மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா
தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.

‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று நிறுவும் வெறிகொண்டு ஆடுகிறார். அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், ரங்கநாயகியம்மா விமர்சனம் என்கிற பெயரில் அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதிலேயே முனைப்பாக இயங்கியிருக்கிறார். சாதியம் பற்றிய அம்பேத்கரின் பார்வையை குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம் செய்யத் துணிந்த இவரால் சாதியம் குறித்தோ சாதியொழிப்பு குறித்தோ எதையும் திட்டவட்டமாக கூறமுடியவில்லை என்பதுதான் அவலம்.

அம்பேத்கருக்கு முன்பாகவே அரசியலரங்குக்கு வந்துவிட்ட கம்யூனிஸ்ட்களில் ஒரு சாரார், சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட தங்களது அகநிலைக்கு குந்தகம் வராமல்தான் இன்றைக்கும் மார்க்சீயம் பேசிவருகின்றனர். சாதியத்திற்கு எதிரான போராட்டம் வர்க்கப்போராட்டத்தை நோக்கிய தங்களது பயணத்தை திசைமாற்றிவிடும் என்று அஞ்சுவதாய் பாசாங்க செய்யும் இவர்கள், வர்க்கப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு மக்கியாநாள் அதிகாலையில் தீர்ப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அநேகப் பிரச்னைகளில் ஒன்றாகவே சாதியையும் கருதுகின்றனர். அதுவரையிலும் சாதியத்திற்கு எதிராக சொந்த வாழ்க்கையிலோ, அமைப்புரீதியிலோ எதையும் செய்துவிட வேண்டியதில்லை என்கிற ‘தத்துவத் தெளிவோடுள்ளவர்களிடையே’ இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெறுவதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கும் சாதியத்திற்கு எந்த பங்கமும் வராமல் பயின்றொழுகிக் கொண்டே புரட்சியாளர்களாகவும் காட்டிக்கொள்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு இந்நூல் பெருந்தைரியத்தையும் தத்துவபலத்தையும் தரவல்லது. இந்நூலை ஒருமுறை படிப்பதன் மூலம் அவர்கள் தம்மைத்தாமே ஆயுசுக்கும் பாராட்டிக்கொண்டு பெருமிதத்தில் துள்ளக்கூடும். அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார். இந்தப் புத்தகத்தோடு ஒப்பிடும்போது, அம்பேத்கரை அவமதிக்கும் தலித் விரோத சாதிவெறியர்கள் மிக கண்ணியவான்களாகத் தெரிகின்றனர். ஒருவேளை அவர்கள் இதுகாறும் அம்பேத்கரது சிலைகளை உடைத்து செருப்பு மாலை போட்டு அவமதிப்பதால் உணரும் மனக்கிளர்ச்சியை இனி இந்நூலை வாசிப்பதன் மூலமே கூட அடையமுடியும். ஆகவே சாதியவாதிகள் பலரும் இந்நூலை மிகத் தாராளமாக வாங்கிப் படித்து கொண்டாடி இன்புறுகிறார்கள் என்கிற செய்தி ஓரிரு நாட்களில் வரக்கூடும்.

சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது. அம்பேத்கரையும் மார்க்சையும் எதிரெதிர் பகைமுகாம்களாக நிறுவிக் காட்டுவதன் மூலம் ரங்கநாயகம்மா போன்றவர்கள் யாருக்கு சேவகம் செய்யத் துடிக்கிறார்கள்? நூற்றாண்டைத் தொட்டிருக்கும் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரை மீதான வெகுஜன கவனத்தை சிதறடிக்கும் நோக்கத்துடனேயே இந்நூல் இப்போது தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை. நேர்த்தியான தாளில் ராயல் டம்மி அளவில் 416 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வெறும் 80 ரூபாய்க்கு வெளியிட்டிருப்பதற்கு வாசகரின் வாங்கும் சக்தி மீதான அக்கறையை விடவும் வாங்கத் தூண்டும் தந்திரமே காரணமாக இருக்க முடியும்.

ம.வெங்கடேசன் என்கிற காவிக்கூலி எழுதிய ‘இந்துத்வ அம்பேத்கர்’ என்கிற நூலைப் படித்தபோது ஏற்பட்ட அதே அவமானமும் ஆத்திரமும் ரங்கநாயகியம்மாவின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்படுகிறது. அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் புள்ளியில் வியக்கத்தக்க வகையில் வலதுசாரிகளோடு கைகோத்திடும் ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிக் குமிக்கிற இந்தக் குப்பைகளையெல்லாம் வாசித்து என்ன ஆகப்போகிறது என்று எரிச்சலாகி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும் போலிருக்கிறது. உண்மையில் அப்படி எறிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துதான் இப்படி எழுதுகிறார்கள். அதற்காகவே எறிந்துவிடாமல் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

ஆதவன் தீட்சண்யா , எழுத்தாளர். சமீபத்தில்  வெளியான இவருடைய நூல்கள்…நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – சிறுகதைத் தொகுப்பு,கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது- கட்டுரைத் தொகுப்பு, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
–  கவிதைத் தொகுப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.