரல் சமரசமின்றி ஒலிக்கும். நன்றி!

அன்புடன்
ஆளூர் ஷா நவாஸ்
துணைப் பொதுச் செயலாளர், விசிக.
11-08-2016”.

இந்தக் கடிதம்,  விசிகவில் பிரச்சினையா? என்பதுபோல இணைய செய்தி ஊடகங்களில் வெளியாகின. இதனால் தன்னுடைய முகநூலில் இருந்து இந்தக் கடிதத்தை நீக்கியிருக்கிறார் ஆளூர் ஷா நவாஸ்.

காரணமாக, “தலைவருக்கு எழுதிய கடிதத்தை பொதுவில் வைத்ததில் தோழர்கள் பலருக்கும் வருத்தம். அதைப் புரிந்து கொண்டு நீக்கியுள்ளேன். எனினும், பிரச்சனையின் அடிப்படையே பொதுச்செயலாளர் பொதுவில் வைத்த கருத்துகள்தான். அதற்கு எதிர்வினை பொதுவில் வரும்போது அதைப் பற்றி அதே தளத்தில் பேச வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் வெவ்வேறு கொள்கை கோட்பாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரின் வேறுபட்ட கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் களமாகவும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் அவதூறுகளின் அடிப்படையில் இல்லாதவரையில், எதைக் குறித்தும் விவாதிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.